அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, February 25, 2005

ஆலு சப்பாத்தி

இந்த தோசை, சப்பாத்தியில வெரைட்டிஸ் கொடுக்கறது ரொம்ப ஈஸி. நமக்கு பிடிச்சத எல்லாம் சேர்த்து செஞ்சுட்டு, அப்புறம் நாம சேர்த்தப் பொருளோட பேரை முன்னாடி சேர்த்துக்க வேண்டியதுதான். உதாரணமா, நெய் ஊத்தி செஞ்சா அது நெய் தோசை, பொடி போட்டு செஞ்சா பொடி தோசை, தக்காளிப் போட்டா தக்காளி தோசை.. வெங்காயம் போட்டா வெங்காய தோசை. இவ்வளவு ஏன், தோசை சரியா வேகாம எடுத்துட்டா, இதுதான் 'மாவு தோசை' ன்னு சொல்லிக்கூட சமாளிச்சுக்கலாம்.

அந்த வகையில இது ஆலு சப்பாத்தி.. ஆலுன்னா உருளைக்கிழங்கு, இப்ப புரிஞ்சு இருக்குமே.. நான் எங்கே வர்றேன்கிறது.

தேவையான பொருட்கள்
கோதுமைமாவு - அரை கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
மல்லித் தழை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - நறுக்கியது ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 அல்லது 3 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • கோதுமை மாவில் ஒரு தேக்கரண்டி உப்புத் தூள் போட்டு எண்ணெய் சூடாக்கி மாவில் ஊற்றி சப்பாத்திக்கு மாவு பிசைந்து மூடிவைக்கவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம். மல்லித் தழை (சிறியதாக நறுக்கவும்) ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் வைத்துக் கொள்ளவும்.
  • கோதுமை மாவு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தித் தேய்த்துக் கொள்ளவும்.
  • நடுவில் உருளைக்கிழங்கு உருண்டைகளை வைத்து நன்கு மூடிவிடவும்.
  • திரும்பவும் அதை சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரு புறமும் வெந்த பிறகு எடுக்கவும்.
  • புதினா, மிளகாய் வற்றல், உப்பு, புளி வைத்து(வதக்காமல்) அரைத்த பொதினா துவையல் இதற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Thursday, February 24, 2005

கோஸ் புகாத்

தேவையானவை

முட்டைகோஸ் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 5
வெங்காயம் - 2 பெரியது
கடுகு - அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத்தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மைதா மாவு - கால் கிலோ
டால்டா - 50 கிராம்
எண்ணெய் - அரை லிட்டர்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை

  • முட்டைகோஸைக் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய கோஸை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கி விட வேண்டும்.
  • இதனுடன் உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • பின்பு மைதாவை சலித்து உப்பு, டால்டா, சமையல் சோடா எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசைந்து சப்பாத்தி பலகையில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து வட்டமாக தேய்த்து அதில் வெந்த கோஸை ஒரு கரண்டி வைத்து இரண்டாக மடிக்க வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் அதில் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

Wednesday, February 23, 2005

வாழைக்காய் வடை

தினமும் ஒரு ரெஸிபி ன்னு டைட்டில்ல பெரிசா போட்டாச்சு.. ஆனா அப்பப்ப கொஞ்ச நாள் மிஸ் ஆயிடுது. விட்டுப்போன நாள் எல்லாத்துக்கும் சேர்த்து இன்னைக்கு கொடுத்துடுறேன்.

வாழைக்காயில பஜ்ஜி போடலாம். வடை போட முடியுமா? இப்படி செய்யலாம்னு சொல்றாங்க திருமதி. K. செந்தமிழ்ச்செல்வி.

தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2 (சிறியது)
முளைக்கீரை - ஒரு சிறிய கட்டு
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெரிய வெங்காயம் - ஒன்று
உப்பு - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • வாழைக்காயை வேகவைத்துக் கொண்டு பொடிமாசிற்கு துருவுவது போல் துருவிக் கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • துருவிய வாழைக்காயுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து, உப்பையும் போட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு பிசைந்து வைத்துள்ள மாவினை வடையாக தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்க வேண்டும்.
  • மீதியானால் தயிரில் ஊற வைத்து தயிர் வடையாகவும் உபயோகிக்கலாம்.

Tuesday, February 22, 2005

ப்ரட் ரோல்ஸ்

தேவையானப் பொருட்கள்

ப்ரட் துண்டங்கள் - 7
கேரட் - 1
குடை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
உருளை - 2
தக்காளி - 2
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காரப் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி

செய்முறை

  • உருளை, கேரட் பட்டாணியை வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலி அல்லது தவாவில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • இதனுடன் இஞ்சிப் பூண்டு விழுதினையும் போட்டு வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய தக்காளி, வேக வைத்தெடுத்த காய்கள் போட்டு வதக்கவும். அதன் பிறகு குடை மிளகாய்களை நறுக்கிப் போட்டு, காரப் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
  • ஒரு ஸ்லைஸ் பிரட்டை எடுத்து தண்ணீரில் ஒரு நிமிடம் ஊற வைத்து எடுத்து தண்ணீரைப் பிழிந்து விடவும்.
  • பிறகு பூரணத்தை எடுத்து நீளவாக்கில் வைத்து நன்றாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    Monday, February 21, 2005

    சாபுதானா வடை

    அதுதாங்க.. ஜவ்வரிசி வடை. பண்டிகைன்னாலே எப்ப பார்த்தாலும் மெது வடைதானா? ஒரு மாறுதலுக்கு இதை செஞ்சு பாருங்களேன்.

    தேவையானப் பொருட்கள்

    சாபுதானா (சிறிய ஜவ்வரிசி) - கால் கிலோ
    நிலக்கடலை (வறுத்து தோல் நீக்கியது) - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - அரை அங்குலத் துண்டு
    எண்ணெய் - கால் கிலோ
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    • ஜவ்வரிசியைக் களைந்து அது முழ்கும் அளவிற்கு நீர் விட்டு சுமார் 4 மணி நேரம் ஊறவிடவும்.
    • நிலக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்கும் போது இஞ்சியைத் துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாய்களையும் நறுக்கிப் போட்டு அரைத்தெடுக்கவும்.
    • அரைத்த விழுதுடன் ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
    • பிசைந்த மாவினை உருட்டி, வடைகளாகத் தட்டி, வாணலியில் சூடான எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    Sunday, February 20, 2005

    கசோடி

    பெயரே வித்தியாசமா இருக்கு இல்ல? வட இந்திய அயிட்டம் இது. 'காரக் கொழுக்கட்டை' ன்னு நாம சொல்லிக்கலாம்.

