அறுசுவை.com (www.arusuvai.com)

தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.

Tuesday, June 28, 2005

கோங்கூரா

தேவையான அளவு

புளிச்ச கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 5
மிளகாய் வற்றல் - 15
கரிவடவம் - ஒரு உருண்டை
உப்பு - 10 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மல்லி - 10 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

  • புளிச்சக்கீரையில் இலையை மட்டும் எடுத்துக் கொண்டு அத்துடன் உரித்த வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • வெந்தயம், வெள்ளை உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கடுகு, மல்லி, கரிவடவம், எண்ணெய் விட்டு தனித்தனியே வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வறுத்து வைத்ததை ஒன்றாக சேர்த்து பொடி செய்யவும்.
  • வேக வைத்த கீரையை நன்றாக மசித்து உப்பு மேலே சொன்ன வறுத்த பொடி சேர்த்து நன்றாக கடையவும்.

Sunday, June 26, 2005

காரட் பொங்கல்

அறுசுவையில் வாரம் ஒரு குறிப்பு கொடுத்து வரும் ஷார்ஜாவைச் சேர்ந்த திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் குறிப்பு இது. இவரது சமையல் குறிப்புகள் மிக எளிதானவை. எல்லோராலும் செய்து பார்க்க கூடியவை. எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு வித்தியாசமான உணவுகளைத் தயாரிப்பதில் இவர் வல்லவர். இந்த காரட் பொங்கல் ஒரு சான்று.

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - அரை கப்
பொடியாக அரிந்த தக்காளி - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
புதினா இலைகள் - கால் கப்
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
காரட் துருவல் - 2 கப்
பச்சை பட்டாணி - அரை கப்
கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து, அது சூடானதும் கடுகைச் சேர்க்கவும்.
  • கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து, அதன் பிறகு அரிந்த தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
  • பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, புதினாவை நன்கு அரைத்து, சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன் பின் காரட் துருவல், பட்டாணி, மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைத்துள்ள அரிசி, பருப்பினை நீரை வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு, அத்துடன் வதக்கின கலவையைச் சேர்த்து, தேவையான உப்பு, நீர், தேங்காய் பால் சேர்த்து கிளறி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
  • அரிசி நன்கு வேகும் வரை வைத்திருந்து (விரும்பினால் சற்றுக் குழைய விட்டு கொள்ளலாம்) பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Friday, June 24, 2005

ஜூலை 6ஆம் தேதி சுனாமி

ஜூலை 6ஆம் தேதி சுனாமி வரப்போகுதாமே? நாகை நகரில் எங்கு பார்த்தாலும் கடந்த ஒரு வாரமாக இதுதான் பேச்சாய் இருந்திருக்கின்றது. மக்கள் பீதியில் இருப்பது நன்கு தெரிகின்றது. பள்ளி, கல்லூரிகளுக்கெல்லாம் விடுமுறை விடலாமா என்றெல்லாம் யோசிக்கின்றார்களாம். நாளேடுகள் வேறு இதனைப் பற்றி எழுதிவிட்டன. நான் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருப்பதால், இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு முழுவிபரங்களும் கிடைத்தது. பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் திரு. P. ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சில அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய சுனாமி எச்சரிக்கை கடிதம் ஒன்று, நகல்கள் எடுக்கப்பட்டு நாகை முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.(இந்த கடிதத்தை நகல்கள் எடுத்தே ஒரு செராக்ஸ் கடைக்காரர் நல்ல காசு பார்த்துவிட்டார்.) அப்படி என்னதான் அந்த கடிதத்தில் உள்ளது? எனக்கு கிடைத்த நகல்கள் அனைத்துமே ஸ்கேன் செய்யும் அளவிற்கு தெளிவாக இல்லை. ஆகவே, அந்த கடிதத்தில் உள்ளதை அப்படியே மாற்றாமல் இங்கு தருகின்றேன். எழுத்துக்கள் சரியாக தெரியாத இடங்களில் என்னுடைய யூகத்தினை வார்த்தைகளாக்கி கொள்கின்றேன்(பொருளில் மாற்றம் இல்லாத அளவிற்கு).

