அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, December 31, 2004

நிவாரணப் பணிகள் மற்றும் உதவிகள்

சம்பவம் நடந்த தினத்திலிருந்து நேற்று மதியம் வரை எனது கம்யூட்டரைத் தொடவில்லை. அதற்கு நேரமும் இல்லை. நேற்று மதியம் அரசாங்கம் கொடுத்த சுனாமி எச்சரிக்கை, வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிவாரணப் பணிகள் அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. மதியத்திற்கு மேல், ஊரில் இருந்த பாதி மக்களில் பாதி பேர் இருப்பவற்றை எடுத்துக் கொண்டு, ஊரை விட்டு வேறிடம் சென்று விட்டனர். இந்த முறை அரசு சொன்னது இரண்டு கிலோமீட்டர் வரை இந்த தாக்கம் இருக்கும் என்று. அது பலரின் காதுகளைக் கடந்து எட்டு கிலோமீட்டர் என்று முடிந்ததின் விளைவு, ஊருக்குப் பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் வெளியேறத் தொடங்கிவிட்டனர். அனைத்து பணிகளையும் மாலை ஆறு மணி வரை நிறுத்தி வைக்கச் சொல்லி மாவட்ட ஆட்சியர் அறிவித்து விட்டார். எல்லோரும் திரும்பிவிட்டனர். தொண்டார்வலர்கள் நகரை விட்டுத் தள்ளி வேறு ஒரு ஊரில் இருப்பதாகத் தகவல்.

இதனால் நான்கு நாட்களுக்குப் பிறகு என்னுடைய மின்னஞ்சல்களை பார்ப்பதற்கும், எழுதுவதற்கும் சற்று நேரம் கிடைத்தது. நிறைய மின்னஞ்சல்கள் வந்து குவிந்து இருக்கின்றன. என்னிடம் இருந்து பதில் எதுவும் இல்லாத காரணத்தால் பலரும் கவலைப் பட்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் பதில் அனுப்ப முடிந்தது. நிவாரணப் பணிகள் குறித்தும், உதவி வழங்குவது குறித்தும் பலரும் என்னைக் கேட்டு இருந்தார்கள். அவர்களுக்காக இதனை எழுதுகின்றேன்.

பாதிக்கப்பட்ட தினத்திலிருந்து இரண்டு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். முதலில் சீரமைத்தல் பணி, இதில் உடல்களை அப்புறப்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்பு அளித்தல் அனைத்தும் அடங்கும். இரண்டாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவது.

நான் முதல் நான்கு நாட்கள் சீரமைத்தல் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதனால் மற்றொரு பணி எந்த முறையில் நடைபெற்று வருகின்றது என்பது தெரியாமலே இருந்தது. மேலோட்டமாக பார்க்கையில் அது சிறப்பாக நடைபெற்று கொண்டு வருவதாகவே தோன்றியது. நேற்றுதான் ஆட்சியரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. உதவிகள் முறையாக மக்களைச் சென்றடைய உதவுமாறு. அதன்பின் அந்த பணியில் கவனம் செலுத்தியபோது, குறைபாடுகள் சில இருப்பதும் தெரிய வந்தது. ஆனால், சில ஊடகங்கள் பெரிது படுத்தும் அளவிற்கு குறைபாடுகள் இல்லை.

உதவிகள் முறையாய் சென்றைடைய நேற்று அனைவரும் கூடி திட்டமிட்டோம். அதை செயல்படுத்திப் பார்க்கும் முன், மற்றொரு சுனாமி எச்சரிக்கை வந்து அனைவரும் வெளியாகிவிட்ட நிலையில், அது இயலாமல் போய்விட்டது. மீண்டும் இன்று பழையபடி எங்கள் பணிகளைத் தொடர்வோம்.

சில விசயங்களை மனதில் கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். அவர்கள் வசித்தது குடிசை வீடுகளில்தான் என்றாலும், நாள் ஒன்றுக்கு 500 ல் இருந்து 5000 வரை சம்பாதித்து கொண்டிருந்தவர்கள். செலவு செய்வதில் யாரும் அவர்களுக்கு இணையாக முடியாது. இன்று நாகையில் நல்லபடியாக பல தொழில்கள் நடக்கின்றது என்றால் அதற்குக் காரணம் மீனவர்கள்தான். எனக்கு நன்கு தெரியும். மீனவர்கள் படகு எடுக்காத காலங்களில் நாகையின் அனைத்துத் தொழில்களிலும் அதன் பாதிப்பு இருக்கும். அவர்களுக்குத் தெரியாத ஒரு பழக்கம் சேமித்து வைப்பது. கடந்த சில ஆண்டுகளில் பலர் இந்த நிலையில் இருந்து மாறி, நல்ல வீடு, பத்திரமான சேமிப்பு என்று இருந்தாலும், பெரும்பான்மையான மீனவர்கள் அதே நிலையில்தான் இருந்தார்கள். தன்மானம், தைரியம், ஒற்றுமை, முரட்டுத்தனம், தாழ்வு மனப்பான்மை என்று அனைத்துமே அவர்களுக்குச் சற்று அதிகம்தான். ஒரே நிமிடத்தில் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டவர்கள். உதவிகளை ஏற்றுக்கொள்ள தயக்கம், வேறு வழியில்லையே என்ற உண்மையின் தாக்கம், கையேந்தும் நிலை வந்துவிட்டதே என்று நொந்த நிலை.. இப்படி பல மனநிலைகளில் அவர்கள் தவிக்கின்றனர். இவற்றை எல்லாம் மனதில் கொண்டுதான் அவர்களுக்கு உதவவேண்டியுள்ளது. உதவி வழங்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.

இந்த இடத்தில்தான் வெளியூரில் இருந்து வரும் தொண்டார்வலர்கள் பலரும் தவறு செய்வதை உணருகின்றேன். வாகனங்களில் இருந்தபடியே துணிகளை தூக்கி எறிதல், உணவுப் பொட்டலங்களை வீசுதல் போன்ற செயல்களைப் பரவலாக காணமுடிகின்றது. அதற்கும் ஒரு கூட்டம் அடித்துக் கொண்டு உள்ளது. நான் பார்த்த வரையில், அந்த கூட்டத்தில் இருக்கும் முக்கால்வாசிப் பேர் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.

பழையத் துணிகளும், உணவுப் பொட்டலங்களும் நகர் முழுதும் இறைந்து கிடக்கின்றன. 'ஒன்றும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றுதானே அவ்வளவு தூரத்தில் இருந்து இதனைக் கொண்டு வருகின்றோம்' என்று உதவி செய்பவர்களும் வருத்தப்படுகின்றனர்.

இதனை முறைப்படுத்தும் பணியில் இன்றிலிருந்து முழுமூச்சாய் இறங்கப் போகின்றோம். என்ன உதவித் தேவை என்று கேட்பவர்களுக்கு நான் கூறுவது இதனைத்தான். பழையத்துணிகள், உணவுப் பொட்டலங்களைத் தவிர்த்து விடுங்கள். என்னத்தான் இன்று ஒன்றுமே இல்லாத நிலைக்கு ஆளாகிவிட்டாலும், நான்கு நாட்களாய், மூன்று வேளையும் புளிய சாதம், எலும்மிச்சை சாதம் சாப்பிடுவது என்பது யாருக்குமே கஷ்டம்தான். அதற்காக அவர்களுக்கு கறி பிரியாணி செய்து போட முடியாது என்றாலும் சற்று மாறுதலான உணவுகளை வழங்கலாம். அதற்கான வழிகளை உண்டாக்கப் போகின்றோம்.

மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் ஏராளமாக வந்த வண்ணம் உள்ளன. ரெட் கிராஸ் போன்ற பெரிய அமைப்புகள் அதில் முழுமூச்சாய் செயல்படுகின்றன. அவற்றிற்கான தேவையும் இப்போது இல்லை (எனக்குத் தெரிந்தவரையில்). மற்றபடி, பாய், தலையணை, போர்வை, ஆடைகள், செருப்பு, சோப்பு, எண்ணெய் என்று அத்தியாவசியப் பொருட்களை அனுப்பலாம்.

அவற்றை அனுப்புபவர்கள் எங்களது எக்ஸ்னோரா, லயன்ஸ் அல்லது ரோட்டரி போன்ற சங்களின் வாயிலாகக் கொடுத்தல் நலம். அவற்றிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அரசு எந்த உதவியையும் செய்வதில்லை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான் அனைத்தையும் செய்து வருகின்றன என்று ஊடகங்கள் செய்தி பரப்பியதின் விளைவு, இனி எக்ஸ்னோரா, லயன்ஸ், ரோட்டரி போன்ற நிறுவனங்கள் அவர்களாக யாருக்கும் எதையும் அனுப்பக் கூடாது என்றும், அரசாங்கம் சொல்லும் இடங்களுக்கு, கேட்பவற்றை மட்டும் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளாராம். அமைப்புகளின் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர்.

இது போன்ற அரசியல்களில் மாட்டிக்கொள்ளாமல், எதனைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் உண்மையாய் உழைக்க சிலர் இருக்கின்றோம். கண்டிப்பாய் நாங்கள் இவற்றை முறைபடுத்துவோம். என்னிடம் நிறைய பேர் தொடர்பு கொண்டு பணம் அனுப்புவதாக கூறினார்கள். பண உதவி செய்ய விரும்புவோர்க்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். சோகத்தின் தாக்கம் இருக்கும் நேரத்தில் பலரும் உதவிக்காக பல்வேறு அமைப்புகளின் மூலம் பணம் அனுப்பி விடுகின்றனர். அவை முறையாகத் தான் செலவிடப்படுகின்றன என்று நம்புவோம். எல்லாமே ஒரே நேரத்தில் குவிவதால் அவை முறையான செலவுகளாக இல்லாமல் போகச் சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. இரண்டு வாரம் பொறுத்திருங்கள், பழைய வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பும் போது அவர்களுக்குத் தேவைகள் நிறையவே இருக்கும். அப்போது உதவுவதற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று தெரியாது. நாம் செய்யலாம். இது நம்மை வித்தியாசப்படுத்தி, தனித்துக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல. செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் மனநிறைவைத் தரவேண்டும் என்பதற்காக.

சம்பவம் நடந்த இரண்டாம் நாள் மாலை, பாதிப்புகளை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுமாறு என்னை வலியுறுத்தினார்கள். அவற்றில் சில இங்கே உங்கள் பார்வைக்கு.

1. இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் நாங்கள் எடுத்துப் புதைத்த உடல்கள்
2. பாதிப்புகளில் சில துளிகள்
3. அதிகப்படியாய் வந்து குவியும் உணவு மற்றும் பழையத் துணிகள் வீணாகும் அவலம்.

Thursday, December 30, 2004

சோகப்பட்டினம்

ஏனோ எழுதத் தோன்றுகின்றது. ஏதோ எழுதத் தூண்டுகின்றது. எழுதுவதின் நோக்கம் எனக்கேத் தெரியவில்லை. உலகின் ஒரு பகுதியையே ஒரு பெரும் சோகம் பேரலையாய் தாக்கிச் செல்ல, நான் வாழும் நாகை நகரும் பெரிதாய் காயம்பட்டது. 26 ஆம் தேதி காலை, 'சன்' செய்திகளில் சென்னையில் லேசான நிலநடுக்கம் என்ற செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, நகரில் மின்சாரம் தடைபட்டது.

வீதியெங்கும் கூக்குரல், மக்களின் ஓட்டம், வாகனங்களின் சத்தம் .. இப்படி நகரமே அல்லோகலப்பட்டது. என்னவென்று செய்தி அறிவதற்கே சில நிமிடங்கள் ஆயிற்று. எல்லோர் வாயும் உதிர்த்த இரண்டு வாக்கியங்கள் "கடல் பொங்கி ஊருக்குள் வருகின்றது.. ஓடுங்கள்..". எல்லோரும் எதிர் திசையில் ஓட, என் போன்ற சிலர் கடல் இருக்கும் திசை நோக்கிச் சென்றோம். என் வீட்டிற்கும் கடலுக்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
பாதி தூரம் சென்ற பின்புதான் மக்கள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர ஆரம்பித்தோம். தண்ணீர் மிக மெதுவாய் நகரின் முக்கிய வீதியில் மேலேறி வந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் முக்கால் பாகம் மூழ்கிய நிலையில் பல வாகனங்கள், பாதி மூழ்கிய நிலையில் பல கடைகள்.. விபரீதம் புரிந்து திரும்பிச் செல்ல எத்தனிக்கும்போதுதான், கடல் நீர் பின்னோக்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

சில காலங்களில் கடல் நீர் அதிகரித்து கரைகளை அரித்து மேல்நோக்கி வருவது சகஜம். இது சற்று அதிகமாக வந்துவிட்டது என்றுதான் எண்ணினோம். இதற்கும், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. கொஞ்சம் முன்னேறி பைக்கிலேயே தண்ணீரில் சென்ற நான், சாலையின் மறுமுனையில் பார்த்தது ஒரு பெரிய படகினை. படகு எப்படி இங்கு வந்தது என்ற ஒரு வினாடி யோசனையில், நடந்திருப்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. எத்தனைக் கட்டிடங்களைத் தாண்டி அந்த படகு சாலையின் முனைக்கு வந்துள்ளது.. Day after tomorrow திரைப்படத்தில் நகரின் மத்திக்கு வரும் அந்த கப்பல் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் முன்னேறிச் செல்ல செல்ல நடந்திருக்கும் கொடுமையை உணரமுடிந்தது. சற்று நெருங்கி வந்த போது, முன்னால் சென்ற கூட்டம் அலறியபடி திரும்பி ஓடிவந்தது. சற்று தூரத்தில் ஒரு கட்டிடத்தின் மேல் ஆடும் படகினையும், தெறித்து விழும் தண்ணீரையும் பார்க்க முடிந்தது. அது இரண்டாவதாக வந்த, சற்று சிறிய அலையின் கைங்கர்யம். முன்னேறியக் கூட்டம் தலைத்தெறிக்கப் பின்னேறியது.

யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். இதற்குள் மூட்டை முடிச்சுகளுடன் பெரும் கூட்டம் நகரை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டது. இருந்தவர்கள் உதவ ஓடினோம். தேடினோம்.. அழைத்து வந்தோம்.. தூக்கி வந்தோம்.. இழுத்து வந்தோம்.. எல்லாமே நடந்தது. எடுத்துச் செல்வது உயிருள்ள உடலா, பிணமா என்பதை எல்லாம் ஆராய நேரம் இருக்கவில்லை. இதற்குள் நாகூர், சாமந்தன்பேட்டை, நம்பியார் நகர் என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் உடல்கள் குவியத் தொடங்கிவிட்டன. பொது மருத்துவமனை திணறியது. கதறிய பெண்களின் ஒப்பாரியில் நடந்தவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.

ஒரே ஒரு அலை.. ஒரு நிமிடம்.. அனைத்தும் முடிந்து போனது.

அந்த விபரீதம் நடப்பதற்கு ஒரு நிமிடம் முன்பு யாரேனும் வந்து, ஒரு அலை அடித்து நீங்கள் அனைவரும் சாகப் போகின்றீர்கள் என்று சொல்லியிருந்தால், அந்த ஊரே கூடி வயிறு வலிக்கச் சிரித்து இருக்கும். கடலிலேயேப் பிறந்து கடலிலேயே வளர்ந்தவர்கள். காற்றின் வாசனையைக் கொண்டே கடலின் போக்கை உணரக்கூடியவர்கள். இவர்கள் வீட்டுக் குழந்தைகள் மீனுக்கே நீந்த கற்றுத் தருவார்கள். பெரும்பாலானோருக்கு தோழர்கள் அந்த அலைகள்தான். அவைகளுடன் கட்டிப் பிடித்து விளையாடுவதுதான் இவர்களின் பொழுதுபோக்கே.. அத்தனை பேரும் அந்த ஒரு நிமிடத்தில் ஏமாந்துதான் போனார்கள்...
அதிகம் பாதிப்பிற்கு உள்ளானது கீச்சான் குப்பம், அக்கரைப்பேட்டை பகுதிகள். கீச்சான் குப்பத்தில் மிஞ்சி இருப்பது உடைந்து போன படகுகளும், நொறுங்கிப் போன வீடுகளும்தான். இத்தனை நாளும் எனது செல்வங்களைக் கொள்ளையடித்தீர்களே என்று கேட்டு, ஒரே நிமிடத்தில் வஞ்சம் தீர்த்துக் கொண்டு அமைதியாகிவிட்டது அந்தக் கடல்.

அதிகம் பலியானது சிறுபிள்ளைகள்தான். போராடக்கூட அதிக நேரம் இல்லாமல், அப்படியே முழுதாய் மூச்சடைத்து இறந்து போயிருந்தார்கள். உறவுகளைத் தங்கள் கண்முன்னே பறிகொடுத்த ஜனங்கள், கண்ணீர் வற்றிக் கதறிக் கொண்டு இருந்தனர்.

