|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

மதுரையில் இருந்து வடமேற்கு திசையில்
21 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது அழகர் கோயில். கோட்டை
போன்ற மதில் சுவர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. தூரத்தில் இருந்து
பார்க்கையில், பசும் போர்வை போர்த்திக் கொண்டு, தலையை மட்டும் வெளிக்காட்டும்
அந்த சிறிய கோபுரம் ரம்யமாய் இருக்கின்றது. மரம் மூடிய மலைகள் கம்பீரமாக
தெரிவதில்லை. மாறாக மனதை கொள்ளைக் கொள்ளும் ஒரு சோலைவனம் போல் தோற்றமளிக்கின்றது.
இந்த கோயிலும், சித்திரை திருவிழாவும், கள்ளழகர் உலாவும் உலகப் பிரசித்தம்.
கூடவே அழகர் கோயில் தோசையும். |
 |
| அழகர் கோயில் தோசை என்பது காஞ்சிபுரம்
இட்லி போல் ஊர் முழுக்க, கடைகளில் கிடைக்கும் சமாச்சாரம் அல்ல. இந்த
தோசை அழகர் கோவிலில், அதுவும் பிரசாத விற்பனை நிலையத்தில் மட்டுமே
கிடைக்கும். அழகர் கோயில் தோசையை முதன்முறையாக பார்ப்பவர்கள் சற்று
அதிசயித்துதான் போவார்கள். தோசை என்றவுடன் நம் மனக்கண்ணில் சாதாரணமாக
தோன்றும் வடிவத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. சற்று
பெரிய அளவிலான வடை என்று கூறலாம். செய்முறையில் இருந்து தோற்றம் வரை
அனைத்தும் வடையை ஒத்தே இருக்கின்றது. ஆனால் அந்த சுவை.. அதுதான் இதன்
தனிச்சிறப்பு. |
| மேல் பாகம் சற்று மொறுமொறுப்பாக, உள்ளே சற்று
மாவாக, நெய் வாசனை கமழ, மிளகின் காரம் உறுத்தாமல், நாவினிலே மெல்ல
கரைந்து, தொண்டைக்குள் செல்லும் போதுதான் அந்த சுவையின் அருமை தெரிகின்றது.
சுவையின் ரகசியம்தான் என்ன? நேராக பிரசாத மடப்பள்ளிக்கே சென்று அங்கிருந்தவரைக்
கேட்டோம். நமக்கு விடையளிக்க முன் வந்தார் திரு. மந்தையன் என்கின்ற
பிரகாஷ் அவர்கள். இவர்தான் தற்போது கோயில் பிரசாத மடப்பள்ளியின் ஒப்பந்ததாரர்.
கொஞ்சம் இருட்டாகவும், சற்றே புகை மண்டலமாகவும் காட்சியளிக்கும் அந்த
மடபள்ளியின் வாயிலிலேயே விற்பனைக் கூடமும் இருக்கின்றது. மிளகு காரம்
கலந்து வரும் புகை, கண்களில் நீரை வரவழைக்கின்றது. அழுதவாறே அவர் சொல்வதைக்
கேட்க தயாரானோம். |
 |
| முதலில் கோவிலின் சிறப்பையும், காலம்
காலமாக இந்த மலையின் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து பட்டி தொட்டியைச்
சேர்ந்த மக்களும், தாங்கள் விளைவித்த பொருட்களைக் கொண்டு தெய்வத்திற்குப்
படைத்து வழிபடும் வரலாற்றினைக் கூறினார். அழகர் கோயில் தோசையின் சிறப்பிற்கு
காரணம், அது நூப்ரகங்கை தீர்த்தம் கொண்டு தயாரிக்கப்படுவதுதான் என்று
கூறி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். நூபுரகங்கை அந்த மலையில் அமைந்திருக்கும்
ஒரு இயற்கை நீரூற்று. இது புனித நீரூற்றாக கருதப்படுகின்றது. அழகர்
கோயில் மற்றும் மேலே அமையப்பெற்றுள்ள பழமுதிர்ச்சோலை கோயிலுக்கு வரும்
பக்தர்கள் இந்த நீரூற்றில் புனித நீராடுகின்றனர். இந்த நீரானது, குழாய்களின்
மூலம் இங்கு எடுத்து வரப்பட்டு, பயன்படுத்தப்படுவதாக விளக்கினார்.
