பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை

மக்களே நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் தொடங்கப்பட்டது.. உங்களின் அறிவுக்கு தீனியிடும் வகையில் இதோ தலைப்பு ;)

அதாவது இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவரவரின் விருப்பத்திற்கேற்ப விளையாட்டு, பாட்டு, கலை, நடனம் , இசை என மற்ற துறைகளுக்கு கவனத்தை செலுத்த உதவுவது சரியா.? இல்லை இதெல்லாம் விட்டுவிட்டு போட்டி நிறைந்த இந்த உலகத்தில் முன்னேறி உனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள கல்வியில் கவனம் செலுத்து என்று அறிவுறுத்துவது சரியா?

எங்கே உங்களின் வாதங்களை தொடருங்கள் பார்ப்போம்.. ( ஜெய்க்காக இதை தொடங்கியுள்ளேன் )

பட்டியின் விதிமுறைகள் :
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

நடுவரே, நல்லதொரு தலைப்பு. தேவையான தலைப்பும் கூட.

எதிரணியில்லாமல் பட்டியா???? உங்களுக்கு ரொம்பவே போர் அடிச்சிருக்குமே, அதான் எதிரணியை துவக்கிட்டேன். எந்த பக்கம் வாதாட போறேனு புரிஞ்சிருக்கும் நடுவரே!! கல்வி மட்டுமே போதும் என்ற பக்கந்தேன்.

நடுவரே, மேலே சொல்லியிருக்கும் கலை, நடனம், விளையாட்டு போன்றவற்றை எப்போது வேண்டுமானாலும் நாம் கற்றுக் கொள்ளலாம், ஆனால் கல்வி அப்படியில்லை, பசுமரத்தாணி போல் மனதில் பதிய வேண்டுமென்றால் அதற்கு கற்க வேண்டிய வயதில் கற்றிருக்க வேண்டும். விளையாட்டு கற்றுக் கொள்ளும் அனைவரும் சச்சின் டெண்டுல்கராக ஆக வேண்டும் என்ற ஆசையிருக்கலாமே தவிர, அனைவராலும் ஆக முடியாது. ஆனால் கல்வி அப்படியில்லை, எல்லாரும் பில் கேட்ஸாக ஆக முடியவில்லை என்றாலும், தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க முடியும் நடுவர் அவர்களே.

விளையாட்டு, நடனம் போன்றவற்றை கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்கிறாங்க நான் இல்லைன்னு சொல்லலை நடுவரே, ஆனா நீங்களே யோசித்து பாருங்க, பசங்க 9ம், வகுப்பு வந்ததும் எல்லாத்துக்கும் குட் பை சொல்ல பள்ளிக்கூடமே சொல்லுது என்பதில் இருந்து கல்வியின் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்திருக்குமே நடுவர் அவர்களே.

சத்யம் நிறுவனத்தில் வேலை போனதும் யாரும் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை நடுவர் அவர்களே, ஏன் என்றால் அவர்கள் கையில் கல்வியிருக்கிறது, இந்த நிறுவனம் இல்லையென்றால் இன்னொன்று என்று அவர்கள் போய்க்கொண்டேயிருப்பார்கள். விளையாட்டு, நடனம் எல்லாம் உடம்பில் தெம்புயிருக்கும் வரை தான் நடுவரே சாதிக்க முடியும். ஆனால் ஒருவன் கல்வியில் சிறந்து விளங்கினான் என்றால் அவனால் தன் வாழ்நாள் முழுதும் அந்த கல்வியறிவை வைத்து சாதிக்க முடியும்.

நீங்களே தலைப்பில் சொன்ன மாதிரி கல்வியில் தேர்ந்து உனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்ட பின் நடனம் மற்றும் கலைகளில் ஈடுபடலாம் தவறில்லை, ஆனா படிக்கும் கால கட்டத்தில் மற்றவைகளில் மனதை செலுத்தி படிப்பை கோட்டைவிட்டுட்டு முழிக்க கூடாதுல்ல நடுவரே. கல்வியெனும் துடுப்பை வைத்துக்கொண்டு படகில் செல்பவனால் எத்தகைய துன்பம் வந்தாலும் அதை போராடி வெல்லும் மனத்துணிவு வரும் நடுவரே.

இப்போது இருக்கும் காலகட்டத்தில் கற்க வேண்டிய வயதில் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமே முக்கியம என்று கூறி தற்காலிகமாக விடை பெறுகிறேன்.

நன்றி!! வணக்கம்!!

