அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Friday, April 29, 2005

பிரெட் அடை

தேவையானப் பொருட்கள்

பிரெட் பாக்கெட் - ஒன்று(சிறியது)
பெரிய வெங்காயம் - 2
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை

  • ப்ரெட்டின் கருகின ஓரங்களை நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ப்ரெட்டை நனைத்து எடுத்து இரண்டு உள்ளங்கையில் வைத்து பிழிந்து வைத்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
  • கடுகு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அவற்றை பிரெட்டுடன் சேர்த்து போட்டு பிசைந்து உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
  • ஒரு பிளாஸ்டிக் சீட்டில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக தட்டி தோசை கல்லில் போட்டு மூடி வைத்து சுட்டு எடுக்கவும்.

Thursday, April 28, 2005

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானப் பொருட்கள்

உருளைக்கிழங்கு - அரை கிலோ
பச்சைபட்டாணி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 10
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கடலைமாவு - அரை கிலோ
எண்ணெய் - அரை லிட்டர்
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
அரிசிமாவு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • வெங்காயம், பச்சை மிளகாயைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டாணி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
  • அதில் மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • நன்கு வதங்கிய பிறகு இறக்கி ஆற விட்டு சிறிய சிறிய உருண்டையாக உருட்டி வைக்கவும்.
  • பிறகு கடலைமாவு, சோடா உப்பு, அரிசிமாவு, உப்பு, சேர்த்து பஜ்ஜி மாவு மாதிரி கரைத்து கொள்ள வேண்டும்.
  • இந்த மாவில் உருட்டிய உருண்டைகளை நனைத்து எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைக்கவும்.

Wednesday, April 27, 2005

வெஜிடபிள் புரோட்டா குருமா

தேவையானப் பொருட்கள்

காரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பச்சைப்பட்டாணி - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - ஒன்று நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - ஒரு மூடி
கிராம்பு - 2
பட்டை - சிறிதளவு
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

  • காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் வதக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக வரும் வரை வதக்கவும்.
  • பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • அதன் பிறகு வேக வைத்த காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • பிறகு அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

Tuesday, April 26, 2005

வாழைப்பூ பகோடா

தேவையானப் பொருட்கள்

வாழைப்பூ - ஒன்று
கடலைமாவு - 200 கிராம்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப


செய்முறை

  • வாழைப்பூவில் மேல் உள்ள 5 முற்றிய மடல்களை எடுத்து விட வேண்டும். அவை தேவையில்லை.
  • மீதி உள்ள மடல்களை ஒன்று ஒன்று ஆக ஆய்ந்து கழுவி பொடியாக நருக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத் தூள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு சற்றுக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவினை உதிர்த்துப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

Monday, April 25, 2005

தக்காளி கோழி

அசைவம் கொடுத்து ரொம்ப நாளாச்சுங்கிறதுனால இன்னைக்கு தக்காளி கோழி. ஒரு இங்கிலீஸ் புத்தகத்தில இருந்து சுட்டது. 'tomato chicken' ங்கிறதை அப்படியே தமிழ் பண்ணிட்டேன். பேரு ஒரு மாதிரியா இருந்தாலும், குழம்பு சூப்பரா இருக்கும்ங்க.

தேவையானப் பொருட்கள்

கோழி - ஒன்று
தக்காளி - அரைக் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 6
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - 3 பல்
கிராம்பு - 3
பட்டை - சிறுதுண்டு
நெய் - 3 மேசைக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கின தக்காளியுடன், கால் பாகம் நறுக்கின வெங்காயம் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • நன்கு வெந்தவுடன் இரண்டையும் கரைத்து, வடிக்கட்டி, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை வினிகர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், மீதமுள்ள நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கி தனியே எடுத்து விடவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு இலேசாக வதக்கி அதன்பின் கோழி இறைச்சி, வறுத்து எடுத்து வைத்துள்ள வெங்காயம், உப்பு, சிறிது வினிகர் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து வேகவிடவும்.
  • இறைச்சி பாதி வெந்தவுடன் வேக வைத்து, கரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காய சாற்றினை ஊற்றி வேகவிடவும்.
  • இறைச்சி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.

