ஏற்கனவே
அறுசுவை சமையல் போட்டிக்கு நடுவராக நாகைக்கு வந்திருந்தாலும், அன்றைய
சூழலில் அவருடன் உரையாட அதிக நேரம் கிடைக்கவில்லை. இம்முறை சிறப்பு
பேட்டிக்காக சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில்
சென்றோம். அவரிடத்தில் உள்ள சிறப்பம்சங்களில், நம்மை முதலில் கவர்வது,
அந்த எளிமை. ஒரு மாபெரும் கவிஞரின் புதல்வி என்ற கர்வமோ, பல்வேறு ஊடகங்களின்
வாயிலாக புகழ் அடைந்துள்ள சிறந்ததொரு சமையல் கலை வல்லுநர் என்ற எண்ணமோ
துளியும் இல்லாது, நம் வீட்டு பெண்மணி போல் மிக எளிமையாய் இருக்கின்றார்.
நீண்ட நாள் கழித்து வீடு வரும் சகோதரனை வரவேற்கும் சகோதரியாய், அன்போடு
வரவேற்கின்றார். புன்சிரிப்பு மாறாத முகம், நெற்றியில் பளீரென்ற குங்குமப்
பொட்டு, அதிர்ந்து விழாத கனிவான வார்த்தைகள், மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள்
இல்லாது வரும் இயல்பான பேச்சு.. இவைகள்தான் திருமதி. ரேவதி சண்முகம்
அவர்களின் அடையாளங்கள். நமது கேள்விகள் அனைத்துக்கும் அவர் பொறுமையாய்
அளித்த பதில்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம். |
| |
| நீங்கள் பிறந்து வளர்ந்தது செட்டிநாட்டிலா? |
| இல்லை. அப்பாவின் ஊர்தான் காரைக்குடி.
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். திருமணம் முடித்ததும்
சென்னையில்தான். |
| அப்பா சாப்பாடு விசயத்தில் எப்படி? அவருக்கு
என்ன மாதிரியான உணவுகள் பிடிக்கும்? |
| அசைவ உணவுப்பிரியர் அவர். குறிப்பாய்
ஆட்டிறைச்சியை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார். ஆட்டின் எல்லா பாகங்களும்
அவருக்கு பிடிக்கும். ஒரு காலம் வரை காரம் சாரமாக சாப்பிட்டு வந்தவர்,
ஒரு நிலைக்குப் பின் உடல்நலம் கருதி, காரம், அதிக மசாலா தவிர்த்து,
கிட்டத்திட்ட சைனீஸ் உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தார். அவருக்கு
பிடித்தாற்போல் எந்த உணவை எந்த மாதிரி சமைக்க வேண்டும் என்ற அந்தப்
பக்குவம் அம்மாவிற்குதான் நன்கு தெரியும். கீரைதான் சைவத்தில் அவருக்கு
மிகவும் பிடித்தது. |
| நீங்கள் சமைத்து உங்கள் தந்தை விரும்பிச்
சாப்பிட்டது எதை? |
| அப்பா இருந்த காலத்தில் நான் சமையலில்
அவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. எனக்கு தெரிந்து காலை உணவாக இட்லி
மற்றும் அதற்கு பக்க உணவாக சிலவற்றை செய்து கொடுத்து, அவரிடம் பாராட்டு
பெற்று உள்ளேன். என்னுடைய தங்கை (திருமதி. கலைச்செல்வி சொக்கலிங்கம்)
நிறைய சமைத்து கொடுத்து இருக்கின்றார். அவர்தான் எப்போதும் சமையலறையில்
இருப்பார். எனது தந்தைக்கு அவர்தான் நிறைய சமைத்து கொடுத்து இருக்கின்றார். |
| அப்படியென்றால் நீங்கள் சமைக்க ஆரம்பித்தது
எப்போது? |
| எல்லாம் எனது திருமணத்திற்கு பிறகுதான்.
எனக்கு 1972ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனக்கு வயது 15.