    தேவையானப் பொருட்கள்

    மைதா - அரைக் கிலோ
    பாசிப்பருப்பு - 125 கிராம்
    டால்டா - 150 கிராம்
    எண்ணெய் - ஒரு கிலோ
    மிளகாய்த்தூள் - 25 கிராம்
    மல்லித்தூள் - 25 கிராம்
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
    கரம் மசாலாத் தூள் - அரைத் தேக்கரண்டி
    சோம்புத் தூள் - அரைத் தேக்கரண்டி
    மல்லித்தழை - அரைக் கட்டு
    சோடா உப்பு - கால் தேக்கரண்டி

    செய்முறை

    பூரணம்:
    • பாசிப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
    • பிறகு வடிகட்டி ஒன்றிரண்டாக வருமாறு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    • ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 75கிராம் எண்ணெய் ஊற்றி, அரைத்த பாசிப்பருப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு ஆகிய எல்லாவற்றையும் கொட்டி 5 நிமிடத்திற்கு இளம் சூட்டில் கிளறவும்.
    • சட்டியை இறக்கி மல்லிக் கீரையை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு கிளறி, உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.


    • மேல் மாவு:
    • ஒரு பாத்திரத்தில் மைதா மாவினைக் கொட்டி, அதில் டால்டாவை உருக்கி ஊற்றி நன்கு தேய்த்துப் பிசறவும்.
    • அத்துடன் அரைத் தேக்கரண்டி உப்பு, சோடா உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் (தேவையெனில் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்)ஆகியவற்றைச் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
    • பிறகு அவற்றை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் நன்கு அகலமாகத் தட்டி அதற்குள் பூரணத்தை வைத்து மூடி உருட்டி மீண்டும் வடை மாதிரி தட்டி வைத்துக் கொள்ளவும்.
    • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்துள்ள வடைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பாதாம் நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    Saturday, February 19, 2005

    சுருள் ஆப்பம்

    வெறும் ஆப்பம், இடியாப்பம், வட்டல் ஆப்பம்.. இப்படி பல வகையான ஆப்பங்களுக்கு நடுவில் இது சுருள் ஆப்பம். எப்படி செய்யறதுன்னு இப்ப பார்க்கலாம்.

    தேவையானப் பொருட்கள்

    பச்சரிசி - இரண்டரை கப்
    தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
    பயத்தம் பருப்பு - ஒரு கப்
    தேங்காய்த் துருவல் - ஒரு கப்
    ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    • பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து ஒரு கப் தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
    • அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
    • பயத்தம் பருப்பை வாசனை வரும்படி வறுத்து எடுத்து, நன்றாக வேக வைக்கவும். வேகவைத்து எடுத்த பருப்புடன் வெல்லத்தூள், தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்து கெட்டியான பூரணம் செய்து கொள்ளவும்.
    • அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து மிதமான தீயில் ஆப்பம் ஊற்றி மூடி வைக்கவும். ஒரு நிமிடத்தில் ஆப்பம் வெந்து விடும்.
    • ஒரு தட்டில் வெண்மையான பாகம் மேலே இருக்கும்படி திருப்பிப் போட்டு பூரணத்தை நீளவாட்டில் வைத்து பாய் சுருட்டுவது போல் இருபுறமும் மடித்து சுருட்டினால் ஒட்டிக்கொள்ளும்.
    • சுவையான சுருள் ஆப்பம் ரெடி

    Friday, February 18, 2005

    உப்பு கறி

    ஆட்டுக்கறியில செய்யுற அயிட்டம் ஒண்ணு கூட இதுவரைக்கும் போடலைன்னு ஒரு குறை இருந்துச்சு. அதுக்காகவே இந்த உப்புக்கறி. ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய ஐட்டம். குறிப்பா பேச்சுலர்ஸ் க்கு ரொம்ப வசதியான சைடு டிஷ்.

    தேவையானப் பொருட்கள்

    எலும்பு நீக்கிய ஆட்டுக்கறி - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பூண்டு - 50 கிராம்
    மிளகாய் வற்றல் - 8
    சீரகம் - கால் தேக்கரண்டி
    பட்டை - 2 சிறியத் துண்டுகள்
    சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    • எலும்பு நீக்கிய ஆட்டுக் கறியை எடுத்துக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அலசி வைத்துக் கொள்ளவும்.
    • வெங்காயம், பூண்டினை உரித்து வைத்துக் கொள்ளவும்.
    • ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து அரைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்களை உடைத்துப் போட்டு வதக்கவும்.
    • மிளகாய் வதங்கியபின் உரித்து வைத்துள்ள வெங்காயம் பூண்டினைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
    • பிறகு அதில் அலசி வைத்துள்ள கறியைக் கொட்டி ஒரு நிமிடம் வதக்கவும்.
    • வதக்கியப்பின் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை குக்கரை மூடி வைத்து வேகவிடவும்.
    • பிறகு குக்கரை இறக்கி வைத்து நீராவி வெளியேற விடவும். ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி சீரகம் தாளித்து அதனுடன் பட்டையையும், கறிவேப்பிலையையும் போட்டு தாளிக்கவும்.
    • இதனுடன் குக்கரில் வைத்துள்ள கறியையும் கொட்டி வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
    • தண்ணீர் வற்றி எண்ணெய் வெளிவரும் வரை கிளறவும். பிறகு கொத்தமல்லித் தழைத் தூவி இறக்கவும்.

    Thursday, February 17, 2005

    கருணைக்கிழங்கு வடை

    கருணைக்கிழங்கு சாப்பிட ருசியாக இருந்தாலும் சாப்பிட்டு முடிக்கிற நேரத்தில் நாக்கையும் தொண்டையையும் மெல்லிய ஊசிக் கற்றைகளால் குத்துவதுபோல் அது கொடுக்கும் அவஸ்தை இருக்கின்றதே.. இதற்காகவே பலர் அதனை தவிர்த்துவிடுகின்றனர். கருணைக்கிழங்குல உள்ள ஒவ்வொரு செல்லிலேயும்(பாரன்கைமா) கால்சிய ஆக்ஸலேட் படிகங்கள் நுண்ணிய ஊசி மாதிரி பல அடுக்காய் இருக்கும். இதுதான் சாப்பிட்டவுடன் நாக்கிலும், தொண்டையிலும் சிக்கி அரிப்பது மாதிரி ஒரு உணர்வை கொடுக்கின்றது. கொஞ்சம் புளி அதிகம் சேர்த்து சமைத்தால் அரிப்பை சிறிது குறைக்கலாம். இந்த கருணைக்கிழங்கு வடைக்குப் புளி எதுவும் சேர்க்கக் கூடாது.

    தேவையானப் பொருட்கள்

    கருணைக்கிழங்கு - கால் கிலோ
    மைதா மாவு - 50 கிராம்
    பொட்டுக்கடலை - 100 கிராம்
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 6
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - கால் லிட்டர்

    செய்முறை

    • கருணைக்கிழங்கினை நன்கு மண் போகக் கழுவி, தோலைச் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொண்டு ஆவியில் வேக விடவும்.
    • வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
    • அவித்த கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
    • தேவையெனில் சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கவும். சோம்பினையும் தட்டி சேர்க்கவும்.
    • அதன் பின், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    Wednesday, February 16, 2005

    அல்கா பணியாரம்

    உளுந்தில் செய்யக்கூடிய எளிதான பலகாரம். ருசியும் மிகுதியானதுதான்.

