இனி ஒரு பணி செய்வோம் - 4

புடவை விற்பனை


Work from home

அன்பு தோழிகளுக்கு,

நலம்தானே, மீண்டும் இந்தப் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

வீட்டிலிருந்தே வருவாய் ஈட்டுவதற்கான பல்வேறு வாய்ப்புகள், அதில் உள்ள சிறப்புகள், பற்றி - சென்ற மூன்று பகுதிகளில் பேசினோம். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.

இந்த வாரம் நாம் பேசப் போவது – வீட்டிலிருந்தபடியே டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்வது பற்றி.

வியாபாரம் செய்பவர்கள் வெற்றி அடையவில்லையென்றால் சொல்லும் சாக்கு இது – “நான் உப்பு விக்கப் போனால் மழை பெய்யுது, மாவு விக்கப் போனால் காத்தடிக்குது” என்பதுதான். நீங்க ஏன் மழை பெய்யும்போது உப்பையும், காற்று அடிக்கும்போது மாவையும் விற்கப் போனீர்கள் என்று யார் கேட்பது.

எந்த ஒரு விற்பனைத் தொழிலிலும் – அது சிறியதோ, பெரியதோ, சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விலையில், சரியான பொருளை விற்றால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கும்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் இந்தத் தொழிலைக் கையாளும் விதம் பற்றி சொல்கிறேன்.

இவர் மதுரையில் வசிப்பவர். இவரது உறவினர் மதுரையிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறார். உறவினரின் கிராமம் சுற்று வட்டாரத்திலும் சில கிராமங்களைக் கொண்ட இடம். (பதினெட்டு பட்டி என்பார்களே அது மாதிரி).

மதுரையில் வசிக்கும் பெண் வாரம் ஒரு முறை சிந்தடிக் சேலைகள், (பூனம் சாரிகள், சூரத் சாரிகள்) – மதுரையிலுள்ள கடைகளில் வாங்கி, தனது உறவினர் மூலம் கிராமங்களில் விற்பனை செய்கிறார்.

கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மதுரை வரும் பயண நேரம், செலவு இதெல்லாம் மிச்சம். அதனால் இந்த சேலை விற்பனை நல்ல வருமானம் தருகிறது அவருக்கு.

சரி, இதைப் பார்த்ததும், சென்னையில் வசிக்கும் பெண் – நானும் மதுரையிலிருந்து சேலைகள் வாங்கி, வீட்டில் வைத்து விற்கிறேன் என்றால் லாபம் வருமா?

சந்தேகம்தான். காரணம் மேலே சொன்ன சேலை ரகங்கள் தி.நகரில் கொட்டிக் கிடக்கிறது. அதிலும் சென்னை வாசிகள் கண்டிப்பாக பிரபல கடைகளில்தான் இந்த ரகப் புடவைகளை வாங்குவார்கள் இல்லையா?

சென்னை போன்ற பெரு நகரத்தில், ஷாப்பிங் என்பது தினசரி காபி சாப்பிடுவது போல, மக்களுக்கு ஒரு அடிக்‌ஷன் ஆகி விட்டது. அப்படியெனில் மாநகரங்களில் வசிப்பவர்கள், சிறிய அளவில் பிஸினஸ் செய்வது சாத்தியமா, இல்லையா? என்று கேட்டால் – முடியும் என்பதே என் பதில்.

மேலே சொன்ன விஷயத்தையே ஒரு சிறிய உதாரணமாக எடுத்துக் கொண்டு பார்ப்போம்.

சேலையோ, சாக்லேட்டோ - கடைகளில் கிடைப்பதை விட சற்று விலை குறைவாக, தரமானதாகக் கிடைத்தால் வாங்குவதற்கு மக்கள் தயார். அதே சமயம் அது fast moving ஆக இருந்தால்தான், நாம் போட்ட முதல் ஐ சீக்கிரம் எடுத்து, இலாபம் பார்க்க முடியும்.

