பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

அன்பு அறுசுவை நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.
முதன் முதலாக பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்றுள்ளேன். நல்ல முடிவைத் தருவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

நடுவர் பொறுப்பு கொடுத்த தோழி வனிதாவுக்கும், அறுசுவைக்கும் நன்றி

நான் எடுத்துள்ள தலைப்பு தோழி யோஹலட்சுமியால் தரப்பட்டது-
ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?

நகைச்சுவையான தலைப்பைத் தேடி நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது....திருமணமான, திருமணமாகாத எல்லா தோழிகளுக்கும் பிடித்தமான (எந்தப் பெண்ணாவது அழகு செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்களா!!!இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு கூட நிறைய ஒப்பனை பொருட்கள் வந்திருக்கிறதே....இதில் அறுசுவைத் தோழர்களும் பங்கு கொள்ளலாம்!!) சீரியஸ் இல்லாத, சிரிக்கச் சிரிக்க பேச முடிந்த ஒரு தலைப்பு இது என்பது என் எண்ணம்!

இப்பொழுது மார்க்கெட்டில் தினம், தினம் புதிது புதிதாக எததனை அழகு சாதனப் பொருள்கள்....அந்த விளம்பரங்களே மனதை மயக்குகிறதே? இந்த பட்டியின் மூலமாக நம் தோழிகளிடமிருந்து எது நல்ல ப்ரேண்ட் என்று தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு அல்ப ஆசைதான்!!

வழக்கமான பட்டி விதிமுறைகள் இதற்கும் பொருந்தும்.
பட்டியின் விதிமுறைகள்
**********************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

எல்லாரும் கலந்துகிட்டு பட்டியை நவரச மேடையா ஆக்குங்க!

தயவு செய்து எல்லாரும் தமிழிலேயே பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே , ஒப்பனை என்பது ஒரு பெரிய வியாபார தந்திரம்.

ஒரு இருபது முப்பது வருஷத்திற்கு முன்னால் கூட இத்தனை ஒப்பனை சாதனங்கள் உண்டு என்று நம் பெண்களுக்கு தெரியுமா? நம் பாட்டிகளும் அம்மாக்களும் எந்த மேக்கப் சாதனத்தை உபயோகித்தார்கள்?அவர்கள் அழகில்லையா? அவர்கள் அழகாக தங்களை வெளி காட்டி கொள்ள வில்லையா? ஒப்பனை செய்தால் தான் அழகு என்ற கருத்து நம் மீது திணிக்க பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரின் நிறம் ,உயரம் , உடல் அமைப்பு இதெல்லாம் நாம் வாங்கி வருவதில்லை.இவற்றை மாற்றவும் முடியாது .ஒரு பெண் அழகு என்று எதை வைத்து தீர்மானிகீரீர்கள்? நாம் யார் -- இப்படி இருந்தால் அழகு ...வெள்ளையாய் இருந்தால் அழகு , உயரமாய் இருந்தால் அழகு என்று தீர்மானிக்க? ஆனால் நாம் அதைதான் செய்கிறோம்.கருப்பு அழகில்லை என்று நினைக்கிறோம்.இதன் மூலம் நடப்பது என்ன?கருப்பாய் இருக்கும் பெண் கலவரமகிறாள்,கண்ட கிரீம்களை தடவி வெள்ளையாக வேண்டும் என்று நினைக்கிறாள் . குள்ளமாய் இருக்கும் பெண் ஹை ஹீல்ஸ் அணிந்தாவது உயரமாய் காண்பிக்க விரும்புகிறாள்.அதை அணிந்தால் தன் அவளுக்கு தன்னமிக்கையே வருகிறது.ஒருநாள் கிரீம் போடாமல் வெளிய போக நேரிட்டால் நான் அழகா இல்லையே என்று குமைகின்றாள்.ஒப்பனை செய்தால் தான் நான் அழகாய் இருக்கிறோம் என்று நம்புகிறாள்.இதனால் யாருக்கு என்ன லாபம் - ஒப்பனை பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கொள்ளை லாபம். நஷ்டம் - நம் பெண்ணுக்குத்தான் இயற்கையான தன்னம்பிக்கையை இழந்து ஒப்பனை செய்தால் தான் அழகாக தெரிகிறோம் என்று தன் மீதே அவநம்பிக்கை கொள்கிறாள்.

பின் இயற்கை அழகு என்றால் என்ன ? க்ளியர் ஆன சருமம் , சுத்தமான உடல். இது பிறக்கும் போது எல்லோருக்குமே கிடைத்திருக்கும். அதை சரியாய் பராமரிக்காமல் விட்டு விட்டு பின் ஒப்பனை செய்தால்தான் என் முகம் அழகாக இருக்கும் என்றால் எப்படி ஏற்று கொள்ள முடியும்?.

நடிகைகளுக்கு மேக்கப் எனபது அவர்களின் profession க்கு தேவையான ஒன்று...அந்த நடிகைகளே கேட்டால் " எனக்கு மேக்கப் இல்லாமல் இருப்பது தான் பிடிக்கும். ஷூட்டிங் முடிந்து வந்த உடன் நான் முதலில் செய்யும் வேலை மேக்கப் பை கலைப்பதுதான்" என்கிறார்கள்.ஏன் ? எல்லாம் chemicals ...முகத்தை இப்போதைக்கு அழகாக காண்பித்தாலும் செயற்கையான சாய பூச்சுகளால் முகத்திற்கு கேடே என்று மேக்கப் அதிகம் உபயோகபடுத்தும் நடிகைகளே நினைக்கும் போது சாமான்ய பெண்களுக்கு எதுக்கு நடுவரே தேவை இல்லாத ஒப்பனை.

