அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, November 19, 2004

சர்க்கரை போளி

அறுசுவை உணவு வகைகள் அனைத்தையும் தமிழில் கொடுக்க விரும்பி அறுசுவை.com என்ற இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளேன்.

தினமும் ஒரு உணவுக்கான செய்முறை இந்த வலைப்பதிவில் வெளியாகும். ஏன் ஏற்கனவே இணையத்தளத்தில் உள்ளதை மீண்டும் வலைப்பதிவில் போடவேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயமே. உங்கள் மேலான பின்னூட்டங்களை எதிர்பார்த்துத்தான் இந்த வலைப்பதிவு. மேலும் இந்த உணவு வகையில் என்ன மாற்றங்களைச் செய்யலாம், இதற்கு ஒத்த பிற உணவு வகை உள்ளதா என்பதை நீங்கள் எனக்கு எழுதியனுப்பினால் அதையும் என் தளத்தில் சேர்க்க முற்படுவேன். உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

முதலில், சர்க்கரை போளி

தேவையானவை

மைதாமாவு ஒரு கப்
கடலைப் பருப்பு ஒரு கப்
மண்டை வெல்லம் கால் கிலோ
தேங்காய் 1
ஏலக்காய் 4
நெய் சிறிது
நல்லெண்ணெய் சிறிதளவு

செய்முறை

  • மைதாவை தண்ணீர் ஊற்றி சற்று தளர்ச்சியாக பிசையவேண்டும்.
  • பிசைந்தபின் மேலாக சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி 3 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு வைக்கவும்.
  • கடலைப்பருப்பை முக்கால் வேக்காடாக வேகவைத்து இறக்கி, நீரை நன்கு வடித்துவிட்டு இத்துடன் நுணுக்கிய மண்டைவெல்லம் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் அம்மியில் வைத்து அரைக்கவும்.
  • தேங்காயை துருவி எடுத்த பூவை நன்கு நெய்யில் வதக்கி, அரைத்து வைத்துள்ள பருப்பு, வெல்லக் கலவையுடன் சேர்த்து, சிறிது நுணுக்கிய ஏலக்காயையும் கூடச் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு, பிசைந்து வைத்த மைதாமாவை எண்ணெய் தடவிய பூரிப் பலகையின் மேல் சிறிது சிறிதாக உருட்டி எடுத்து வைத்துக் கையால் தப்பி, விரித்து விடவும்.
  • இதன் நடுவில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பூ கலவையை சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்து மூடி, மீண்டும் இதை கையால் தப்பி, சப்பாத்தி அளவிற்கு விரித்து விடவும்.
  • இதனை தோசை கல்லில் இட்டு, நெய் ஊற்றி இருபுறமும் சிவந்து வெந்ததும் எடுக்கவும்.
  • குறிப்பு: மைதாமாவினை மென்மையாக்க ஒரு சிட்டிகை சோடாஉப்பு சேர்த்துக்கொள்ளலாம். அதிகம் சேர்த்தல் கெடுதி.
  • வெல்லத்துடன் அரைத் தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து அரைக்க சுவை இன்னும் கூடும்.


கால அளவு: 60 நிமிடங்கள்
வழங்கியவர்: திருமதி. ராஜம், தஞ்சை.

0 Comments:

Post a Comment

<< Home