சென்னையில் விற்க நினைக்கும் நபர் மதுரையிலிருந்து சுங்குடி சேலைகள், பட்டு நூல் சேலைகள், டர்க்கி டவல்கள், காரைக்குடி காட்டன் சேலைகள் என்று வரவழைத்து விற்கலாம்.

ஈரோடு பக்கம் உதவிக்கு ஆள் உண்டா? போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வரவழைக்கலாம்.

கோயம்புத்தூர் அடிக்கடி போக முடியுமா? Unstitched சுடிதார் மெட்டீரியல்கள் மலிவான விலைக்கு வாங்கி, இங்கு விற்க முடியுமே!

சில உதாரணங்கள் மட்டும் கொடுத்து இருக்கிறேன். சேலை என்றில்லாமல் டெக்ஸ்டைல் பிஸினஸ் என்று பொதுவாகக் கொடுத்து இருக்கிறேன்.

எதுவாக இருந்தாலும் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

முதலீடு சிறிய அளவில் இருந்தாலும் பரவாயில்லை. உங்களால் எவ்வளவு வேகமாக சுழற்சி செய்ய முடிகிறது என்று பாருங்கள். 5000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், வாரம் ஒரு முறை முழுவதும் விற்று, உடனே அடுத்த வாரத்துக்கு உண்டான துணிகளை வரவழைக்க முடிந்தால், உங்கள் முதலீடு என்பதை மாதத்துக்கு 20000 ரூபாய் என்று உத்தேசமாகக் கணக்கிடலாம்.

கூடுமானவரை உங்கள் சேமிப்பையே முதலீடாகக் கொண்டு தொடங்க முயற்சி செய்யுங்கள். கடன் வாங்க வேண்டாம். ஏனெனில், சரக்குகள் முழுவதும் விற்றால்தான் வரும் இலாபத்தில் நீங்கள் வட்டி கட்டி, அசலையும் அடைக்க முடியும். அப்படியில்லாமல், ஒருவேளை, (உங்கள் இலாபத்துக்கு உண்டான) ஒரு சிறிய பகுதி விற்காமல் தேங்கி விட்டால், வட்டியே கட்ட முடியாத நிலை வந்து விடக் கூடாதல்லவா?

முதலீடு செய்து, வியாபாரம் செய்யும்போது No Loss, No Gain என்ற Break Even புள்ளியை அடைய சில காலம் ஆகும். அது வரை பொறுத்து இருக்க வேண்டும்.

ஜவுளி விற்பனையைப் பொறுத்த வரையில், வீட்டில் ஒன்று அல்லது இரண்டு அலமாரிகள் போதுமானதாக இருக்கும். அதிக இடம் தேவைப் படாது. ஜவுளிகளை மாதத் தவணை முறையில் விற்பதா, அல்லது cash and carry யாக ரொக்கத்துக்கு விற்பதா என்பதை, நீங்கள் வசிக்கும் இடம், உங்கள் வாடிக்கையாளர்கள், மற்றும் பணம் வசூல் செய்வதில் உங்களுக்கு உள்ள திறமை, தவிர உங்களுக்கு பொருள் சப்ளை செய்பவர்கள் பணம் செலுத்தக் கொடுக்கும் கால அவகாசம் போன்ற பல் வேறு விஷயங்களை வைத்துத் தீர்மானியுங்கள்.

தவணை முறை என்றால் சிறிது விலை அதிகம் வைத்து விற்கலாம். உடனே பணம் என்றால் சிறிது discount கொடுக்கலாம். டிஸ்கவுண்ட், ஃப்ரீ என்பதெல்லாம் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் மாஜிக் வார்த்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே!

வாடிக்கையாளர்களின் இரசனை அறிந்து, அதற்கேற்றார்போல வியாபாரம் செய்வது நல்லதுதான். அதே நேரம் உங்களுடைய Capability, Limitation இவற்றையும் கவனத்தில் வையுங்கள்.