முக அழகு கிரீம் கள் : ஏழே நாளில் சிவப்பகலாம் என்று விளம்பர படுத்த படும் சிகப்பழகு கிரீம்கள்.வருட கணக்கில் உபயோகித்தாலும் கூட சிகப்பாக முடியாது.பின் ஏன் இந்த அயோக்கியத்தனமான விளம்பரங்கள்?யாரை ஏமாற்ற இவை நம் வீட்டு கூடத்துக்கே வந்து கருப்பான நம் வீட்டு பெண்கள் அழகில்லை என்ற மாயையை உருவாக்கி வைத்திருக்கின்றன?

திருமண மேக்கப் : உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என் திருமண போட்டோவை விட என் அம்மாவின் திருமண கோலம் அழகு.அதை விட அழகு என் பாட்டியின் திருமண போட்டோ...அவர்கள் எந்த makeup உபயோகித்தார்கள்? ஆகவே நாம் நம்மை சுத்தமாக வைத்திருந்தாலே அதுதான் அழகு நடுவர் அவர்களே.....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

//மேக்கப் இல்லாம வந்திருந்தாங்க. அதான் அடையாளம் காண முடியல. இதே அம்மா, அந்த இடத்துல மேக்கப்ல இருந்திருந்தா உடனே அடையாளம் கண்டிருப்பேன். // - நடுவரே கவனிங்க... சினிமாவில் நடிப்பவர்கள் கூட நடிக்க தான் மேக்கப் போடுறாங்க... நிஜ வாழ்க்கையில் தான் தானாக (இயற்கையான அழகோட) தான் இருக்காங்க.

நாம் நாமாக இல்லாமல் வேறு ஒருவராக நடிக்கும் முயற்சி தான் மேக்கப்... ஏன் நடிக்கனும்?? போன பட்டியில் அனுமார் வேஷம் போட்டா எப்படி இருக்கும்னு சொன்னாங்க பாருங்க... அதே தான் இங்கும்... ஒவ்வொரு பெண்ணும் தானாக இல்லாமல் நயந்தாரா, சிம்ரன், திரிஷா ஆகும் முயற்சியில் இறங்கினா தெரு தாங்குமா, ஊர் தாங்குமா??

நல்ல லிப்ஸ்டிக் போட்டு, ஏகப்பட்ட மெக்கப்போடு சினிமாகாறங்களே ரோட்டில் வர மாட்டாங்க... வந்தா நாய் தொரத்துமாக்கும். அதான் அவாங்களே வெளிய வரும்போது மேக்கப் இல்லாம வராங்க. புரிஞ்சு நடந்தா நாய் கடி வாங்காம தப்பிக்கலாம் நடுவரே. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல ஒரு தலைப்பை எடுத்து இருக்கிங்க..நல்ல முறையில் பட்டி செல்ல வாழ்த்துக்கள்.. அழகு என்பது காணும் கண்களில் உள்ளது.. பூ அழகு என்றால் அதன் இலைகளும் அழகு தான்.. கலர் கலரா பல வண்ணங்களில் பளிச்சினு இருக்கு மலர்கள்.. ஆனாலும் பசுமையா இருக்கும் பார்த்த உடன் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இலைகளும் அழகே..

நிலா அழகு தான்.. அதில் இருக்கும் கறையும் அழகே.எதுக்காக பூ,இலை, நிலா, கறைனு சொல்றேனா அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணில் உள்ளது..ஆண்டவன் படைப்பில் அனைத்தும் அழகே.. அழகுக்கு அழகு சேர்க்கிறேன் என செயற்கையை கலக்கும் ஒப்பனையை விட இயற்கையான அழகே உயர்ந்தது.

நடுவரே.. இங்கே எல்லாரும் வேலைக்கு போகும் போது தூங்கு மூஞ்சி போல போவது, காலையில் எழுந்ததும் , கணவன் வீட்டுக்கு வந்ததும், பள்ளி செல்வது அது இதுனு காரணம் சொல்றாங்க.. முதலில் ஒப்பனை என்றால் என்ன? ஆங்கிலத்தில் ஃபேஸ் மேக் அப். அழகுபடுத்துதல் என்பதை தாண்டி, அழகை மேம்படுத்தி கொள்ளுதல் எனக் கூறலாம்..

இயற்கையே அழகு

நடுவரே இயற்கையா இருப்பதால் எத்தனை பலன்கள் உண்டு தெரியுமா?

*அந்த க்ரீம், இந்த க்ரீம், உதடு சாயம், மஸ்காரானு தண்ட செலவு தேவையில்லை. பணம் மிச்சம்..

*ஆபிஸ்க்கு மேக் அப் போட்டு வரும் போது, பாதி கலஞ்சு போய் பார்ப்பவர்களை பயமுறுத்த தேவையில்லை..

*மேக் அப் போட்டா தான் ஆபிஸ்ஸில் மதிப்பார்கள் அப்படினா, அடிக்கடி ரெஸ்ட் ரூம் போயி 10 நிமிஷம் மேக் அப்க்கு செலவிடனுமே.. வேலைக்கு டேக்கா கொடுக்க தேவையில்லை.

*கண்டதை ட்ரை பண்ணி முகத்தின் ஜீவனை போக்கிக் கொள்ள தேவையில்லை.

*தினமும் மேக் அப் போட்டே ஒருத்தரை பார்த்துட்டு, ஒரு நாள் மேக் அப் இல்லாமல் பார்த்தால் என்னாகும்..? அந்த துன்பம் வேண்டாமே. இப்பவும், எப்பவும் இப்படி ஒரே மதிரி தான் இருப்பேன் எனக் கூறிக் கொண்டு போயிட்டே இருக்கலாம்..