    தேவையானப் பொருட்கள்

    உளுந்து - கால் கிலோ (தோலுடன்)
    சர்க்கரை - 400 கிராம்
    தேங்காய் பால் - 2 கப் (கெட்டியாக)
    ஏலக்காய் - 3
    சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - அரை லிட்டர்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    • உளுந்தை ஐந்து மணி நேரம் ஊற வைத்து, தோல் போக நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
    • கழுவிய உளுந்தை கிரைண்டரில் இட்டு வடைக்கு அரைப்பதைப் போல் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாகவும், மிருதுவாகவும் அரைத்துக் கொள்ளவும்.
    • அரைத்து எடுத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
    • தேங்காய் பாலில் சீனியைக் கொட்டி, ஏலத்தைப் பொடி செய்து போட்டு நன்கு கரைத்து வைக்கவும்.
    • பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவினை உருண்டையாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
    • அதிகம் சிவக்கக் கூடாது. தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும்.
    • பொரித்ததை தேங்காய்ப்பாலில் போட்டு ஊற வைத்து சாப்பிடவும்.

    Tuesday, February 15, 2005

    ப்ளம் கேக்

    கேக் நல்ல விதமாய் வருவதற்கு, நாம் தயார் செய்யும் மாவின் பக்குவம் சரியாய் இருத்தல் மிகவும் அவசியம். மாவு கலப்பதில்தான் அதன் மென்மையும் சுவையும் அடங்கியுள்ளது. இதற்கான இயந்திரங்கள் சிறிதும் பெரிதுமாய் இப்போது சந்தையில் நிறைய கிடைக்கின்றது. குறைந்த அளவில் வீட்டில் தயாரிக்கும் போது நிறையப் பேர் செய்யும் தவறு, முட்டை கலக்க உதவும் கருவி அல்லது அதனைப் போன்று வேகமாய் சுழலக்கூடியக் கருவிகளைக் கொண்டு மாவு கலத்தல். இவைகள் மிகவேகமாகச் சுற்றுவதால் வெப்பத்தை உண்டாக்கி, சீனிப் போன்ற பொருட்களை இளகச் செய்துவிடும். கேக்கும் கடினமாகி விடும். பொருட்களை முறையான கால அளவில் சீராகக் கலத்தல், மாவு பதமாய் கிடைக்க உதவும். செய்முறை விளக்கப்படங்களுடன் இங்கே பார்க்கலாம்.

    தேவையானப் பொருட்கள்

    சீனி - ஒரு கிலோ
    மைதா - ஒரு கிலோ
    வனஸ்பதி- 800 கிராம்
    நெய் - 200 கிராம்
    முட்டை - 30
    கேராமில் - 50
    மில்லி மிக்ஸட் ப்ரூட் ஜாம் - 200 கிராம்
    முந்திரி - 300 கிராம்
    திராட்சை - 300 கிராம்
    ட்யூட்டி ப்ரூட்டி - 400 கிராம்
    ஜின்ஞர் சிப்ஸ் - 50 கிராம்
    உப்பு - 5 கிராம்
    கேக் சீட்ஸ் - 5 கிராம்
    பேக்கிங் பவுடர் - 10 கிராம்
    எசன்ஸ் - 15 மில்லி
    ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
    ஜாதிக்காய்ப்பொடி - அரைத்தேக்கரண்டி

    செய்முறை

    • முதலில் சீனி, வனஸ்பதி, நெய், ஜாம் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து கொள்ளவும். கலவை நன்கு கலந்து, கிரீம் போன்று வரும் வரை கலக்கவும்.
    • முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு, அவற்றை சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும். முட்டைகளைக் கலக்கும் போது மிகவும் கவனமாய் இருத்தல் அவசியம்.
    • அப்படியே எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஊற்றிக் கலக்கக்கூடாது. ஒரு முட்டை அளவிற்கு சிறிது ஊற்றி, அது நன்கு கரைந்த பின் அதே முறையில் சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கவும்.
    • பிறகு உப்பு, ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி, கேக் சீட்ஸ் (சீரகம் போன்று இருக்கும்) சேர்த்தப் பின்பு தேவையான எசன்ஸ் சேர்க்கவும்.
    • கேக்கின் மணம் மற்றும் ருசியை நிர்ணயிப்பதில் எசன்ஸின் பங்கு முக்கியம் என்பதால் நல்ல தரமான எசன்ஸ்களை உபயோகிக்கவும். இரண்டு அல்லது மூன்று எசன்ஸ்களை ஒன்றாய் கலக்கலாம்.
    • அதன்பிறகு பிளாக்ஜாக் அல்லது கேராமில் ஊற்றவும். இப்போது முந்திரியைச் சேர்த்து சிறிது நேரம் கலக்கவும்.
    • சீனி நன்கு கரைந்துவிட்டதா என்பதனைத் தெரிந்து கொண்டு, மைதாவினை பேகிங் பவுடருடன் நன்கு கலந்து கொண்டு அதனை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
    • பிறகு திராட்சை, டியூட்டி ப்ரூட்டி, ஜிஞ்சர் சிப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
    • எல்லாம் நன்கு கலந்து, மாவு திரண்டு வரும் போது எடுத்து, விரும்பும் வடிவ பாத்திரத்தில் இட்டு, 180 டிகிரி வெப்பநிலையில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். வெந்த கேக்கினை எடுத்து, கிரீம் கொண்டு விருப்பத்திற்கேற்றார்போல் அழகுபடுத்திக் கொள்ளவும்.


    குறிப்பு: சற்று சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள், அதற்கேற்றார்போல் எல்லாப் பொருட்களின் அளவினையும் ஒரே விகிதத்தில் குறைத்துக் கொள்ளவும்.

    Monday, February 14, 2005

    கோவா பொங்கல்

    இந்தக் குறிப்பினைக் கொடுத்ததும் நாகை நாராயண அய்யர் அவர்களே. ஒரு பரீட்சார்த்தமான முயற்சியில் கிடைத்த இந்த உணவு, பிற்பாடு அனைத்து விசேசங்களிலும் தவறாது இடம் பெரும் உணவாகிவிட்டது.

