அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Monday, May 23, 2005

கொள்ளு காரபருப்பு

தேவையானப் பொருட்கள்


கொள்ளு - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 4
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 4 பல்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லிதழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப


செய்முறை

  • முதலில் கொள்ளை சுத்தம் செய்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேக விடவும்.
  • தண்ணீரைத் தனியே வடித்து ரசத்திற்குப் பயன் படுத்தலாம்.
  • வெந்த கொள்ளு பருப்பை சிறிதளவு தண்ணீர் மட்டும் இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, மிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • காரம் சற்று குறைவாக வேண்டுவோர், பச்சை மிளகாயைத் தவிர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் எடுத்து ஆறவிடவும்.
  • ஆறிய பிறகு வெந்த கொள்ளுடன் வதக்கி வைத்திருக்கும் பொருட்களையும் கறிவேப்பிலை, மல்லிதழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதுவே கொள்ளு காரபருப்பு.

Sunday, May 22, 2005

கொண்டைக்கடலை குழம்பு

தேவையானப் பொருட்கள்

கொண்டைக்கடலை - 100 கிராம் (கறுப்பு கடலை)
புளி - பெரிய எலுமிச்சை அளவு
குழம்பு பொடி - 3 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்க்ரண்டி
பெரிய வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கொண்டைக்கடலையை கழுவி, முதல் நாள் இரவே ஊற வைத்துவிடவும்.
  • ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் 15 நிமிடம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளிப்பழம் அனைத்தையும் சின்னச் சின்னத் துண்டங்களாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  • புளியை மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு, ஊற வைத்து, சற்றுக் கெட்டியான கரைசலாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடேறிய பிறகு, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கிள்ளி வைத்த மிளகாயைப் போட்டு தாளிக்கவும்.
  • பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு நறுக்கிய காய்களைப் போட்டு நன்றாக 5 நிமிடம் வதக்க வேண்டும்.
  • அதன் பிறகு 3 தேக்கரண்டி குழம்பு மிளகாய்தூளை போட்டு மீண்டும் 3 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பிறகு புளி கரைசலை சேர்க்க வேண்டும். உப்பு தேவையான அளவும், சிறிது மஞ்சள் தூளும் சேர்க்கவும்.
  • இப்போது வேக வைத்த கருப்பு கொண்டக்கடலையை சேர்க்கவும்.
  • சுமார் 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.

Friday, May 20, 2005

கருப்பட்டிக் களி

இப்போதெல்லாம் "கருப்பட்டி" என்பது கிடைப்பதற்கு அரிதான பொருளாகி விட்டது. திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நிறைய கிடைக்கின்றது. சிலருக்கு இதன் சுவை பிடிக்காது. இருந்தாலும் இது கொஞ்சம் ஆரோக்கியமான இனிப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.

தேவையானப் பொருட்கள்

உளுத்தம் பருப்பு - முக்கால் கிலோ
வெள்ளை பச்சரிசி - கால் கிலோ
கருப்பட்டி - அரை கிலோ
ஏலக்காய் - 8
நல்லெண்ணெய் - கால் கிலோ

செய்முறை

  • வெள்ளை உளுத்தம் பருப்பையும் பச்சரிசியையும் தனித்தனியாக கழுவி காய வைக்கவும்.
  • நன்றாக காய்ந்த பிறகு வெறும் வாணலியைக் காய வைத்து, அதில் பருப்பையும், பச்சரிசியையும் தனித்தனியேப் போட்டு சூடு வரும் வரை வறுக்கவும்.
  • பிறகு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மிஷனில் மாவாக அரைத்துக் கொள்ளாவும்.
  • இதை ஸ்டாக் வைத்துக் கொண்டு காலை டிபனுக்கு பதிலாக ஒரு கப் மாவிற்கு, அரை கப் கருப்பட்டி, கால் கப் நல்லெண்ணெய் என்ற கணக்கில் களி செய்ய வேண்டும்.
  • அரை கப் கருப்பட்டியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் ஒரு கப் மாவு, அரை கப் கருப்பட்டி கரைசல், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி விட வேண்டும்.
  • தண்ணீர் வற்றியதும் நல்லெண்ணெய் சுற்றிலும் ஊற்றி கிளறி விட்டால் ஒட்டாமல் வரும்.
  • மிதமான தீயில் செய்வது நல்லது. இரண்டு ஏலக்காய் தட்டிப் போடவும்.