ஒப்பனை
இது போடுவதால் என்னங்க இருக்க போகுது ?
அழகா? இல்லவே இல்லை.. மேக் அப் போட்டா அழகு வந்திடும்னு நினைப்பது முற்றிலும் தவறு.. முகம் லட்சணம் எப்படி இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி தான் அழகு அமையும்.. ஒன்னும் வேணாம், நாடகத்துக்கு அப்பற மாதிரி அப்ப வேணாம்.. எதிரணி சொல்வது போல லைட் மேக் அப் போட்டு, பாளிஷா இருந்தா மட்டும் அழகு வந்திடுமா? முக வெட்டு ( ஃபேஸ் கட் ) எப்படி இருக்கோ அது தான் அழகை முடிவு செய்யும்.. அதனால் மேக் அப் போட்டு ஒருத்தரை அழகாக்கலாம் என்பது எல்லாம் சும்மா.. மேக் அப் போட்டும் அப்படி தான் இருக்க போறோம்.. அதுக்கு ஒப்பனை இல்லாம சாதாரணமா.. சிம்பிளா அழகா இருக்கலாமே..

காலையில் எழுந்து சுத்தபத்தமா குளித்து இருப்பது ஒப்பனையா? சேலையில் வியற்வை துளி வாசமில்லாமல் இருப்பது ஒப்பனையா? தலைக் குளித்து பூ வைப்பது ஒப்பனையா? சுத்தத்திற்கும் , ஒப்பனைக்கும் வித்தியாசம் இல்லாமல் பேசக் கூடாது.. அதுக்காக கணவன் மாலை வீடு திரும்பும் போது சுத்தமா குளிச்சு , நல்ல ட்ரஸ் போட்டு, அதே குங்குமம், பூ வெச்சும் இருந்தால் கணவருக்கு பார்த்ததும் கொஞ்சம் புத்துணர்ச்சியா தான் இருக்கும்.. இது மிக இயல்பாக இருக்க வேண்டிய விஷயம்.. இதை எல்லாம ஒப்பனைக்கு என எடுத்துக் கொள்ள முடியாது..

நம் சுத்தமும், நாம் அணியும் உடையுமே நமக்கு பாதி அழகை கொடுத்துவிடும்.

ஒப்பனை என்பது பட்டை தீட்டிக் கொள்வது.. இருக்கும் அழகை மெருகெற்றிக் கொள்வது.. மெருகு ஏற்றுவதற்கு நாம் பலப் பொருட்களை சார்ந்தே இருக்கிறோம்.. அது இப்போது வியாபார வளர்ச்சிக்கு பெரிய பங்கு வகிக்கிறது..ரோஸ் பவுடர். ஃபவிண்டேஷன், மஸ்காரா, ஐ லைனர்னு ஏதெதோ வந்திட்டே இருக்கு.. ஃபேர்னஸ் க்ரீம் சக்ஸஸ்னா இன்னும் ஏன் பலர் கருப்பாக இருக்கிறார்கள்? எந்த க்ரீமாலையும் கலர் கொடுக்கவே முடியாது..

இப்போ எல்லா இடத்திலேயும், ஆர்கானிக், ஹெர்பல் மற்றும் நேச்சுரல்னு பேச்சு போயிக்கிட்டே இருக்கு.. நாம் காலையில் எழுந்து பயன்படுத்தும் பேஸ்ட் முதல் கொண்டு, சோப்பு, ஷாம்பு, பவுடர்,மஸ்காரா,காஜல்,செண்ட் மற்றும் நெயில் பாளிஷ் வரை சகலவிதமான அத்தனை ப்ராடக்டிலேயும் கெமிக்கல்ஸ் இருக்கு.. என்றாவது என்ன கெமிக்கல் என்ன செய்யும்னு யோசித்து பார்த்து இருப்போமா? டாக்ஸின் அனைத்திலும் கலந்து கேன்சரை வர வைக்கக் கூடுமளவு வீரியம் கொண்டது.. எல்லா கெமிக்களும் கேடு விளைவிப்பதில்லை. ஏனெனில் கெமிக்கல் தானே மருந்தாகவும் வந்து குனப்படுத்துகிறது.. ஆனால் நடுவரே காஸ்மெடிக்ஸ்க்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல்ஸ் சூப்பர் டாக்சின் கொண்டது.. நம்மால் அதிகம் தடுக்க இயலாவிட்டாலும் ஒப்பனை போன்ற பொருட்களை தவிர்ப்பது மூலம் அருபது வரை தடுக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.காசு கொடுத்து கேடை வாங்குவதற்கு சமம்.

ஏன் மேக் அப் போட்டா தான் ஆபிஸ்ஸில் மதிப்பார்களா? பார்ப்பவர்களும் ஃப்ரஷா இருப்பார்களா? அப்படி எல்லாம் இல்லை நடுவரே.. தூங்கி வழிந்தால் முகத்தில் நல்லா பச்ச தண்ணியை அடித்து கழவிப்பாருங்கள்.. உங்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் புத்துணர்ச்சி வரும்.. அதை விட்டுவிட்டு போய் கொஞ்சமா பவிடர் பூசி வந்தால் புத்துணர்வு வந்து விடுமா?

மேலும் இப்ப எல்லாம் மேக் அப் செய்து, உதடு சாயம் பூசி, பக்காவா செண்ட் எல்லாம் போட்டு வெளியே கிளம்புபர்களை பார்த்தால் தான், குளிக்காம வந்திட்டாங்களோனு தோணுது.. ஏனா அத்தனை மெனங்கெடறாங்க பாவம்..

அத்தனை மேக் அப்பையும் போட்டுட்டு அந்தமா பாவம் பஸ் நெரிச்சல நசுங்கி இறங்கும் போதே ஃப்வுடேஷன் அங்கங்கே பூத்து, கொடுரமா ஆகி இருக்கும்.. ஆபிஸ் போகும் போது அங்கே இருப்பவர்கள் பார்த்து அலறுவார்கள் பாருங்கள், அதற்கு மேக் அப் இல்லாம சாதாரணமா வர அம்மாவே கோடி பரவாலைனு தோணும்.. நான் பார்த்த அனுபவம் தான் இது..