    தேவையானப் பொருட்கள்

    பாசுமதி அரிசி - அரைக் கிலோ
    கோவா(சீனி சேர்க்காதது) - 350 கிராம்
    சீனி - ஒரு கிலோ
    நெய் - 300 கிராம்
    முந்திரி - 25 பருப்புகள்
    திராட்சை - 20
    குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை

    செய்முறை

    • அரிசியைக் களைந்து பொங்கல் வைக்கும் பதத்திற்கு நீர் விட்டு கொதிக்க விடவும்.
    • கோவாவை ஒரு வாணலியில் இட்டு நன்கு சுண்ட வதக்கிக் கொள்ளவும். அரிசி வெந்து கொதிக்கும் போது கோவா மற்றும் சீனியைப் போட்டு நன்குக் கிளறவும்.
    • இனிப்பினை விரும்புகின்றவர்கள் இன்னும் ஒரு கால் கிலோ சீனியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
    • கோவாவை வதக்காமல் போட்டால் பொங்கல் மிகவும் நீர்த்து, இளகிப் போகும். சீனி வேறு சேர்ப்பதால் அதுவும் நீர்த்துப் போகச் செய்யும்.
    • சீனி கரைந்து சாதத்துடன் கலந்ததும், முக்கால் பாகம் நெய்யினை ஊற்றி கிளறிவிட்டு தீயைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவும்.
    • மீதமுள்ள நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து, நெய்யுடன் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடவும். குங்குமப்பூவினையும் சேர்த்துக் கொள்ளவும்

    Sunday, February 13, 2005

    பெசரட் தோசை

    இந்த சமையல் குறிப்பினை வழங்கியவர், திருமதி. மனோ சாமிநாதன், ஷார்ஜாவில் இருந்து. கூடுமானவரை கிராம் அளவுகளைத் தவிர்த்து, எல்லோரும் எளிதில் அளவிடும் வண்ணம், தேவையானப் பொருட்களை 'கோப்பை' அளவுகளில் குறிப்பிடுவது இவரது தனிச்சிறப்பு. வாரம் ஒரு உணவுக் குறிப்பினை அறுசுவை.com இணைய தளத்தில் எழுதி வருகின்றார்.

    தேவையான பொருட்கள்
    முழுப்பயிறு - ஒரு கப்
    பயத்தம் பருப்பு - கால் கப்
    பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
    துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - மூன்று
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - இரண்டு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 தேக்கரண்டி

    செய்முறை
    • முழுப்பயிறு, பச்சரிசி, பயத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாகவே தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
    • ஊற வைத்தவற்றை எடுத்து அதனுடன் ஒரு வெங்காயம், இஞ்சி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
    • மீதியுள்ள வெங்காயங்களையும், பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
    • இந்த தோசையை உடனேயே சுடலாம். சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றிப் பரப்பி, அதன் மேல் வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கலவையைத் தூவி, மூடி வைத்து வேகவிடவும்.
    • இந்த தோசையைத் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைக்கத் தேவையில்லை.

    Saturday, February 12, 2005

    மிளகுக் குழம்பு

    நாகையைச் சேர்ந்த நளபாகச் சக்கரவர்த்தி, மாஸ்டர் குக் நாராயண அய்யர் அவர்கள் வழங்கிய குறிப்பு இது. நேற்று ஆவலுடன் ஓடி வந்து ஏமாந்து போன அன்புச் சகோதரி ஜெய்ஸ்ரீ அவர்களுக்காக..

    தேவையானப் பொருட்கள்

    புளி - 150 கிராம்
    மிளகு - 20 கிராம்
    கடலைப்பருப்பு - 20 கிராம்
    மல்லி - 10 கிராம்
    மிளகாய் வற்றல் - 3
    பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
    நல்லெண்ணெய் - பொரிப்பதற்கு
    தேங்காய் - கால் மூடி
    பூண்டு - 10 பல்
    தேன் - 3 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    • புளியினை நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது துருவிக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிளகு மற்றும் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
    • பிறகு சிறிது எண்ணெய்யில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கொத்தமல்லி விதை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயையும் லேசாக வதக்கிக் கொள்ளவும்.
    • பொரித்து வைத்துள்ள மிளகு, பெருங்காயம் மற்றும் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
    • புளிக்கரைசலை சட்டியில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
    • புளிக்கரைசல் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து வேகவிடவும்.
    • பூண்டை விரும்புகின்றவர்கள் உரித்தப் பூண்டினையும் வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
    • குழம்பு கொதித்து நன்கு சுண்டி வரும் போது சிறிது தேன் விடவும். தேனுக்கு பதிலாக சிறிது வெல்லமும் சேர்க்கலாம்.

    Friday, February 11, 2005

    வௌவால் மீன் மசாலா

    வௌவால் மீனின் சுவை பற்றி சொல்லவே தேவையில்லை. வறுப்பதற்கென்றே படைக்கப்பட்ட மீனினம் அது. கீழ்கண்டபடி மசாலாவாகச் செய்தும் சாப்பிடலாம். சுனாமிக்கு அப்புறம் மீனே கிடைக்காமல், அப்படியே கிடைத்தாலும் பயத்தால் சாப்பிடாமல் நாக்கு செத்துப் போயி கிடக்கும் மீன் பிரியர்களுக்கு, உங்கள் வயிற்றெரிச்சலுக்கு நெய் ஊற்ற ஒரு செய்தி. நாகப்பட்டினத்தில் சில படகுகள் மீன் பிடிக்கச் செல்ல ஆரம்பித்துவிட்டன. 50 நாட்களுக்குப் பிறகு வௌவால் மீன் வறுவலுடன் இன்றைய மதிய உணவை ஒரு பிடி பிடித்தேன்.

    தேவையான பொருட்கள்

    வௌவால் மீன் - 2 (நடுத்தரமான அளவு)
    புளி - எலுமிச்சை அளவு
    எண்ணெய் - 150 மி.லி.
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - அரை கப்
    இஞ்சி - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
    பூண்டு - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது)
    மஞ்சள் - அரைத்தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 4
    மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
    சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
    கிராம்பு - 2
    ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
    தேங்காய் - ஒன்று
    வினிகர் - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    • மீனை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ளவும்.
    • புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மீன் துண்டங்களைப் போட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
    • தேங்காயைத் துருவி, தேங்காய் நீரைச் சேர்த்து முதல் பால் அரை கப் அளவிற்கும், இரண்டாம் பால் அரை கப் அளவிற்கும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    • வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, மற்றும் பூண்டினைத் தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • பச்சை மிளகாயினைக் கழுவி சுத்தம் செய்து, காம்புகளை நீக்கி, இரண்டாகக் கீறி விதைகளை நீக்கிவிட்டு, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
    • ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    • நறுக்கின இஞ்சி, பூண்டினைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் கலக்கவும்.
    • அதன்பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
    • மல்லித்தூள், சோம்புத்தூள், ஏலப்பொடி மற்றும் பொடித்த கிராம்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
    • இப்போது, இரண்டாவதாக எடுத்த தேங்காய்பாலினை ஊற்றி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
    • அதன் பிறகு, மீன் துண்டங்களைப் போட்டு, கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வினிகர் விட்டு, கூடவே முதலில் எடுத்த தேங்காய் பாலினையும் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
    • தீயைச் சற்று குறைத்து வைத்து மீன் நன்கு வேகும் வரை வைத்து இருக்கவும். வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