நான் படித்து கொண்டிருந்த காலத்திலேயே திருமணம் நடந்தது. பிறந்த வீடு,
புகுந்த வீடு இரண்டிலுமே சமையல் வேலைக்கு ஆட்கள் இருந்தனர். அதனால்
சமைப்பதற்கான அவசியமோ, சந்தர்ப்பமோ கிடைக்கவில்லை. எனக்கும் பெரிதாய்
ஆர்வம் இருக்கவில்லை. மற்றவர்கள் சமைப்பதை ருசித்து விட்டு, அவ்வபோது
குறைகள் கூறி ஜாலியாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள்
கழித்து, தனிக்குடித்தனம் என்று வரும்போதுதான் சமைக்க வேண்டிய நிர்பந்தம்
வந்தது. சமையல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது அப்போதுதான்
உரைத்தது. கடலைப் பருப்பிற்கும், துவரம் பருப்பிற்கும் வித்தியாசம்
தெரியாமல்தான் இருந்தேன். உறவினர்கள் அனைவரும் எனக்கு சமைக்கத் தெரியாததை
சுட்டிக் காட்டி கேலியும், கிண்டலும் செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான்
எனக்குள் சமையல் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற தீவிர எண்ணம் உருவாயிற்று.
1977 க்கு பிறகுதான் நான் தீவிரமாக சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
எத்தனையோ முறை தோற்ற போதிலும், அவற்றையெல்லாம் பாடமாக எடுத்துக் கொண்டு
ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்று வரை
அந்த ஆர்வம் தணியவில்லை. இன்றும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கின்றேன்.
|
| எப்படி சமையல் கற்றுக் கொண்டீர்கள்? என்ன
வழிமுறைகளைக் கடைபிடித்தீர்கள்? |
| முதலில் சமைக்க கற்றுக் கொள்ளவேண்டும்
என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அந்த கற்றுக் கொள்ளும் ஆர்வத்
தீ சிறிதும் குறைந்து விடாமல் பார்த்துக் கொண்டேன். இதற்கு மற்றவர்களின்
கேலிகள் எண்ணெய் வார்த்தன. கேட்டல், பார்த்தல், படித்தல் என்று பல
வகைகளிலும் சமையல் திறனை வளர்த்துக் கொண்டேன். ஆரம்பக்காலத்தில் மற்றவர்களிடம்
கேட்டுக் கேட்டுதான் கற்றுக் கொண்டேன். எங்கு புதிதாக ஒரு உணவினைச்
சாப்பிட்டாலும், அதை எப்படிச் செய்தார்கள் என்பதை முதலில் தெரிந்து
கொள்ள முயல்வேன். அது உணவு விடுதியாய் இருக்கட்டும், கல்யாண விருந்தாய்
இருக்கட்டும். அதனை தெரிந்து கொள்ளாவிடில் எனக்குத் தூக்கமே வராது.
அப்படி கேட்டுத் தெரிந்து கொண்டவற்றை உடனே செய்து பார்ப்பேன். எல்லாமே
முதல் முறையில் சரியாய் வந்து விடாது. மனதை தளரவிடாமல், தவறு எங்கு
என்று ஆராய்ந்து, திருத்திக் கொண்டு, மீண்டும் மீண்டும் முயற்சி செய்வேன்.
ஓரளவிற்கு சமையல் கற்றுக் கொண்டபின், எனது திறனை மேலும் வளர்த்துக்
கொள்ள புத்தங்கள் நிறைய உதவின. நிறைய புதுவகை உணவுகளை புத்தகங்கள்
படித்து கற்றுக் கொண்டேன். |
| நீங்கள் சமைக்க ஆரம்பித்த போது கிடைத்த
அனுபவங்கள் எப்படி? |
| ஆரம்பத்தில் எல்லாமே சரியாக வந்து
விடவில்லை. என் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டுவிட்டு என் மனம் நோகக்
கூடாது என்று நன்றாய் இருக்கின்றது என்று கூறிச் சென்றுவிடுவார்கள்.