மேலும் பாதி மேக் அப் போயி, மீதி மேக் அப்பை கழுவி, அங்கே ஆபிஸ் ரெஸ்ட் ரூமிலேயே 15 நிமிஷம் செலவு செய்து, சம்பாரிக்கும் காசையும் செலவு செய்து வெளியே வந்து, அப்பா நம்ம நல்லா இருக்கோம் அதனால் தன்னம்பிக்கை வந்திடுச்சுனு நினச்சு சந்தோசபடுறவங்களை பார்த்தா பாவமா தான் இருக்கு :)மேக் அப் போட்டு அழகா இருந்தா தான் மத்தவங்க நம்மை மதிக்கறாங்கனா.. அந்த மதிப்பே தேவையில்லை.. வெளி அழகை பார்த்து ரசிக்கும் கூட்டத்திற்கு நாம் ஏன் விருந்தாக வேண்டும்.. எப்பவும் ஃப்ரஷா மேக் போட்டு ஜில்லுனு இருப்பானு சொல்வதை விட.. அது எண்ணை வழியும் முகம்னு சொல்வது எத்தனையோ பரவாயில்லை.. இரு உதாரணத்துக்கு தான் சொல்றேன்.. யாரும் இப்பவெல்லாம் எண்ணேய் வழியும் முகத்துடன் இருப்பதில்லை.. அடிக்கடி முகம் கழுவி ஃப்ரஷா தான் இருக்காங்க.

கல்யாண பொண்ணுனா ஜிகு ஜிகுனே எல்லாருக்கும் மனசுல பதிந்துவிட்டது.. என் திருமணத்தில் நான் எந்த ஃபேஸ் மேக் அப்பும் போட்டுக்கலை.. உண்மையாவே சொல்றேன்.. ஆனா பார்த்தவங்க எல்லாரும்.. ஏன் இப்படி சிம்பிளா இருக்கானு எங்க வீட்டுல கேட்டு உயிரை எடுத்துட்டாங்க.உனக்கு புடிச்சு தானே கல்யாணம் செய்றாங்கனு கலாய்ச்சாங்க... ஏனா நம்ம மக்களுக்கு நல்ல செவப்பா உதட்டு சாயம் போட்டு , ஐ ப்ரோ திக்கா போட்டு தலைக்கு க்லிட்டர்ஸ் எல்லாம் வெச்சா தான் கல்யாண பொண்ணுனு மைண்ட்ல செட் ஆச்சு.. கேமிரா மேன்.. ரொம்ப பெரிய ஆளு..டிமாண்ட் பர்சன்.நல்ல ரசனையுள்ள மேகசைன் ஃபோட்டோக்ராஃபர். ஆனா அவர் சொன்னது, எந்த கல்யாணத்திலும் இல்லாத புதுவிதமா பொண்ணு சிம்பிளா இருக்கு.. இதை தான் எல்லா கல்யாணத்திலும் எதிர்பார்க்கிறோம்.. ஆனா பொண்ணுப்புள்ள வந்து நின்னதும், கேமிரா லைட்டே அலறி போகும் அளவு மேக் அப் போடறாங்கனு வருத்தப்படாரு.

அதுவும் இப்ப எல்லாம் பெண்கள் பழைய காலம் போல பட்டு கட்டி, மேக் அப் போட்டு பெண் பார்க்கு படலத்தில் வர தயங்குகிறார்கள். சாதாரணமாவே இருக்கேன்.. எப்பவும் இப்படி தானே இருக்க போகிறேன். அதை பார்த்து மாப்பிள்ளைக்கு பிடித்தால் சரி.. திருமணம் பின் தினமும், எல்லா நேரமும் ஒப்பனை போட்டா வலம் வர முடியும்.. இயல்பா இருக்கும் என்னை பிடித்தால் போதும் என்றே விவரமாக பேசுகிறார்கள்..

அழகு இருந்தால் தான் கணவன் அன்பா இருப்பான் என்பதும் கதை.. அப்போ வயசானவோ. குழந்தை பிறந்த பின் உடல் தளர்ந்தாலோ விட்டுட்டு போயிடுவானா? அப்படி போனால் அவன் குணத்தில் தான் அழகில்லை என அர்த்தம்.. மேலும் எந்த ஆண்களும் தனது மனைவி ஒப்பனை இட்டு இருக்க வேண்டும் என நினைப்பதில்லை.. சாதரணமா, இயற்கையான அழகோடு இருப்பதையே விரும்பிகிறார்கள்.. சிலருக்கு பார்லர் தண்ட செலவு என தோன்றும். சில ஆண்கள் பார்லருக்கு பணம் கொடுத்தாலும், தன் மனைவியின் செயற்கை அழகு பிடிப்பதில்லை.. யாரும் பார்லருக்கு போய் ஒப்பனை செய்ய சொல்வதில்லை..

பொதுவா கறுப்பா, சுமாரான அழகு இருக்கும் பொண்ணுமே சாதாரணமா இருந்தா தான் அழகு.. அந்த தோலின் ரியாலிட்டி கலர் தான் நல்லா இருக்கும். அதிலும் மேக் அப் போட்டு, கறுப்பான சுமாரான பொண்ணை மேலும் ஏலியன் ஸ்கின் டோனில் வித்தியாசமா கொண்டு வந்துவிட்ட பார்லரையும் பார்த்து திட்டி இருக்கேன்.. :(

மேக் அப் போட்டா தான் தன்னம்பிக்கை இருக்கும்னு ஒருத்தர் சொன்னா, அது தான் அவங்களுக்கு தன்னம்பிக்கை இல்லைங்கறதை சுட்டிக்காட்றதாவே நான் நினைக்கிறேன்..