Sunday, May 15, 2005

பிள்ளை அல்வா

செய்முறை என்னவோ கேசரியை நினைவுப் படுத்தினாலும், பால் சேர்ப்பது சற்று வித்தியாசமாக இருக்கின்றது. கேசரியை, பிள்ளை அல்வா ஆக்குவது இந்த பால்தான் என்று எண்ணுகின்றேன்.

தேவையானப் பொருட்கள்

ரவை - ஒரு கப்
பால் - ஒரு கப்
சீனி - ஒரு கப்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 6
நெய் - அரை கப்

செய்முறை

  • முந்திரிப்பருப்பையும், ஏலக்காயையும் அரை தேக்கரண்டி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • அதில் ரவையும் கொட்டி சூடு வரும் வரை வறுத்து இறக்கி வைத்து அதன் மேல் பாலைக் காய்ச்சி சூடாக ஊற்றவும்.
  • ஒரு தேக்கரண்டியால் நன்றாக கலக்கி விடவும்.
  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சீனியைக் கொட்டவும். அதில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் விடவும்.
  • சர்க்கரை கரைந்து கொதித்து கம்பிப்பாகு பதத்திற்கு வந்ததும் ரவை கலவையை எடுத்து ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி விடவும்.
  • ரவை வெந்து மாவு போல வரும். அப்போது நெய் விட்டுக் கிளறி ஏலக்காயைப் பொடி செய்து போட்டு முந்திரிப் பருப்பை சிறு துண்டுகள் செய்து போடவும்.
  • மறுபடி கிளறி விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.
  • இதனுடன் வண்ணப் பொடி எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.

Friday, May 13, 2005

துள்சி'ஸ் ஸ்பெஷல் கொருமா!!!

இன்றைக்கு நமக்காக ஒரு புதிய ரெஸிபியைக் கொடுக்க அறுசுவை வலைப்பதிவுக்கு வந்து இருக்காங்க, நம்ம எல்லோரோட அன்புக்கும் பாத்திரமான, நம்ம "துளசியக்கா". உங்க எல்லோர் சார்பாகவும் அவர்களை வருக! வருக! என்று வரவேற்கின்றேன். அவருடைய சொந்த தயாரிப்பான, கொழம்பும குருமாவும் சேர்ந்த "கொருமா" எப்படி செய்யறதுன்னு இப்ப அவரே உங்களுக்கு சொல்ல போகின்றார். ரெடியா?

வணக்கம்.

அசைவக் குழம்பும் குருமாவும் சேர்த்து உண்டாக்கிய ஸ்பெஷல் கொருமா ( கொழம்பு/குருமா?) இது.

எப்பவுமே சமையலை ஒரே மாதிரியா செய்யற ஆளில்லை நானு. ஒரே கறி/குழம்பையே வெவ்வேறு விதமாத்தான் செய்வேன், செய்யணும்( அப்படின்னு வேண்டுதல்!) .

இது அசைவ பதார்த்தம். ஆரம்பிக்கலாமா, சமையலை?

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரைக் கிலோ
கத்தரிக்காய் - நாலு/அஞ்சு
பூண்டு - பத்து பல்லு
இஞ்சி - 10 கிராம்( பெரிய துண்டா 1)
பச்சை மிளகாய் - 10
பெரிய வெங்காயம் - 2/3
தக்காளிப் பழம் - 4/5
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
இறைச்சி மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - உங்க இஷ்டம் போல
தேங்காய் - அரை மூடி( நான் போடறது 'டெஸிகேட்டட்' அரைக் கப்)
முந்திரிப் பருப்பு - 5/6
கசகசா - 2 டீஸ்பூன்

தாளிக்க:
கருவேப்பிலை - கொஞ்சம்( ரெண்டு இணுக்கு?)
பட்டை - ஒரு சின்னத்துண்டு
கிராம்பு - 2/3
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

சாமான்கள் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டீங்களா?

இறைச்சியைச் சின்னத்துண்டா அரிஞ்சு கழுவி ஒரு வடிகட்டிலே வச்சுருங்க.