Sunday, April 24, 2005

குணுக்கு

திருமதி. மனோ சாமிநாதன் வழங்கிய காரம் இது. மயக்கும் மாலை பொழுதில் சூடாகக் கொறிப்பதற்கு சிறந்தது இந்த 'குணுக்கு'.

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கை பிடி
கொத்தமல்லித்தழை - அரை கப்(பொடியாக அரிந்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் தனித்தனியே போதுமான நீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு அரிசி மூழ்கியுள்ள நீரை இறுத்து வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து மசிய அரைக்கவும்.
  • பின் பருப்புக்களை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து ஒன்று பாதியாக அரைத்தெடுக்கவும்.
  • வெங்காயங்களை மெல்லியதாக, நீளமாக அரிந்து இந்த மாவில் கொத்தமல்லி, கறிவேப்பிலையுடன் சேர்த்துக் கலக்கவும்.
  • எண்ணையை வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
  • மாவை சிறுசிறு துணுக்குகளாய் எண்ணெய் கொள்ளும் வரை போட்டு பக்கோடா போல பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

Saturday, April 23, 2005

கம்பு கொழுக்கட்டை

அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால் தொடர்ச்சியாக தினமும் ஒரு உணவுக்குறிப்பு கொடுப்பதில் இடைவெளி விழுந்து விடுகின்றது. "அய்யய்யோ வந்துட்டான்யா" என்று பதறும், மற்றும் "எங்கே போய் தொலந்தான்" என்று தேடும் இரு சாராரும் தயவுசெய்து பொறுத்தருளவும்.

இன்றைய ஸ்பெஷல், மலிவான, சத்தான, சுவையான, செய்வதற்கு எளிதான 'கம்பு கொழுக்கட்டை'.

தேவையானப் பொருட்கள்

கம்பு மாவு - 3 கப்
ஏலக்காய் - 3
நெய் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கப் துருவியது
வெல்லம் - 200 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை

  • முதலில் கம்பு மாவை 5 நிமிடம் வாணலியில் விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு கம்பு மாவில் தேங்காய், உப்பு, ஏலக்காய், நெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு ஒன்றரை டம்ளர் தண்ணீரில் வெல்லத்தை போட்டு அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.
  • வெல்லம் நன்றாக கரைந்த பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு கலந்து வைத்துள்ள மாவில் வெல்லக்கரைசலை சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து கொண்டு பின் சிறிய சிறிய கொழுக்கட்டையாகப் பிடிக்கவும்.
  • இட்லி பானையில் வைத்து வேக வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான கம்பு கொழுக்கட்டை தயார்.

Monday, April 18, 2005

அரிசி பருப்பு சுண்டல்

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - கால் கிலோ
பயத்தம் பருப்பு - 200 கிராம்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி துருவியது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் அரிசி, பயத்தம் பருப்பு இவற்றை வாணலியில் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  • பின் வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • கொதித்த பின் வறுத்து வைத்துள்ள அரிசி, பயத்தம் பருப்பு இவற்றை போட்டு வேக விடவும்.
  • உப்பு தேவையான அளவு சேர்த்து அரிசி, பயத்தம்பருப்பு இவற்றை குழைய விடாமல் முக்கால் பதத்திற்கு10 நிமிடம் வேக விடவும். (தண்ணீர் இல்லை என்றால் சிறிது ஊற்றி கொள்ளவும்).
  • வெந்த பின் இதை வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய் (சிறியதாக நறுக்கிப் போடவும்) இவற்றை தாளித்து, வடிகட்டிய அரிசி பயத்தம் பருப்பில் போட்டு கிளறவும்.
  • பின் தேங்காய் துருவல் கறிவேப்பிலை இவற்றை போட்டு கிளறவும். இது சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

Sunday, April 17, 2005

வட்டலாப்பம்

இஸ்லாமியர் இல்லத்து விசேஷங்களில் தவறாது இடம் பெறும் இனிப்பு வகை இது.

