அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, February 11, 2005

வௌவால் மீன் மசாலா

வௌவால் மீனின் சுவை பற்றி சொல்லவே தேவையில்லை. வறுப்பதற்கென்றே படைக்கப்பட்ட மீனினம் அது. கீழ்கண்டபடி மசாலாவாகச் செய்தும் சாப்பிடலாம். சுனாமிக்கு அப்புறம் மீனே கிடைக்காமல், அப்படியே கிடைத்தாலும் பயத்தால் சாப்பிடாமல் நாக்கு செத்துப் போயி கிடக்கும் மீன் பிரியர்களுக்கு, உங்கள் வயிற்றெரிச்சலுக்கு நெய் ஊற்ற ஒரு செய்தி. நாகப்பட்டினத்தில் சில படகுகள் மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்துவிட்டன. 50 நாட்களுக்குப் பிறகு வௌவால் மீன் வறுவலுடன் இன்றைய மதிய உணவை ஒரு பிடி பிடித்தேன்.

தேவையான பொருட்கள்

வௌவால் மீன் - 2 (நடுத்தரமான அளவு)
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 150 மி.லி.
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - அரை கப்
இஞ்சி - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
பூண்டு - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது)
மஞ்சள் - அரைத்தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 2
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
தேங்காய் - ஒன்று
வினிகர் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • மீனை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ளவும்.
  • புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மீன் துண்டங்களைப் போட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
  • தேங்காயைத் துருவி, தேங்காய் நீரைச் சேர்த்து முதல் பால் அரை கப் அளவிற்கும், இரண்டாம் பால் அரை கப் அளவிற்கும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, மற்றும் பூண்டினைத் தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயினைக் கழுவி சுத்தம் செய்து, காம்புகளை நீக்கி, இரண்டாகக் கீறி விதைகளை நீக்கிவிட்டு, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • நறுக்கின இஞ்சி, பூண்டினைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் கலக்கவும்.
  • அதன்பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
  • மல்லித்தூள், சோம்புத்தூள், ஏலப்பொடி மற்றும் பொடித்த கிராம்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • இப்போது, இரண்டாவதாக எடுத்த தேங்காய்பாலினை ஊற்றி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
  • அதன் பிறகு, மீன் துண்டங்களைப் போட்டு, கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வினிகர் விட்டு, கூடவே முதலில் எடுத்த தேங்காய் பாலினையும் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
  • தீயைச் சற்று குறைத்து வைத்து மீன் நன்கு வேகும் வரை வைத்து இருக்கவும். வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

3 Comments:

  • At 6:00 PM, ROSAVASANTH said…

    //வறுப்பதற்கென்றே படைக்கப்பட்ட மீனினம் //

    ஆகா என்ன பொருத்தமான வரி. இங்கே வவ்வால் மீன் போல ஒன்று இருக்கிறது, வவ்வால்தான என்று தெரியவில்லை. இருந்தலும் இந்த செய்முறையை முயற்சித்து பார்கிறேன்.

     
  • At 6:59 PM, Jsri said…

    ஆஹா, கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா-ன்னு வடிவேலு backround குரல் விரட்ட விரட்ட ஓடி வந்தேன். கடைசில பாத்தா.. :((

    ரோசாவசந்த்: இனங்களிலே என்ன இனம் மீனினம்? :)

     
  • At 5:12 AM, Kangs(கங்கா) said…

    யாரவது செய்து கொடுங்கப்பா..(ம்மா..) வாயில் எச்சில் ஊருது..

     

Post a Comment

<< Home