அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Sunday, November 28, 2004

பிஸி பேளா பாத்

கர்நாடக மக்களின் விசேஷ உணவு இது. சூடாக உண்ண சுவையாய் இருக்கும்.

தேவையானவை

அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
கிராம்பு - 2
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

  • புளியை சிறிது தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். உருளைக்கிழங்கினை சிறுதுண்டுகளாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, தனியா, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, வெந்தயம், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்தவற்றை தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அம்மியிலோ, மிக்ஸியிலோ இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்தவுடன் துவரம் பருப்பினைப் போட்டு சிறிது வெந்த பிறகு அரிசியைப் போடவும்.
  • அரிசி பாதி வெந்தவுடன் நறுக்கிய உருளைக்கிழங்கினைப் போடவும். அதுவும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு கொதிக்க விடவும்.
  • அடிபிடிக்காதவாறு அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
  • சாதம் நன்கு வெந்து வந்தபிறகு இறக்கி கடுகினை தாளித்துக் கொட்டவும்.


கால அளவு: 45-60 நிமிடங்கள்
வழங்கியவர்: திருமதி. பத்மா ராஜகோபால், நாகை.

2 Comments:

  • At 2:34 PM, Jsri said…

    #) பொதுவாக மசாலா வாசனை பிடிக்காதவர்கள் பட்டை, கிராம்பைத் தவிர்த்துவிடலாம்.

    #) தேங்காய் முற்றலாகவோ கொப்பரையாகவோ இருந்தால் சுவையாக இருக்கும். அத்துடன் அவசியம் சிறிது கசகசா சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் கூட வறுக்கவேண்டும்.

    #) பாத்திரத்தில் அரிசி, பருப்பை வேகவைப்பது சிறிது நேரமெடுக்கும், வேலைவாங்கும் முறை. அதற்குப்பதில் ப்ரஷர்பேனில் இரண்டையும் கலந்து 3 விசில்வரும்வரை வேகவைத்து பின் திறந்ததும் அதிலேயே புளித்தண்ணீர், மசாலாவைக் கலந்து கிளறுவது சுலபமாக இருக்கும்.

    #) கோஸ், கேரட், நூல்கோல், பச்சைபட்டாணி, சௌசௌ- இவைகளில் ஏதாவது ஒன்றோ அனைத்துமோ மிக மெல்லியதுண்டுகளாக நறுக்கி சேர்த்து வேகவைத்துத் தயாரிப்பது மாறுபட்ட சுவையாக இருக்கும்.

    #) பார்ட்டிகாக என்றால் நெய்யில் சிறிது முந்திரிப்பருப்பை வறுத்துப் போடலாம். இல்லாவிட்டாலும் இறக்கும்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கலந்தால் மணமாக இருக்கும்.

    #) பொதுவாக கர்நாடக உணவுகளில் ஒரு சிறு கட்டி வெல்லம் சேர்ப்பார்கள். இதற்கும் சேர்க்கலாம். [எனக்குப் பிடிக்காது! :)]

    -- இப்படி எல்லாம் இங்கு இடப்படும் குறிப்புகளுக்கு மேலும் குறிப்புகள் தருவது சரியா என்று தெரியவில்லை. தெரிந்ததைச் சொன்னேன். இந்த வலைத்தளம் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

     
  • At 9:18 PM, D.V.Babu said…

    மிகவும் சரியே :-) இது போன்ற திருத்தங்கள், உபரிக்குறிப்புகள் அவசியம் எங்களுக்குத் தேவை. இந்த வலைப்பதிவினை என் இணையத்தளத்திற்கு(www.arusuvai.com) ஒரு வழிக்காட்டியாய்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனது இணையத்தளத்தின் நோக்கம், அனைத்து வகையான உணவுகளைப் பற்றின முழுமையான, தெளிவானத் தகவல்களைத் தரவேண்டும் என்பதே. குறிப்புகள் பல்வேறு ஆதாரங்களிடம் இருந்து திரட்டப்படுவதால் சரிபார்க்க இயலவில்லை. தங்களைப் போன்ற அனுபவம் மிக்கவர்கள் எங்களது குறைகளைக் களைய வேண்டும் என்பது எங்களின் மேலான எதிர்பார்ப்பு. மனதாரப் பாராட்டி வரவேற்கின்றோம்.

    அன்புடன்,
    பாபு

     

Post a Comment

<< Home