அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Monday, December 06, 2004

எறால் மசாலாக் கறி

கடல் உணவிலேயே அனைவருக்கும் பிடித்தமானது 'இறால்' உணவுதான். முட்கள் பிரச்சனை, இரண்டு கையிலும் இழுத்துப் பிடித்து கஷ்டப்படுதல் என்றெல்லாம் இல்லாமல், எளிதாய் சாப்பிட வசதியான, சுவையான உணவு. சுவையைப் போல விலையும் சற்று அதிகம்தான்.

தேவையானவை

எறால் - ஒரு கிலோ
எண்ணெய் - அரை கப்
பூண்டு விழுது - நான்கு தேக்கரண்டி
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி (நறுக்கியது) - 2 கப்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
சீரகம் - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - அரைத்தேக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


செய்முறை

  • முதலில் எறால்களை தோல் நீக்கி, நன்கு கழுவிச் சுத்தம் செய்து, நீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை தோலுரித்து, சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையை கழுவிக்கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த் துருவலை சிறிது தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • சீரகம், வெந்தயம், மிளகு அனைத்தையும் சேர்த்து அம்மியில் வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடேறியதும், மிதமான சூட்டில் வெங்காயத்தினைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  • அத்துடன் பூண்டு, இஞ்சி விழுதினைச் சேர்க்கவும். அதில் உள்ள நீர் ஆவியாகும் வரை வதக்கவும்.
  • பிறகு தக்காளியும் உப்பும் சேர்த்து, சற்று தீயை அதிகமாக்கி வதக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து, தேங்காய் விழுது, கறிவேப்பிலைப் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • பிறகு அதில் எறால்களைச் சேர்த்து, நன்கு கலக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தீயை சற்று அதிகப்படுத்தி மிதமாக வைத்துக் கொள்ளவும்.
  • மிகவும் வற்றியது போல் இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். எறால்கள் நன்கு வேகும் வரை தீயில் வைத்து இருக்கவும்.
  • எறால்கள் வெந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.


கால அளவு: 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
வழங்கியவர்: திருமதி. ஜீவா மோகன்தாஸ், சென்னை.

0 Comments:

Post a Comment

<< Home