சரி, நல்ல இலாபம் கிடைக்குமா? கண்டிப்பாகக் கிடைக்கும். ஜவுளி வகைகளில் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும். காரணம், விற்பனையாக எடுத்துக் கொள்ளப்படும் அவகாசத்துக்கு உண்டான வட்டி என்று காரணம் சொல்வார்கள்.

எந்த அளவுக்கு இலாபம் என்பதை ஒரு நகைச்சுவை கதையை சொல்லி விடை பெற நினைக்கிறேன்.

ஜவுளிக்கடை முதலாளி மதியம் சாப்பாட்டு நேரத்தில்,. மகனை கடையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்.

மகனுக்கோ விற்பனையில் ஏதும் அனுபவம் கிடையாது. அன்றுதான் முதன் முதலாகக் கடைக்கு வந்து இருக்கிறான்.

“யாராவது வாங்க வந்தால் நான் என்ன செய்ய?” என்று கேட்டான்.

”ஒன்னும் கவலைப் படாதே, எல்லாத்துலயும் விலைச் சீட்டு ஒட்டியிருக்கு, அதன்படி பாத்து, பில் போடு, நான் சீக்கிரம் வந்துடுவேன்” என்று சொல்லி விட்டுப் போனார் அப்பா.

சாப்பிட்டு விட்டு வந்ததும், மகன் சந்தோஷமாக “அப்பா, ஒரு வேஷ்டி விற்றேன், இந்தாங்க பணம்” என்று பதினெட்டு ரூபாய் கொடுத்தான்.

“அடப் பாவி” என்று அலறினார் அப்பா.

”என்னப்பா” என்று பதறினான் மகன்.

”அது எண்பத்தி ஒரு ரூபாய் என்றல்லவா சீட்டு ஒட்டி இருந்தேன், அதை தலை கீழாகப் பாத்து, பதினெட்டு ரூபாய்க்கு கொடுத்து இருக்கியே” என்று புலம்பிய அப்பா, மெதுவாகச் சொன்னார் – “சரி போ, அப்படின்னாலும், அதிலேயும் பத்து ரூபாய் இலாபம்தான்” என்று!!!

தோழிகளில் யாரேனும் ஜவுளிக் கடை நடத்தி வருபவர்களாக இருந்தால் டென்ஷன் ஆக வேண்டாம். இலாப விகிதம் மிகவும் அதிகம் என்று சொல்வதற்காக சற்று மிகைப்படுத்தப் பட்ட ஜோக்தான் இந்தக் கதை.

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்
சீதாலஷ்மி

Comments

சீதாலக்ஷ்மி... வழக்கம் போல் அசத்தல் ஐடியா குடுத்திருக்கீங்க. எப்படிங்க இப்படிலாம் யோசிக்கறீங்க??? வாழ்த்துக்கள். உங்க பகுதியை நான் விடாம படிச்சுகிட்டு இருக்கேன். இன்னும் நிறைய யோசனைகளோட வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai சீதாலக்ஷ்மி,
உங்க கட்டுரை அருமையா இருக்கு. ஒரு எக்ஸ்பெர்ட் எழுதின மாதிரி இருக்கு.

sankari

iam new to arusuvai.veryvery nice guidelines

நல்ல ஒரு ஆலோசனை தந்து இருக்கீங்க மேடம். நிச்சயம் எல்லாரும் இதை படிச்சுட்டு பயன் பெறுவாங்க. நான் காலேஜ் படிக்கும் போது என்னுடைய தோழியின் அம்மாவும் இந்த பிஸினஸ் தான் செய்துட்டு இருந்தாங்க அவங்க ரொம்ப நல்ல உழைப்பாளி. என்னுடைய தோழியையும் அவ அண்ணனையும் அவங்க இப்படி சின்ன சின்ன தொழில்(டைலரிங்) செய்து தான் படிக்க வச்சாங்க. சும்மா என்னுடைய சில கருத்துக்கள் நான் சொல்ல நினைக்கிறேன் சொல்லலாமா மேடம்.