அன்புடன்
பவித்ரா

பவித்ரா

வாங்க.. கலை கட்டிடுச்சு... கல்வி கண் போன்றதுனு என்ன மாதிரி சான்றோர்கள் சும்மாவா சொல்லி வெச்சாங்க.. ஹீ ஹீ ஹீ

//பில் கேட்ஸாக ஆக முடியவில்லை என்றாலும், தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க முடியும் நடுவர் அவர்களே. //

இது பாயின்ட்.. எப்படி நங்கூரம் மாதிரி இருக்குதுல்ல.. விளையாட்டுல ஒரு முதல் ப்ரைஸ்தான் இருக்கு.. கல்வியில் அப்படி இல்லை.. ஒரு முதல் ரேங்கு தான்னு எல்லாம் சொல்லுக் கூடாது..

கல்வியின் செல்வத்தை பெற்றால் எல்லாம் அமையும் என்பது சரவெடி பவித்ராவின் கருது... எதிரணி ப்ளீஸ் கம் ஃபார்வேட்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு நடுவரான அருமை ரம்யாவிற்கு என் முதல் கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.நான் எடுத்து கொண்ட தலைப்பு பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பமான துறையை தேர்ந்தெடுப்பதே சரி என்னும் தலைப்பில் வாதாட வந்துள்ளேன்.எல்லா துறைகளிலும் தன் குழந்தை சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாக உள்ளது.பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கு எதில் விருப்பம் என்பதும் தெரிந்தும் விடுகிறது.படிப்பு மட்டுமே வாழ்கை இல்லை.படிக்காத மேதைகள் எவ்வளவோ பேர் தன் திறமையால் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தை எடுத்து கொண்டால் எந்த துறையை எடுத்து கொண்டாலும் அதை கற்று கொள்ள நம் குழந்தைகளுக்கு வாய்ப்புக்கள் அதிகம்.சங்கீதம்,நடனம்,விளையாட்டு இன்னும் எவ்வோலவோ துறைகள் உள்ளன.எல்லாமே நம் குழந்தைகளின் கைகெட்டும் தூரத்திலேயே உள்ளது.நாம் சிறு வயதில் உள்ள பொது இந்த வாய்ப்புக்கள் நமக்கு மிக மிக குறைவும்.இப்பொழுதுள்ள இந்த வாய்ப்புக்களை நம் குழந்தைகள் பயன் படும் படி செய்வதே பெற்றோர்களான நம் கடமை.நாம் கவனிக்க வேண்டிய ஓன்று என்ன வென்றால் குழந்தைகளுக்கு விருப்பமில்லாத ஒரு துறையில் அவர்களை கட்டாய படுத்தி சேர்க்க கூடாது.

என் வாழ்கையை எடுத்து கொண்டால் எனக்கு சிறு வயதிலிருந்து பாட்டும்,நடனமும் விருப்பம்.என் விருப்பம் இது தான் என்பது கூட என் பெற்றோருக்கு இன்று வரை தெரியாது.எப்பொழுதும் படிப்பு தான் முக்கியம் என்பது பற்றி தான் பேசுவார்கள் என் பெற்றோர்.இப்பொழுது என் கைகெட்டும் தூரத்தில் பாட்டு,நடனம் பள்ளிகள் உள்ளன.என்னால் அதில் சேர்ந்து கலையை கற்று கொள்வது முடியாத காரியம். எந்த கலையானாலும் அந்தந்த வயதில் கற்று கொண்டால் தான் அழகு.ஏற்கெனவே கற்று பாதியில் நிருத்தியிருந்தாலாவது தொடரமுடியும் ஆனால் முதலிலிருந்து கற்று கொள்வது என்பது கஷ்டமே.என்னை போலவே என் மகளுக்கு இதில் விருப்பமிருப்பது தெரிந்து அவளை சங்கீதம்,மற்றும் குச்சிபுடி நடன வகுப்புகளில் சேர்த்து விட்டுள்ளேன்.அவள் பாடும் போதும்,நடனம் செய்யும் போதும் எனக்குள் பொங்கும் ஆனந்ததிற்கு அளவே இல்லை.படிப்பிலும் அவள் சுட்டி தான்.என் மகனுக்கோ இதிலெல்லாம் விருப்பம் கிடையாது.அவனுக்கு விருப்பமானது கல்வி மட்டும் தான்.
அதான் பெற்றோரான நாம் நம் பிள்ளைகளின் விருப்பதிர்க்கிணங்க நடந்து கொண்டால் அவர்களுக்கும் நம் மேல் மதிப்பு மரியாதை பெருகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.எப்பொழுது பார்த்தாலும் படி படி என்பதில் லாபமில்லை அந்த படிப்பின் மீதும் நாட்டமிருந்தால் மட்டுமே அவர்களால் படிக்க முடியும்.என் மகளில் குச்சிபுடி ஆசிரியை. எஞ்சினியரிங் படித்து ஒரு சாப்ட் வேர் கம்பனியில் கைநிறைய சம்பாதித்து வந்தவர் தான்.எவ்வளவு தான் சம்பாதித்தாலும் மன நிறைவில்லாமல் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு விட்டு நடன பள்ளி ஆரம்பித்து விட்டார் இதன் மூலம் பணத்திற்கு பணம் ,அதே சமயம் கலையின் மூலம் கிடைத்த மன நிறைவே அவருக்கு ஆனந்தத்தை தருகிறது.இதன் மூலம் தெரியவில்லையா நடுவர் அவர்களே பிள்ளைகளின் விருப்பத்திகிணங்க வழி நடத்தினோமானால் அதன் மூலம் கூட அவர்கள் அவர்கள் வாழ்வில் முன்னேறுவது உறுதி.