நாம் ஒப்பனை போட்டு தோலின் ஜீவணையே கெடுத்துவிடுகிறோம்.. போதைக்கு அடிமை போல,, தோலானது அந்த க்ரீம்களுக்கு அடிமை ஆகிவிடும்.. பின் க்ரீம் இல்லாமல் தோலானது வறண்டு காணப்படும்.. அப்போது நாம் க்ரீம் இல்லாமல் இப்படி ஆகுகிறது என நினைத்துக் கொள்கிறோம். அந்த நிலையில் தோலை கொண்டு வந்துவிட்டதே அந்த க்ரீம் தான் என தெரிவதில்லை..

மனமும்.. மார்க்கெட்டில் வரும், கலரான, புதிய புதிய வகை க்ரீம்களுக்கு அடிமை ஆகிறது.. கிவ் அ ட்ரை என வாங்க நினைக்கிறது.. ஒரு பார்ட்டிக்குனா ஒப்பனையோடு வந்து இறங்கினால் மதிப்பு என நினைத்துக் கொள்கிறார்கள்.. நல்ல புடவை, நீட்டா தலை வாரி, சுத்தமா போய் நின்னாலே நல்லா தான் இருக்கும் ..

எப்பவும் மேக் அப்புடன் அலைபவர்களை கேலி செய்ய ஒருக் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும்.. செண்டா வேண்டவே வேணாம்.. பச்சை தண்ணி தான் செண்ட்.. ஒழுங்கா குளித்து, நம்மை நல்ல முறையில் பிரசண்ட் பண்ணிட்டாவே போதும்..

எப்பவும் வெளியே ஒரு கோட்டிங்கோடு இருந்துக் கொண்டும் , நம் உண்மையான அழகை அந்த கோட்டிங்குள் மறைத்து வைத்துக் கொள்வதும்,.. நம்மை நாமே அசிங்கபடுத்திக் கொள்வது போல.. நம் தோல் தானே. நம் முகம் தானே.. நாம் தான் விரும்ப வேண்டும் முதலில். மற்றவருக்காக.. சூழ்நிலைக்கு தகுந்த போல நம்மை மாற்றி தப்பிக் கொள்ள என்றெல்லாம் நினைத்து, நம்மை நாமே இறக்கிக் கொள்ள வேண்டாம்.. நல்லதோ, கெட்டது, நமது என ஆன நம் உடலின் இயற்கை அழகே போதும்.. எந்த அழகு சாதனமும் வந்து டாமினேட் செய்ய தேவையில்லை.. நடுவரே

மீண்டும் வருகிறேன்
-ரம்யா கார்த்திக்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அட நடக்கிற விஷயம் தான் உங்களுக்கு தெரியுமா..நம்மளை போலவே தான் இருக்காங்கன்னு நெனச்சுக்காதீங்க எல்லாரும்///ஆம்பிளைக பேச்சை சுத்தமா மதிக்காம என்னுடைய விருப்பம் தான் எனக்கு என்று பார்க்கவே அசிங்கமா மேக் அப் போட்டிருக்கும் மனைவிமார்களை ஆம்பிளைக மதிப்பாங்கன்னு நினைக்கறீங்க?எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மா எனக்கு சிரிப்பே அடக்க முடியாது நான் அசின் மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்வாங்க என்று என்னிடமே பல முறை சொல்லியாச்சு எனக்கு செம்மையா சிரிப்பு வரும் எந்த ஆங்கிளில் பார்த்தும் எனக்கு அசினை போலவோ அல்லது கிட்ட நெருங்க கூட இல்ல ..அவங்கம்மா அதை விட ஒரு தலைவலி வந்தாலும் என் பொண்ணுக்கு கண்ணு பட்டிருக்கும் என்று டார்ச்சர் பண்ணுவாங்க.ஆனால் தாமே சொல்லிகிட்டு மாசா மாசம் ஒரு தொகை க்ரீமுக்கு பார்லருக்கு ஒரு தொகை அவருக்கு மனைவியை கட்டுப் படுத்த வேண்டியது தானே என்று நாங்கள் பேசிக் கொள்ளும்போதும் அவர் அமைதியாக சொல்லுவார் சனியன் சொன்னா கேக்காது தொலையட்டும் என் பிள்ளைக முன்னாடி சண்டை போட்டுகிட்டே காலம் கடத்த முடியாது என்று..இதெல்லாம் நமக்கு தேவையா.அடுத்தவங்க சிரிக்கிற அளவுக்கு கோமாளி வேஷம் போடனுமா என்ன.அது ஒரு வகை மனநோய்

நிறைய பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி பெண் பார்க்க வரும்போதே மேக்கப் போட்டுகிட்டு தான் நிக்கறாங்க. கல்யாணத்துக்கு பின் தான் மேக்கப் இல்லாத முகம் எப்படி இருக்கும், உண்மை அழகு என்ன என்று தெரியுது அவங்களுக்கு. அதனால் தான் 90% ஆண்கள் பெண்களூக்கு முன்னால் தூங்கி எழுந்துப்பதே இல்லை.

பின் தூங்கி முன் எழுவாள் பெண் அப்படின்னு அதனால் தான் கொண்டு வந்துட்டாங்க...

இரவு மனைவி மேக்கப் கழுவும் முன் தூங்கிடுறது... காலையில் அவங்க எழுந்து குளிச்சு ஃபுல் மேக்கப் போட்ட பிறகு முழிக்குறது... மேக்கப் போட்டிருந்ததை பார்த்து ஏமாந்ததை வெளிய காட்டிக்காம இருக்க தான் கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி கடை பிடிக்கறாங்க.

சரிங்க... எல்லாத்தையும் விடுங்க... அழகா இருந்தா தான் மதிப்பு, அழகா இருந்தா தான் பிடிக்கும்னுலாம் சொன்னா, அழகா இல்லாதவங்களுக்குல்லாம் கல்யாணமே ஆக கூடாதே!!! ஆயிட்டு தானே இருக்கு? அப்படின்னா அவங்ககிட்டையும் ஏதோ அழகு இருக்குன்னு சிலர் நினைச்சு தானே கல்யாணம் பண்றாங்க?