------------ கடிதத் தொடக்கம் ----------------------
ஜூலை 6ஆம் தேதி மீண்டும் ஆழிப்பேரலை.

ஆழிப்பேரலை என்ற சுனாமிப் பற்றி அறிவியல் அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்களின் கருத்து"இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால், ஒன்றின் மேல் ஒன்று குறுக்கிடுவதால் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆழிப்பேரலை உருவாகின்றது" இந்த கருத்து ஓரளவுதான் உண்மை.

உரசுவதாக இருந்தாலும், குறுக்கிடுவதாக இருந்தாலும் தட்டுகளின் அகலத்தில் வித்தியாசம் இருக்க வேண்டும். அந்த வித்தியாசம் எவ்வாறு உருவாகியது என்பதை யாரும் தெரிவிக்கவில்லை.

இரண்டு தட்டுகளின் வித்தியாசத்திற்கு காரணம்

வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு மண்டலமே இரண்டு தட்டுகளின் வித்தியாசத்திற்கு காரணம் ஆகும். தாழ்வு மண்டலம் செயல் இழக்கின்றது; செயல் அழுத்தமாகி, வெப்பமாக கடல் பரப்பின் அடியில் அதாவது பூமி மையக்கோட்டிற்கு செங்குத்தாய் [90 டிகிரி] அமைந்த "சுமத்ரா" தீவின் அருகாமையில் மையத்தை உருவாக்கி சுழற்சியை மேற்கொள்கின்றது.

கடல் பரப்பின் அடியில் ஏற்பட்ட சுழற்சியின் ஒரு பாதி வெப்பமாகவும், மறுபாதி குளிர்ச்சியாகவும் சுழன்று, மையத்தில் நெருப்பு குழம்பைச் சேகரித்து, பூமிக்குள்ளே அதிவேகத்துடன் ஊடுருவிச் செல்கின்றது. வெப்ப சுழற்சியின் பகுதிகள் மெலிந்தும், குளிர்ச்சியின் பகுதிகள் வெப்ப பகுதியைவிட கொஞ்சம் தடித்தும் காணப்படும்.

சுருங்க கூறுகையில், நில நடுக்கத்தால்தான் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது என்பது தவறான கருத்தாகும். கடலில் உருவான வெப்பத்தால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்படப்போகின்றது.

{ என் குறிப்பு: இந்த இடத்தில் இரண்டு வரிகள் முழுவதும் நகலில் சரியாகத் தெரியவில்லை. பல்வேறு காற்று அழுத்த தாழ்வு மண்டலங்களின் வாயிலாக உருவாவதுதான் ஆழிப்பேரலை என்ற ரீதியில் ஏதோ எழுதி இருக்கின்றார். அந்த இரண்டு வரிகளை விட்டு விட்டு அடுத்த பத்திக்கு செல்கின்றேன். }

ஒரு ஆழிப்பேரலை உருவாக குறைந்தது 3 மாதங்களில் காற்று அழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருக்க வேண்டும். 3 மாதங்களில் உருவான தாழ்வு மண்டலங்கள் 4 வது மாதத்தில் வெளித் தோன்றுகின்றது. வெளித்தோன்றும் நாள் பௌர்ணமி அல்லது அமாவாசை.

