அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Monday, April 25, 2005

தக்காளி கோழி

அசைவம் கொடுத்து ரொம்ப நாளாச்சுங்கிறதுனால இன்னைக்கு தக்காளி கோழி. ஒரு இங்கிலீஸ் புத்தகத்தில இருந்து சுட்டது. 'tomato chicken' ங்கிறதை அப்படியே தமிழ் பண்ணிட்டேன். பேரு ஒரு மாதிரியா இருந்தாலும், குழம்பு சூப்பரா இருக்கும்ங்க.

தேவையானப் பொருட்கள்

கோழி - ஒன்று
தக்காளி - அரைக் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 6
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - 3 பல்
கிராம்பு - 3
பட்டை - சிறுதுண்டு
நெய் - 3 மேசைக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கின தக்காளியுடன், கால் பாகம் நறுக்கின வெங்காயம் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • நன்கு வெந்தவுடன் இரண்டையும் கரைத்து, வடிக்கட்டி, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை வினிகர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், மீதமுள்ள நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கி தனியே எடுத்து விடவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு இலேசாக வதக்கி அதன்பின் கோழி இறைச்சி, வறுத்து எடுத்து வைத்துள்ள வெங்காயம், உப்பு, சிறிது வினிகர் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேகவிடவும்.
  • இறைச்சி பாதி வெந்தவுடன் வேக வைத்து, கரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காய சாற்றினை ஊற்றி வேகவிடவும்.
  • இறைச்சி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.

3 Comments:

  • At 1:31 AM, கறுப்பி said…

    சமையல் குறிப்புக்களை மட்டும் தராமல் சமைத்து அனுப்ப ஏதாவது வழி இருக்கா பாருங்கள். நன்றாக உள்ளது. இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். இனி ஜமாய்த்து விட்டுச் சொல்கின்றேன்.

    அது சரி பட்டை என்றால் என்ன?

     
  • At 2:20 AM, D.V.Babu said…

    கூடிய விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும். அறுசுவை இணையத்தள வாயிலாக உங்களுக்கு தேவையான உணவுகளை 'ஆர்டர்' கொடுத்து நீங்கள் இருக்கும் இடத்தில் அவைகளை கிடைக்கப்பெறும் நாள் தொலைவில் இல்லை.

    இலவங்கப்பட்டை (cinnamon) என்பதை சுருக்கமாக 'பட்டை' என்பார்கள்.

    அன்புடன்
    பாபு
    www.arusuvai.com

     
  • At 12:07 AM, கறுப்பி said…

    ஈழத்தமிழர் அதை கறுவா என்போம். "இலவங்கப்பட்டை" இது கூடப் புதுசாத்தான் இருக்கு எனக்கு. நன்றி

     

Post a Comment

<< Home