    Wednesday, February 09, 2005

    நாகை நடப்புகள்

    ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாகையின் நிலைக் குறித்து எழுத விரும்புகின்றேன். இடையில் எழுத நேரம் இல்லாமல் இல்லை. கிடைக்கும் நேரங்களில் மனநிலை அல்லது உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. ஒரு பத்தி எழுதுவதற்குள் அயற்சி வந்து தூங்கச் சென்றுவிடுவேன். எழுதாமைக்கு இன்னொரு காரணம், நான் எழுத நினைக்கும் நடப்புகளை எல்லாம் நண்பர் ரஜினி ராம்கி அவர்கள் எனக்கு முன்பே மிக அழகான நடையில், தெளிவாய் எழுதியிருப்பார். சுனாமித் தாக்குதல் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நிவாரணப் பணிகளுக்கான தீவிரப் பங்களிப்பில் இருந்து சற்று விலகி, என்னுடைய சொந்தப் பணிகளில் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன். அதற்கு முன், ஒரு தற்காலிக முடிவுரையாக நாகையின் தற்போதைய நிலவரம், நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, அரசியல் கூத்துக்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆசை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாக எழுதியதைத் தொகுத்து இன்று வெளியிடுகின்றேன்.

    தற்போதைய நிலவரம்

    நாகை நகரை இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். பாதிக்கப்படாத பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. ஒரு சிலத் தொழில்கள் மந்தமாக இருக்கின்றன. மற்றவை பழைய நிலைக்குத் திரும்பி விட்டன. உணவுவிடுதி, டாஸ்மார்க் போன்றவற்றில் முன்புக்கு இப்போது வியாபாரம் அதிகமாகவே நடக்கின்றது. கடற்கரையை ஒட்டினப் பகுதிகளில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் எல்லாம், நகரின் மத்தியப் பகுதியில் வீடு தேடி அலைந்து கொண்டு உள்ளனர். நிலமதிப்புகள் தற்போது எதிரிடையாக மாறிவிட்டது. மக்கள் மனதில் இன்னும் சுனாமி குறித்த பயம் நீங்கவில்லை. இது மறையச் சற்று நாளாகலாம்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களில் 70 சதவீதத்திற்கு மேல் மீனவர்கள் அல்லது மீனவர்களைச் சார்ந்து தொழில் புரிபவர்கள். சொந்தங்கள், உறைவிடம், உடைமைகள், தொழில், மனோதைரியம் என்று இவர்கள் இழந்தவற்றைப் பட்டியலிடலாம். சொந்தங்களை இழந்தவர்களுக்கு அவற்றைத் திருப்பித் தருதல் சாத்தியமற்றது. அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் தொகை, மேலும் கொடுப்பதாக அறிவித்து உள்ள தொகை எல்லாம், மறைந்து போன உயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் அல்ல. வெறும் ஆறுதல்கள் அல்லது ஆறுதலுக்கான முயற்சிகள். உயிர் இழப்பு ஏற்பட்டுள்ள குடும்பங்கள் பலவும், இன்னமும் அந்த சோகத்தின் பிடியில் இருந்து மீளவில்லை. பலர் மனதைத் தேற்றிக் கொண்டு விட்டனர். ஒரு சிலர் நினைத்து நினைத்துக் கண்ணீர் விடுகின்றனர். ஆறுதல் வார்த்தைகள் இவர்களுக்கு மருந்தாக இல்லை. எரிகின்ற தீயிற்கு எண்ணெய் போல் சில சமயம் அவர்கள் உணர்கின்றார்கள். காலத்தால் மறத்தல் ஒன்றுதான் இதற்கு தீர்வு.

    உடைமைகளை மட்டும் இழந்தவர்கள் விரைவிலேயே பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாகத் தோன்றுகிறது. வந்து குவியும் உதவிகள் இவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளது. இப்போது இவர்களின் கவனம் எல்லாம் நிவாரணம் பெறுவதில்தான். இதில்தான் ஏகப்பட்ட குளறுபடிகள், தில்லுமுல்லுகள். அதனைப் பற்றி இறுதியில் எழுதுகின்றேன். மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படவேண்டும். இதுதான் அங்குள்ளவர்களின் விருப்பம். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வந்துவிடுகின்றன. வருமானம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் இதனை நம்பி ஓட்டுவது என்பது இவர்கள் தரப்புக் கேள்வி. அரசு கொடுத்த 4000 ரூபாய் என்றோ சரியாகிவிட்டது. தொழிலுக்கு மீண்டும் திரும்பும் வரை மாதாமாதம் அரசு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஒரு சிலர் கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். மற்றபடி சிறிய படகுகள், பெரிய படகுகள் என்று எதுவும் கடலுக்குச் செல்லவில்லை. நிறைய விசைப் படகுகள் முழுவதுமாய் உடைந்து போய்விட்டன. ஒரு சிலப் படகுகள் சரிசெய்து பயன்படுத்தும் நிலையில் இருந்தாலும் அவற்றைச் சரி செய்வதற்கான இடவசதி, ஆள் வசதி மற்றும் பொருள் வசதி இப்போது இவர்களிடம் இல்லை. நிறைய வங்கிகள் இவர்களுக்காக தளர்த்தப்பட்ட விதிகளுடன் கடன் கொடுக்கத் தயாராய் இருந்தாலும், அதை வாங்குவதில் நிறையப் பேருக்குத் தயக்கம். கடன் என்று இல்லாமல் இலவசமாக அரசோ அல்லது மற்ற தொண்டு நிறுவனங்களோ தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. படகுகள் கிடைக்கப்பெற்று இவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பச் சில காலம் ஆகும். அவர்களின் கணக்குப்படி ஆறு மாதத்திற்கு மேல் ஆகலாம். பெரிய விசைப்படகுகள் செய்ய நிறைய கால அவகாசம் தேவை. அதோடு மட்டுமன்றி அதற்கு தேவையான மரம் சாதாரண நாட்களிலேயே கிடைப்பது கடினம் என்கின்றார்கள். அத்தனை படகுகளை ஒரே நேரத்தில் செய்ய தேவையான மரங்கள், ஆட்கள், இடவசதி அனைத்தும் கிடைக்குமா என்பது இவர்களின் கேள்வி.