//கல்வி அப்படியில்லை, பசுமரத்தாணி போல் மனதில் பதிய வேண்டுமென்றால் அதற்கு கற்க வேண்டிய வயதில் கற்றிருக்க வேண்டும்//

நடுவர் அவர்களே, எதிரணி தோழி எந்த காலத்தில் இருக்கிறார் என்று கேட்டு சொல்லுங்கள். இன்று பேரன் பேத்தி எடுத்த பாட்டிகள் கூட டிகிரி வாங்குகிறார்கள். ஆக, படிப்பிற்கு வயது தடையாக இருக்க முடியாது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும்.ஆனால் கலை என்பது அப்படி கிடையாது. இன்று வேலை போய்விட்டால் ஏற்கனவே கலை பயின்றிருந்தால் உடனே காரியத்தில் இறங்கி குடும்பத்தை கஷ்டத்தில் தத்தளிக்க விடாமல் உடனே கரையேற்றலாம். இவர்கள் சொல்வதை போல நினைக்கும் போது கலை பயில்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கலையை பயில குறைந்தபட்சம் 3 மாதமோ 6 மாதமோ ஆகலாம். அதுவரை வயிற்றில் ஈரதுணியையா போட்டிருக்க முடியும்?

//விளையாட்டு கற்றுக் கொள்ளும் அனைவரும் சச்சின் டெண்டுல்கராக ஆக வேண்டும் என்ற ஆசையிருக்கலாமே தவிர, அனைவராலும் ஆக முடியாது. ஆனால் கல்வி அப்படியில்லை, எல்லாரும் பில் கேட்ஸாக ஆக முடியவில்லை என்றாலும், தன் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு ஒரு நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க முடியும் நடுவர் அவர்களே//

நடுவர் அவர்களே, மந்திரத்தில் மாங்காய் அடிக்கும் கதையா இது, பில்கேட்ஸ் ஆவதும், டெண்டுல்கர் ஆவது. அவர்கள் கடந்து வந்த பாதைகளை முன்னுதாரணங்களாக எடுத்து முன்னேறலாமே தவிர அவர்களாகவே ஆக முடியாது. இவற்றை நிறைவேற்ற தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும் இருந்தால் போதும். அவரவர் விரும்பிய துறைகளில் ஜொலிக்கலாம். படிப்பின் துணையில்லாமல்.

//விளையாட்டு, நடனம் போன்றவற்றை கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்கிறாங்க நான் இல்லைன்னு சொல்லலை நடுவரே, ஆனா நீங்களே யோசித்து பாருங்க, பசங்க 9ம், வகுப்பு வந்ததும் எல்லாத்துக்கும் குட் பை சொல்ல பள்ளிக்கூடமே சொல்லுது என்பதில் இருந்து கல்வியின் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்திருக்குமே நடுவர் அவர்களே. //

நடுவர் அவர்களே, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கூட வேலை வாய்ப்பு கிடைக்கும். எனக்கு தெரிந்த ஒருவர் அப்படித்தான் ஹுண்டாய் கம்பெனியில் சிறிய அளவில் நுழைந்து இப்போது ஒரு பெரிய அளவில் உள்ளார்.