அன்று டிசம்பர் 26 - பௌர்ணமி
இன்று ஜூலை 06 - அமாவாசை

வ.எண் 26 டிசம்பர் 2004 பௌர்ணமி 06 ஜூலை 2005 அமாவாசை
1 முதல் காற்று அழுத்த தாழ்வு மண்டலம் செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு வாரம் மழை பெய்தது. வளர் பிறையில். முதல் காற்று அழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் ஏப்ரல் மாதத்தில். மிகவும் சக்தி வாய்ந்தது. 1 வாரம் மழை பெய்தது. தேய்பிறையில்.
2 இரண்டாவது காற்று அழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் மாதம் வளர்பிறையில். சக்தி குறைந்தது. காற்று அழுத்த தாழ்வு மண்டலம் மே மாதத்தில் தேய்பிறையில். சக்தி குறைந்தது.
3 மூன்றாவது காற்று அழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் மாதம் வளர்பிறையில். சக்தி மேலே உள்ளதைவிடக் குறைவு. மூன்றாவது தாழ்வு மண்டலம் ஜூன் மாதம் தேய் பிறையில்
4 காலை 6.38 போது சூரிய உதயம். அப்பொழுது சூரியன் - சந்திரன் ஒரே நேர்கோட்டில் அமைந்து சந்திரன் உச்சம் பெற்று மறையும். அதாவது பௌர்ணமி உச்சத்தில் மறைவது.
ஆழிப்பேரலை ஏற்பட்ட நேரம் காலை 6.38
அதிகாலை 5.58 போது சூரிய உதயம். அப்பொழுது சந்திரன் உச்சம் பெற்று சூரியனோடு சேர்வது, அதாவது அமாவாசை உச்சத்தில் இணைவது
ஆழிப்பேரலை ஏற்பட இருக்கும் நேரம் அதிகாலை 5.58


சூரிய உதயத்தில் ஏறக்குறைய 30 _______ (என்னவென்று சரியாக தெரியவில்லை) பௌர்ணமியாக இருந்தாலும் சரி, அமாவாசையாக இருந்தாலும் சரி. மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த சக்தியின் காரணமாக கடலுக்குள் இருக்கும் வெப்ப சக்தியை, அதாவது சுமத்ரா தீவின் அருகில் ஏதோ ஒரு பகுதியில் மையம் கொண்ட வெப்ப சக்தி வெடிக்கச் செய்யும். அதிகாலை 5.58 மணிக்கு நில நடுக்கத்தை உண்டு பண்ணி வெப்ப ஆற்றல் கூடிய சக்தி மிக்க ஆழிப்பேரலையை உருவாக்கும்.

DARK STAR or DEATH STAR

கரும் புள்ளிகள் எந்த விதமான சக்திமிக்க கதிர் வீச்சுகளை உள்ளே இழுக்கும் தன்மையைக் கொண்டது. கரும்புள்ளிகளின் பாதையில் செயற்கைக் கோள் சென்றால்கூட உள்ளே இழுத்துக் கொள்ளும். 'பிரபஞ்சம் முழுவதும் ஒரு டார்க் ஸ்டாரை (DARK STAR) நோக்கி பயணிக்கின்றது.' என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

இவ்வாறு இருக்கையில் ஆழிப்பேரலை தோன்றும் நாள்

' DARK MOON'
' டார்க் மூன்'
' அமாவாசை'

கற்பனை பண்ணமுடியவில்லை. அழிவு பேரழிவாக இருக்கும். ஆகவே இந்த கருத்தை ஆய்வு செய்து மக்களையும், மக்கள் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று இரு கைகளை முகத்திற்கு நேராக கூப்பி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பு (இந்த குறிப்பு அவர் கடித்தத்தில் உள்ளதுதான்)

1. 26.12.2004 பௌர்ணமியில் ஏற்பட்ட ஆழி பேரலை தாழ்வு மையங்கள் அனைத்தும் வளர் பிறையில். தேய்பிறையில் இல்லை.இது போல் 06.07.2005 அமாவாசையில் ஏற்பட இருக்கும் ஆழிப்பேரலை தாழ்வு மையங்கள் அனைத்தும் தேய்பிறையில். வளர்பிறையில் ஒன்றும் இல்லை.

2. வளர்பிறையில் இருந்து [08 - 06 - 2005] தேய்பிறையான அமாவாசை [ 06 - 07 - 2005] க்குள் கடுமையான மழை பெய்தால் ஆழிப்பேரலை ஏற்படாது.

3. வங்க கடலில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் குறைந்த காற்று அழுத்த மண்டலம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஒரு நாள் என்பது பகலும் இரவும் சேர்ந்தது. ஆழிப் பேரலையும் நாளைப் போன்றது.

பகல் - பௌர்ணமி - வந்துவிட்டது.
இரவு - அமாவாசை - வர இருப்பது.

நன்றி. வணக்கம்.