மிக்ஸியிலே சட்டினி ஜார் வச்சு, கசகசாவைப் போட்டு அரையுங்க. தண்ணியெல்லாம் இப்ப ஊத்தவேணாம். அது அரைபட்டவுடனே முந்திரியையும் சேர்த்து அரையுங்க. அப்புறம் தேங்காய் சேருங்க. டெஸிகேட்டட்ன்னா தண்ணிவிடாம அரையுங்க அதுவே பவுடராப் போயிரும். (பச்சைத் தேங்காய்ன்னா ஒரு சுத்து அரைச்சுக்கணும்)அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணி சேர்த்து அரைக்கலாம். மையா அரைஞ்சு போனதை ஒரு கிண்ணத்துலே எடுத்து வச்சுக்குங்க. இப்ப இன்னும் கொஞ்சம் தண்ணியை ஜார்லே ஊத்தி 5 செகண்டு அரைச்சு அதையும் எடுத்துக் கிண்ணத்துலேயே சேர்த்துடுங்க. ஆச்சா?

வெறும் சட்டினி ஜாரை மட்டும் இன்னைக்கு உபயோகப்படுத்தப் போறோம். அதே ஜார்லே பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்யைப் போட்டு கொஞ்சமாத் தண்ணி ( 2 டீஸ்பூன்) விட்டு அரைச்சு எடுத்து வையுங்க.

இப்ப வெங்காயத்துண்டுங்களையும் தண்ணி விடாம அரைச்சு வையுங்க. இதே போல தக்காளிப் பழங்களையும் தனியா அரைச்சு வச்சுகுங்க.

ஒரு வாணலியை அடுப்புலே வச்சு 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ஞ்சதும் இறைச்சித்துண்டுங்களைப் போட்டுக் கிளறுங்க. நிறம் மாறியதும், மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறுங்க. பூண்டு இஞ்சி, பச்சை மிளகாய் அரைச்சு வச்சதையும் இப்பச் சேர்த்துக் கிளறுங்க. கறிப் பவுடர், மல்லிப் பவுடர் சேர்த்துக்கிளறுங்க.

ரெண்டு நிமிஷம் ஆனதும் அரைச்சுவச்ச வெங்காயம் சேர்க்கணும். ஒரு பக்கம் இதைச் செய்யறப்பவே, கத்தரிக்காயைக் கழுவிட்டு, ச்சின்னச்சின்னத் துண்டாவெட்டிக்கணும். இப்ப அதையும் சேர்த்துக்கிளறிட்டு, உப்பையும் சேர்த்துக் கிளறிட்டு, அரைச்சு வச்சத் தக்காளியையும் சேர்த்துக் கிளறணும்.

இப்ப உங்களுக்கு ரெண்டு ச்சாய்ஸ் தரேன். சமையலை வேகமா முடிக்கணுமா இல்லெ நேரம் இருக்கா நிதானமா செய்யறதுக்கு?

ப்ரெஷர் குக்கர் இருக்கா? ( நம்ம இந்தியாவுலே கட்டாயம் எல்லா வீட்டுலேயும் இருக்கும். இங்கெ வெள்ளைக்காரங்க வீட்டுலே அநேகமா இருக்காது!)
நேரம் இருந்தாலுமே என்னை மாதிரி சமையலை அடுப்புலே விட்டுட்டு கம்ப்யூட்டர் முன்னாலே வந்து உக்காந்துக்கறவங்க எதுக்கும் ப்ரெஷர் குக்கரை எடுத்துக்குங்க. எத்தனைநாள் அடுப்புலே வச்சிட்டு அது கருகிப் போயிருக்குத் தெரியுமா?

எல்லாத்தையும் ஒரு பாத்திரத்துலே போட்டு குக்கருலே வச்சு வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் 'சிம்'லே 16 நிமிஷம் வையுங்க. அதென்ன 16 நிமிஷம்? ச்சும்மாத்தான் உங்க கவனம் சிதறாம இருக்கறதுக்கு :-) வாணலியை ஒரு தட்டு போட்டு மூடிவையுங்க. இன்னும் அதுலெ கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு! ஸ்டீம் அடங்கட்டும்.

நேரடியா அடுப்புலே சமைக்கப்போறேன்னு சொல்றவுங்க கடைசியாத் தக்காளி சேர்த்துக் கிளறினதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு டம்ப்ளர் தண்ணி சேர்த்து வேகவிடுங்க. மறக்காம அப்பப்பக் கிளறிவிடுங்க. அடுப்பு நிதானமா எரியட்டும், அதான் நேரமிருக்கே!