//சத்யம் நிறுவனத்தில் வேலை போனதும் யாரும் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை நடுவர் அவர்களே, ஏன் என்றால் அவர்கள் கையில் கல்வியிருக்கிறது, இந்த நிறுவனம் இல்லையென்றால் இன்னொன்று என்று அவர்கள் போய்க்கொண்டேயிருப்பார்கள்//

நடுவர் அவர்களே, சத்யம் நிறுவனத்தில் 15 வருடங்கள் வேலைப்பார்த்த ஒருவர் சம்பளமாக ஒரு பெரிய தொகையை வாங்கியிருப்பார். இப்போது கம்பெனியில் வேலை போன பிறகும் அதே சம்பளத்தில் அவர் இன்னொரு கம்பெனியில் வேலைக்கு செல்வாரா? அதிகம் செலவுசெய்து பழக்கப்பட்ட அவர் சிக்கனம் என்னும் வட்டத்திற்கு வர எவ்வளவு சிரமப்பட வேண்டும் தெரியுமா? இது தவிர ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளிலும் கடன் வாங்கியிருப்பார். அந்த கடன்களை எப்படி அடைப்பார்? என்ன பேசுறாய்ங்க எதிரணி தோழி?

//விளையாட்டு, நடனம் எல்லாம் உடம்பில் தெம்புயிருக்கும் வரை தான் நடுவரே சாதிக்க முடியும்//

வயதான காலத்திலும் தான் கற்ற நடனக்கலைகளை இன்றும் கற்று தந்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கும் தாய்மார்கள் எத்தனை பேர் உள்ளார்கள் தெரியுமா நடுவரே.. எதிரணி தோழி உலகம் புரியாதவங்களா இருக்காங்க ;)

//படிக்கும் கால கட்டத்தில் மற்றவைகளில் மனதை செலுத்தி படிப்பை கோட்டைவிட்டுட்டு முழிக்க கூடாதுல்ல நடுவரே//

நடுவரே, புக்கை வச்சுட்டு இருக்கவங்களாம் படிக்கிறவங்களும் இல்லை.. படிக்காதவங்க எல்லாம் படிக்காதவங்களும் இல்லை.. என்ன நடுவரே தெளிவா குழப்புறேனா? இதோ விளக்குறேன். புக்கை வச்சுட்டு அம்மா - அப்பாவோட கட்டாயத்துக்காக உக்கார்ந்திருக்கவங்களுக்கு எப்பவும் கவனம் அவங்க விரும்பின துறை மேல தான் இருக்கும். அதனால படிப்பில் கவனம் போகாது. படிக்காதவங்க வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய பாடங்களை தங்கள் அனுபவ அறிவால் நன்றாகவே படித்திருப்பார்கள். அதைத்தான் சொன்னேன். இப்ப க்ளியர் ஆய்டுச்சா நடுவரே? :)

//கல்வியெனும் துடுப்பை வைத்துக்கொண்டு படகில் செல்பவனால் எத்தகைய துன்பம் வந்தாலும் அதை போராடி வெல்லும் மனத்துணிவு வரும் நடுவரே//

நடுவர் அவர்களே, இவங்க சொன்னதுக்கு ஒரு குட்டிக்கதை சொல்றேன் கேளுங்க. ஒரு படிச்ச மகாமேதை ஒருநாள் பரிசல்ல ஆற்றை கடக்க பயணப்பட்டுட்டு இருந்தார். அப்ப, அந்த பரிசல் ஓட்டுறவன்கிட்ட நைநைன்னு பேசிட்டு வந்தார். உனக்கு இதுல ஞானம் இருக்கான்னு. அவன் இல்லைன்னு சொன்னான். அதுக்கு வாழ்க்கைல கால் பாகம் வேஸ்ட் ஆக்கிட்டே. அடுத்து ஏதோ ஒன்றை கேட்டு அதற்கும் அவன் இல்லைன்னு சொன்னான். அப்ப வாழ்க்கைல பாதிய வேஸ்டாக்கிட்டனு சொன்னார். இப்படியே ஒவ்வொண்ணையா கேட்டு வாழ்க்கைல படிக்காம முழுசா வீணடிச்சுட்டியே பா அப்படின்னு சொன்னார். ஒரு இடத்துல வெள்ளப்பெருக்கு அதிகமாகி பரிசில் மூழ்குற நிலைமைக்கு வரும்போது பரிசில்காரன் மகா மேதைகிட்ட அய்யா உங்களுக்கு நீச்சல் தெரியுமான்னு கேட்டான். அதுக்கு அவர் தெரியாதுன்னு சொல்லியிருக்கார். அதுக்கு அவன் நீங்க வாழ்நாளை படிச்சு படிச்சே வீணடிச்சிருக்கீங்க. உயிரை காக்கும் நீச்சலை கத்துக்காததால நீங்க மூழ்க வேண்டியது தான்னு சொல்லிட்டு அவன் கரையேறி போய்ட்டானாம். மகா மேதை மகா வெள்ளத்தோட அடிச்சுட்டு போனாராம்.