    அந்தப்பகுதியைச் சேர்ந்த எனது நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் தங்களின் கவலையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். எல்லாம் கிடைத்தாலும் மீண்டும் இந்த இடத்தில் இருந்து கொண்டு மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவேண்டுமா என்பது இவர்கள் மனதில் உள்ளக் குழப்பம். முன்பே மீன்பிடித் தொழில் நல்ல லாபகரமாக இல்லை. ஒரு சில மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் மீன்கள் கிடைப்பது மிகவும் சிரமமாய்தான் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து இலங்கை எல்லைப் பகுதிக்கு சென்று மீன் பிடித்து வரும் சிலரால்தான் நிறைய சம்பாதிக்க முடிந்தது. சுனாமிக்குப் பின் மீன்கள் எல்லாம் இடம் மாறி, மிகவும் குறைந்துவிட்டதாய் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இவர்களை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. இந்தச் சூழலைக் காரணமாய் வைத்து வேறு தொழிலுக்கு மாறிவிடலாம் என்று உள்ளோம். வங்கிகள் கடன் தரத் தயாராய் உள்ளன. என்னத் தொழில் செய்யலாம் என்று சொல் என்று என்னிடம் ஆலோசனைக் கேட்டனர். பலருடன் ஆலோசித்து பதில் சொல்வதாய் கூறியிருக்கின்றேன். ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

    நிவாரணப் பணிகள்

    இந்த ஒரு மாத காலத்தில், முதல் கட்டப் பணியான அடிப்படை மற்றும் அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குதல் சிறப்பாகவே நடந்துள்ளது. இரண்டாம் கட்டப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. பாதிக்கப்பட்டவர்கள் கோயில்கள் மற்றும் கல்யாண மண்டபங்களைக் காலி செய்து கொண்டு தங்களின் குடியிருப்புகளுக்கோ அல்லது தற்காலிக குடியிருப்புகளுக்கோ இடம் பெயர்ந்துள்ளனர். சில இடங்களில் தற்காலிக குடியிருப்பு கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இடம் இன்றி முன்பு இருந்த இடங்களிலேயே சிலர் தங்கி உள்ளனர். இன்னும் சிறிது நாட்களில் அவர்களும் இடம் பெயர்ந்து விடுவார்கள். கொஞ்சம் வசதி உள்ளவர்கள், தற்காலிகக் குடியிருப்பில் தங்கப் பிடிக்காமல், நகரில் வாடகை வீடு எடுத்துத் தங்கி உள்ளனர்.

    தற்காலிகக் குடியிருப்புகள் என்று பெயர் சூட்டப்பட்டு விட்டாலும், அந்த தற்காலிகத்தின் கால அளவு குறைந்தது ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை. இன்னும் அதிகமானாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில், இதில் தங்குபவர்கள் ஒரு முழுக் கோடைக் காலத்தையும், ஒரு மழைக் காலத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு உகந்தவைகளாக இந்த குடியிருப்புகள் மாற்றப்பட வேண்டும். கழிப்பிடங்கள் போதாது. தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ள கழிப்பிட, குளியலறை மற்றும் குடிநீர் வசதிகள், மக்கள் இடம்பெயரும் வரை சிறப்பாய் பராமரிக்கப்பட வேண்டும். எங்களைப் போன்ற பல தொண்டு நிறுவனங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இங்கு தங்கும் மக்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை விடாது ஊட்டி வருகின்றது. கழிப்பிடங்களை முறையாகப் பயன்படுத்துதல், குப்பைகளைச் சேகரித்தல், சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம் போன்ற சில நல்ல விசயங்களை இவர்களுக்குக் கற்றுத் தர, ஒரே தரத்தில் உள்ள இந்தத் தற்காலிகக் குடியிருப்புகள் நல்ல வாய்ப்பாய் உள்ளது.

    கடந்த சில தினங்களாக தற்காலிகக் குடியிருப்பு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் நிறைய சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது. இந்த குடியிருப்புகளில் தங்குபவர்களுக்கெல்லாம் அரசாங்கம் வீடு கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்படாத பலரும் இங்கே புகுந்துள்ளனர். கொஞ்சம் செலவு செய்தும் சிலர் வந்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வரும்போதெல்லாம் தவறாமல் ஆஜராகிவிடும் இவர்கள், மற்ற நேரங்களில் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்குச்(!) சென்றுவிடுகின்றனர்.

    உளவியல் ஆலோசனை என்ற பெயரில் மதமாற்றப் பிரச்சாரங்கள் நடப்பதாய் ஒரு பிரச்சனை எழுப்பப்பட்டு, நல்லவேளையாக அது பெரிதாகும் முன் அணைக்கப்பட்டு விட்டது. குற்றச்சாட்டு எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. உண்மையோ, பொய்யோ.. இது போன்ற செய்திகள் பரப்பப்பட்டால், விபரீத விளைவுகள் ஏற்படலாம். உணர்ச்சிகரமான சூழலில் மனிதநேயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.

    உளவியல் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குபவர்கள் பற்றி; தற்போது இதற்கென ஒரு பெரிய கூட்டமே கிளம்பி இருக்கின்றது. திறமையான உளவியல் பயிற்சியாளர்களில் இருந்து ஒரு மணி நேர பயிற்சி எடுத்துக் கொண்டு வந்துள்ளவர்கள் வரை பலரும் இதில் அடங்குவர். திறமையும் அனுபவமும் இல்லாத பலர், உளவியல் ஆலோசனை என்ற பெயரில், பாதிக்கப்பட்டவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு அல்லது பேசியே கொல்கின்றனர். ஆரம்ப நாட்களில் 'தேமே' என்று கேட்டுக் கொண்டிருந்த கூட்டம், இப்போது ஓடி மறைந்து கொள்கின்றது. எனது நட்புக் கூட்டங்கள் என்னிடம் புலம்பித் தள்ளினார்கள். "எங்களுக்கு சுனாமியே பரவாயில்லைங்கிற அளவுக்குப் பண்ணிட்டாங்கப்பா..". நான் அவர்களுக்கு விளையாட்டாய் அளித்த பதில், 'இதோட ஐடியாவே அதுதாம்ப்பா.. ஒரு கொடுமைய மறக்க அதைவிட பெரிய கொடுமைய அனுபவிக்க வைக்கிறது'.

    உளவியல் ஆலோசனையில் அனுபவம் வாய்ந்த சிலக் குழுமங்கள், சிறப்பாய் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் பலருக்கும் இத்துறையில் நிறைந்த அனுபவமும், பயிற்சியும் இருந்தாலும், மொழிப்பிரச்சனை ஒரு தடையாகத்தான் இருக்கின்றது. அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராய் இல்லை. மொழி ஒரு பிரச்சனையே அல்ல என்கின்றனர். கூடியிருக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் சிரிப்பது, தாங்கள் சொல்வதின் அர்த்தம் புரிந்துதான் என்று பலர் நினைக்கின்றனர். எது எப்படியோ, சிறுவ சிறுமியர் அனைத்தையும் ரசிக்கின்றனர். எல்லாத்தரப்பு உளவியல் ஆலோசனைக் குழுக்களும் சிறுவயதினரை சந்தோசப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பாராட்டலாம்.

    நிவாரணக் கூத்துக்கள்

    முதல் பத்து பதினைந்து நாட்கள் காணாமல் போயிருந்த இடைமட்ட மற்றும் அடிமட்ட அரசியல்வாதிகள் பலரும் சிறிது நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தலைத் தூக்க ஆரம்பித்தனர். தங்கள் பகுதி மக்களுக்காக நிவாரணம் பெற்றுத் தருவதில் இவர்கள் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கின்றது. மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று அரசு அறிவித்த ரூபாய் 2000, 60 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆங்காங்கு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டது. முதலில் சுனாமியால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு மட்டும் என்று அறிவித்து, நகரமன்ற உறுப்பினர்களின் வாயிலாக அதனைக் கொடுக்க ஆரம்பிக்க, கூடவே பிரச்சனைகளும் ஆரம்பமாயிற்று. பின்னர் அது நாகையில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் என்று அறிவிக்கப்பட்டு ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், ஒட்டுமொத்த நாகை மக்களுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டது. [எனக்கும் கிடைத்தது. அதை நான் என்ன செய்து இருப்பேன் என்பதனை உங்களின் யூகத்திற்கு விட்டுவிடுகின்றேன் :-) ]

    இதனைத் தொடர்ந்து நாகைக்கு பக்கத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும், நாங்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கிளம்ப, அரசாங்கம் புலி வாலைப் பிடித்த கதையாய் தடுமாறிக் கொண்டு இருந்தது. தினமும் குறைந்தது ஒரு சாலை மறியலாவது நாகையைச் சுற்றி உள்ள கிராமங்களில் நடந்து வந்தது. சில வாரங்களாக சார் ஆட்சியருக்கு இவர்களைச் சமாதானப்படுத்துவதுதான் வேலையே. உள்ளூர் தொலைக்காட்சியில் தினமும் எதாவது ஒரு பெண்மணி கையில் மைக்கைப் பிடித்து கொண்டு, 'பக்கத்து ஊருக்கு கொடுத்து இருக்காங்க, நாங்க மட்டும் என்ன இளிச்சவாயர்களா.. நாங்களும்தான் மனசால(?) நிறைய பாதிக்கப்பட்டு இருக்கோம் ..' என்ற ரீதியில் ஆவேசமாகப் பேசிக் கொண்டு இருப்பார். கடந்த சில நாட்களாய்த்தான் இவைகள் குறைந்துள்ளன.

    கட்சி வேறுபாடு இன்றி அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் நிறைய பணம் பார்க்க வழிகள் செய்யப்பட்டுவிட்டன. நான் உத்தேசமாய் குற்றச்சாட்டுகளை வீசவில்லை. ஓரளவிற்கு உறுதியாய் தெரிந்தவற்றை மட்டுமே இங்கு எழுதுகின்றேன். எனக்குப் பழக்கமான ஒரு கிராம நிர்வாக அதிகாரி தனக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் கிடைத்ததாக மிகவும் சலித்துக்கொண்டார். இந்த ஒரு மாதம் நான் உழைத்த உழைப்பிற்கு எனக்கு ஒரு லட்சம் கூட கொடுக்கலாம், அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றேன் என்று தன் தரப்பு நியாயத்தையும் எடுத்துரைத்தார்.

    அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மிகச்சிறப்பாய் செயலாற்றி வருகின்றார்கள். மிகவும் திறமைசாலிகளைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுதான் அனைத்தையும் திட்டமிடுகின்றது. இருப்பினும் செயல்படுத்தும் வேலையில் இருப்பவர்கள் கீழ்மட்ட அதிகாரிகள்தான். ஒரு சிலர் நன்கு உழைத்தாலும், பலருக்கும் உழைப்பது என்பது புதிதாய் இருக்கின்றது. உயர் அதிகாரிகளுக்கு முன்பு பவ்யமாக தலையாட்டும் இவர்கள், அதிகாரிகள் நகர்ந்தவுடன் 'ஏன்தான் இங்கே வந்து மாட்டிக் கொண்டோம் என்று இருக்கு..' என்ற புலம்பலை ஆரம்பித்துவிடுகின்றனர். மறக்காமல் இன்னொன்றையும் புலம்புவார்கள். 'சுனாமி வந்ததுல அவங்களுக்கு ஒரு நாள்தான் கஷ்டம், அதுக்கப்புறம் ஆரம்பிச்ச எங்க கஷ்டம் ஒரு மாசமாகியும் இன்னும் விடலை'.

    சுனாமிக்கு பின் நாகை மாவட்ட மக்களின் நாயகனாய் அந்தஸ்து பெற்றிருப்பவர் புதிய ஆட்சியரான திரு. ராதாகிருஷ்ணன். அவரது உழைப்பினையும், நிர்வாகத் திறனையும் அனைத்துத் தரப்புமே பாராட்டுகின்றது. யாரும் எளிதில் சென்று சந்திக்கும் எளிய மனிதராய் இருக்கின்றார். கிடைத்த இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில், இவர் மக்களை கையாளும் விதத்தைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஒரு மணி நேரம் அதிகம் உழைத்துவிட்டாலே, ஒரு மாதம் முழுதும் சொல்லிச் சொல்லி அலுத்துக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு நடுவில் ஓய்வேயின்றி பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் இந்த உன்னதமான மனிதர் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். அவரை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணம், உங்கள் வாழ்த்துக்களை அவரது மின்னஞ்சலுக்கு ( collector@nagai.tn.nic.in ) அனுப்பலாம். அவரது செல்பேசி எண்: 98424 22220.

    நாங்கள்தான் (நாங்களும்) பாதிக்கப்பட்டவர்கள் என்று சுனாமிக்குச் சம்பந்தமே இல்லாத கூட்டங்கள் பலவும் நிவாரணங்களைப் பெற்று சென்றனர். சென்று கொண்டு இருக்கின்றனர். ஒரு திருமண மண்டபத்தின் காவல்காரர் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த பொருளும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெருமைப் பேசினார்.

    தேவைக்கு அதிகமாய் வாங்கி வைத்துக் கொண்ட பொருட்களை எல்லாம், இப்போது குறைந்த விலைக்கு பலர் விற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு அவர்களே கூறிக் கொள்ளும் நியாயம், 'எல்லாரும் பொருளாகவே கொடுத்துட்டாங்க.. மற்றச் செலவுகளுக்கு பணத்துக்கு நாங்க எங்கே போவோம்..?'. ஆனால், இன்றும் எந்தப் புதியப் பொருள் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்கின்றனர்.