பிறகு அதையே நான் சாப்பிடும் போது வாயிலேயே வைக்க முடியாத அளவிற்கு
உப்போ, காரமோ அதிகம் இருப்பதை உணர்வேன். சாப்பிட்டவர்களை நினைத்து
பரிதாபப்படுவேன். நேரமும் பொருளும் செலவு செய்து தயாரித்தது சரியாக
வரவில்லையே என்று அழுத காலங்களும் உண்டு. அதன் பிறகு என்னை நானே சரி
செய்து கொண்டேன். தோல்விக்காக வருத்தப்படுவதை விட்டுவிட்டு, காரணங்களை
கண்டறிய முற்பட்டேன். அதன் பிறகுதான் என்னால் நிறைய கற்றுக் கொள்ள
முடிந்தது. என்னையும் சரி செய்து கொள்ள முடிந்தது. என்னுடைய தவறுகளினால்
புது புது ரெஸிபிகளையும் நிறைய கண்டுபிடித்து இருக்கின்றேன். |
| குறிப்புகளை எப்படி சேகரிக்கின்றீர்கள்? |
| நான் சமைக்க ஆரம்பித்த காலம் தொட்டு
இன்று வரை செய்து வரும் முக்கியமான ஒன்று, எந்த ஒரு சமையல் குறிப்பு
கிடைத்தாலும் அதனை எழுதி வைத்துக் கொள்வதுதான். எனக்கு கிடைத்த தகவல்கள்
அத்தனையும் நோட்டில் எழுதி வைக்க ஆரம்பித்தேன். அதே போல் செய்முறைக்
குறிப்பு தவிர்த்து, ஒவ்வொரு உணவினைப் பற்றின மற்ற பல தகவல்களையும்
சேகரித்து எழுதி வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஒருவருக்கு ஒரு உணவு
சமைக்கத் தெரியுமென்றால், அதை அவர் யாரிடம் இருந்து கற்றுக் கொண்டார்,
அந்த உணவின சிறப்பு என்ன, அது எந்த பக்கத்து உணவு இது போன்ற பல தகவல்களையும்
சேகரிக்க ஆரம்பித்தேன். இன்று என்னிடம் கிட்டத்திட்ட 50 வருடங்களுக்கு
முந்தைய சமையல் குறிப்புகளில் தொடங்கி ஏராளமான குறிப்புகள் உள்ளன.
வயதானவர்களிடம்தான் நான் அதிகம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். பழங்கால
சமையலில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு. |
| நீங்கள் புத்தகங்களில் எழுதும் நிறைய
புதுவகையான குறிப்புகள், கேள்விப்பட்டிராத குறிப்புகள் எல்லாம் உங்களது
சொந்த கண்டுபிடிப்புகளா? அல்லது மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்டதா? |
| என்னுடைய அனுபவத்தில் நானே முயற்சி
செய்து நிறைய உணவு வகைகளைத் தயார் செய்து இருக்கின்றேன். இருந்தாலும்
அத்தனையும் என்னுடைய சொந்த தயாரிப்புகள் என்று சொல்லமாட்டேன். பலபேரிடம்
இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டவைகள், படித்துத் தெரிந்து கொண்டவைதான்
அதிகம். ஏற்கனவே பழக்கத்தில் உள்ள உணவுகளில் சில மாறுதல்களைச் செய்து,
புதுவகை உணவுகளைத் தயாரிப்பதும் உண்டு. அவைகள் நன்றாக வரும் பட்சத்தில்
அவற்றை புத்தகங்களில் வெளியிடுவேன். |
| நீங்கள் முதன்முதலில் உங்கள் திறனை வெளிக்காட்டியது
தொலைக்காட்சியிலா அல்லது பத்திரிக்கையின் வாயிலாகவா? |
| தொலைக்காட்சிதான். நான் சுமாராக சமைக்க
ஆரம்பித்ததும், என்னைச் சுற்றியுள்ளவர்கள், நீ ஏன் சமையல் புத்தகம்
எழுதக்கூடாது என்று கேட்க ஆரம்பித்தனர். அப்போது, புத்தகம் வெளியிடும்
அளவிற்கு எனக்கு என்ன தெரியும் என்ற எண்ணமே இருந்தது. பிறகு ஏ.வி.எம்மின்
மங்கையர் சாய்ஸ் நிகழ்ச்சியில், சமையல் நேரத்தில் பங்கேற்குமாறு திரு.