ஊர் உலகத்தில் மேக்கப் போட்டுகிட்டு இருக்க மனைவிங்க தான் இப்பலாம் அதிகமா கோர்ட்டில் விவாகரத்துக்கு வந்து போறவங்க... மேக்கப் இல்லாத சாதாரண குடும்பத்து பெண்ஙள் யாரும் விவாகரத்துக்கு அதிகம் வருவதில்லை. மேக்கப் போட்டு கணவன் முன் நின்று அவரை இம்ப்ரஸ் பண்ணினது உண்மை என்றால் அவங்களுக்கு ஏன் இந்த நிலை நடுவரே?

சிலரை பாருங்க... நாம் மேக்கப் இல்லாம நாம் நாமா இருந்தா வயிறு எரியும்!! அவங்க கணவர் சொல்வாரில்லை... “பார்... அவங்களாம் மேக்கப்பா போடுறாங்க... நீ தான் மாசா மாசம் பியூட்டி பார்லர் போய் அசிங்கமாயிட்டே இருக்க”னு... ;) உடனே அடுத்த முறை நம்மை பார்த்தா சொல்வாங்க... “ஏன் இப்படி இருக்கீங்க... கைல முடி இருக்கே... வேக்ஸிங் பண்ணலாமே!! ஐப்ரோஸ் பண்ணா இன்னும் நல்லா இருக்குமே. கொஞ்சமாவது லிப்ஸ்டிக் போடுங்க, அப்ப தான் பளிச்சுன்னு இருக்கும்” இப்படி 1000 அட்வைஸ் கேட்காம வரும்... எல்லாம் அவங்க புருஷன் தன் மேக்கப்பை விட மேக்கப் இல்லாதவங்க சிம்பிளா இருக்கவங்களை பாராட்டினதால் வந்த வயித்தெரிச்சல். இதை புரியாம அவங்க பேச்சை நாம் கேட்டா... நம்ம புருஷனும் நொந்துக்குவார்.

ஐஸ்வர்யா ராய் பயன்படுத்தும் சோப்பு, மேக்கப், ட்ரெஸ் எல்லாம் நாமும் போட்டா நாமும் ஐஸ்வர்யா ராய் ஆயிடலாமா என்ன? இது போலித்தனமா இல்லையா? ஆனாலும் சினிமால ஐஸ்வர்யா ராய்க்கு டூப்பாதான் போக முடியுமே தவிற ஐஸ்வர்யா ராய் ஆயிட மாட்டோம்.

அதை விட முக்கியமா அத்தனை மேக்கபில் நிக்கும் ஐஸ்வர்யா ராயை எத்தனை பேருக்கு பிடிக்கும்??? உலகமே அவங்க அழகின்னு ஒத்துக்குமா? என் வீட்டுக்காறரே ஒத்துக்குறதில்லை. அழகு என்பது அவர் அவர் கண்ணில், மனதில் இருக்கு நடுவரே. போடும் வேஷத்தில் இல்லை.

வில்லன் வேஷம் போட்ட நம்பியார் நிஜத்தில் வில்லனும் இல்லை, ஹீரோ வேஷம் போட்ட ஹீரோ எல்லாம் நிஜத்தில் ஹீரோவும் இல்லை. அதே தான் மேக்கப் போடும் எல்லாருக்கும்.

- சிரிப்பு எனும் அழகை உதட்டுக்கு கொடுங்க... லிப்ஸ்டிக் தேவைப்படாது.

- கருணை எனும் அழகை பார்வையில் கொடுங்க... கண்மை தேவைப்படாது.

- குணம் என்ற அழகை மனதுக்கு கொடுங்க... ஒப்பனையே தேவைப்படாது... ஒப்பில்லா அழகியாவீங்க.

மீண்டும் நேரம் இருந்தால் நிச்சயம் வருகிறேன் நடுவரே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே, எதிரணியினர் வாதங்களை ஒருபக்கம் வைப்போம். அவர்களை இதற்கு விளக்கம் தர சொல்லுங்கள். இயற்கை அழகை உலகமே விரும்புகிறதென்றால்,அதைதான் மக்கள் வரவேற்கிறார்கள் என்றால், அது தான் நல்லது என்றால் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் ப்யூட்டி பார்லர்கள் எதற்கு? அதை நிறுவியவர்களே மேக்கப் போட்டு கொள்வாரா?

நாம் எத்தனைதான் இயற்கை,இயற்கை என்று பேசினாலும் ஏதோ ஒரு விதத்தில் ஒப்பனை பொருளை சார்ந்து தான் இருக்க வேண்டும். இவர்கள் சொல்வது போல வெறும் பச்சை தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டார் புத்துணர்ச்சி வரும். அது சில நிமிடங்களோடு சரி.. ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு இது கட்டுபடியாகுமா? இவர் இந்த எண்ணெய் வழியும் முகத்தை பத்து நிமிஷத்திற்கொருமுறை பச்சை தண்ணீர் கொண்டு கழுவி கொண்டிருந்தால் அப்போது நேர விரயம் ஆகாதா?

ரிசப்ஷனிஸ்ட்,மக்கள் தொடர்பு துறையில் வேலை செய்பவர்கள், உயரதிகாரிகளின் காரியதரிசிகள்,நாட்டின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இயற்கை அழகே போதும் என்று நினைத்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்கு அது ஒத்து வராது.மேக்கப் என்பது தனிப்பட்ட நபருக்கு தன்னம்பிக்கையை தருவதோடு அல்லாமல் நாம் சம்பந்தப்பட்ட பணியிலும் தன்னம்பிக்கையை சேர்க்கும். புத்துணர்ச்சி தரும். அந்த இடத்தின் சூழலையே மாற்றி விடும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவர் அவர்களுக்கு இனிய வணக்கம்.
//அது சரிதான்...அப்பறம் வீட்டு வேலைகளை யாருங்க செய்வாங்க?உங்க வீட்டுக்காரருங்களா? நிசமாலுமே நீங்க கொடுத்து வெச்சவங்கதானுங்கோ//

நடுவர் அவர்களே...... கரெக்ட்டா பாய்ண்ட்டுக்கு வந்திருக்கீங்க. ஒப்பனை போடுவதால வீட்டு வேலையெல்லாம் செய்ய செய்ய முடியாதுனு யார் சொன்னாங்க...? அப்படி பார்த்தால் முகத்தை தவிர நாம் என்னென்ன பிற ஒப்பனைகள் எல்லாம் செய்யறோம்.