'அம்மா. தண்ணீ வருதும்மா' என்று, மொட்டை மாடியில் துணிக் காயவைத்துக் கொண்டிருந்த அம்மாவை கீழிருந்த எச்சரித்த ஏழு வயது சிறுமி அந்த தாயின் கண்முன்பே தண்ணீரில் மறைந்து போனாள்.
'அம்மா.. கடைக்குப் போகவேண்டுமா?' என்ற
கேட்ட எட்டு வயது மகனுக்கு இல்லை என்று பதிலுரைத்த தாய், 'புளி வேணும்னு சொன்னியே.. வாங்கித் தரேன்..' என்று விடாப்பிடியாய் கேட்டபோது, மகன் கேடபதின் நோக்கம் அறிந்து அவனைக் கடைக்கு அனுப்பினாள். எல்லாம் கடைக்குச் சென்றால் கிடைக்கும் அந்த ஒரு ரூபாய்க்காக.
"அப்படி எதை வாங்கி சாப்பிட ஆசை பட்ட என் ராசா. சாக்லேட்டா?.. நீ ஆசைபட்டதை வாங்கி சாப்பிட்டியா .. இல்லையான்னே தெரியலியே.."
மகனின் கடைசி ஆசை நிறைவேறியதா.. இல்லையா என்பது தெரியாமல் கதறி அழும் தாய்.
வேளாங்கன்னியில் பலியானதோ பெரும்பாலும் வெளியூர் மக்கள். மாலை நான்கு மணியளவிற்கு நான் அங்கு சென்றபோது எல்லோரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். நாகைக்கும் வேளாங்கன்னிக்கும் இடைப்பட்ட 10 கிலோ மீட்டர் தூரமும் மனித வெள்ளம். கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. கரையோரம் முழுதும் பிணங்கள். தொலைந்த உறவுகளைத் தேடும் சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. மாதாவை வேண்டி எங்கள் பாவத்தை தொலைக்க வந்த நாங்கள் இப்போது குடும்பத்தைத் தொலைத்து நிற்கின்றோம் என்று கதறிக் கொண்டிருந்தனர்.
நாக்பூரில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த ஒரு குடும்பம், சிகிச்சை வெற்றிகரமாக முடியவே, மாதாவை வேண்டி காணிக்கை செலுத்திச் செல்லாம் என்று, காலைதான் வேளாங்கன்னி வந்தார்களாம். அவர்கள் செலுத்திய காணிக்கை ஐந்து உயிர்கள். குடும்பத்தில் எஞ்சியது ஒருவர் மட்டுமே. my wife, my first son medical student, my brother .. என்று சிதறிக் கிடந்த உடல்கள் ஒவ்வொன்றாய் அடையாளம் காட்டிக் கொண்டிருந்தார். அவரது இரண்டாவது மகனையும், தம்பியின் மனைவியையும் தேடிக் கொண்டிருந்தார். அடுத்த அலை வந்து இருக்கும் உடல்களையும் அடித்துச் செல்லும் முன், தயவுசெய்து எடுத்து ஓரிடத்தில் அடுக்கி வையுங்கள் என்று அவர் கைகூப்பிக் கெஞ்சியது மனதை என்னவோ செய்தது. எடுத்து வெளியேற்ற ஆட்கள் இல்லை. உடல்கள் கிடக்கும் இடமோ இடிபாடுகளுக்கு நடுவில். என்னுடன் உதவிக்கு வந்த இரண்டு வட இந்தியர்களையும் வைத்துக் கொண்டு அனைத்தையும் சற்று ஒதுக்குபுறமாய் கொண்டுவந்து சேர்த்தோம்.
கன்னியாக்குமரியில் இருந்து வந்திருந்த மற்றொரு குடும்பம், அதில் எஞ்சியது அண்ணன், தம்பி இருவர் மட்டுமே. கரையில் சற்று தள்ளி நின்று தங்களின் குடும்பத்தினர் கடலில் விளையாடுவதை, நடக்கப் போகும் விபரீதம் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். அலையைப் பார்த்து இவர்கள் எச்சரித்தும் அவர்களால் கரை திரும்ப இயலாமல் போயிற்று. அலை வருவதை அறிந்து, அது வரும்முன் கையில் இருந்து விழுந்த கிளிஞ்சல்களைப் பொறுக்கிவிடவேண்டும் என்ற வேகத்தில், அலையைப் பார்த்தபடியே அவசரம் அவசரமாக கிளிஞ்சல்களை அள்ளிய எட்டு வயது சிறுமி, 'அக்கா, அலை பக்கத்துல வந்துடுச்சு' என்று அவசரப்படுத்திய ஐந்து வயது சிறுவன், அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்த தாய் அனைவரும் அடுத்த வினாடி காணாமல் போயினர்.
நடந்தது மொத்தமே மிகவும் கொடுமையான சோகம்தான் என்றாலும், வேளாங்கன்னியில் நடந்துள்ள கொடூரம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. வெளியூர்களில் இருந்து இறப்பதற்காகவே இங்கு வந்தார்களோ என்று எண்ணத் தோன்றியது. ஒவ்வொரு தப்பித்தலுக்குப் பின்னணியிலும், ஒவ்வொரு சாவிற்குப் பின்னணியிலும் ஒரு நிமிடக் கதை ஒன்று உள்ளது.

இருட்டும் வரை இடிபாடுகளில் சிக்கியவர்கள், காயம்பட்டவர்கள், இறந்தவர்கள் என்று அள்ளிக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தோம். இடையிடையே மணிக்கொரு முறை கிளப்பி விடப்பட்ட புரளிகள், மக்களில் பாதிப் பேரை ஊரைக் காலி செய்ய வைத்தது. உயிரை மட்டும் கொண்டு வந்தவர்களுக்கு புகலிடத்திற்கு ஏற்பாடுகள் செய்தோம். எங்கள் பெருமாள் கோயில் ஆயிரம் பேரை அரவணைத்துக் கொண்டது. பத்ரி அவ்வபோது தொடர்பு கொண்டு பாதிப்பு நிலவரம், தேவைகள் என்ன என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டார். பத்ரியின் தயவில் கோவிலில் தங்கி இருக்கும் ஆயிரம் பேருக்கும் ஒரு நாள் நல்ல உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நடந்து முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. முதல் இரண்டு நாட்கள் தூக்கம் இல்லை, ஓய்வும் இல்லை. மூன்றாம் நாளில் இருந்து ஒட்டுமொத்த உலகின் கவனமும் நாகையின் மேல் விழுந்தது. நாகையைச் சீரமைக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நான்கு திசைகளில் இருந்தும் அனைத்து விதமான உதவிகளும் வந்து குவிகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, இறந்து போன சொந்தங்களைத் தவிர மற்ற அனைத்தையும் மீண்டும் திருப்பித் தர முடியும் என்ற நம்பிக்கைத் தோன்றுகின்றது. எத்தனை நாட்களில் என்பதுதான் இப்போதைக்கு பதில் சொல்ல இயலாத கேள்வி.

நடுராத்திரியில் மொட்டை மாடியில் அமர்ந்து நான் ரசிக்கும் அந்த அலையின் சத்தம் இப்போது கர்ண கொடூரமாய் ஒலிக்கின்றது. இன்னொரு கொடுமை இது போன்று வேண்டாம் என்று அந்த இயற்கையை வேண்டிடுவோம்.

Wednesday, December 22, 2004

தோப்பம்

மயிலாடுதுறைப் பக்கம் பிரபலமான இனிப்பு வகை இது. இதுவே சில மாறுதல்களுடன் சுழியன் என்றும் சுசியன் என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை வழங்கியவர் திருமதி. மனோ சாமிநாதன், 'ஷார்ஜா'வில் இருந்து.

தேவையானவை

எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

பூரணத்திற்கு

தேங்காய் - ஒன்று
பொட்டுக்கடலை மாவு - ஒரு கைப்பிடி
வெல்லம் - ஒரு கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி

மேல்மாவிற்கு

மைதா மாவு - ஒன்றரை கப்
இட்லி மாவு - கால் கப்
பேக்கிங் பவுடர் - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி

செய்முறை

  • தேங்காயைப் பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, அதில் இந்த தேங்காய்த் துருவலைப் போட்டு, குறைவானத் தீயில் அதில் உள்ள நீரெல்லாம் சுண்டும் வரை வதக்கவும்.
  • பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி, அது சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலை மாவு, ஏலப்பொடி, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து கையால் பிசையவும்.
  • நன்கு பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • மேல் மாவிற்கு தேவையான அனைத்தையும் சிறிது நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடாகியதும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மேல் மாவில் தோய்த்து எண்ணெய்யில் போடவும்.
  • உருண்டை வெந்து இளம் பழுப்பு நிறமானதும் எடுத்து விடவும்.

Tuesday, December 21, 2004

அசோகா

அல்வாவிற்கும், கேசரிக்கும் இடைப்பட்டப் பதம். சுவையில் இரண்டினையும் மிஞ்சி நிற்பது.