A.V.M. சரவணன் அவர்கள்(இவர் எனது கணவரின் மைத்துனர்) கேட்டதற்கிணங்கி,
முதன் முதலாக தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதன்
பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிட்டின. பிறகு புத்தங்களில் எழுத ஆரம்பித்தேன்.
அவள் விகடனில் இரண்டரை வருடங்களாக நான் எழுதிய வெரைட்டி பாஸ்ட் ஃபுட்
என்ற பகுதி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் பிறகு கிராமத்து கைமணம்
என்று கிராமத்து உணவுகள் பற்றி எழுதினேன். இதுவும் எனக்கு ஒரு சிறந்த
பேரைப் பெற்றுத் தந்தது. பிறகு நிறைய எழுத ஆரம்பித்தேன். இப்போது அவள்
விகடனில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை என்று ஒவ்வொரு மாநிலங்களில்
உள்ள சிறப்பு மிக்க உணவுகளை பற்றி எழுதி வருகின்றேன். பத்துக்கும்
மேற்பட்ட சமையல் புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். |
| சமையல் திலகமாகிய உங்களுக்கு தெரியாத
ரெஸிபி எதாவது இருக்கின்றதா? அல்லது இந்த கேள்வியை வேறு விதமாக கேட்பதென்றால்,
இதன் செய்முறையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படும்
உணவு ஏதேனும் இருக்கின்றதா? |
| நிச்சயம். நிறைய இருக்கின்றது. எனக்குத்
தெரிந்தது மிகவும் குறைவு என்ற எண்ணம்தான் எனக்கு எப்போதும் இருக்கின்றது.
கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவிற்கு இருக்கின்றது. குறிப்பாய் நான்
தெரிந்து கொள்ள ஆசைப்படுவது, இந்த பெங்காலி ஸ்வீட்ஸ் செய்முறைகள்தான்.
ரசகுல்லா போன்ற ஒரு சில இனிப்பு வகைகளை நான் கற்றுக் கொண்டாலும், பெங்காலி
ஸ்வீட்ஸில் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றேன்.
|
| உங்களிடம் எந்த மாதிரியான கேள்விகளை மக்கள்
அதிகம் கேட்கின்றார்கள்? |
| என்னிடம் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ
பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்விகள், ஒப்பிட்டு கேட்கும் கேள்விகள்தான்.
அதாவது, நான் செய்யும் இட்லி சாஃப்டாக இல்லையே? நான் செய்யும் பொங்கலில்
கோயில் பொங்கல் போல் வாசனை வருவதில்லையே ஏன்? கடையில் செய்வது போல்
இட்லி சாம்பார் செய்வது எப்படி? இது போன்ற கேள்விகள்தான் அதிகம் வருகின்றன.
இவைகள் எல்லாம் நான் சமையல் கற்றுக் கொண்ட காலங்களில் எனக்குத் தோன்றின
கேள்விகள்தான். என்னுடைய கற்றுக்கொள்ளும் தீவிர ஆர்வத்தால் பலவற்றிற்கும்
என்னால் விடை காணமுடிந்தது. எனவே, இது போன்ற கேள்விகளுக்கும் என்னால்
எளிதாக பதில் அளிக்க முடிகின்றது. |
| புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர்கள் எப்படி
கற்றுக் கொள்ள வேண்டும்? வெறும் புத்தகத்தை மட்டும் படித்து ஒருவர்
சமையல் கற்றுக் கொள்ள இயலுமா? |
| முதலில் கற்றுக் கொள்பவர்களுக்கு
ஆர்வம் வேண்டும். அதுவும் நிறைய வேண்டும். ஆர்வம் இல்லாமல் செய்யும்
எந்த செயலையும் முழுமையாய் செய்ய இயலாது. இரண்டாவது, நிறைய பொறுமை
வேண்டும். எதுவும் முதல் முறையிலேயே சரியாய் வந்துவிடாது. விடாமுயற்சியுடன்,
தவறுகளைக் கண்டறிந்து, திருத்திக்கொண்டு பலமுறை முயலும் போது நாம்
நினைப்பவற்றை கிடைக்கப் பெறலாம். ஓரளவிற்கு அடிப்படை விசயங்கள் தெரிந்தவர்களுக்கு
புத்தகங்கள் நிறைய உதவும். ஒரு கட்டத்திற்கு மேல், புத்தகங்கள் மூலமாகத்தான்
நான் நிறைய கற்றுக்கொண்டேன். சில அடிப்படை விசயங்களை அனுபவசாலிகளிடமிருந்தோ
அல்லது சொந்த அனுபவத்திலிருந்தோதான் கற்றுக் கொள்ள இயலும். அப்புறம்
கற்றுக்கொள்பவர்களுக்கு கொஞ்சம் கற்பனைத் திறனும் வேண்டும். ஒரு உணவினைச்
சாப்பிடும்போதே, இதனை இப்படி இப்படிதான் செய்து இருப்பார்கள் என்று
கற்பனையில் அதனை சமைத்துப் பார்க்க தெரிந்து இருக்கவேண்டும். |
| அந்த கால சமையல், இந்த கால சமையல் - உங்களின்
பார்வையில்? |
| அந்த காலத்தில் அறிவியல் ரீதியாகவோ,
மருத்துவ ரீதியாகவோ மக்கள் நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்து இருக்கவில்லை.
