அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Thursday, December 02, 2004

வெண்ணெய் பிஸ்கட்

மைக்ரோவேவ் அவன் கொண்டு எளிதாகச் செய்யப்படும் ஒரு சுவையான பிஸ்கட் வகை இது.

தேவையானவை

மைதா மாவு - 500 கிராம்
ஜீனி - கால் கிலோ
வெண்ணெய் - 125 கிராம்
சோடா - அரைத்தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரைத்தேக்கரண்டி
வெனிலா எஸன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பால் - அரை கப்

செய்முறை
  • ஜீனியை நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவும். மைதாவினை சலித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
  • மைதா, ஜீனி, வெண்ணெய், பேகிங் பவுடர், சோடா, வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து சிறிது சிறிதாக பாலினை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு சப்பாத்திக் கல்லில் அரை அங்குல கனத்திற்கு சப்பாத்திகளாக இட்டு, பிஸ்கட் அச்சு கொண்டு தேவையான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.
  • வெட்டிய துண்டுகளை ஒரு நெய் தடவிய தட்டில் அடுக்கி ஓவனில் வைத்து 250 டிகிரி பாரன்ஹீட்டில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.


மேலும் இதுபோன்ற எண்ணற்ற சமையல் குறிப்புகளைக் காண வருகை தாருங்கள் www.arusuvai.com

2 Comments:

  • At 3:11 AM, துளசி கோபால் said…

    மைக்ரோ ஓவன் ரெஸிபி என்று சொல்லிவிட்டு, எத்தனை நிமிஷம், எத்தனை பவர் என்று சொல்லவில்லையே?

    நானே செஞ்சு பார்த்துக்கணுமா?

    நல்ல அருமையான பதிவுகள். தொடருங்கள்.

    நானும் ஏதாவது ரெஸிபி அனுப்பலாமா?

    என்றும் அன்புடன்,
    துளசி.

     
  • At 12:37 PM, D.V.Babu said…

    வணக்கம்,
    சமையல் பற்றின ஒரு இணையத்தளத்தை தொடங்கியிருந்தாலும், என்னுடைய சமையல் அறிவு பூஜ்ஜியம்தான். இப்போதுதான் தயிர் செய்ய கற்றுக் கொண்டு இருக்கின்றேன் :-) பழைய புத்தகங்கள், சமையல் வல்லுனர்கள், குடும்பத்தலைவிகள், தலைவர்கள் என்று பலரிடம் இருந்தும் குறிப்புகளைச் சேகரித்து அதனை எனது தளத்தில் வெளியிடுகின்றேன். இதுநாள் வரையில் தனி ஒருவனாய் அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன். அதனால் எல்லாவற்றையும் சரி பார்த்து வெளியிடுதல் என்பது எனக்கு இயலாத காரியமாக இருந்தது. இணையத்தளத்தினை வெளியிட்ட பிறகு, பலரும் எனக்கு உதவ முன்வந்து உள்ளார்கள். இனி எனது தவறுகளைச் சரி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. குறைகள் அற்ற, முழுமையானத் தகவல்களைத் தரவேண்டும் என்ற எனது நோக்கமும் நிறைவேறும் என்று நம்புகின்றேன். தங்களைப் போன்றவர்கள் இதில் பங்கேற்று இத்தளத்தின் குறைகளைக் களைய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட ரெஸிபியில் கீழ்கண்டவாறு ஒரு பத்தி வருகின்றது.

    "வெட்டிய துண்டுகளை ஒரு நெய் தடவிய தட்டில் அடுக்கி ஓவனில் வைத்து 250 டிகிரி பாரன்ஹீட்டில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்."

    இது சரியா தவறா என்று தெரியவில்லை. ஒரு ஆங்கில புத்தகத்தில் இருந்து சுடப்பட்ட "பிஸ்கட்" இது. அதில் வேறு எதுவும் குறிப்பிடப் படவில்லை. ஓவன் பயன்படுத்தும் சிலரிடம் இது குறித்து கேட்டேன். மைக்ரோ ஹை யில், பேக் மோடில் சுமார் 5 நிமிடங்கள் வைத்தால் போதுமானது என்றார்கள். நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. உதவுங்கள்.

    உங்களுடைய "ரெஸிபிகளை" ஆவலுடன் எதிர்பார்கின்றேன். babu@arusuvai.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    அன்புடன்
    பாபு

     

Post a Comment

<< Home