தேவையானப் பொருட்கள்

முட்டை=10
சர்க்கரை=250 கிராம்
முந்திரி=100 கிராம்
ஏலக்காய்=3
தேங்காய்=ஒரு மூடி
உப்பு=ஒரு சிட்டிகை
டால்டா=50 கிராம்

செய்முறை

  • ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக நுரை வரும் அளவு கலக்கி கொள்ளவும்.
  • பிறகு அதில் சர்க்கரையை நன்றாக கரையும் அளவிற்கு சேர்த்து கலக்கவும்.
  • அதன் பின் தேங்காயைத் துருவி கெட்டியாக அரைத்து ஒரு கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • அதில் முந்திரியை விழுதாக அரைத்து கலந்து, ஏலக்காயைப் பொடித்து போட்டு உப்பையும் அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து டால்டாவையும் அதில் சேர்த்து குக்கரில் 45 நிமிடம் வேக விடவும்.
  • வட்டலாப்பம் தயாராகிவிடும். ஆறியபின் சிறிது சிறிதாக கேக் துண்டுகளை போல் துண்டங்கள் போட்டுக் கொள்ளவும்.

Saturday, April 16, 2005

அவல் புட்டு

தேவையானப் பொருட்கள்

அவல்=கால் கிலோ
தேங்காய்=அரை மூடி
சர்க்கரை=5 தேக்கரண்டி
ஏலக்காய்=2

செய்முறை

  • அடுப்பில் வாணலியை வைத்து அதில் அவலை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
  • அது ஆறிய பின் ரவை பதத்தில் இல்லாமல் இடைப்பட்ட பதத்தில் அரைக்கவும்.
  • பிறகு அரைத்த அவலுடன் ஏலக்காய் தட்டி போடவும். சர்க்கரையை தேவையான அளவு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.
  • புட்டுக் குழலை தண்ணீரில் நனைத்து அதில் தேங்காய், அவலை மாறி மாறி போட்டு மூடி வேக விடவும்.
  • 2 நிமிட நேரத்தில் வெந்த பின் தட்டில் கொட்டி பரிமாறவும். அவல் புட்டு ரெடி
.

Friday, April 15, 2005

கொத்தமல்லி தோசை

தேவையானப் பொருட்கள்

கொத்தமல்லி கட்டு - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் - கால் மூடி துருவியது
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கோதுமைமாவு - ஒரு கப்
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 கிராம்

செய்முறை

  • முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து கொத்தமல்லி தழையையும் சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் பச்சைமிளகாய், தேங்காய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
  • பிறகு கோதுமை மாவில் உப்பு போட்டு தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • அதில் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதையும் கரைத்து தோசையாக ஊற்றவும்.

Thursday, April 14, 2005

முடக்கத்தான் தோசை

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - ஒரு கிலோ
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
முடக்கத்தான்கீரை - 4 கைப்பிடி அளவு
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணை - தோசை வார்க்க

செய்முறை

  • புழுங்கல் அரிசியை ஊறப்போடும் போது ஒரு மேசைக்கரண்டி அளவு வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
  • முடக்கத்தான் கீரையை நல்ல தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
  • கீரையை நைசாக அரைத்துக் கொண்டு உப்பு சேர்த்துக் கரைத்து விடவும்.
  • மறுநாள் மாவு எப்போதும் போல் புளித்து இருக்கும். தோசைக் கல்லில் நல்லெண்ணை இரண்டு கரண்டி ஊற்றி முடக்கத்தான் தோசை மாவை வார்த்து எடுக்கவும்.
  • சாம்பாருடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது.

Wednesday, April 13, 2005

சேமியா வடை

தேவையானப் பொருட்கள்

சேமியா - 200 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - அரை லிட்டர்
பச்சரிசிமாவு - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு


செய்முறை

  • சேமியாவை 5 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • அதனுடன் அரிசிமாவு, நறுக்கின வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவினை வடையாகத் தட்டிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
  • இப்போது சுவையான சேமியா வடை தயார். இது தயார் செய்வதற்கு மிகவும் எளிதான ஒரு பதார்த்தம்.

