அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Thursday, December 16, 2004

ஓலை கொழுக்கட்டை

திருநெல்வேலி பக்கத்து கொழுக்கட்டை வகை. பொதுவாய் கருப்பட்டிக் கொண்டு செய்யப்படுவது. தற்போது கருப்பட்டிக்கு பதிலாக சீனியையும் பயன்படுத்துகின்றனர்.

தேவையானவை

பச்சரிசி மாவு - 500 மி.லி
கருப்பட்டி - 300 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
குருத்து பனைஓலை - தேவைகேற்ப


செய்முறை

  • தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் விட்டு காய்த்து வடிகட்டி ஆறவைக்கவும்.
  • கருப்பட்டிக்கு பதிலாக சீனியையும் பயன்படுத்தலாம்.
  • பச்சரிசி மாவுடன் ஏலப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.
  • மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  • குருத்து பனை ஓலைகளை ஒரு அடி நீளத்திற்கு அகன்ற அடிப்பாகத்தில் வெட்டி, ஏடு மாதிரி இரட்டையாக திறப்பது போல் தயார் செய்து வைக்கவும்.
  • ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவு வைத்து மற்றொரு ஓலைக் கொண்டு அதனை மூடும்படி பொருத்தி, ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.
  • இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்துக்கும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து நன்றாக வேகவிடவும்.
  • வெந்தபின்பு ஓலையைப் பிரித்து எடுத்து கொழுக்கட்டையை சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.

3 Comments:

  • At 2:23 PM, மதி கந்தசாமி (Mathy) said…

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு. குருத்துப் பனையோலைக்கு எங்க போறது? :)

    பனைன்னா எனக்குக் கொஞ்சம் கிறுக்கு. வேம்பும்கூட. :)

    நீங்க செஞ்சுட்டு இருக்கிறது நல்ல விஷயம். தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்க. சும்மா படிச்சாவது வச்சுக்கிறேன்.

     
  • At 2:39 PM, துளசி கோபால் said…

    பாபு,

    மக்மல் பூரிக்கு இங்கே பின்னூட்டம் போடரதுக்கு மன்னிச்சுக்குங்க.

    அந்தப் பூரி பேரே மறந்திருந்தது. இப்ப நினைவுபடுத்திட்டீங்க. செஞ்சு பாத்துறணும்.

    நல்ல பதிவுகள்.

    என்றும் அன்புடன்,
    துளசி.

     
  • At 12:15 AM, D.V.Babu said…

    வலைப்பதிவுகளில் தமக்கென்று ஒரு சிறப்பிடம் பெற்றுள்ள ஜாம்பவான்கள் பலரும், எனது பதிவிற்கு வந்து என்னை உற்சாகப்படுத்துவது எனக்கு மிகவும் பெருமையாய் இருக்கின்றது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    பாபு

     

Post a Comment

<< Home