தேவையானவை

பாசிப்பருப்பு - ஒரு கப்
தண்ணீர் - இரண்டரை கப்
சர்க்கரை - இரண்டு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
நெய் - ஒன்றரை கப்
முந்திரிப்பருப்பு - 15
கிஸ்மிஸ் - 10
கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை
சாரப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
ஜாதிக்காய்ப்பொடி - அரைத்தேக்கரண்டி

செய்முறை

  • பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பைக் கழுவிப் போட்டு, இரண்டரைக் கப் தண்ணீர் விட்டு, வெயிட் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
  • பருப்பு நன்றாக குழைவாக வேகவேண்டும். வெந்த பருப்பில் சர்க்கரைச் சேர்த்து, அது கெட்டியாக துவங்கியதும் கீழே இறக்கி வைக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், சலித்த சுத்தமான கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும்.
  • அந்த மாவுடனேயே முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து விடவும்.
  • மாவின் மீது சிறிது தண்ணீர் தெளித்தால் "னொய்" என்ற சப்தம் வரும். அதுவே சரியான பதம்.
  • அப்படி சரியான பதம் வந்த பிறகு இறக்கி, பாசிப்பருப்புக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
  • அத்துடன் கேசரிக்கலர் சேர்த்து, மீதமுள்ள நெய்யையும் ஊற்றி,ஏலப்பொடி, ஜாதிக்காய்ப்பொடியையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிடவும்.

Monday, December 20, 2004

பாதாம் கீர்

இந்த பானத்தை சூடாகவும் அருந்தலாம், குளிர்ச்சியாகவும் அருந்தலாம். பாதாமும் பாலும் சேர்வதால், உடலுக்கு உடனடி சக்தியைத் தரவல்லது.

தேவையானவை

பாதாம் பருப்பு - 250 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
கேசரிப் பவுடர் - அரைத்தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய் - 6
பால் - அரை லிட்டர்

செய்முறை

  • பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்கும் தண்ணீர் விட்டு ஊற வையுங்கள்.
  • அரைமணி நேரத்திற்குப் பிறகு தோலை உறித்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பாதாம் பருப்பு, ஒரு லிட்டர் தண்ணீர், பால், சர்க்கரை, கேசரிப் பவுடர் ஆகியவற்றைச் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, குங்குமப்பூவையும், ஏலக்காயையும் நசுக்கிப் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.

Sunday, December 19, 2004

வெள்ளரி சூப்

முழுக்க முழுக்க சைவ சூப். சத்தானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.

தேவையானவை

வெள்ளரிக்காய் - 1
வெண்ணெய் - 20 கிராம்
பால் - 100 மி.லி
சோளமாவு - 2 தேக்கரண்டி
பாலாடைக்கட்டி -25 கிராம்
சர்க்கரை - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
பாலாக்கு இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • வெள்ளரிக்காயினை நன்கு கழுவி, தோலுரித்து துருவியில் துருவிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் வெண்ணெயை இட்டு, அதனுடன் துருவிய வெள்ளரி மற்றும் பாலாக்கு இலைகளைச் சேர்க்கவும்.
  • சுமார் 4 நிமிடங்கள் அவற்றை வதக்கியவுடன் அதில் சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கவும்.
  • தீயைச் சற்று குறைத்து, இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
  • காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்கவிடவும்.
    பிறகு அதனை நன்கு கலக்கி அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு மற்றும் துருவிய பாலாடைக்கட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பாலாடைக்கட்டி உருகியவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Saturday, December 18, 2004

கறிவேப்பிலைப் பொடி

கறிவேப்பிலை துவையல் அரைக்க, நேரம் அல்லது வசதி இல்லாதவர்கள் இந்த பொடியினை செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். கறிவேப்பிலையில் கால்சியமும், கரோட்டீனும் செறிந்துள்ளது.

தேவையானவை

கறிவேப்பிலை - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 20 கிராம்
மிளகாய் வற்றல் - 10
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
  • மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • அதன்பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும்.
  • விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
  • சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.

Friday, December 17, 2004

பனீர் ப்ரெட் ரோஸ்ட்

வெறும் வெண்ணெய்யைத் தடவி ரோஸ்ட் சாப்பிட்டு சலித்துப் போய்விட்டதா?. இந்த வித்தியாசமான பனீர் மசாலா பிரெட் ரோஸ்டை முயற்சித்துப் பாருங்கள். தயார் செய்ய சிறிது நேரம் பிடிக்கும். இருப்பினும் அதன் சுவைக்காக இந்த நேரத்தை தாராளமாகச் செலவு செய்யலாம்.

தேவையானவை

ப்ரெட் ஸ்லைஸ் - 10
பனீர் - 100 கிராம்
முட்டை - 2
வெங்காயம் - 4
தக்காளி - 2
கொத்துமல்லித்தழை - தேவைக்கேற்ப
எண்ணெய் - 250 மி.லி.
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
மசாலா பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • பனீர், வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லிக்கீரை இவை அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றி பொரியவிடவும்.
  • பின்பு நறுக்கியவைகளை எண்ணெய்யில் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, மசாலாப்பொடி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
  • தண்ணீர் வற்றி பொரிந்தவுடன் அதனை எடுத்து ஒரு ப்ரெட் ஸ்லைஸ் மீது வைத்து அதன்மேல் மற்றொரு ஸ்லைஸ் வைத்து மூடி தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பொரித்தெடுக்கவும்.

Thursday, December 16, 2004

ஓலை கொழுக்கட்டை

திருநெல்வேலி பக்கத்து கொழுக்கட்டை வகை. பொதுவாய் கருப்பட்டிக் கொண்டு செய்யப்படுவது. தற்போது கருப்பட்டிக்கு பதிலாக சீனியையும் பயன்படுத்துகின்றனர்.

தேவையானவை

பச்சரிசி மாவு - 500 மி.லி
கருப்பட்டி - 300 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
குருத்து பனைஓலை - தேவைகேற்ப


செய்முறை

  • தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் விட்டு காய்த்து வடிகட்டி ஆறவைக்கவும்.
  • கருப்பட்டிக்கு பதிலாக சீனியையும் பயன்படுத்தலாம்.
  • பச்சரிசி மாவுடன் ஏலப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.
  • மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
  • குருத்து பனை ஓலைகளை ஒரு அடி நீளத்திற்கு அகன்ற அடிப்பாகத்தில் வெட்டி, ஏடு மாதிரி இரட்டையாக திறப்பது போல் தயார் செய்து வைக்கவும்.
  • ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவு வைத்து மற்றொரு ஓலைக் கொண்டு அதனை மூடும்படி பொருத்தி, ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.
  • இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்துக்கும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து நன்றாக வேகவிடவும்.
  • வெந்தபின்பு ஓலையைப் பிரித்து எடுத்து கொழுக்கட்டையை சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும்.