Tuesday, April 12, 2005

கோபி 65

தேவையானப் பொருட்கள்

காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது)
மைதாமாவு - கால் தேக்கரண்டி
கரம்மசாலா - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
அரிசிமாவு - 2 கை
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • காலிஃப்ளவரைச் சுடு தண்ணீரில் போட்டு எடுத்து, சற்று பெரிய துண்டுகளாக உதிர்த்து தனியாக வைக்கவும்.
  • அத்துடன் அரிசிமாவு, மைதாமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து கொள்ளவும்.
  • சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சாப்பிட சுவையாக இருக்கும்.
  • அரிசிமாவு சேர்ப்பதால் மொறுமொறு தன்மை கிடைக்கும்.
  • தண்ணீரை லேசாக தெளிக்க வேண்டுமே தவிர நிறைய சேர்க்கக் கூடாது.

Sunday, April 10, 2005

மசாலா முறுக்கு

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
உளுத்தமாவு - கால் டம்ளர்
பொட்டுக்கடலை மாவு - ஒரு டம்ளர்
பச்சரிசி மாவு - கால் டம்ளர்
எண்ணெய் - அரை லிட்டர்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2 துண்டு
மிளகாய் - 12
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • புழுங்கல் அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, மிளகாய் மூன்றினையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவுடன் தேவையான உப்பு, உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, பச்சரிசிமாவு, இஞ்சி பூண்டு மிளகாய் விழுது ஆகியவற்றை ஒன்றாய் கலந்து, அத்துடன் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • பின் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவினை முள்ளு முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

Tuesday, April 05, 2005

காலிஃப்ளவர் பாஸந்தி

தேவையானப் பொருட்கள்

பால் - ஒரு லிட்டர்
காலிஃப்ளவர் - ஒன்று
சர்க்கரை - 250 மில்லி
ஏலக்காய் - சிறிது
குங்குமப் பூ - சிறிது

செய்முறை

  • முதலில் பாலை கிண்ணத்தில் ஊற்றி காய்ச்சவும். பொங்கிய பிறகு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • காலிஃப்ளவர் பூக்களை பச்சைக் காம்பு இல்லாமல் மேலாக உள்ள பூக்களை சிறுசிறு துண்டுகளாகச் செய்து நன்கு கழுவி கொதிக்கும் பாலில் போடவும்.
  • காலிஃப்ளவர் நன்கு வெந்தவுடன் ஒரு லிட்டர் பால் கால் லிட்டர் அளவு சுண்டி விடும்.
  • பிறகு சர்க்கரை போடவும். நன்கு கொதிக்க விடவும்.
  • இறக்கி வைத்து ஏலக்காய் பொடி, குங்குமப்பூ போடவும்.
  • நன்கு சூடு ஆறிய பிறகு ப்ரிஜ்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்த பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Monday, April 04, 2005

தக்காளி தொக்கு

தயிர், எலுமிச்சை சாதங்களுக்கு மட்டுமன்றி இட்லி, தோசை, சப்பாத்தி மாதிரியான உணவுகளுக்கும் சரியான துணை பதார்த்தம் இது. ஒருமுறை செய்து பாட்டிலில் அடைத்து வைத்துவிட்டால் நீண்ட நாளைக்கு வரும். நீங்கள் உபயோகப்படுத்துவதைப் பொறுத்து.

தேவையானப் பொருட்கள்

தக்காளி - கால் கிலோ
மிளகாய்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை

  • வெறும் வாணலியில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதி வந்ததும், தக்காளிகளை போட்டு மூடி 3 நிமிடம் வேக விடவும்.
  • பின்பு ஆறவிட்டு தண்ணீரை வடித்து தக்காளியில் மேல் தோலை உரித்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வெறும் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கடுகு போட்டுத் தாளிக்கவும்.
  • கடுகு வெடித்தவுடன் பெருங்காய தூள் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த தக்காளி விழுதை அத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • இதில் தனி மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • இறுதியில் பூண்டை உரித்து நன்கு தட்டிப் போடவும்.
  • ஊற்றிய நல்லெண்ணெய் திரண்டு விழுதிலிருந்து வரும் வரை நன்கு கிளறி பின் இறக்கி வைக்கவும்.

Sunday, April 03, 2005

ஆப்பிள் போளி

தேவையானப் பொருட்கள்

மைதா - அரை கிலோ
கோவா - 50 கிராம்
சர்க்கரை - தேவையான அளவு
எண்ணெய் - கால் லிட்டர்
ஏலக்காய் - 4
ஆப்பிள் - 3
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை

  • முதலில் மைதா மாவில் எண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து திட்டமாக தண்ணீர் விட்டு, பூரி மாவு பதத்துக்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
  • பிறகு ஆப்பிளின் தோலைச் சீவி மிக்ஸியில் மையமாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆப்பிள் விழுது சர்க்கரை, கோவா, சேர்த்து சுருள பூரணம் கிளறிக் கொள்ள வேண்டும்.
  • ஏலக்காயை சிறிது நசித்து இதனுடன் சேர்த்து கொள்ளவும்.
  • வாழை இலை அல்லது பால் கவரில் எண்ணெய்யை தாராளமாக தடவி மைதாவை பூரி போல் தட்டி நடுவில் ஒரு பூரண உருண்டையை வைத்து நன்றாக மூடவும்.
  • அதை மெல்லியதாக தட்டி நன்றாக காய்ந்த தோசைக் கல்லில் போடவும். சுற்றிலும் நெய் விட்டு இரண்டு பக்கமும் சிவந்தவுடன் எடுக்கவும்.

Saturday, April 02, 2005

கோளா உருண்டை

தேவையானப் பொருட்கள்

கொத்துக் கறி - 200 கிராம்
கசகசா - 2 தேக்கரண்டி
முட்டை - ஒன்று
மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 பெரியது
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு
இஞ்சி - சிறிது
பொரிக்கடலை - ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • தேங்காயையும் பொரிக்கடலையையும் அரைக்கவும். இஞ்சி பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கின மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம் போட்டு வதக்கி கறி மற்ற மசாலா சாமான்களை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • தண்ணீர் வற்றி சுருள வதக்கியதும் கறியை அதில் சேர்த்து நன்றாக கிளறி, முட்டையையும் உடைத்து ஊற்றி, அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
  • பிறகு இவ்வுருண்டைகளை டால்டாவில் சிவக்க பொரித்து எடுக்கவும்.

Friday, April 01, 2005

கருப்பட்டி வடை

கருப்பட்டி வடை வாசனை ஊரையே விருந்துக்கு அழைக்குமாம். வாழைப்பழம், நெய், சர்க்கரை சேர்த்து இந்த வடையை பிசைந்து சாப்பிட்டால் சுவை இருமடங்கு அதிகரிக்குமாம். செய்து, ருசித்துப் பார்த்துவிட்டு உண்மையா என்று கூறுங்கள்.

தேவையானப் பொருட்கள்

உளுந்து - 200 கிராம்
கருப்பட்டி - 150 கிராம்
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி
பூவன் பழம் - ஒன்று
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - கால் லிட்டர் (பொரிக்க)

செய்முறை

  • உளுந்தையும் துவரம்பருப்பையும் நன்றாக கழுவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
  • கருப்பட்டியைப் பொடிக்கவும். ஊறியப் பருப்பை ஒரு வடிதட்டில் தண்ணீர் போக வடிக்கவும்.
  • பிறகு கிரைண்டரில் உளுந்தையும், வாழைப்பழத்தையும் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும். அவ்வப்போது கையை தண்ணீரில் நனைத்து தள்ளி விட்டு கொண்டே இருக்கவும்.
  • பருப்பு பாதி அரை பட்டவுடன் கருப்பட்டியை சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும். கருப்பட்டி நீர்க்கும் என்பதால் தண்ணீர் விடத் தேவையில்லை.
  • உளுந்து நன்றாக அரைப்பட்டு மாவு பந்து போல் வந்ததும் எடுத்து பச்சரிசி மாவும், உப்பும் சேர்த்து பிசையவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானவுடன் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் துளையிட்டு பொரித்து எடுக்கவும்.