இருந்தாலும், அனுபவ ரீதியாக உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான, உகந்த,
உணவு பழக்க முறையை கடைபிடித்து வந்தார்கள். சற்று ஆராய்ந்து நோக்கினோம்
என்றால், நம்மை வியப்பூட்டும் பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இன்று நாம் ஆரோக்கிய உணவுகள் என்று பல பாடங்கள், அதற்கான பயிற்சிகள்,
பட்டங்கள் என்று தனித்துறையையே உருவாக்கி, அதில் நிபுணர்களை உருவாக்கி
வருகின்றோம். ஊடகங்கள் வழியாக அவர்கள் கூறுவதை நாம் கடைபிடிக்கின்றோம்.
அந்த காலத்தில் இத்தகைய படிப்பறிவு இல்லாமலே, மிகச் சிறப்பான சமச்சீர்
உணவு முறை பழக்கத்தை கடைபிடித்து இருக்கின்றார்கள். உதாரணமாக, இட்லி
தோசையை எடுத்துக் கொண்டோம் என்றால், கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த அரிசி,
புரோட்டீன் நிறைந்த உளுந்து கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இதற்கு துணையாக
போதுமான கொழுப்புச் சத்து நிறைந்த தேங்காய் சட்னி அல்லது ஏதாவது ஒரு
எண்ணெய் கலந்த பக்க உணவு என்று நமக்கு தேவையான சமச்சீர் உணவாக அமையும்
வண்ணம் நமது உணவு பழக்கம் இருந்து இருக்கின்றது. இந்த கால உணவு முறையில்
புதுமைகள் நிறைய நுழைந்து இருக்கின்றன. இது அவசர உலகம். முன்பு போல்
பொறுமையாக செய்வதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி
இருவரும் வேலைக்கு செல்லும் நிலை நிறைய குடும்பங்களில் இருக்கின்றது.
