அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Tuesday, March 29, 2005

சண்டிக்கீரை சுருள் பொரியல்

சண்டிக்கீரையென்றால் எதுவென்று தெரியாதவர்களுக்கு, வருத்தப்படாதீர்கள். பெயர் தெரியாமலே இதனைப் பல இடங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். தெரிந்தால் 'அட இதுதானா அது'! என்று ஒரு சின்ன ஆச்சரியம் எழும். விடுதிகள், பூங்காக்கள், வீடுகள் என்று அலங்காரச் செடிகள் இருக்குமிடங்களில் எல்லாம் இந்தச் செடியினை நீங்கள் பார்த்து இருக்கலாம். கழுவித் துடைத்து விட்டது போல் பளீரென்று கிளிப்பச்சை நிறத்தில், சற்றுப் பெரிய இலைகளுடன் எப்போதும் மலர்ச்சியாய், அடர்த்தியாய் இருக்கும். செடியா, மரமா என்று இனம் பிரிக்க இயலாத ரெண்டுங்கெட்டான் ரகம் இது. (பார்க்க படம்..)

மூட்டு வலிக்கு ரொம்ப நல்லதுன்னு எல்லாரும் சொல்றாங்க..

தேவையானப் பொருட்கள்

சண்டிக்கீரை - 10 இலைகள்
எண்ணெய் - 2 கரண்டி
கடுகு - கால் கரண்டி
துவரம் பருப்பு - 4 கரண்டி
தேங்காய் - (துருவியது)அரை மூடி
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - அரைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

  • துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து அத்துடன் இலை தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கீரையின் நடுவில் உள்ள காம்பை எடுத்து விட்டு ஒரு பலகையின் மீது வைத்து இலையின் பின்புறத்தில் இந்த விழுதை மெலிதாக தடவ வேண்டும்.
  • இலையை மெலிதாக நெருக்கமாக சுருட்ட வேண்டும்.
  • ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் ஒரு தட்டில் எண்ணெய் தடவி சுருட்டி வைத்துள்ள கீரையை வைத்து மூடி 20 நிமிடம் வேக விடவும்.
  • வெந்த பிறகு அவற்றை எடுத்து வட்ட வடிவமாக சிறிது மொத்தமாக துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின துண்டங்களை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home