அன்பு சங்கரி, ரீம்,

பாராட்டுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தேவி சுரேஷ்,

இத... இதத்தான் நாங்க எதிர்பாக்கிறோம். "அறுசுவை தளம்" எல்லோரும் அவங்களுடைய அனுபவங்கள், கருத்துக்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதற்குதான்.

நான் இங்க சும்மா சில பேசிக் ஐடியாஸ் சொல்லி ஆரம்பிச்சுதான் வச்சுருக்கேன். இன்னும் உங்க எல்லோருடைய கருத்துக்கள் கிடைத்தால்தான் இந்தத் தலைப்பு ஆரம்பித்ததன் பலன் முழுமையாகக் கிடைக்கும்.

வாங்க, வந்து உற்சாகமா சொல்லுங்க, காத்துக்கிட்டு இருக்கோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

hello mam!
நான் லன்டன்ல இருக்கேன் நான் ஏதாவது வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய idea கொடுங்க madam please.

hello Madam,
Thank-you so much for this heading.Also i want this.I am in Saudi. Here I am Saleing Sarry item.
I am going India yearly once.so, that time i buy and bring the wholesale cloth.Here good response + profit.
but that time i bring little cloth only.(flight limited weight only allowed).So i am not getting continuous
material. Here dresses very costly.No chance to here buy and sales.So i lose my customer. I want continues material.Postal charge is very high.(India to hear). How i bring from India material.Please
madam i am waiting for your soon replay.

நன்றி மேடம். நிச்சயம் என் கருத்துக்கள் எல்லாத்தையும் பகிர்ந்துக்குறேன். நீங்க ஆலோசனை சொல்லிகிட்டு இருக்கும் போது அதுல வந்து நான் குறுக்கிட வேண்டாமேன்னு தான் நினைச்சேன்.
முதலில் இந்த தொழில் ஆரம்பிக்கும் போது குறைவான முதலீட்டிலேயே ஆரம்பிக்கலாம், அதில் வரும் லாபத்தை வைத்தே மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே போகலாம். அதைப் போல முதலில் நாம தான் கஸ்டமரை தேடி போகனும் உங்கள் தெருவில் இருக்கும் உங்கள் தோழி பக்கத்து வீட்டுக்காரங்க, அவங்களோட ப்ரண்ட்ஸ் அப்படின்னு பார்த்து பேசுங்க. அடுத்து உங்க ஏரியாவில் லெடிஸ் கிளப் அல்லது சுய உதவிக்குழுக்கள் அதுப் போல் ஏதாவது சங்கம் இருந்தால் அங்கே அவர்கள் மாதம் மீட்டிங் போடும் ஏதாவது ஒரு நாள் போய் நீங்கள் உங்களையும் நீங்கள் செய்யும் தொழில் பற்றுயும் ஒரு அறிமுக உரை கொடுத்துட்டு வரலாம். எல்லாதையும் விட நாணயமும் நீங்க விற்கும் பொருளின் தரமும் தான் ரொம்ப முக்கியம். அப்பறம் என்ன கஸ்டமர்ஸ் உங்கள தேடி வருவங்க.
ஏதோ எனக்கு தோன்றின சில ஐடியாக்களை நான் உங்களோட பகிர்ந்துக்கிட்டேன். நன்றி.

அன்பு இந்தியனுக்கு,

வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில் முயற்சிகள் ஏராளம். இந்தப் பகுதியில் பொதுவான சில யோசனைகளை முன் வைத்திருக்கிறோம். நீங்கள் வசிக்கும் இடம், அந்த இடத்தில் நீங்கள் செய்ய நினைக்கும் தொழிலுக்கான வாய்ப்பு, சட்ட திட்டங்கள், உங்களுடைய ஆர்வம், உங்களுடைய கல்விப் பிண்ணனி, உங்களால் செய்யக்கூடிய முதலீடு, இப்படி பல விஷயங்களை ஆராய்ந்து, அதற்குப் பின் முடிவெடுங்கள்.