அவர்களுக்கு இருக்கும் அந்த குறைந்த நேரத்தில், அதற்கு தகுந்தார்போல்தான்
உணவுகளைத் தயாரிக்க முடிகின்றது. அதேசமயம், இவர்களது அவசரத்திற்கு
உதவும் வண்ணம், நிறைய உபகரணங்கள் வந்து விட்டன. உதாரணமாக குக்கரைச்
சொல்லலாம். அந்த காலத்தில் சாதத்தை வடித்து கொண்டிருந்தார்கள். இதனால்,
நாம் நிறையச் சத்துக்களை இழக்க நேரிட்டது உண்மை. அதோடு மட்டுமன்றி
அதிக நேரமும் செலவு செய்ய வேண்டி இருந்தது. குக்கரில் இந்த பிரச்சனைகள்
இல்லை. அந்த காலத்தில் அரிசி தரமானதாக இருந்தது. ஆனால், இந்த காலத்தில்
இரசாயன உரங்களைப் பயன்படுத்தி, நல்ல அரிசியினை நாம் இழந்து விட்டோம்
என்பது வேறு பிரச்சனை. இந்த வகையில் மாற்றங்கள் வந்து இருக்கலாமே தவிர,
இந்த கால உணவுகளை குறை கூறும் அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை என்பது
எனது கருத்து. |
| முன்பெல்லாம் மிகக் குறைந்த அளவு உணவு
வகைகளே பழக்கத்தில் இருந்தன. காலை உணவு என்றால் இட்லி, தோசை. என்றாவது
ஒரு நாள் பூரி, சப்பாத்தி, இடியாப்பம் என்று இருந்த நிலை மாறி இன்று
தினம் ஒரு புது வகை உணவு என்று மாறியிருக்கின்றது. மக்கள் திடீரென்று
சமையலில் அதிக ஆர்வம் காட்டி, வெரைட்டி வெரைட்டியாய் சமைக்க முற்படுவதுபோல்
ஒரு தோற்றம் உள்ளது. இன்று சமையல் புத்தகங்கள்தான் மிகவும் அதிகம்
விற்பனை ஆகின்றன. சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாறுதல்களுக்கு
காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்? |
| எல்லோரும் அப்படி மாறிவிட்டார்களா
என்பது தெரியவில்லை. இரண்டு பிரிவினராக இவர்களைப் பிரித்து விடலாம்.
ஒரு பிரிவு சமைப்பதற்கான பொறுமையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். முன்பெல்லாம்
ஒரு விசேசம் என்றால் அதில் சமையலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.
இதற்கென பலபேர் பல மணி நேரம் உழைப்பார்கள். உதாரணமாக, தீபாவளி பலகாரங்களை
தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தயார் செய்ய ஆரம்பித்து
விடுவார்கள். இன்றைய கால கட்டத்தில், முதல் நாள் கடையில் தேவையானவற்றை
வாங்கிக் கொள்கின்றார்கள். கடைகள் அதிகம் தோன்றி தேவையானவற்றை கொடுக்க
ஆரம்பித்ததால், மக்கள் ஆர்வத்தை இழந்தார்களா? அல்லது மக்களின் நேரமின்மையை
பயன்படுத்திக் கொண்டு கடைகள் அதிகம் தோன்றினவா என்பது விடை கூற முடியாத
கேள்வி. ஒன்றுக்கொன்று காரணம். எனவே, இதிலிருந்து ஒரு பிரிவு கொஞ்சம்
சமையல் ஆர்வத்தை இழந்து இருக்கின்றது என்று சொல்லலாம். இன்று அதிகம்
விற்பனையாகும் ஆயத்த உணவுகள் (ready foods) இதற்கு சான்று. இன்று எல்லாமே
தயார் நிலையில் கடைகளில் கிடைக்கின்றது. அதேசமயம் நீங்கள் குறிப்பிட்டது
போல், சமையலில் ஒரு பிரிவினருக்கு அதிகப்படியான ஆர்வம் வந்துள்ளது
உண்மை. இரண்டு வேளை வெளியில் சாப்பிட்டாலும், சமைக்கும் ஒரு வேளையில்
வித்தியாசமாய் ஏதேனும் செய்து பார்க்கவேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர்.
முன்பெல்லாம் எப்போதாவதுதான் உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடுவார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிறைய வேளை உணவு விடுதியிலேயே சாப்பிட
வேண்டிய கட்டாயம் நிறைய பேருக்கு உள்ளது. இதனால் உணவு விடுதிகள் அதிகமாகிவிட்டன.
வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகி, மக்களை கவர்வதற்கு அவர்கள் பல்வேறு
புதுமையான உணவு வகைகள அறிமுகப்படுத்துகின்றார்கள். பல மாநில உணவுகள்
என்றில்லாமல், பல நாட்டு உணவுகளும் இங்கு அறிமுகப்படுத்தப் படுகின்றன.
இவற்றை ருசித்துப் பார்க்கும் மக்கள், இதனை தங்கள் வீடுகளில் செய்து
பார்க்க முயற்சி செய்கின்றார்கள். இதற்கு தேவைப்படும் உபகரணங்கள் எல்லாம்
இப்போது வீட்டு உபயோகத்திற்கென சிறிய அளவில் நிறைய வந்து விட்டன. அதோடு
மட்டுமன்றி, நிறைய பயிற்சி வகுப்புகள், தொலைக்காட்சிகளின் வாயிலாக
நேரடி செய்முறை விளக்கம், புத்தகங்கள் மூலம் செய்முறை குறிப்பு என்று
தயாரிப்பு ரகசியங்கள் அனைத்தும் இன்று ஒரு திறந்த புத்தகமாய் இருப்பதால்,
மக்கள் நிறைய முயற்சி செய்கின்றார்கள். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்தான்.
இதற்கு ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம். |
| நிறைய பேர் இன்று புத்தகம் எழுதுகின்றார்கள்.
உங்களுடைய தனித்தன்மையாக நீங்கள் நினைப்பது எதை? எதற்கு நீங்கள் அதிகம்
முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்? |
| என்னுடைய குறிப்புகளை நீங்கள் கவனித்தீர்கள்
என்றால், வீட்டில் சாதாரணமாக உபயோகப்படுத்தும் பொருட்களைக் கொண்டே
செய்வதைப் போல் கொடுத்து இருப்பேன். எல்லோர் வீட்டிலும் பொதுவாக இருக்கும்
பொருட்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை ஆராய்து அது சம்பந்தமான
உணவுக்குறிப்புகளை அதிகம் கொடுக்கின்றேன். இதனால் எல்லோராலும் செய்து
பார்க்க முடிகின்றது. அடுத்த விசயம், அளவு. அது எடுத்துக் கொள்ளும்
பொருளாகட்டும், சமைக்கும் கால அளவாகட்டும். அவை சரியாய் கொடுக்கப்பட
வேண்டும் என்பது எனது முடிவு. எந்த பொருளை எப்போது சேர்க்க வேண்டும்,
எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவே நேரம் சமைக்க வேண்டும் என்பதனை
மிகத் தெளிவாக கொடுக்க வேண்டும். இதில் நான் மிகவும் கவனம் செலுத்துகின்றேன்.
நான் உணவினை செய்யும்போது அனுபவத்தில் கண்ணளவினைக் கொண்டு பொருட்களைச்
சேர்த்தாலும், எழுதும் போது ஒவ்வொன்றையும் மனக்கண்ணில் நிறுத்தி, எவ்வளவு
பொடி சேர்த்தோம், எவ்வளவு மாவு சேர்த்தோம் என்று மனதிலேயே துல்லியமாக
அளந்துதான் குறிப்புகளை எழுதுவேன். இதனால்தான் பலரும், உங்கள் குறிப்பினை
செய்து பார்த்தேன். மிகச்சரியாய் அப்படியே வந்தது மேடம் என்று குறிப்பிடுகின்றனர். |
| உங்கள் குடும்பம் பற்றி? |
| கணவர் திரு. சண்முகம் அவர்கள் சொந்தமாக
தொழில் புரிந்து வருகின்றார். கட்டுமானத் துறையிலும் காலடி பதித்துள்ளார்.
எங்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். பெண் திருமணமாகி கணவருடன் துபாயில்
வசித்து வருகின்றார். மகன் இங்கு கணினித் துறையில் பணியாற்றி வருகின்றார். |
| உங்களது வேறுமுகங்கள்..,அதாவது எழுதுவது,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர்த்து நீங்கள் செய்து வரும் மற்ற விசயங்கள்..? |
| அலங்காரப் பூச்செடிகள் வளர்ப்பது
எனது முக்கிய பொழுதுபோக்கு. நிறைய வகை செடிகள் வளர்த்து வருகின்றேன்.
பலரது வேண்டுகோளுக்கிணங்கி இதற்கான விற்பனை பிரிவு ஒன்றையும் தொடங்கியுள்ளேன்.
இதனைத் தவிர சிருஷ்டி என்ற பெயரில் மகளிர் பலரை வேலைக்கு வைத்துக்
கொண்டு, விழாக்களுக்கும், வீட்டு விஷேசங்களுக்கும் தேவையான உணவுகள்,
இனிப்புகள், பலகாரங்கள் என்று அனைத்தையும் நல்ல முறையில் தயாரித்து
கொடுக்கும் ஒரு உணவு விற்பனை அமைப்பையும் தொடங்கியுள்ளேன். இது மகளிரை
மட்டும் கொண்டு செயல்படுவது இதன் சிறப்பு. |
| இறுதியாக அறுசுவை நேயர்களுக்காக, ஒரு
ரெஸிபி கொடுக்க முடியுமா? |
கண்டிப்பாக.
செட்டிநாடு பக்கத்து உணவு ஒன்றினைத் தருகின்றேன். அந்த பக்கத்தில்
மிகவும் பிரபலமான ஒரு இடைப்பலகாரம் இது. இடைப்பலகாரம் என்பது கல்யாண
வீடுகளில் அல்லது வேறு ஏதேனும் விஷேச நிகழ்ச்சிகளின் போது மதிய உணவிற்கு
பிறகு, இரவு உணவிற்கு முன்பு மாலை வேளையில் கொடுப்பார்கள். அதில் கும்மாயம்
அல்லது ஆடிக்கூழ் எனப்படும் இந்த பலகாரம் தவறாது இடம் பெறும். இது
சத்தான பலகாரம். |
| |
| கும்மாயம் அல்லது ஆடிக்கூழ் |
|
| பச்சரிசி |
கால் கப் |
| உளுந்து |
ஒரு கப் |
| வெல்லம் |
அரை கப் |
| கருப்பட்டி அல்லது சர்க்கரை |
அரை கப் |
| நெய் |
அரை கப் |
| செய்முறை |
|
- முதலில் உளுந்தினை வெறும் வாணலியில் இட்டு, நன்கு வாசனை வரும்
வரை வறுக்கவும். தீய்ந்து விடக் கூடாது. குறைந்த தீயில், நிறம்
மாறும் வரை நன்கு வறுக்கவும்.
- அதே போல் அரிசியையும் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு
இரண்டையும் இயந்திரத்தில் மாவாக அரைத்துக் கொள்ளவும். முகப்பவுடர்
அளவிற்கு நைசாக இருக்குமாறு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்
கொள்ளவும்.
- பிறகு அரை கப் கருப்பட்டி(கருப்பட்டி வாசனை பிடிக்காதவர்கள்
அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.), அரை கப் வெல்லத்தினை
ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒன்றிற்கு இரண்டு என்ற அளவில், அதாவது
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். அதிக நேரம் கொதிக்க
விடக் கூடாது. வெல்லம், கருப்பட்டி கரைந்தவுடன் இறக்கி ஆற வைத்து,
அந்த கரைசலை வடிக்கட்டி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு வாணலியில் அரை கப் நெய் விட்டு காய்ந்ததும், அதில் அரைத்து
சலித்து வைத்துள்ள மாவினை சேர்த்து நன்கு வறுக்கவும். குறைந்த
தீயில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பிறகு இத்துடன் வெல்ல கரைசலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு
கிளறவும். நன்கு கிளறக் கிளற, அது அல்வா பதத்திற்கு வந்து, நெய்யைக்
கக்க ஆரம்பிக்கும். அந்த நிலை வரை நன்கு கிளறி அடுப்பில் இருந்து
இறக்கவும்.
- இதுவே கும்மாயம் அல்லது ஆடிக்கூழ். இதனை இரண்டு நாட்கள் வரை
வைத்திருந்து சாப்பிடலாம். மிகவும் சுவையான, சத்தான பலகாரம். செட்டிநாடு
பக்கங்களில் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த பலகாரத்தை செய்து
கொடுப்பார்கள்.
|
| |
| இறுதியில் அவரிடம் நன்றி கூறி, அறுசுவையின்
பணியினை அவர் பாராட்டி வாழ்த்தியதை பணிவுடன் ஏற்றுக் கொண்டு விடைப்பெற்றோம். |
| |
|
| திருமதி. ரேவதி
சண்முகம் அவர்கள் எழுதிய சமையல் புத்தகங்களின் விபரங்கள் அடங்கிய பக்கம். |
| |
| இதர நட்சத்திரங்கள்
பக்கத்திற்கு செல்ல.. |
| |
|