பெருவெள்ளத்துகிட்ட நான் எம்.ஏ, எம்.பில் படிச்சிருக்கேன்னு சொல்லி பாருங்க. விட்டுட்டு போய்டுதான்னு பார்க்கலாம். படகில் பயணம் செய்யும் படித்தவன் துடுப்பாகிய கல்வியை மட்டுமே நம்பி கரை சேர வேண்டும். அதன் நடுவில் ஏற்படும் இயற்கை இன்னல்களை அவனால் எதிர்கொள்ள முடியுமா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுந்தரி

குட்.. நீங்களுமா?
உங்களின் ஏக்கம் உங்களின் மகள் மூலம் நிறைவேறியதால் உங்களுக்கும் மன நிறைவு..உங்க பாப்பாக்கும்.. இதற்கு ஈடு இணை ஏதும் இல்லை

//கலையின் மூலம் கிடைத்த மன நிறைவே அவருக்கு ஆனந்தத்தை தருகிறது.இதன் மூலம் தெரியவில்லையா//

கலையினால் மன நிறைவு..ஆஹா கேக்கும் போடு சுகமா இருக்கு.. நானும் ஒரு வீணை வாசிக்கும் கலைஞரா................................(.பேப்பர் கூட வாசிக்கறதில்லை).. வருனும்னு நினச்சேன்... முடியலையே...:(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்பனா

விடுவதாக இல்லை போல இருக்கே.. பட்டிக்கே முதுகெலும்பு ஆயிற்றே.. சொல்லவா வேண்டும்?

//படிப்பிற்கு வயது தடையாக இருக்க முடியாது.//

முதியோர் கல்விக் கூட இருக்கே

//இப்ப க்ளியர் ஆய்டுச்சா நடுவரே?//

உங்கள மாதிரி யாருனாலயாவது விளக்க முடியுமா என்ன ?...

//மகா மேதை மகா வெள்ளத்தோட அடிச்சுட்டு போனாராம்.//

அவருக்கு தேவைதான்.. இது தான் அதிகம் படிச்சவங்கிட்ட இருக்கும் கெட்ட பழக்கம்..

சும்மா இருந்து இருந்தா படகை ஓட்டினவரே காப்பாத்தி இருந்துருப்பாரோ என்னவோ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவர் அவர்களே எங்கள் அணி தலைவர் எவ்வள அழகாக சொல்லி இருகாங்க. நடுவரே கல்வி மட்டுமே வாழ்கை கிடையாது. கல்வி இருந்தால் உலகத்தையே வாங்கிடும் முடியாது. ஏன் அப்படி தன் பிள்ளை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்கிறார்களே.
அந்த பெற்றோர்கள் படித்து என்ன சாதித்து இருப்பார்கள். அவர்கள் படிக்கும் போது படிக்காமல் வாழ்கையை சந்தோசமாக கழித்துவிட்டு அவர்களால் முடியாததை அவர்கள் பிள்ளைகள் மேல் சுமதுகின்ரர்கள். அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆசை இருக்காதா. நான் ஒரு பாடகனாக வரவேண்டும், ஒவினாக வேண்டும், கவி அறிஞ்சனாக வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஒவ்வொரு ஆசைகள் உள்ளது. அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு போர் அடிக்கும்போது அவர்கள் டிவி பார்ப்பது இல்லையா. பட்டு கேட்பது இல்லை. போர் அடிக்குதே என்று அவர்கள் வகுப்பில் படித்த பாடபுத்தகங்களை வைத்து படித்து கொண்டிருபர்களா. இது என்ன நீதி. வேறொரு குழந்தை ஒரு டிவி-இல் பாடியோ ஆடியோ முதல் பரிசு பெற்றால் சந்தோஷ படும் பெற்றோர் அவர் குழந்தையின் சந்தோசத்திற்கு ஏன் தடையாக இருக்க வேண்டும். எனக்கு ஒரு பாடல் தான் நினைவிற்கு வருகின்றது (புரட்சி தலைவர் எங்கைய படிச்சாரு DR பட்டம் கொடுக்கலைய. ஐயா கலைஞர் எழுதாத எழுத எந்த காலேஜ் போறப்ப). இதில் இருந்து என்ன தெரியுது விழுது விழுது படித்தில் தான் DR பட்டம் வாங்கலாம் என்று நினைகாதிர்கள். நல்ல திறமைகள் இருத்தல் அதைவிட நிறைய பேரும் பட்டமும் பெறலாம் என்று சொல்லி இப்போதைக்கு விடை பெறுகின்றேன் நன்றி வணக்கம்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி

வாங்க.. உங்க பங்குக்கு பலத்தை உங்க அணிக்கு சேர்த்திட்டிங்க...