சமையலோட கடைசிப் பகுதிக்கு வந்துட்டோம். ப்ரெஷர் குக்கர்காரங்க, அதை மீண்டும் அந்த வாணலியிலேயே போட்டு அடுப்புலே ஏத்துங்க. இப்ப ரெண்டு க்ரூப்பும் அரைச்சுவச்சிருக்கற தேங்காய், முந்திரி, கசகசாக் கலவையை கொருமாலே சேர்த்துக் கொதிக்கவிடுங்க.

இதுதான் கட்டக்கடைசி. தாளிக்கற வால்கரண்டியை அடுப்புலே வச்சு எண்ணெய் ஊத்தி அது காஞ்சதும் தாளிக்க எடுத்துவச்ச சாமான்களைப் போட்டு சோம்பு வெடிச்சு, கருவேப்பிலை படபடான்னு வெடிச்சதும் அதை அப்படியே எடுத்துக் கொதிச்சுக்கிட்டு இருக்கற கொருமாவுலே ஊத்துங்க.

இந்த ரெஸிபி இவ்வளவு நீளமா இருக்கேன்னு பயந்துறாதீங்க. உண்மையைச் சொன்னா நான் இதைத் தட்டச்சு செய்யறப்பவே என்னடா இவ்வளவு பெருசா இருக்கே, இதை எழுதற நேரத்துலே நேத்து கொருமா வச்சே முடிச்சிட்டமேன்னு நினைச்சேன்!

துள்சி'ஸ் ஸ்பெஷல் கொருமா செஞ்சு பார்த்து, தின்னுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. சரியா?

வெஜிடேரியன்ஸ் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, கேரட் போடுங்க. இதுக்கு குக்கர் வேணாம். அப்படியே வாணலியிலேயே செஞ்சுக்குங்க. கத்தரிக்காய் உருத்தெரியாம க்ரேவியா ஆயிரும். அப்பத்தானே காய்கறி பிடிக்காத என் பொண்ணை அல்லது இந்த ரகக் குழந்தைகளைக் காய் சாப்பிடவைக்க முடியும்:-))))


மீண்டும் ஒரு முறை சுருக்கமாக(அறுசுவை நடையில்) இந்த செய்முறையைப் பார்த்துடுவோம்.

தேவையானப் பொருட்கள்

மட்டன் - அரைக் கிலோ
கத்தரிக்காய் - 4
பூண்டு - 10 பல்லு
இஞ்சி - 2 அங்குல துண்டு
பச்சை மிளகாய் - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளிப் பழம் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
இறைச்சி மசாலாப் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - அரை கப்
முந்திரிப் பருப்பு - 5
கசகசா - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பட்டை - ஒரு சின்னத்துண்டு
கிராம்பு - 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை

  • இறைச்சியை கழுவி சுத்தம் செய்து கொண்டு சிறுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காயையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கசகசா, முந்திரி, தேங்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் ஒரு மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதேபோல், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் தனித்தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இறைச்சி துண்டங்களைப் போட்டு வதக்கவும். நிறம் மாறியதும் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.
  • அதன் பிறகு இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுதினையும் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் கறி மசாலாத் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் நன்கு வேகவிடவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, நறுக்கின கத்தரிக்காய் துண்டங்கள், தக்காளி விழுது, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
  • அதன் பிறகு இதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் அவ்வபோது கிளறிவிட்டு நன்கு வேகவிடவும்.
  • இதனை அப்படியே குக்கரில் வைத்தும் வேகவிடலாம். குக்கர் எனில் ஒரு விசில் வந்ததும் சுமார் கால் மணி நேரம் குறைந்த தீயில் வைத்திருந்து பிறகு எடுத்து வாணலிக்கு மாற்றிக் கொள்ளவும்.
  • இப்போது அரைத்து வைத்துள்ள முந்திரி. கசகசா, தேங்காய் விழுதினைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • இறக்குவதற்கு முன்பு மற்றொரு வாணலி அல்லது தாளிக்கும் கரண்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து கொருமாவில் ஊற்றி இறக்கவும்.
  • சைவ உணவுக்காரர்கள் இறைச்சிக்கு பதில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, May 11, 2005

முத்துப் புலவு

தேவையானப் பொருட்கள்

ஜவ்வரிசி - அரை கிலோ
உப்பு - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - பாதி
பட்டை - 2
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - சிறிது
பிரிஞ்சி இலை - சிறிது
நெய் - 100 கிராம்
ரவை - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