    சில தினங்களுக்கு முன் ஒரு மீனவக் கிராமத்தில் அதிகப்படியான பாத்திரங்களை விற்று ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். கூடவே தற்காலிகக் குடியிருப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட பெரியப் பெரிய நாகத் தகடுகளும் விலை பேசி ஏற்றப்பட்டன. கடைநிலை ஊழியர்கள் எதிர்த்துக் கேட்க தைரியம் இன்றி ஒவ்வொரு மேலதிகாரிகளாய்த் தொடர்பு கொண்டு நிலைமையத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

    சுனாமிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்த, இறப்பு பதிவு செய்யப்படாதவர்கள் பலரையும் சுனாமியால் இறந்ததாய் காட்டி நிவாரணத் தொகைப் பெற்றக் கூத்தும் நடந்தேறியது. நகரின் மத்தியில் வசிக்கும் சிலர் கூட, மீன் வாங்கச் சென்ற போது இறந்து விட்டனர் என்று காண்பித்து பணம் பெற்று உள்ளனர். அதிகப்பட்சம் இவர்கள் செய்த வேலை 'காணவில்லை' என்ற ஒரு புகாரினைக் காவல் நிலையத்தில் பதிவு செய்தது மட்டுமே. இதற்கு 'கமிசன்' பெற்றுக் கொண்டு ஒரு கூட்டம் திறம்பட வேலைகளை முடித்துத் தந்துள்ளது.

    இப்படி அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், சில தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் என்று அனைத்து தரப்பும் செய்த, செய்து கொண்டிருக்கும் தவறுகள் மக்கள் எல்லோரையுமே சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு வழி செய்துவிட்டது. நான் புதுச்சட்டை அணிந்து சென்றால், 'என்ன சுனாமி சட்டையா..?' என்ற நக்கலான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ['ஆமாம், இந்தா உனக்கொன்று' என்று கேட்பவர்களுக்கு ஒரு சட்டைக் கொடுக்கப்பட்டால் கேள்விகள் மறுபடியும் எழாது. நடக்கும் தில்லுமுல்லுகளை யாரும் கேட்ககூடாது என்ற எண்ணத்தில்தானோ என்னவோ, எல்லோருக்கும் நிவாரணம் என்று 2000 பணம் கொடுத்து, எல்லோர் வாயும் அடைக்கப்பட்டுள்ளது!]

    இன்று நாகை எங்கும் பரவலாகக் ஒலிக்கும் பெருமூச்சு வார்த்தைகள் இவைதான் - 'சுனாமியால் அழிந்தவர்களை விட வாழ்ந்தவர்கள்தான் அதிகம்'.

    என்ன உதவி செய்யலாம்..?

    இறுதியாக.., இன்னும் நாங்கள் எந்த உதவியுமே செய்யவில்லை. என்ன உதவி செய்யலாம் என்று கேட்பவர்களுக்கு.

    என்னுடைய முந்தைய பதிவுகளில், சிறிது காலம் சென்றபின் உதவி செய்ய யாரும் இருக்கமாட்டார்கள், அப்போது நாம் செய்யலாம் என்று கூறியிருந்தேன். அது வெள்ளம், புயல் போன்ற சிறிய அழிவுக்காலங்களில் நடந்தவற்றை மனதில் கொண்டு எழுதப்பட்ட என்னுடையக் கருத்து. அது மிகவும் தவறு என்று இப்போது தெரிகின்றது. நாளாக நாளாகத்தான் அதிக உதவிகள் வந்து குவிவது போல் ஒரு தோற்றம் உள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் தேவைப்படும் அனைத்தையுமே செய்துத்தர தயாராய் இருக்கின்றார்கள். ஏராளமான நிதியினை வைத்துக் கொண்டு பல அமைப்புகள் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று தடுமாறுவது நன்குத் தெரிகின்றது. நாம் யோசிப்பதற்கே முன்பே, அதனைச் செய்து முடித்துவிடும் வேகத்தில் பல நிறுவனங்கள் உள்ளன. ஆகவே, பெரிய அளவில் நிதி அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான புதியத் திட்டங்கள், திட்ட அறிக்கைகள் வைத்து இருப்போர் மாவட்ட ஆட்சியர் அவர்களை தொலைபேசியில் நேரிடையாகத் தொடர்பு கொண்டுத் தெரிவிக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள இணையத்தளங்களில் உங்களுக்குத் தேவையான தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும்.

    நாகை சுனாமி பாதிப்பு விபரங்கள், நிவாரணப் பணிகள் குறித்த செய்திகள், தேவைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்கண்ட இணையத்தளங்களில் உங்களுக்குக் கிடைக்கும்.

    http://www.tsunami2004-india.org
    http://www.tn.gov.in/tsunami/default.htm
    http://nagapattinam.nic.in

    ஹாலந்து நாட்டு அமைப்பு ஒன்று எங்கள் அமைப்பின் மூலமாக பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்து எடுக்க விருப்பம் தெரிவித்தது. எங்களுக்கு கிராமம் கிடைக்கவில்லை. அனைத்துமே தத்து எடுக்கப்பட்டுவிட்டன. பந்திக்கு முந்துவது போல் இதற்கும் முந்தியிருக்கவேண்டும் போலிருக்கின்றது. ஆனால் இந்த 'தத்து' என்பதற்கு ஒவ்வொரு அமைப்புகளும் தரும் விளக்கம் வித்தியாசப்படுகின்றது. என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்னும் பேச்சளவிலேயே இருக்கும் திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும்போதுதான் உண்மைநிலைத் தெரியவரும்.

    'இன்னும் ஒரு வருடத்தில் நாகையை எப்படி மாற்றிக் காண்பிக்கின்றேன்..பாருங்கள்..' என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் அன்று நமது முதல்வர் சவாலாகப் பேசிச் சென்றார். பல்வேறு அமைப்புகளும் இதையேத்தான் சொல்கின்றன. முற்றிலும் புதிய நாகை நகரை நாங்கள் நிர்மாணித்துத் தருகின்றோம் என்கின்றார்கள். ஒரு புதிய நகரையே தற்போதைய நகர எல்லைக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் அமைக்க திட்டங்கள் இருப்பதாக செய்திகள் கசிகின்றன. நல்லது நடந்தால் சரி. நமது எதிர்பார்ப்பும் இனி நல்லதாகவே இருக்கட்டும்.

    பின்குறிப்பு: சுனாமியால் நான் பாதிக்கப்பட்டேனோ இல்லையோ.. என்னுடைய அறுசுவை இணையத்தளம்(www.arusuvai.com) நிறையவே பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஒரு மாத காலத்திற்கும் மேல் எந்தவித புதிய சேர்க்கையும், மாற்றங்களும் இல்லாத காரணத்தால், 50 சதவீத வருகையாளர்களை இழந்துள்ளது. இதனைச் சரிச் செய்து, பழைய நிலைக்கு அல்ல, அதைவிடப் பன்மடங்கு சிறந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றேன். என்னுடைய இந்த வலைப்பதிவும் நாளை முதல் பழையபடி தினம் ஒரு சமையல் குறிப்பினைத் தாங்கி வரும். நானும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினால்தான் நாகை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது என்ற வாக்கியம் அர்த்தம் பெறும் ;-)