Wednesday, December 15, 2004

மக்மல் பூரி

பூரி என்ற பெயரில் ஒரு இனிப்பு வகை இது. குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர். மாலை நேர தேனீர் விருந்துகளுக்குத் தோதான பட்சணம்.

தேவையானவை

மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - கால் கிலோ
தேங்காய் - 1 மூடி
அரிசிமாவு - 50 கிராம்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - ஒரு சிட்டிகை
கலர் பவுடர் - அரைத்தேக்கரண்டி

செய்முறை

  • தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பாலை மைதா மாவில் ஊற்றி, உப்பு சேர்த்து பூரி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசிமாவில் நெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • மைதா மாவு உருண்டைகளை பூரி போல் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பூரி மேல் சிறிது அரிசிமாவைத் தடவி அதன்மீது மற்றொரு பூரியை வைக்கவும்.
  • அதன்மீதும் அரிசி மாவினைத் தடவி மேல் மற்றொரு பூரியை வைக்கவும். இப்படியே ஐந்து பூரிகளை வைக்கவும்.
  • அதனை சேர்த்து உருளையாக உருட்டவும். பிறகு அதனைக் குறுக்காக 3 அல்லது 4 துண்டுகளாக வெட்டவும்.
  • ஒவ்வொரு துண்டையும் பூரி கட்டைக் கொண்டு, வெஜிடபிள் பப்ஸ் தோற்றத்திற்கு லேசாக தேய்த்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்குமாறு காய்த்துக் கொள்ளவும்.
  • பாகில் கலர் பொடியைச் சேர்த்துக் கொள்ளவும். பொரித்து வைத்துள்ள பூரித் துண்டுகளை எண்ணெய் வடித்து பாகில் போட்டு எடுக்கவும்.

Tuesday, December 14, 2004

கீரை வடை

கீரை வடை சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. பலவகைக் கீரைகளைக் கொண்டு இந்த வடையினைச் செய்யலாம் என்றாலும், அரைக்கீரை பொதுவில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் சுவையான பலவகை வடைகளின் குறிப்புகளை அறுசுவை இணையத்தளத்தில் காணலாம்.

தேவையானவை

அரைக்கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
உளுத்தம்பருப்பு - ஒரு கப்
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 6
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

  • உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சில மணிநேரம் ஊறவைக்கவும்.
  • உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் விடாமல், நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைக்கீரை, கொத்தமல்லித்தழை இரண்டையும் நன்கு கழுவி, பொடிப்பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ள மாவில் போடவும்.
  • முந்திரிப்பருப்பையும் சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது நெய் விட்டு காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

Monday, December 13, 2004

தஹி பிந்தி

இது வட இந்திய கறிவகை. தஹி என்றால் தயிர், பிந்தி என்பது வெண்டைக்காய். வெண்டைக்காய் கறியில் சற்று வித்தியாசமான சுவையை விரும்புவோர் இதனை முயற்சித்துப் பார்க்கலாம்.

தேவையானவை

வெண்டைக்காய் - அரைக்கிலோ
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்துமல்லி - ஒரு கட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • இஞ்சி, சீரகம், பச்சைமிளகாய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் தயிர், மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • வெண்டைக்காயை நீளவாக்கில் கொத்தாக நறுக்கிக்கொண்டு, கலவையை வெண்டைக்காய்களில் நிரப்பவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மசாலா நிரப்பிய வெண்டைக்காய்களை மெதுவாகப் போட்டு வதக்கவும்.
  • வெண்டைக்காய் மொரமொரப்பானவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

Sunday, December 12, 2004

தக்காளிச் சட்னி

இட்லி, தோசை, அப்பம், சப்பாத்தி.. இப்படி அநேகமான சிற்றுண்டிகளுக்கு இணை உணவாய் இருப்பது இந்த தக்காளிச் சட்னி. இதே தக்காளிச் சட்னியை பலவிதமாகத் தயாரிக்கலாம். மேலும் பல தக்காளிச் சட்னிகள், இதர வகையான சட்னிக் குறிப்புகளுக்கு அறுசுவை.com இணையத்தளத்திற்கு வருகைத் தாருங்கள்.

தேவையானவை

தேங்காய் - 1 மூடி
தக்காளிப்பழம் - 4
பச்சைமிளகாய் - 4
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை

  • தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயுடன் நறுக்கிய தக்காளி, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், மஞ்சள்பொடி, உப்பு முதலியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • மிகவும் நைசாக அரைத்துவிடாமல் சற்று கரகரப்பாக இருக்குமாறு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை கொஞ்சம் நீர்க்க கரைத்து வாணலியில் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு பிறகு இறக்கிவிடவும்.

Saturday, December 11, 2004

செட்டிநாடு வெள்ளை அப்பம்

செட்டிநாட்டு உணவுகளின் சிறப்புப் பற்றி சொல்லத் தேவையில்லை. உலகறிந்த விசயமது. இந்த வெள்ளை அப்பம் அதற்கு ஒரு சான்று.

தேவையானவை

பச்சரிசி - 4 கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பால் - கால் கப்
உப்பு - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - 3 சிட்டிகை
எண்ணெய் - சிறிது

செய்முறை

  • அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடவும்.
  • அதன் பிறகு நீரை வடித்து, இரண்டையும் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளவும். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.
  • இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
  • ஆப்பச்சட்டியை அடுப்பில் வைத்து, கால் சட்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஒரு கரண்டி மாவு எடுத்து அப்பமாக ஊற்றவும்.
  • அப்பம் எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போட்டு வெள்ளையாக இருக்கும் போதே எடுத்து விடவும்.
  • எண்ணெய் அதிகமாக இருப்பின், எண்ணெய் உறிஞ்சும் காகிதம் கொண்டு அழுத்தி எடுத்துவிடவும்.
  • இதற்கு தக்காளிச் சட்னி சுவையான இணை.
  • அப்பத்தை ஒவ்வொன்றாக ஊற்றி சுட்டு எடுக்கவும்.
  • மாவு கொஞ்சம் கெட்டியாக வைத்து ஒரு அப்பம் முதலில் சுட்டு பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் பிறகு சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளலாம்.

Friday, December 10, 2004

காரட் அல்வா

கோதுமை அல்வா போல், நாக்கில் ஒட்டுதல், ரப்பர் போன்று இழுபடுதல் என்றெல்லாம் இல்லாமல், கேரட் அல்வா உண்பதற்கு எளிமையானது, சுவையானது. உங்களுக்குத் தெரியுமா? கேரட்கள் ஆரம்ப காலங்களில், வெளிர் மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களில்தான் இருந்தன. 17ஆம் நூற்றாண்டில், நெதர்லாந்தில்தான் முதன்முதலில் இப்போது இருப்பது போன்ற ஆரஞ்சு வண்ண காரட்கள் பயிரிடப்பட்டன.