செய்முறை

  • ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதை குளிர்ந்த தண்ணீரில் 2 மணி நேரம் ஊற விடவும். பிறகு அதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  • முந்திரிப்பருப்பை பொடி செய்யவும். இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகத்தை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடவும்.
  • எல்லாம் சேர்த்து கொதித்ததும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு 10 நிமிடம் கழித்து, வெந்த ஜவ்வரிசி போட்டு முந்திரிப் பருப்பு தூளைப் போட்டு நன்கு கிளறி விட்டு இறக்கவும்.
  • இதுவே முத்துப்புலவு இதை வெஜிடபுள் சாலட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

Tuesday, May 10, 2005

கோழிக்கறி சமோசா

தேவையானப் பொருட்கள்

மைதா - அரை கிலோ
கோழிக்கறி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கல் உப்பு - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு கப் துருவல்
கறிவேப்பிலை - சிறு கொத்து
மல்லித்தழை - சிறு கொத்து
பட்டை - 2 சிறு துண்டுகள்
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - சிறிது
எண்ணெய் - அரை கிலோ
டால்டா - 100 கிராம்


செய்முறை

  • மைதா மாவில் 2 தேக்கரண்டி கல் உப்பை முக்கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி அத்துடன் 100 கிராம் டால்டாவை உருக்கி ஊற்றி பூரிமாவு போல பிசைந்து வைக்கவும்.
  • பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் பொடி செய்யவும், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லித்தழையைக் கிள்ளி வைக்கவும்.
  • கோழிக்கறியைக் கழுவி ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். அதை அம்மியில் வைத்து நசுக்கி எடுக்கவும். அரைக்க வேண்டாம்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்புத் தூள் போட்டு பொரிந்ததும், அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு வதக்கவும்.
  • அதன் பிறகு கோழிக்கறி போட்டு மிளகாய், மல்லி தூள், மஞ்சள்தூள், 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி, கடைசியாக தேங்காய்த் துருவல் கலந்து கிளறிவிட்டு எடுக்கவும்.
  • மைதா மாவை எடுத்து வட்டமாக பூரி போல செய்து நடுவில் ஒரு தேக்கரண்டி கோழி பொடிமாஸ் வைத்து முக்கோணமாக மடித்து ஓரத்தை சிறிது எண்ணெய் தடவி ஒட்டி விடவும்.
  • இப்படி எல்லா மாவையும் செய்து வைத்துக் கொண்டு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒரு தடவைக்கு 5 அல்லது 6 சமோசாக்களைப் போட்டு நிதானமாக பிரட்டி விட்டு பொரித்து எடுக்கவும்.

Monday, May 09, 2005

மனோகரா போளி

மனோகரம் என்றால் பூந்தி கொண்டு செய்யப்படும் லட்டுவின் பெயராம். இது லட்டு கொண்டு (லட்டை உடைத்து பூந்தியாக்கி) செய்யப்படும் போளி. போளிக்குள் பூந்தி என்று கவித்துவமாக(!) பெயர் வைக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன்.

தேவையானப் பொருட்கள்

லட்டு அல்லது பூந்தி - 200 கிராம்
தேங்காய் துருவியது - கால் கப்
ஏலக்காய் - 4
மைதா மாவு - கால் கிலோ
நல்லெண்ணெய் - 50 கிராம்
கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி

செய்முறை

  • மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் கேசரிப்பவுடர், உப்புத்தூள், கால் கப் தண்ணீர் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி எல்லாவற்றையும் நன்றாகச் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  • நன்கு பிசைந்து மாவினை இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
  • தேங்காய் துருவல், ஏலக்காய், உடைத்து போட்ட லட்டுகள் எல்லாவற்றையும் மிக்ஸியில் சுழற்றி எடுத்து ஒரு வாணலியில் கொட்டி லேசாக சூடு படுத்தவும்.
  • ஆற விட்டு சிறுசிறு உருண்டைகள் செய்து வைக்கவும்.
  • அதே போல மைதாவை கொஞ்சம் பொரிய உருண்டைகளாக செய்து கையினால் விரித்து, கொழுக்கட்டைகளுக்கு பூரணம் வைப்பது போல் உள்ளே பூந்தி கலவையை வைத்து மறுபடியும் உருட்டிக் கொள்ளவும்.
  • உருண்டைகளை ஒரு வாழை இலையில் வைத்து வட்டமாக தட்டி எடுத்து, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊற்றி, இறுபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்.