எனக்கு இயற்கைதான் முக்கியம் என்று சொல்லுபவர்கள் எல்லாம்

1.பல்விளக்க வேப்பங்குச்சியையோ, ஆலங்குச்சியையோ, செங்கல் பொடியையோ தான பயன் படுத்தனும். எதுக்காக கண்ட கண்ட விளம்பரங்களில் வரும் பிரெஷ்ஷையும், டூத்பேஸ்ட்டையும் பயன்படுத்தனும்....?

2.சோப்பில் கெமிக்கல் இருக்கு,செயற்கையானதுனு சோப்பே பயன் படுத்தமாட்டேன்னு.... கடலை மாவும் பாசிப்பயறு மாவுமட்டுமே 100% எல்லா நேரத்திலும் எங்கேயும் பயன்படுத்துவேன்னு யாராவது சொல்ல முடியுமா....?

3.ஷாம்புவை ஒருகாலும் பயன்படுத்தவே மாட்டேனு யாரும் சொல்லமுடியுமா....?

4.கலர் கலரா ட்ரெஸ்ஸுக்கு மேட்ச்சா நெயில் பாலிஷ் போடாமல் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு கலந்துப்பாங்களா......?

5.பிளாஸ்ட்டிக் பொருட்கள் ரொம்ப கெட்டவைனு நாம பிளாஸ்ட்டிக் பொருளே யூஸ்செய்யாமல் தான் இருக்கோமா.....?

சொல்லுங்க நடுவரே சொல்லுங்க.....

அன்றாடம் நாம் எவ்வளவோ செயற்கை பொருட்களை பயன்படுதறோம். முகத்துக்கு கொஞ்சம் போல ஒரு க்ரீம்மும், பவுடரும் போட்டால் மட்டும்
அது பணம் வேஸ்ட்டு, நேரம் வேஸ்ட்டு, ஆடம்பரம், அலங்காரம், அநாவசியம்னு சொல்லுறாங்களே......... அது ரொம்ப ரொம்ப அநியாயமா இருக்குங்க......

நாங்க அப்படி என்னங்க பெருசா போடறோம்...

புழுதியும் ட்ராஃபிக்கும் அதிகமுள்ள எல்லாஊரிலும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை புழுதி தூசி. வெளிய போயிட்டுவந்து கொஞ்சம் நம் முகத்தை ஒரு வெள்ளை துணியில் துடைத்துப் பார்த்தால் தெரியும் நம்ம முகத்துல எவ்வளவு அழுக்கு படிஞ்சிருக்கும்னு.

முகத்துல அதிகமா அழுக்கு படிந்தால் பரு, கரும்புள்ளி,எண்ணெய் பிசுக்கு போன்றவையெல்லாம் வந்து, இறந்த செல்களெல்லாம் கூட்டம் போட்டு ரகளை பண்ணி முக பொலிவையே கெடுத்துவிடும்.

அதை தவிர்க்க தான் க்ளென்ஸிங். அப்படியே வெளியில போயிட முடியாதுல. வெயில் பட்டு முகம் கறுத்திடும். எனவே சன்ஸ்க்ரீன் லோஷன் போடுறோம். எல்லா நேரத்திலும் குடையும் கைய்யுமா சுத்தமுடியறதில்லைல. வெயில் கண்களைத்தாக்காமல் இருக்க கூலிங்கிளாஸ் போடுறோம்ல அதுபோலதான்.

ஒரு புடவை கட்டுவதற்கு நாம என்னவெல்லாம் மெனக்கெடறோம். நாலு பேர் பார்த்தால் அழகாஇருக்கே அப்படீனு பாராட்டு வாங்கனும் என்றுதானே நினைப்போம். அதுபோலத்தான் நாங்க முகத்துக்கும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கறோம்.

அதையெல்லாம் பணம் வேஸ்ட், டைம் வேஸ்ட்டுனு சொல்லி தடுக்காதிங்க.

சொல்லுங்க நடுவரே.......சொல்லுங்க.................

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

எனக்கு இப்போ கொஞ்சம் குழப்பமா இருக்கு.பவுடர் போடுவதும் ஒப்பனையில் சேருமா இல்ல பவுடர் டப்பாவை வாரி தேய்ப்பதுவா.நான் குறிப்பிடுவது பார்த்தால் நமக்கு போய் பேச கூட தோன்றவோ மதிப்பு கொடுக்கவோ முடியாத அளவுக்கு சிலர் பூச்சாண்டியாக இருப்பார்கள் அவர்களை...
பார்க்க அளவாக அ மேக் அப் போட்டிருந்தாலும் அதை செய்ய மூன்று மணிநேரம் எடுப்பவர்களை.சாதாரணமாக தலைவாரி பின்னவே அரை மணி செலவு செய்பவர்களை.சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் இறந்த வீட்டுக்கும் அப்படியே போபவர்களை அல்லது அவசரமாக ஒரு சூழல் மருத்துவமனை என்னும்போதும் மணிக்கணக்காக ரெடியாகிட்டே இருப்பாவங்களை.செத்தாலும் எந்த அவசரத்துக்கும் மேக் அப் இல்லாமல் வரவே மாட்டேன் என்று நிற்பவர்களை.அப்போ நான் இப்ப எந்த கட்சி?

