அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Thursday, December 09, 2004

அக்கார வடிசலும் அக்ரஹார வழிசலும் - பாகம் 1

என்னடா இது, தினமும் ரெஸிபின்னு எதாவது ஒன்னைப் போட்டுகிட்டு இருந்தவன் இன்னைக்கு திடீருன்னு எழுத ஆரம்பிச்சுட்டானேங்கிற ஆச்சரியம்பயம்கவலை எதுவும் வேண்டாம். இது இன்னைக்கு மட்டும்தான்.

எல்லாம் இந்த 'என்றென்றும் அன்புடன் - பாலா' செஞ்ச வேலைங்க. மனுசன் ரெஸிபியைப் படிச்சமா, செஞ்சு பார்த்தோமான்னு இல்லாம, இங்கேயிருந்து மரத்தடிக்குத் தாவி, அங்க ஜெயஸ்ரீ அம்மா என்னைக்கோ எழுதிப் போட்டு இருந்த அக்கார அடிசலுக்கும் நான் எழுதிப்போட்டதுக்கும் பொருத்தம் பார்க்க போக, என் வேலை கெட்டு போச்சு.
இதுக்கும் அதுக்கும் பொருத்தம் இல்லை, போயிப் பாருன்னு ஒரு வார்த்தை எழுதிப்போட்டுட்டாரு. அலறி அடிச்சுக்கிட்டு போய்ப் பார்த்தா, அசந்து போயிட்டேன். சும்மா சொல்லக்கூடாது. இதுதாங்க.. இதுதான் கேட்டு எழுதறதுக்கும், அனுபவிச்சு எழுதறதுக்கும் உள்ள வித்தியாசம். படிக்கிறப்பவே உதட்டோரம் நெய் ஒழுக சாப்பிடுற மாதிரி ஒரு 'பீலிங்'. எழுத்தாளர் தர்ற ரெஸிப்பின்னா சும்மாவா பின்னே. சத்தியமா சமையல், எழுத்து.. ரெண்டுலயுமே நான் ஜீரோ.

'என்ன தைரியத்துல அறுசுவை வெப் சைட் ஆரம்பிக்குற? சாப்பிடுறதைத் தவிர, சமையலுக்கும் உனக்கும் வேற என்ன சம்பந்தம்?' ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சீனு கேட்டான்.
'சாப்பாட்டு ராமன்ங்கிற ஒரு தகுதி பத்தாதா?' ன்னு கேட்டுட்டு வீறாப்பாய் ஆரம்பிச்சுட்டேன். அதோட கஷ்டம் இப்பத்தான் தெரியுது.

அக்ரஹாரத்துல் குடியிருக்கிற தைரியத்துல அறுசுவையில பிராமண சமையலுக்குன்னு தனியா ஒரு பக்கம் ஒதுக்கிட்டேன். ஆரம்பிச்சு பதினைஞ்சு நாளாகியும் நாலு அயிட்டம் தான் அதுல இருந்துச்சு. யாரைக் கேட்கலாம்னு யோசிச்சப்ப உடனே ஸ்ட்ரைக் ஆனது வக்கிலாத்து மாமிதான். மல்லிகா பத்ரிநாத் மாதிரி மாமி சமையல்ல பெரிய புலி இல்லேனாலும், நான் கேட்டதை பொறுப்பாய் எழுதித்தர்ற பொறுமை, அவங்களுக்கு ரொம்பவே இருந்துச்சு. கேட்ட உடனேயே ஒரு இருபது, இருபத்தஞ்சு அயிட்டம் எழுதிக் கொடுத்துட்டாங்க. மாமிக்குன்னு தனியா ஒரு பக்கம் ஒதுக்கி, வாரம் வாரம் ஒரு அயிட்டம்னு விளம்பரம் எல்லாம் பலமா கொடுத்து, முதல் வாரத்துக்கு ஒன்னு போஸ்ட் பண்ணிட்டேன். அதுதான் என்னை இப்படி எழுத வச்ச "அக்கார அடிசில்".

20 வருஷத்துக்கு மேல அக்ரஹாரத்துல குடியிருக்கேன். இதுநாள் வரைக்கும் அந்த அக்கார வடிசலை(அப்படித்தாங்க எல்லோரும் சொல்றாங்க) கண்ணால பாத்ததும் இல்லை, நாக்கால ருசிச்சதும் இல்லை. என் வீட்டுல கோழி குருமா, எறால் வறுவல் செய்யுறப்ப எல்லாம், பசங்களைக் கூப்பிட்டு, கூப்பிட்டுக் கொடுத்திருக்கேன் (கெடுத்திருக்கேன். பத்ரி மாதிரி தப்பித்த விதிவிலக்குகளும் உண்டு). என் ப்ரெண்ட்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு இத்தனை பேர் இருந்தும், ஒருத்தன் கூட அந்த வடிசலை இதுநாள் வரைக்கும் எனக்குக் காட்டல.

