சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இந்த நளபாகச் சக்கரவர்த்தி, சமையல் துறையில் காலடி எடுத்து வைத்தது, இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டில். முதலில் பணிபுரிந்தது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில். அனுபவங்களையே பாடமாகக் கொண்டு, தனக்குத் தானே குருவாய், அன்று முதல் இன்று வரை சமையல் தொழிலில் முடிசூடாச் சக்கரவர்த்தியாய் இருந்து வருகின்றார்.
தொழிலில் இறங்கிய சில வருடங்களிலேயே இவரது கைமணம் தமிழகம் எங்கும் வீச ஆரம்பித்துவிட்டது. அதில் கிறங்கியவர்கள் அப்போதைய மாபெரும் அரசியல் தலைவர்களாகிய காமராஜர், ராஜாஜி, பெரியார் போன்றவர்கள். அசைவப் பிரியரான பெரியார் மிகவும் விரும்பி சாப்பிட்ட சைவ சமையல் இவருடையதுதான். பெரும் தலைவர்களின் தொடர்பும், அதன்மூலம் கிடைத்த தொடர்புகளும், இந்த துறையின் உச்சியை அடைய இவருக்கு உறுதுணையாய் இருந்ததை அடக்கத்துடன் குறிப்பிடுகின்றார்.
1952 ல், காமராஜர் தலைமையில் நாகையில் நடைபெற்ற மாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு விருந்து படைக்கும் பொறுப்பு இவருக்கு. அந்த விருந்தில், பலாச்சுளையைத் தேனில் நனைத்து இவர் செய்த ஒரு பதார்த்தம், காமராஜரை வியக்கச் செய்து, அவரின் கரங்களால் ஒரு தங்கப்பதக்கத்தையும் பெற்றுத் தந்தது. மீண்டும் 1953 ல் இராஜாஜி அவர்கள் தலைமையில் சுதந்திர கட்சி மாநாடு. இராஜாஜி அவர்களே இவரைக் குறிப்பிட்டு அழைத்தார். அதற்கு மற்றவரிடத்தில் அவர் தெரிவித்த காரணம், "எனது மனைவிக்கே அதிகம் தெரியாத, எனக்கு எது எப்படி இருக்கவேண்டும் என்ற சமையல் பக்குவம், நாராயண அய்யருக்கு மட்டும்தான் தெரியும்."
ஜஸ்டிஸ் சௌந்திரா கைலாசம் (திரு. ப. சிதம்பரம் அவர்களின் மாமனார்) இல்லத்து விஷேசங்கள் அனைத்திலும் இவரது சமையல் மணக்கும். பெரியார் தலைமையில் நடைபெற்ற தற்போதைய மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் திருமணத்திற்கும் இவரது சமையல்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.
திரு. சி. சுப்ரமணியம், திரு. V.S. தியாகராஜ முதலியார், பொள்ளாச்சி கைலாசக் கவுண்டர் என்று பழங்கால முக்கியப் புள்ளிகளின் இல்ல விஷேசங்களில் ஆரம்பித்து, நடிகர். விஜயகாந்த், லலிதா ஜீவல்லரி உரிமையாளர் என இக்கால புள்ளிகளின் இல்ல விஷேசங்கள் அனைத்துக்கும் சமையல் என்றால் நாராயண அய்யர்தான்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட வெற்றி மாநாட்டிற்கு சமையல் தலைமைப் பொறுப்பு இவருக்கே அளிக்கப்பட்டது. முதல்வரின் திடீர் வேண்டுகோளுக்கு இணங்கி 2 இலட்சம் பேருக்கு, ஒரு மணி நேரத்தில் கேசரி செய்து முதல்வரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளார். இதற்காக முதல்வர் வழங்கிய 6 பவுன் தங்கச் சங்கிலியைவிட 'நாராயண அய்யரின் சாதனை கின்னஸில் இடம் பெற வேண்டும்' என்ற முதல்வரின் வாழ்த்தைப் பெரும் பரிசாக நினைக்கின்றார்.
மூன்று தலைமுறைகளைக் கண்டுவிட்ட இந்த 73 வயது சமையல் சக்கரவர்த்தி, இன்றும் 23 வயது இளைஞராய் ஆர்வமுடன் உழைக்கின்றார். ஆழ்ந்த அனுபவம், தொழில் பக்தி, கடுமையான உழைப்பு, எளிமை, நேர்மை என்று ஒரு உயர்ந்த மனிதருக்கு வேண்டிய அத்தனைக் குணங்களையும் ஒருங்கே பெற்றுள்ளதால் இத்துறையின் உச்சியில் இவர் இருப்பதில் வியப்பேதுமில்லை. சமையல் தொழில் மட்டும் செய்து, அதில் ஈட்டும் வருமானத்திற்கு நேர்மையாய் வருமான வரி கட்டும் மிகச்சிலரில் இவரும் ஒருவர்.
சமையல் துறையில் கரை கண்டவராய் இருந்தும், இன்றும் இவரிடம் உள்ள கற்றுக் கொள்ளும் ஆர்வம் நம்மை வியப்படையச் செய்கின்றது. இல்லத்துச் சுபகாரியங்களுக்கு சமைக்க எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரின் சமையல் பழக்கம், இல்லத்து சமையல் முறை ஆகியவற்றை அவ்வீட்டுப் பெண்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்பே சமையலைத் தொடங்குவேன் என்று கூறும் இவர், இந்தத் துறையில் தனக்கு குருவாக இருப்பவர்கள் என்று குறிப்பிடுவது இந்தப் பெண்களையே.
கடந்த 25 வருடங்களில் இத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்களின் விருப்பம், வெளிமாநில, வெளிநாட்டு உணவுகளின் தாக்கம் இவையெல்லாம் இவரை வியக்க வைத்தாலும், அதற்கு ஈடுகொடுத்து தன்னை தயார் செய்து கொள்வதால்தான் இவரால் வெற்றி பெற முடிகின்றது. கால ஓட்டத்திற்குத் தக்கவாறு தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள், பாத்திரங்கள் அனைத்தையும் இவரே சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். இவரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளவும், பணி புரியவும் ஏராளமான சமையல் கல்லூரி மாணவர்கள் வருகின்றார்கள். இவரிடம் பணி புரிந்தவர்கள் இன்று பல நாடுகளிலும் உள்ளனர்.

மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளைக் கொண்டது இவரது அன்பான குடும்பம். மூன்று மகன்களும் தந்தையைப் போல் சமையல் துறையில் முழு மூச்சாய் இறங்கிவிட்டார்கள். மகள் தன் கணவருடன் வசிப்பது டெல்லியில்.

இன்னும் பல தலைமுறைகளுக்கு இவரது கைமணம் ருசிக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

அறுசுவை வாசகர்களுக்காக அவர் வழங்கிய சமையல் குறிப்புகள்
கோவா பொங்கல்  
பாசுமதி அரிசி அரைக் கிலோ
கோவா(சீனி சேர்க்காதது) 350 கிராம்
சீனி ஒரு கிலோ
நெய் 300 கிராம்
முந்திரி 25 பருப்புகள்
திராட்சை 20
குங்குமப்பூ இரண்டு சிட்டிகை
செய்முறை  
  • அரிசியைக் களைந்து பொங்கல் வைக்கும் பதத்திற்கு நீர் விட்டு கொதிக்க விடவும். கோவாவை ஒரு வாணலியில் இட்டு நன்கு சுண்ட வதக்கிக் கொள்ளவும்.
  • அரிசி வெந்து கொதிக்கும் போது கோவா மற்றும் சீனியைப் போட்டு நன்குக் கிளறவும். இனிப்பினை விரும்புகின்றவர்கள் இன்னும் ஒரு கால் கிலோ சீனியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கோவாவை வதக்காமல் போட்டால் பொங்கல் மிகவும் நீர்த்து, இளகிப் போகும். சீனி வேறு சேர்ப்பதால் அதுவும் நீர்த்துப் போகச் செய்யும்.
  • சீனி கரைந்து சாதத்துடன் கலந்ததும், முக்கால் பாகம் நெய்யினை ஊற்றி கிளறிவிட்டு தீயைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து, நெய்யுடன் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடவும். குங்குமப்பூவினையும் சேர்த்துக் கொள்ளவும்.
 
மிளகுக் குழம்பு
புளி 150 கிராம்
மிளகு 20 கிராம்
கடலைப்பருப்பு 20 கிராம்
மல்லி 10 கிராம்
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் ஒரு பட்டாணி அளவு
நல்லெண்ணெய் பொரிப்பதற்கு
தேங்காய் கால் மூடி
பூண்டு 10 பல்
தேன் 3 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை  
  • புளியினை நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது துருவிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிளகு மற்றும் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு சிறிது எண்ணெய்யில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், கொத்தமல்லி விதை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயையும் லேசாக வதக்கிக் கொள்ளவும்.
  • பொரித்து வைத்துள்ள மிளகு, பெருங்காயம் மற்றும் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • புளிக்கரைசலை சட்டியில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புளிக்கரைசல் நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து வேகவிடவும்.
  • பூண்டை விரும்புகின்றவர்கள் உரித்தப் பூண்டினையும் வதக்கி குழம்பில் சேர்க்கவும்.
  • குழம்பு கொதித்து நன்கு சுண்டி வரும் போது சிறிது தேன் விடவும். தேனுக்கு பதிலாக சிறிது வெல்லமும் சேர்க்கலாம்.
   
இதர நட்சத்திரங்கள் பக்கத்திற்கு செல்ல..
   

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி