எங்களைப் பற்றி | அறுசுவை
எங்களைப் பற்றி

அறுசுவை அறிமுகம்

ணையத்தில் சமையல் குறிப்புகள் என்றால் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை 2004 ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது. ஒரு சில தமிழ் பத்திரிக்கைத் தளங்களில் சமையல் குறிப்புகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருந்தாலும், சமையலுக்கென தமிழில் தனியே ஒரு தளம் இல்லை என்பது பெரும் குறையாக இருந்தது. இந்த குறையினை நிவர்த்தி செய்யும் விதமாக, 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், முற்றிலும் சமையல் குறித்த தகவல்களுக்கான முதல் தளமாக அறுசுவை தொடங்கப்பட்டது. யூனிக்கோடு எழுத்துருக்களின் பயன்பாடு அப்போதுதான் தொடங்கி இருந்தது என்பதால், நிறைய பயனீட்டாளர்களுக்கு யூனிக்கோடு தமிழ் எழுத்துக்களை பார்வையிடுவதில் சிரமங்கள் இருந்தன. இருப்பினும் யூனிக்கோடுதான் எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு, அறுசுவை தளம் முற்றிலும் யூனிக்கோடு எழுத்துருவைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.

நாளடைவில் யூனிக்கோடு பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும், அறுசுவைக்கு வரும் வருகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரே வருடத்தில் அறுசுவை தளம் உலகெங்கும் இருக்கும் ஏராளமான தமிழர்களின் பெரும் ஆதரவைப் பெற்று, அவர்கள் தொடர்ந்து வருகைத் தரும் தளமாக மாறியது. வருகையாளர்கள் பலர் தங்களின் குறிப்புகளை அறுசுவையில் வெளியிட விருப்பம் தெரிவித்த போது, அதற்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாக பழைய தளத்தினை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. பழைய அறுசுவை தளம், நிறைய வசதிகளுடன் புதிய தளமாக 2006 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14) அன்று வெளிவந்தது.

எதிர்பார்ப்பிற்கும் அதிகமான வரவேற்பு, புதிய தளம் வெளியான சில நாட்களிலேயே கிடைத்தது. அறுசுவையில் குறிப்புகள் கொடுக்க ஏராளமான நேயர்கள் ஆர்வம் தெரிவித்தனர். அவர்களுக்கென கூட்டாஞ்சோறு பகுதி தொடங்கப்பட்டது. அதன்மூலம் அறுசுவைக்கு ஏராளமான குறிப்புகள் கிடைத்தன. வெறும் குறிப்புகள் என்றில்லாமல், சமையலின் செய்முறையை படங்களுடன் விளக்கும் புதிய பகுதியாக யாரும் சமைக்கலாம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கில மொழியில் இருந்த இந்திய சமையல் தளங்களில் கூட, அப்போது ஸ்டெப் பை ஸ்டெப் உடன் குறிப்புகள் வெளியாகவில்லை. இந்திய சமையல் தளங்களில் அறுசுவையில்தான் முதல் முறையாக ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் குறிப்புகள் வெளியாயிற்று. அறுசுவையின் வளர்ச்சிக்கு இந்த பகுதிதான் முக்கிய காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

2006ல் இருந்து 2010 வரையிலான இந்த நான்காண்டு காலத்தில் அறுசுவை வடிவமைப்பில் பெரிதும் மாற்றங்கள் இருக்கவில்லை. அறுசுவையை முற்றிலும் மாற்றியமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை சில காலத்திற்கு முன்பே தொடங்கி இருந்தாலும், பல்வேறு காரணங்களால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அதனை முடிக்க இயலவில்லை. சரியாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தில் அறுசுவை தளம் மாற்றியமைக்கப்பட்டு வெளியானது. அறுசுவை நேயர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஏராளமான புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டன.

அதன் பிறகு மீண்டும் சில வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு (2013) இறுதியில் அறுசுவை தளம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன் புதிய சர்வரில் இருந்து இயங்குகின்றது. வருகையாளர்கள் எண்ணிக்கை பல மடங்காகி உள்ள காரணத்தால், அறுசுவை தளம் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வரில் இருந்து இயங்க வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கான பரிசோதனைகள் நடந்து வருகின்றன. வெகு விரைவில் மல்டிபிள் சர்வர்களில் இருந்து அறுசுவை தளம் இயங்கத் தொடங்கும்.

மேலும் நிறைய மாறுதல்களையும், புதிய சேர்க்கைகளையும் அறுசுவையில் விரைவில் பார்க்கலாம்.

அறுசுவை நிர்வாகத் தொடர்பிற்கு

நிர்வாகி D.V. Babu, அலைபேசி எண் +91-9952528028

மின்னஞ்சல் தொடர்பு - arusuvaiadmin@ஜிமெயில் டாட் காம்