[அவரது பள்ளி முகவரி முத்திரை அச்சும் உள்ளது]

P. Rajendran, M.Sc., M.Ed.,
P.G.Asst in Physics
Govt. Girls Hr. Sec School
Parangipettai - 608502

[கீழே அவரின் வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளார்.]மேல்மூங்கிலடி,
வயலூர் அஞ்சல்,
சிதம்பரம் வட்டம். 608602
தொலைபேசி: (04144) 231642

---------- கடித முடிவு -----------


நாகையையும் அதன் சுற்று வட்ட கடலோர கிராமங்களையும் பீதியில், பரபரப்பில் ஆழ்த்தியிருக்கும் கடிதம் இதுதான். மாவட்ட ஆட்சியர் திரு. இராதாக்கிருஷ்ணன் அவர்கள் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் இருக்கின்றார். மற்ற அரசு உயர் அதிகாரிகள் இதற்கு அளிக்கு விளக்கம், "இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அலட்சியப்படுத்தவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மக்கள் பீதியடைய வேண்டாம். அதே சமயம், எச்சரிக்கையாய் இருங்கள்."

இந்த மாதிரியான பதிலும் கடலோர மக்களிடையே ஒரு வித பீதியைத்தான் கிளப்பிவிட்டுள்ளது. எனது நெருங்கிய நண்பன், மிகவும் திடகாத்திரமானவன். சென்ற சுனாமியின் போது மயிரிழையில் தனது சகோதரியையும், அவரின் கைக்குழந்தையையும் காப்பாற்றியவன். இந்த கடிதச் செய்தியைக் கேட்டவுடன், கை கால் நடுங்கி, மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டான். கடந்த முறை நடந்த அந்த பயங்கரத்தை பக்கத்தில் இருந்து பார்த்தவர்களுக்கும், அதனை அனுபவித்தவர்களுக்கும் இது போன்ற செய்திகள் மனதளவில் நிறையவே பாதிப்பை உண்டாக்குகின்றது.

நான் கூறும் விளக்கங்கள் அங்கே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனது நண்பர்கள் என்னிடம் வாதித்தார்கள். "இது உண்மை இல்லையென்றால், இதனை நம்ப வேண்டாம் என்று ஏன் ஒருவர் கூட தீர்க்கமாக சொல்லவில்லை.?" "நான் கூறுகின்றேன். இதனை நம்பவேண்டாம்" என்று சொல்லிப் பார்த்தேன். என்னை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை.

ஒரு விசயம் நன்கு புரிகின்றது. இன்றைக்கு ஆன்மீகத்தையும் அறிவியல் கலந்து சொன்னால்தான் மக்களிடம் எடுபடுகின்றது. அது வாஸ்துவாகட்டும். வண்ண வண்ண கற்களாகட்டும். கூப்பிட பயன்படும் பெயர்களாகட்டும். "அறிவியல் ரீதியாக .." என்றொரு வார்த்தையைச் சேர்த்து விளம்பரமோ, வியாபாரமோ செய்தால்தான் இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

குறைந்த காற்று அழுத்த மண்டலம், உயர்ந்த காற்று அழுத்த மண்டலம், பூமியின் மையக்கோடு, சூரியன் நேர்க்கோடு, அமாவாசை, பௌர்ணமி என்று அறிவியல் வார்த்தைகள் சிலவற்றைப் போட்டு விட்டால், அரசு உயர் அதிகாரிகளில் இருந்து சராசரி மனிதர்கள் வரை அத்தனை பேரையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடலாம் என்பதற்கு இந்த கடிதமும் அதனால் தோன்றியுள்ள சூழ்நிலையும் ஒரு உதாரணம்.

எனது நண்பர்கள் அந்த ஆசிரியரைத் தொடர்பு கொண்டு பேசினர். அவரது பதில் தெளிவாய் இருந்ததாம். "என்னுடைய ஆராய்ச்சியின் முடிவினைக் கொடுத்து விட்டேன். இதனை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்." நான் சில கேள்விகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். தொலைபேசி உபயோகத்தில் இல்லை. சில நாட்களாக அவரது தொலைபேசி இயங்கவில்லை.

