அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Wednesday, March 16, 2005

கமலா பழத்தோல் பூண்டு குழம்பு

அடுத்த முறை கமலாப்பழம் வாங்கி சாப்பிட்ட பிறகு தோலைத் தூக்கி எறிஞ்சுடாதீங்க.. அதை இப்படி குழம்பாக்கி சாப்பிட்டுப் பாருங்க. அப்புறம் தோலுக்காகவே பழம் வாங்க ஆரம்பிச்சுடுவீங்க. குழம்புகள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற குழம்பு இது.

தேவையானப் பொருட்கள்

கமலா பழத்தோல் - ஒரு கப்(பொடியாக அரிந்தது)
வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
புளி - எலுமிச்சை அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரைத்தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெல்லம் - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை


  • முதலில் நல்ல கமலா பழங்களை தேர்ந்தெடுத்து தோல்களை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பூண்டு, வெங்காயம் ஆகியவற்றையும் தோலுரித்துப் பொடியாக அரிந்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு போட்டு நன்கு சிவக்க வதக்கவும்.
  • அதன் பின் பழத்தோல்களை போட்டு நன்கு கிளறி விட்டு அடுப்பை நிதானமாக எரியவிட்டு தோல் மென்மையாகும் வரை கிளறிவிட்டு வதக்கவும். (அப்போது தான் அதில் உள்ள கார்ப்பு சுவை போகும்).
  • நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை கொட்டி 5 நிமிடம் வேக விடவும். இக்கலவையில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் போட்டு நன்கு கலக்கவும்.
  • வெல்லம் கரைந்தவுடன் இறக்கி விடவும். சுவையான பழத்தோல் குழம்பு ரெடி.
  • இது வயதானவர்களுக்கு நன்கு ஜீரணசக்தியை கொடுக்கும் மருத்துவ குணம் கொண்ட குழம்பு. இதை இரண்டு நாட்கள் வைத்து இருந்து சாப்பிடலாம்.

0 Comments:

Post a Comment

<< Home