Sunday, May 08, 2005

ரஸ்க் இனிப்பு முட்டை

இன்னும் ஒரு முட்டை அயிட்டமா.. என்று பயப்படவேண்டாம். பெயரில்தான் முட்டை இருக்கின்றதே தவிர உள்ளே இல்லை. (மைசூர் போண்டா மாதிரி)

தேவையானப் பொருட்கள்

மில்க் ரஸ்க் - கால் பாக்கெட்
சீனி - 200 கிராம்
தேங்காய் - ஒரு கப் துருவியது
ஏலக்காய் - 2
முந்திரி - 6 பருப்பு
நெய் - ஒரு தேக்கரண்டி


செய்முறை

  • ரஸ்க்கின் ஒரத்தில் உள்ள சிவந்த பகுதிகளை எடுத்து விடவும்.
  • பின் வெண்மை நிற பகுதிகளை மட்டும் மிக்ஸியில் கட்டிகள் இல்லாமல் பொடித்துக் கொள்ளவும்.
  • ஏலக்காய், சீனியை பொடி செய்யவும்.
  • தேங்காய் துருவலுடன் சீனி, ஏலப்பொடி சேர்த்து பிசறிவிட்டு 10 நிமிடம் ஊற விடவும்.
  • இப்போது தேங்காய் துருவலுடன் சற்று தண்ணீர் கசிந்து இருக்கும். அத்துடன் ரஸ்க் தூளை சேர்க்கவும்.
  • பொடியாக சீவிய முந்திரி, நெய் சேர்க்கவும்.
  • எல்லாவற்றையும் நன்கு கலந்து பிசைந்து முட்டை வடிவத்தில் செய்து வைக்கவும்.
  • செலவில்லாத சிக்கனமான இனிப்பு இது. இதனை குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து இருந்து இறுக விட்டு பிறகு சாப்பிடலாம்.

Saturday, May 07, 2005

முட்டை தொக்கு

இந்த வாரம் முட்டை வாரம்னு விளம்பரபடுத்தலாம் போல இருக்கு. இன்றும் ஒரு வித்தியாசமான முட்டை அயிட்டம். செய்முறை ரொம்ப சுலபமா இருக்கு. முட்டை தொக்குன்னு பேரு கொடுத்து இருங்காங்க. அதுதான் கொஞ்சம் இடிக்கும் போல இருக்கு.


தேவையானப் பொருட்கள்

முட்டை=4
எண்ணெய்=4 தேக்கரண்டி
வெங்காயம்=4
வரமிளகாய்=4
இஞ்சி=சிறு துண்டு
பூண்டு=4 பல்
உப்பு=ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்=கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகம்=அரைத் தேக்கரண்டி


செய்முறை

  • முட்டைகளை மூழ்கும் அளவிற்கு தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து, ஓட்டினை நீக்கி தனியே வைக்கவும்.
  • இஞ்சி பூண்டினை தோலுரித்து எடுத்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம், நறுக்கின தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், பெருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள விழுதினைப் போட்டு சுருள வதக்கவும்.
  • நன்கு வதங்கியவுடன் அவித்த முட்டைகளைப் போட்டு கிளறி இறக்கவும். அவித்த முட்டைகளை அப்படியே சேர்க்கலாம். இல்லையென்றால் சிறு துண்டங்களாக நறுக்கியும் சேர்க்கலாம்.
  • மஞ்சள் கருவினை விரும்பாதவர்கள் வெறும் வெள்ளைக் கருவினை மட்டும் துண்டுகளாக்கிப் போட்டு கிளறிக் கொள்ளலாம்.

Friday, May 06, 2005

முட்டை மசாலா ஆப்பம்

பொதுவா ஆப்பத்து மேலே முட்டையை உடைச்சி ஊத்தி வேக வைச்சு முட்டை ஆப்பம்னு தருவாங்க. இது என்னவோ மாவுலேயே உடைச்சு ஊத்தி மசாலா ஆப்பம்னு சொல்றாங்க. செஞ்சு பார்த்து நல்லா இருந்தா சொல்லுங்க. நானும் ட்ரை பண்ணுறேன்.