கடந்த சுனாமிக்கு பிறகு அவற்றை பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் பல தளங்களைப் பார்வையிட்டு, பல விசயங்களைச் சேகரித்தேன். அதன்பிறகு எனது உலாவியின் default home page http://earthquakes.usgs.gov/ என்றாகிவிட்டது. சுனாமி ஏற்படுவதற்கான காரணங்கள், அவை உருவாகும் விதம் இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு குறும்படம் போல், Flash ல் தயாரித்து, குறுந்தகடுகளாக்கி, மக்களிடம் சுனாமி பற்றின உண்மையான விபரங்களை எடுத்துச் சொல்லவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஏனெனில் அந்த காலக் கட்டத்தில் நாகை மக்களிடம் சுனாமி பற்றின பீதி அதிகமாக இருந்தது. வீண் வதந்திகள் நிறைய வந்த வண்ணம் இருந்தன. ஆனால், நான் நினைத்தவற்றை எல்லாம் செய்யும் அளவிற்கு எனக்கு Flash knowledge இருக்கவில்லை. நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. பிறகு என்னுடைய சோம்பேறித்தனத்தாலும் அதனை விட்டுவிட்டேன்.

நான் படித்து தெரிந்து கொண்டவைகளை வைத்து பார்க்கும் போது, இவரின் விளக்கங்கள் நிறையப் பேத்தல்களாகத் தெரிகின்றது. ஒருவேளை நான் செய்ய நினைத்திருந்த கிராபிக்ஸ் குறும்படத்தை தயாரித்து முடித்திருந்தால், இன்று உள்ளூர் தொலைக்காட்சிகளில் அதனை ஒளிபரப்பி, மக்களின் பீதியை சற்றுக் குறைத்து இருக்கலாம்.

சுனாமிக்கு பிறகு பலரும் ஏதாவது உதவி வேண்டுமா.. கேளுங்கள், செய்கின்றோம் என்றனர். நாங்கள் வெளிநாடுகளில் இருக்கின்றோம். எங்களால் பொருள் உதவிதான் செய்யமுடியும் என்றெல்லாம் பலர் கூறினர். அப்போது நான் எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது எதுவும் வேண்டாம் என்றே கூறிவந்தேன். என்னை தொடர்பு கொண்டு உதவ முன்வந்தவர்களில் பலரும் கணினித் துறையில் வல்லுநர்கள். இப்போது எனக்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவைப்படுகின்றது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து கடலோர மக்களுக்குமே இப்போதைய தேவை "சுனாமி குறித்த தெளிந்த அறிவு". சுனாமி மட்டுமில்லை. நிலநடுக்கம், எரிமலை, பனிச்சரிவு .. என்று இயற்கை பேரிடர்கள் பற்றின முழுமையான அறிவு மக்களுக்கு வேண்டும். அதோடு மட்டுமன்றி "global warming", "green house gases", ozone layer", என்பது போன்ற சுற்றுச்சூழல் சம்பந்தமான அறிவியல் விசயங்களும் மக்களுக்கு தெரியவேண்டும்.

இவற்றையெல்லாம் தெளிவாக விளக்கக்கூடிய வகையில் தமிழில் குறும்படங்கள் தயாரித்து, மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்லவேண்டும். இதற்கான நேரடி விளக்கக் கூட்டங்களும் ஆங்காங்கே நாம் நடத்தலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு இதனை போட்டு காண்பிக்கலாம். திரைப்படங்கள் போன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் ஆக இருக்கலாம். (நாராயண் போன்றவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்). தனி நபர்களாகவோ அல்லது கூட்டாகவோ இதனை நீங்கள் தயாரித்து அனுப்பலாம். இவற்றை நாகை மாவட்ட மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ரஜினி ராம்கி போன்ற நண்பர்கள் எனக்கு துணை வருவார்கள். இது வலைபதிவாளர்களின் கூட்டு முயற்சியாக இருக்கட்டும். நாகையில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் இதனை நாம் கொண்டு செல்லலாம்.

உங்கள் ஆலோசனைகளை எழுதுங்கள்.

புளி அவல் உப்புமா

தேவையானப் பொருட்கள்

கெட்டியான அவல் - 2 டம்ளர்
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் வற்றல் - 3
பச்சைமிளகாய் - 4
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
வெல்லம் - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - 3 தேக்கரண்டி
தாளிக்க எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி


செய்முறை

  • முதலில் தண்ணீரில் புளி, உப்பு, வெல்லம் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
  • அவலை நன்றாக தண்ணீர் விட்டுக் களைந்து, கல்லரித்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை இறுத்து விட்டு போட வேண்டும்.
  • அதில் கரைத்த புளித்தண்ணீரை விட்டு இரண்டு மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.
  • அவல் மேல் அரை அங்குல அளவு புளித் தண்ணீரையும் வெறும் தண்ணீரையும் சேர்த்து, அதில் மஞ்சள் தூளையும் போடவும்.
  • அதன் பிறகு வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு நறுக்கிய பச்சைமிளகாய், மிளகாய் வற்றல் போட்டு வறுபட்டவுடன், ஊறவைத்த அவலையும் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • எல்லாம் சேர்த்து கால் மணி நேரம் வறுபட்டவுடன் இறக்கிவைக்கவேண்டும். தேவையானால் அரை மூடி தேங்காய் துருவி போடலாம்.

Friday, June 17, 2005

கிச்சடி சோறு

மன்னிக்கவும். ஓரிடத்தில் இல்லாமல் ஊர் ஊராக சுற்ற வேண்டிய நிலையில், தொடர்ச்சியாக குறிப்புகளைக் கொடுக்க இயலவில்லை. பல ஊர்களுக்கும் பயணித்து, பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து, பல்வேறு சமையல் குறிப்புகளைச் சேகரித்து அறுசுவை இணையத்தளத்தில் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இந்த நிலையில் தினமும் ஒரு குறிப்பினை எனது வலைப்பதிவில் எழுதுவது சற்று கடினமாக இருக்கின்றது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிந்து விடுகின்றேன். அடிக்கடி காணாமல் போக நேரிட்டால் கவலை கொள்ளவேண்டாம். உங்களுக்காகத்தான் ஊர் சுற்றிக் கொண்டுள்ளேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

இன்றைய சிறப்புணவு - கிச்சடி சோறு. அதிராம்பட்டினம், கீழக்கரை பக்கம் சற்று பிரபலமான, இஸ்லாமிய உணவு இது. கிட்டத்திட்ட பிரியாணி மாதிரிதான்.

தேவையானப் பொருட்கள்

பிரியாணி அரிசி - அரைப் படி
தேங்காய் - ஒன்று
பாசிப்பருப்பு - 1 கப்
ஆட்டு ஈரல் - கால் கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - கால் கிலோ
ஏலக்காய் - 3
பட்டை - 2 சிறு துண்டு
கிராம்பு - 4
நெய் - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியே சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஈரலைத் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டினை விழுதாக அரைத்துக்கொள்ளவும். கசகசா, சோம்பு, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி, ஒரு டம்ளர் அளவிற்கு கெட்டிப் பாலைத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் அளவிற்கு பால் எடுத்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், நறுக்கின வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.
  • பிறகு அரைத்த இஞ்சி பூண்டு விழுதினைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் ஏலம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, பிறகு ஈரல் துண்டுகள், தக்காளி ஆகியவற்றைப் போட்டு நன்கு பொரியவிடவும். இத்துடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • தண்ணீராக உள்ள தேங்காய்ப்பாலில் அரைத்த கசகசா கலவை, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து கலக்கி, குருமாவில் ஊற்றவும்.
  • தேங்காய்ப்பால் கொதிக்க ஆரம்பித்ததும், ஊற வைத்துள்ளள அரிசியையும், பாசிப்பயிரையும் தேங்காய்ப்பாலில் போட்டுக் கிளறி மூடவும்.
  • கொதித்த பிறகு தீயைக் குறைத்து வைத்து சிறிதாக எரியச் செய்யவும். சோறு முக்கால் வேக்காடு வெந்ததும், மூடி மீது தம் வைத்து சிறிது நேரம் வைத்து இருந்து, நன்றாக வெந்ததும் இறக்கி, தேவையெனில் சிறிது நெய் ஊற்றிக் கிளறி, பரிமாறவும்.