மூலிகைகள் கலந்த அந்த நீரைக் கொண்டு இந்த தோசை செய்யப்படுவதால் அதற்கென்று
ஒரு தனிச்சுவை கிட்டுவதாகவும் கூறினார். |
| எட்டுத்திக்கும் உள்ள அறுசுவை நேயர்கள்
இந்த தோசையை செய்து பார்க்கவேண்டும் என்றால் புனித தீர்த்ததிற்கு எங்கு
செல்வார்கள் என்ற கவலை ஒருபுறம் தோன்றினாலும், வந்ததுதான் வந்தோம்.
இதன் செய்முறைக் குறிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்வோமே என்று தயங்கியபடியே
கேட்டோம். அவர் தயங்காமல், தோசை தயாரிக்கும் நிபுணரிடமே அழைத்து சென்றுவிட்டார்.
உள்ளே நெய் வாசனை மணக்க, சுடச் சுட தோசைகள் தயாராகிக் கொண்டிருந்தன.
தோசை மட்டுமல்லாமல் லட்டு, அதிரசம், முறுக்கு என்று எல்லா கோவில்களிலும்
சாதாரணமாக கிடைக்கும் பிரசாதங்களும் அங்கே தயாராகிக் கொண்டிருந்தன.
தலைமைச் சமையல்காரர் நமக்கு செய்முறையை விளக்கினார். சுமார் ஏழு வடைகள்
செய்வதற்கான அளவு இது. |
| |
|
| அழகர் கோயில் தோசை |
| தேவையான பொருட்கள் |
| பச்சரிசி |
ஒரு படி |
| உளுந்து தோலுடன் |
400 கிராம் |
| மிளகு |
100 கிராம் |
| சீரகம் |
100 கிராம் |
| பெருங்காயம் |
10 கிராம் |
| இஞ்சி |
50 கிராம் |
| கறிவேப்பில்லை |
ஒரு கொத்து |
| உப்பு |
அரைத் தேக்கரண்டி |
| |
|
| செய்முறை |
|
| உளுந்தினை நன்கு ஊற வைத்து, தோலுடன் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும். பச்சரிசியை சுமார் கால் மணி நேரம் ஊற வைத்து,
இடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பெருங்காயம்,
இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். |
 |
| இங்கே ஊற வைப்பது, அரைப்பது எல்லாவற்றிற்கும்
நூபுரகங்கை நீரைப் பயன்படுத்தவும். பிறகு அரைத்து வைத்துள்ள
அனைத்தையும் கலந்து, தேவையான உப்பையும் சேர்த்து, சுமார் அரை
மணி நேரம் அப்படியே விட்டு வைக்கவும். |
 |
| மாவு நன்கு கலந்து, பதமாக வரும்வரை வைத்திருக்கவும்.
ஒரு பெரிய எண்ணெய் சட்டியில் (மிகவும் குழியாக இல்லாமல், அடிப்பாகம்
சற்று தட்டையானதாக இருத்தல் நல்லது) முழுவதும் நெய் அல்லது நெய்
கலந்த எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். |
 |
| இப்போது ஒரு சிறிய கோப்பையில் மாவை எடுத்து,
கொதிக்கும் நெய்யில் வடை போல் சற்று பெரிதாக ஊற்றவும். இதற்கு
சற்று அனுபவம் வேண்டும். அது அரைவேக்காடு வெந்தவுடன் இரண்டு
மரக்குச்சிகளைக் கொண்டு நன்கு குத்திவிட்டு, திருப்பிப் போடவும். |
 |
| இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து
எண்ணெய்யை வடியவிடவும். சூடான, சுவையான அழகர் கோயில் தோசை தயார்.
|
 |
| |
|
| |
|
| |
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|