தேவையானவை

காரட் - 1/4 கிலோ
சீனி - 1/4 கிலோ
பால் - கால் லிட்டர்
டால்டா - 100 கிராம்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
முந்திரிப்பருப்பு - 15

செய்முறை

  • முதலில் காரட்டை கழுவி நன்கு சுத்தம் செய்து, துருவியில் துருவிக் கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் ஒரு கோப்பை பாலில் காரட் துருவலை போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
  • பால் சுண்டி வருகையில் சீனியைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறிதாக எரியவிட்டு, தொடர்ந்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • அல்வா பதத்தில் வரும்போது டால்டாவை ஊற்றவும். ஏலக்காய், கிராம்பை பொடி செய்து போடவும்.
  • அல்வா நன்றாக திரண்டு வந்த பின் நெய் அல்லது டால்டா தடவிய தட்டில் கொட்டி, மேலே வறுத்த முந்திரிப்பருப்பை பரப்பவும்.


கால அளவு: 30 நிமிடங்கள்
வழங்கியவர்: செல்வி. நிரஞ்சனா, பவானி.

Thursday, December 09, 2004

அக்கார வடிசலும் அக்ரஹார வழிசலும் - பாகம் 1

என்னடா இது, தினமும் ரெஸிபின்னு எதாவது ஒன்னைப் போட்டுகிட்டு இருந்தவன் இன்னைக்கு திடீருன்னு எழுத ஆரம்பிச்சுட்டானேங்கிற ஆச்சரியம்பயம்கவலை எதுவும் வேண்டாம். இது இன்னைக்கு மட்டும்தான்.

எல்லாம் இந்த 'என்றென்றும் அன்புடன் - பாலா' செஞ்ச வேலைங்க. மனுசன் ரெஸிபியைப் படிச்சமா, செஞ்சு பார்த்தோமான்னு இல்லாம, இங்கேயிருந்து மரத்தடிக்குத் தாவி, அங்க ஜெயஸ்ரீ அம்மா என்னைக்கோ எழுதிப் போட்டு இருந்த அக்கார அடிசலுக்கும் நான் எழுதிப்போட்டதுக்கும் பொருத்தம் பார்க்க போக, என் வேலை கெட்டு போச்சு.
இதுக்கும் அதுக்கும் பொருத்தம் இல்லை, போயிப் பாருன்னு ஒரு வார்த்தை எழுதிப்போட்டுட்டாரு. அலறி அடிச்சுக்கிட்டு போய்ப் பார்த்தா, அசந்து போயிட்டேன். சும்மா சொல்லக்கூடாது. இதுதாங்க.. இதுதான் கேட்டு எழுதறதுக்கும், அனுபவிச்சு எழுதறதுக்கும் உள்ள வித்தியாசம். படிக்கிறப்பவே உதட்டோரம் நெய் ஒழுக சாப்பிடுற மாதிரி ஒரு 'பீலிங்'. எழுத்தாளர் தர்ற ரெஸிப்பின்னா சும்மாவா பின்னே. சத்தியமா சமையல், எழுத்து.. ரெண்டுலயுமே நான் ஜீரோ.

'என்ன தைரியத்துல அறுசுவை வெப் சைட் ஆரம்பிக்குற? சாப்பிடுறதைத் தவிர, சமையலுக்கும் உனக்கும் வேற என்ன சம்பந்தம்?' ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சீனு கேட்டான்.
'சாப்பாட்டு ராமன்ங்கிற ஒரு தகுதி பத்தாதா?' ன்னு கேட்டுட்டு வீறாப்பாய் ஆரம்பிச்சுட்டேன். அதோட கஷ்டம் இப்பத்தான் தெரியுது.

அக்ரஹாரத்துல் குடியிருக்கிற தைரியத்துல அறுசுவையில பிராமண சமையலுக்குன்னு தனியா ஒரு பக்கம் ஒதுக்கிட்டேன். ஆரம்பிச்சு பதினைஞ்சு நாளாகியும் நாலு அயிட்டம் தான் அதுல இருந்துச்சு. யாரைக் கேட்கலாம்னு யோசிச்சப்ப உடனே ஸ்ட்ரைக் ஆனது வக்கிலாத்து மாமிதான். மல்லிகா பத்ரிநாத் மாதிரி மாமி சமையல்ல பெரிய புலி இல்லேனாலும், நான் கேட்டதை பொறுப்பாய் எழுதித்தர்ற பொறுமை, அவங்களுக்கு ரொம்பவே இருந்துச்சு. கேட்ட உடனேயே ஒரு இருபது, இருபத்தஞ்சு அயிட்டம் எழுதிக் கொடுத்துட்டாங்க. மாமிக்குன்னு தனியா ஒரு பக்கம் ஒதுக்கி, வாரம் வாரம் ஒரு அயிட்டம்னு விளம்பரம் எல்லாம் பலமா கொடுத்து, முதல் வாரத்துக்கு ஒன்னு போஸ்ட் பண்ணிட்டேன். அதுதான் என்னை இப்படி எழுத வச்ச "அக்கார அடிசில்".

20 வருஷத்துக்கு மேல அக்ரஹாரத்துல குடியிருக்கேன். இதுநாள் வரைக்கும் அந்த அக்கார வடிசலை(அப்படித்தாங்க எல்லோரும் சொல்றாங்க) கண்ணால பாத்ததும் இல்லை, நாக்கால ருசிச்சதும் இல்லை. என் வீட்டுல கோழி குருமா, எறால் வறுவல் செய்யுறப்ப எல்லாம், பசங்களைக் கூப்பிட்டு, கூப்பிட்டுக் கொடுத்திருக்கேன் (கெடுத்திருக்கேன். பத்ரி மாதிரி தப்பித்த விதிவிலக்குகளும் உண்டு). என் ப்ரெண்ட்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு இத்தனை பேர் இருந்தும், ஒருத்தன் கூட அந்த வடிசலை இதுநாள் வரைக்கும் எனக்குக் காட்டல.