//சந்தோசமாக கழித்துவிட்டு அவர்களால் முடியாததை அவர்கள் பிள்ளைகள் மேல் சுமதுகின்ரர்கள்.//

ஐ லைக் திஸ் பாயிண்ட்... ;) நிறைய பெற்றோர்கள் இதை போல தான் செய்கிறார்கள்.. நான் கூட கண்ணால் பார்த்திருக்கிறேன்.

//வேறொரு குழந்தை ஒரு டிவி-இல் பாடியோ ஆடியோ முதல் பரிசு பெற்றால் சந்தோஷ படும் பெற்றோர் அவர் குழந்தையின் சந்தோசத்திற்கு ஏன் தடையாக இருக்க வேண்டும். //

அட அதானே

கர்ணம் போட்டு படித்து தான் டாக்டர் பட்டம் வாங்க வேண்டியது இல்லைங்கோனு ரேவதி அடித்து சொல்றாங்க..

எதிரணி என்ன சொல்ல போறீங்க.. ;) திரும்பவும் வேற வருவாங்களாம் பாத்துக்கோங்க...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இன்றைய நிலைப்படி பிள்ளைகளில் விருப்பத்திற்கு ஏற்ப நாமளும் உறுதுணையாக இருந்து. அவர்களை வழிநடத்த வேண்டும் என்பதே என் கருத்து. கடிவாளம் போட்ட குதிரையாக படி படி படி அது உன் வாழ்க்கைக்கு நல்லதுனு பிள்ளைகளை வளர்க்காமல் படிப்பை தாண்டியும் ஒரு உலகம் இருக்கு அது அவரவர் விரும்பு ஒரு உலகம். அதில் அவனுக்கு/அவளுக்கு எது இஷ்டமோ அதில் அவர்களை ஊக்குவித்தால் நல்ல நிலையை அடைவார்கள்.
பிள்ளைகளில் இஷ்டம் போல் நாம நடந்துக் கொண்டால் அவர்கள் அந்த துறையில் ஜெயிக்க ஒரு தன்னம்பிக்கை இருக்கும், அதில் அவர்கள் ஜெயிக்கனும்னு நினைப்பாங்க. அப்படி இல்லை என்றால் ஏதோ பெற்றவர்கள் படிக்க சொன்னாங்களேனு தான் படிப்பாங்க. அப்படி அவர்கள் படிச்சு ஒரு ப்ரோஜனமும் இல்லை பெற்றவர்கள் சொன்னதையும் சரியாக படிக்காமல், தங்கள் நினைத்தையும் சரியாக படிக்காமல் தத்தளிப்பார்கள்.
படிப்பை மட்டும் நம்பாமல் இன்று எத்தனையோ பேர் தங்கள் திறமையால் முன்னேறி இருக்கிறார்கள்.
பல பேரின் நிலை இன்று என்ன தெரியுமா? அவர்கள் நல்ல படித்திருப்பார்கள் தங்கள் படிப்பிறகான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு பல துறைகளில் மின்னிக் கொண்டு இருக்கிறார்கள்.
வெறும் டிகிரி சான்றிதழ் மட்டும் நம்ம கையில் இருக்கிறதை விட விளையாட்டு போட்டிகளில் நாம் கலந்துக் கொண்ட பெற்ற சான்றிதழ் இன்னும் நம் மதிப்பை கூட்டும். sports cottaவில் நிறைய படிச்சுட்டு இருக்காங்க

நல்ல அருமையான தலைப்பு வாழ்த்துக்கள் ..
கொஞ்சம் வேலை அதிகம் இந்தவாரம் முடிந்தால் பதிவிடுகிறேன்பா ..
பட்டியில் அனைத்து தோழிகளும் வந்து .கலந்துகொள்ளுங்கோபா..
வாதாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் ..

வாழு, வாழவிடு..

மேலும் சில பதிவுகள்