சரி, இப்ப பிரச்சனைக்கு வர்றேன். பாலா சொல்லிட்டாரேன்னு மரத்தடிக்குப் போயி, ஜெயஸ்ரீ அம்மாவோட ரெஸிப்பிக்கும் இதுக்கும் பொருத்தம் பார்த்தேன். நான் பாசிப்பருப்பு (பயற்றம் பருப்பு) ஒரு கப் ன்னு போட்டு இருந்தேன். இது என்னோட தப்புங்க. எல்லாரும் ஒரு தடவை மன்னிச்சுடுங்க. மாமி கால் கப்புன்னு சரியாதான் எழுதிக் கொடுத்து இருந்தாங்க. அதை உடனே சரி பண்ணிட்டேன். மத்த வித்தியாசத்துக்கு வர்றேன். மாமி கூடுதலா கால் கப் கடலைப்பருப்பு சேத்திருக்காங்க. ஜெயஸ்ரீ அம்மா முந்திரி திராட்சையே கூடாதுங்கிறாங்க. வெல்லம் அளவு, பச்சைக் கற்பூரம் மாதிரி சில விசயங்கள் பொருந்தலை. என்னன்னு கேட்கலாம்னு ராத்திரியே மாமி வீட்டு கதவைத் தட்டினேன். மாமி நான் எதிர்பாத்த பதிலைத்தான் சொன்னாங்க.

"ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. நான் செய்யுறது கொஞ்சம் பொங்கல் மாதிரி இருக்கும். முழுக்க வெல்லம் போட்டா கொஞ்சம் கரிக்கிறாப்ல இருக்கும். அதனால நான் பாதி வெல்லம், பாதி சக்கரை போடுவேன். எனக்கு பச்சை கற்பூரம் வாசனைப் பிடிக்காது. நான் சேக்கிறதில்ல. நெய்யும் கொஞ்சம் குறைச்சுண்டாத்தான் சாப்பிடுறச்ச தெகட்டாம இருக்கும்."
சந்தடி சாக்குல மாமி, அவங்களுக்கு சமையல்ல நாப்பது வருஷ அனுபவம்னு (எதுக்காகவோ) எனக்கு நெனப்பு படுத்துனாங்க. மாமிகிட்டே அவங்க தரப்புக்கு எல்லா பதிலும் தயாரா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. குட்நைட் சொல்லிட்டு வந்துட்டேன்.

இந்த இடத்தோட நான் நிறுத்தி இருந்தேனா, கடைசி ஒரு பாராவை மட்டும் பாலாவுக்கு பதிலா சொல்லிட்டு என் வேலையப் பாக்க ஆரம்பிச்சு இருக்கலாம். ரொம்ப புத்திசாலித்தனமா காலையில எழுந்திரிச்சதும் அதுவுமா நான் பண்ணின வேலை, என்னை இப்படி ஒரு 'இது' (கடியோ, கதையோ, கட்டுரையோ) எழுத வச்சிடுச்சு.
அப்படி நான் என்ன பண்ணினேன், அதனால என்ன நடந்துச்சுங்கிறதை இரண்டாம் பாகத்துல சொல்றேன்.

3 Comments:

  • At 10:51 PM, enRenRum-anbudan.BALA said…

    அன்பு நண்பர் பாபு,
    தங்கள் நீண்ட விளக்கத்துக்கு என் நன்றி. நான் விளையாட்டாய் தான் உங்களிடம் நான் கண்ட வித்தியாசத்தை எடுத்துரைத்தேன் :-)
    தாங்கள் அதை serious-ஆக எடுத்துக் கொண்டு, என்னை மதித்து, மாமியிடம் சென்று விசாரித்ததற்கு மேலும் நன்றி!
    என்றென்றும் அன்புடன்
    பாலா

     
  • At 7:00 PM, Jsri said…

    பாபு, நான் அவரது அனுபவ வயதுகூட ஆகாதவள். ஆனால் ஆண்டாள் காலத்தில் சர்க்கரை எல்லாம் இருந்ததா? நான் எழுதியிருந்தது பாட்டில் சொல்லியிருக்கும் ஒரிஜினல் ரெசிபி; அவ்வளவுதான். ஆனாலும் உங்கள் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்.

     
  • At 10:00 PM, Anonymous said…

    இரண்டாம் பாகம் எப்போது வரும்..? ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

    - ரசிகன்

     

Post a Comment

<< Home