சரி, இப்ப பிரச்சனைக்கு வர்றேன். பாலா சொல்லிட்டாரேன்னு மரத்தடிக்குப் போயி, ஜெயஸ்ரீ அம்மாவோட ரெஸிப்பிக்கும் இதுக்கும் பொருத்தம் பார்த்தேன். நான் பாசிப்பருப்பு (பயற்றம் பருப்பு) ஒரு கப் ன்னு போட்டு இருந்தேன். இது என்னோட தப்புங்க. எல்லாரும் ஒரு தடவை மன்னிச்சுடுங்க. மாமி கால் கப்புன்னு சரியாதான் எழுதிக் கொடுத்து இருந்தாங்க. அதை உடனே சரி பண்ணிட்டேன். மத்த வித்தியாசத்துக்கு வர்றேன். மாமி கூடுதலா கால் கப் கடலைப்பருப்பு சேத்திருக்காங்க. ஜெயஸ்ரீ அம்மா முந்திரி திராட்சையே கூடாதுங்கிறாங்க. வெல்லம் அளவு, பச்சைக் கற்பூரம் மாதிரி சில விசயங்கள் பொருந்தலை. என்னன்னு கேட்கலாம்னு ராத்திரியே மாமி வீட்டு கதவைத் தட்டினேன். மாமி நான் எதிர்பாத்த பதிலைத்தான் சொன்னாங்க.

"ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. நான் செய்யுறது கொஞ்சம் பொங்கல் மாதிரி இருக்கும். முழுக்க வெல்லம் போட்டா கொஞ்சம் கரிக்கிறாப்ல இருக்கும். அதனால நான் பாதி வெல்லம், பாதி சக்கரை போடுவேன். எனக்கு பச்சை கற்பூரம் வாசனைப் பிடிக்காது. நான் சேக்கிறதில்ல. நெய்யும் கொஞ்சம் குறைச்சுண்டாத்தான் சாப்பிடுறச்ச தெகட்டாம இருக்கும்."
சந்தடி சாக்குல மாமி, அவங்களுக்கு சமையல்ல நாப்பது வருஷ அனுபவம்னு (எதுக்காகவோ) எனக்கு நெனப்பு படுத்துனாங்க. மாமிகிட்டே அவங்க தரப்புக்கு எல்லா பதிலும் தயாரா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. குட்நைட் சொல்லிட்டு வந்துட்டேன்.

இந்த இடத்தோட நான் நிறுத்தி இருந்தேனா, கடைசி ஒரு பாராவை மட்டும் பாலாவுக்கு பதிலா சொல்லிட்டு என் வேலையப் பாக்க ஆரம்பிச்சு இருக்கலாம். ரொம்ப புத்திசாலித்தனமா காலையில எழுந்திரிச்சதும் அதுவுமா நான் பண்ணின வேலை, என்னை இப்படி ஒரு 'இது' (கடியோ, கதையோ, கட்டுரையோ) எழுத வச்சிடுச்சு.
அப்படி நான் என்ன பண்ணினேன், அதனால என்ன நடந்துச்சுங்கிறதை இரண்டாம் பாகத்துல சொல்றேன்.

உருளைக்கிழங்கு கறி

ரொம்ப சுலபமான கறி. சுயமாய் சமைத்துச் சாப்பிடும் அனைத்து ஆண்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு கறி வகை இது. இதையே கொஞ்சம் "ரிச்" ஆக முந்திரி, நெய் எல்லாம் சேர்த்து எப்படி செய்வது என்பதற்கான குறிப்பு.

தேவையானவை

பெரிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 2
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒர் சிட்டிகை
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கால் கிலோ பெரிய உருளைக்கிழங்கினை அப்படியே முழுசாக குக்கரில் போட்டு வேகவிடவும். வெந்தபின் தோலை உரித்து பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கி அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத் தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, முக்கால் தேக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் இவைகளைப் போட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அலுமினிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைகரண்டி நல்லெண்ணெயை விட்டு காய விடவும்.
  • காய்ந்தபின் அரை தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பிறகு ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
  • பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி கலவையை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
  • தக்காளி நன்கு வதங்கி தொக்கு மாதிரி ஆனபின்பு அதில் கறிவேப்பிலையை பிய்த்துப் போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கினையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • காயில் உப்பு, காரம் ஒட்டிக்கொண்ட பின் சிறிது நேரம் கிளறி விட்டு இறக்கிவிடவும்.
  • இறக்கிய பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் அது உருகி வாசனையாக இருக்கும்.

Wednesday, December 08, 2004

அக்கார அடிசில்

பிராமணர்களின், அதுவும் குறிப்பாய் ஐய்யங்கார்களின் சிறப்பு உணவு இது. பாலில் செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்லலாம். பால் அதிகம் சேர்ப்பதால் இதன் சுவை கூடுகிறது. சிலர் தண்ணீரே சேர்க்காமல், முழுக்க முழுக்க பாலிலேயே செய்வர். என்ன, அரிசி வேக கொஞ்சம் நேரம் ஆகும். அவ்வளவுதான்.

[அக்கார அடிசிலுக்கு பொருள் அல்லது பெயர்காரணம் யாராவது சொன்னால், அதனை அறுசுவை இணையத்தளத்தில் வெளியிடுகின்றேன்.]

தேவையானவை

பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
குங்குமப்பூ - கால் தேக்கரண்டி
முந்திரி - 12
திராட்சை - 12
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
பால் - 4 கப்
நெய் - கால் கப்

செய்முறை

  • சுத்தமான பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் சேர்த்து கழுவிக்கொள்ளவும்.
  • பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். பால் பொங்கியதும் அதில் அரிசி, பருப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
  • வெல்லத்தைப் பொடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியே ஒரு பாத்திரத்தில் சூடு படுத்தவும்.
  • வெல்லம் பாகாய் கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி, வெந்து கொண்டிருக்கும் சாதக் கலவையில் சேர்க்கவும்.
  • அத்துடன் சர்க்கரை மற்றும் பாதியளவு நெய் சேர்த்து பத்து நிமிடங்கள் கிளறவும்.
  • சற்று கெட்டியானதும், ஏலப்பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி பாலில் கரைத்த குங்குமப்பூவை அதில் சேர்த்துக் கலக்கவும்.
  • முந்திரி, திராட்சையை மீதமுள்ள நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்த்துக் கிளறவும். பொங்கல் பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.


கால அளவு: 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு
வழங்கியவர்: திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன், நாகை.

Tuesday, December 07, 2004

கேரள பால் பாயசம்

ஒரு இனிப்பான உணவு, அதுவும் கேரள மக்களின் கை பக்குவம் எனும்போது, இன்னும் பல மடங்கு சுவை கூடுகின்றது.

தேவையானவை

அரிசி - ஒரு கப்
பால் - 4 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரிப்பருப்பு - 12
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை

  • அரிசியை இரண்டு மேசைக் கரண்டி நெய் விட்டு சிவந்து விடாமல் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.