பகுதி ஒன்று, கற்பிக்கும் திறன் உள்ள தோழிகளுக்கானது. அதிகம் முதலீடு தேவைப் படாதது.

பகுதி இரண்டில் கைவினைப் பொருட்கள் செய்யும் திறன் உள்ளவர்கள், அதை எப்படி கலைப் பொருட்களாக விற்பனை செய்யலாம் என்று சொல்லப் பட்டது.

நல்ல இட வசதி, உதவிக்கு பணியாளர்கள் என்று கிடைத்தால், குழந்தைகள் காப்பகம், பிளே ஸ்கூல் நடத்த இயலும். இதில் ஆர்வமும் இருக்க வேண்டும்.

முதலீடு செய்ய முடியும், மற்றும் விற்பனைத் திறனும் உண்டு என்றால் டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ் நன்கு கை கொடுக்கும்.

அடுத்த பகுதிகளிலும் இன்னும் சில யோசனைகளை விவாதிக்க இருக்கிறோம். படித்துப் பார்த்து, உங்களுக்குப் பொருத்தமானதை தேர்ந்தெடுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பிளாசம்,

புடவை விற்பனையில் நல்ல முறையில் செய்து வருவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் சொன்னது சரி. உங்களுடைய சொந்தப் பொருளாக எடுத்துச் செல்லும்போது, அனுமதிக்கப்பட்ட எடைதான் கொண்டு செல்ல முடியும்.

ஏற்றுமதி, இறக்குமதிக்கு எல்லா நாடுகளிலும் நிறைய சலுகைகள் மற்றும் சட்ட திட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு உட்பட்டுதான் சரக்குகளை தருவிக்க முடியும்.

பொருட்களின் ட்ரான்ஸ்போர்ட் செலவு அதிகம் என் நினைத்தால், அதைக் கையாள சில யோசனைகள்.

1. தவிர்க்க முடியாது எனில், சேலைகளின் விலையில், இந்த செல்வுத் தொகையும் சேர்த்தே விற்பனை விலையாக வைப்பது

2. இங்கிருந்து தருவிக்க ஆகும் கால கட்டத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களது விருப்பத்தை அறிந்து, ஆர்டர் எடுத்துக் கொள்ளுங்கள். பின் மொத்தமாக இந்தியாவிலிருந்து வரவழைத்தால், செலவு சிறிது குறையும்.

3. உங்களுக்கு சப்ளை செய்பவர்களிடம் பேசி, விலையில் சலுகை பெறலாம். அந்த சலுகையை, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் கொடுக்கலாம். மேலும் அவர்களிடமிருந்தே பொருட்களை ட்ரான்ஸ்போர்ட் செய்வதற்கும் தகவல்கள் பெறலாம்.

www.exportersindia.com, www.export2saudi.com போன்ற இணைய தளங்களில் நிறைய தகவல்கள், சட்ட திட்ட விவரங்கள் உள்ளன.

இணைய தளங்களில் கிடைக்கும் தகவல்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் அதில் இறங்குவது மிகவும் முக்கியம்.

தங்களுக்கு என் வாழ்த்துகள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு தேவி சுரேஷ்,

அழகாக சொல்லியிருக்கீங்க. நாணயமும் தரமும் முக்கியம் அப்படிங்கறது எல்லோரும் ஹை லைட்டாக மனசில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

தொடர்ந்து படிச்சு, உங்க எண்ணங்களை தயக்கமில்லாமல் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

டியர் மேடம்
நான் க்ரீச் ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன். அதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் Formalities என்ன?என்று சொன்னால் எனக்கு மிகவும் பயன்படும். நன்றி.

டியர் மேடம்
நான் அலுவலகதில் பணி செய்கிறேன் எனது வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை எனவே எனக்கு வீட்டில் இருந்த படியே பகுதி நேரதில் கம்ப்பியூட்டர் முலமாக சம்பாதிக்க வழி சொல்லுங்க மேடம்