தேவையானப் பொருட்கள்

முட்டை - 2
பச்சரிசி - கால் கிலோ
புழுங்கல் அரிசி - கால் கிலோ
உளுத்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
கல் உப்பு - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - 4 சிட்டிகை
பச்சைமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 4
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கப்

செய்முறை

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாகப் சேர்த்து 4 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.
  • அத்துடன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் கழுவி ஆட்டுக்கல் அல்லது கிரைண்டரில் தோசை மாவு போல அரைக்கவும்.
  • அரைக்கும் போது தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த மாவை மறுநாள் எடுத்து அத்துடன் சமையல் சோடா, மஞ்சள் தூள் போட்டு கலந்து வைக்கவும்.
  • இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கி மாவில் ஊற்றவும்.
  • பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் இவற்றை அம்மியில் விழுதாக அரைத்து மாவில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து மாவை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் தடவி விட்டு இரண்டு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி ஒரு மூடியால் மூடி விடவும்.
  • அடுப்பை நிதானமாக எரிய விட வேண்டும். ஒரு பக்கம் வெந்தால் போதுமானது. வெந்தவுடன் எடுத்து கோழிக்குழம்புடன் பரிமாறவும்.

Tuesday, May 03, 2005

முட்டைக் குழம்பு

இதற்கு முன்பு வெளியிட்ட முட்டை குருமா குறிப்பு மிகவும் சரியான குறிப்பாக இல்லை. எத்தனைப் பேர் முயன்று பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. முயன்றவர்கள் மன்னிக்கவும். மற்றவர்கள் அதை விலக்கி விட்டு, இந்த குழம்பினை முயற்சித்துப் பார்க்கவும்.


தேவையானப் பொருட்கள்

முட்டை - 5
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 4 பல்
நெய் - 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 4
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்துருவல் - 2 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 4
மல்லித்தழை - சிறிது
பட்டை - சிறிது
பிரியாணி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


செய்முறை

  • முட்டையை போதுமான நீரில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து, ஓட்டினை நீக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கசகசா, தேங்காய்ப்பூ, மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கி மிக்ஸியில் இட்டு ஜூஸ் போல் ஆக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பட்டை, இலை, கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு அரைத்த விழுது, தக்காளி ஜூஸ், மிளகாய்தூள், மல்லித்தூள், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மேலும் நன்கு 5 நிமிடம் வதக்கி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து விடவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இரண்டு பல் பூண்டு தட்டிப் போட்டு கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி தூவவும்.
  • கொதிக்கும் மசாலாவில் முட்டையை இரண்டாக வெட்டிப்போட்டு உடைந்து விடாமல் கிளறி விட்டு வேறொரு பாத்திரத்தில் வைக்கவும்.

Monday, May 02, 2005

சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 500 கிராம்
சிக்கன் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
நெய் - 75 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
இஞ்சி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
மிளகுப்பொடி - 10 கிராம்
சீரகப்பொடி - 10 கிராம்
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
கலர் பவுடர் - இரண்டு சிட்டிகை
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
தேங்காய்பால் - ஒரு கப்
பட்டை கிராம்பு - அரைத்தது
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்

செய்முறை

  • முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • வடிக்க போகும் முன் கலர் பவுடர், நெய்யில் வறுத்த முந்திரி இரண்டையும் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
  • வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளை போட்டு வதக்கவும்.
  • அவை சிவந்ததும், வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
  • எல்லாப் பொடிகளையும் சேர்த்துக் கிளறவும். பிறகு கறியை போட்டு 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
  • பிறகு தேங்காய் பால் 250 மில்லி, தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
  • இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் அடுப்பில் வைத்து மூடி மிதமான தீயில் வேகவிடவும்.
  • பிறகு நன்கு வெந்தவுடன் எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Sunday, May 01, 2005

முட்டை குருமா

தேவையானப் பொருட்கள்

முட்டை - 3
தக்காளி - 50 கிராம்
பூண்டு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ஒரு மூடி துருவியது
கறிமசால் பொடி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி

செய்முறை

  • முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • இத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  • இந்த கலவையை குக்கரில் வேக விடவும்.
  • பிறகு இஞ்சி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் துருவல், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பச்சைமிளகாய், கறிமசால் பொடி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அத்துடன் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் முட்டைக் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும்.