நடுவரே... நாங்க எப்பவாது பியூட்டிபார்லர் இல்லைன்னு சொன்னோமா??? அதான் தெருக்கு தெரு கெடக்கே... பியூட்டி பார்லர் வேண்டாம்னு தான் சொல்றோம். யாரோ சம்பாதிக்க நம்ம மூஞ்சு தானா கெடச்சுது? ;(

நல்லா இருக்க முடியை வெட்டி ஸ்டைல் ஆக்கறேன்னு நாய் கொதருனாப்பல கொதரி வைக்கிறது... ஊர்ல பாதி 101 டால்மேஷியன் படத்துல வர வில்லியாட்டுமே சுத்திகிட்டு திரியுதுக. (அனுபவம் நடுவரே... ஒரு காலத்தில் ஏற்பட்டது ;( கொடுமை நடுவரே கொடுமை)

நீங்களே நல்லா யோசிச்சு சொல்லுங்க... அரசு அலுவலகங்களுக்கு போனா நல்லா மேக்கப் போட்டு டிப் டாப்பா ஹை ஸ்டைலா இருக்கவங்ககிட்ட போய் பேசுவோமா இல்ல சாதாரணமா சிம்பிளா இருக்கவங்களை போய் அனுகுவோமா? மனித மனம் என்றும் சிம்பிளா இருக்கவங்க கிட்ட தான் உடனே போய் பேசும்... ஏன் தெரியுமா? நம்மை அறியாமல் நாம் எல்லாருமே அது போல் இருக்கவங்க தான் உதவுவாங்க, நல்ல ஃபுல் மேக்கப்பில் இருக்கும் ஆளெல்லாம் பந்தா பேர்விழின்னு நம்பறோம்.

அதை விட படிக்காதவங்க, அதிகம் வெளி உலக அனுபவம் இல்லாதவங்க இது போல் அலுவலகங்களூக்கு போகும் போது பாவம் இப்படி ஃபுல் மேக்கப்பில் இருக்கும் ஹைஸ்டைல் பார்ட்டிகளை பார்த்தே அரண்டு போவாங்க. சிலருக்கு என்ன வேலைக்கு வந்தோம்னே சில நேரம் மறந்து போகும் :( அப்படியே போய் பேசலாம்னாலும் பார்த்ததும் இவங்க தமிழ் ஆளா, வெளி ஊரா, தமிழ் பேசுவாங்களா, இங்க்லீஷ் தாட்டு பூட்டு தானான்னு பல குழப்பம் மண்டைக்குள்ள இருக்கும்... எங்க இருந்து வந்த வேலை நியாபகம் வாரது?

இப்படி சூழ்நிலையில் இவங்க மேக்கப் போட்டு வந்தா ஆபீஸ்க்கே லுக் மாறுதுன்னா....???!! ம்ம்ம்.... என்ன சொல்ல... ஆபீஸே இவங்களை தான் லுக்கு விடும். வேற ஒன்னும் சொல்றதுகில்ல. :((

நான் ஒன்னு சொல்றேன் பாருங்க... நானும் வேலை பார்த்தவ தான்... அனுபவத்தில் சொல்றேன்... நமக்கு மேலே இருக்கும் வேலை பார்க்கும் பலர் இந்த மேக்கப் பார்ட்டிகளை மதிப்பதில்லை. ’சீவி சிங்காரிச்சு 1 மணி நேரம் மேக்கப் போட்டு வர தான் தெரியும்... ஒரு வேலையும் தெரியாது’னு திட்டி பல முறை நானே கேட்டிருக்கேன். நாங்களாம் மூஞ்சை கழுவி பவுடர் கூட போடாம வெறும் பொட்டை வெச்சு, தலை சீவி போற ஆளுங்க... எங்க வேலை ஒழுங்கா இருந்ததால் எங்களை பார்த்தா மறியாதை இருந்தது, கன்னியமான பேச்சு இருந்தது. அதனால் மேக்கப் போட்டா தான் மதிப்புன்ற விஷயம் அவுட். செய்யும் வேலையை பொறுத்து தான் வேலை செய்யும் இடத்தில் மறீயாதை... அப்படி மேக்கப்புக்கு மறியாதை கிடைச்சா அதுக்கு பேறு மறியாதை இல்லை... ஜொல்லு!! :)

நான் மற்றவர் முன் அழகாக தெரிய வேண்டும் என்று மேக்கப் போடுறீங்க... ஏன் நீங்க அழகா தெரியனும்? மற்றவர் கவனம் ஏன் உங்க மேல் திரும்பனும்? பெண்ணே... நான் அழகு என்னை பார் என்று உனக்கு நீயே ஏன் ஆபத்தை தேடுகிறாய்? இந்த கேள்விக்கு பதில் எதிர் அணியில் வருமா? 4 பேரை உங்கள் பக்கம் ஈர்க்க தான் ஒப்பனை என்றால் 4 வகை ஆபத்தையும் உங்களுக்கு தேடுவதாக தானே அர்த்தம்? இல்லை என்று மறுக்க முடியுமா நடுவரே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே...
இயற்கை அழகை உலகம் விரும்புவதாக இருந்தால் அங்கங்கே பார்லர் தோன்றி இருப்பதற்கு காரணம் என்ன என விளக்கம் கேட்க்கிறார்கள் எதிரணி.. இந்த பட்டியிலேயே எதிரணி என சிலர் இருந்து ஒப்பனைக்கு சப்போர்ட் செய்யும் போது இந்த உலகத்தில் எனப் பார்த்தால், மேக் போடும் பெண்கள், போடாதவர்கள் என இரு அணி இருக்கத் தான் செய்யும்.. உண்மையாக கூறிகிறேன் ..இதுவரை நான் ப்யூட்டி பார்லர் வாசலைக் கூட மிதித்தது இல்லை.. என்னை போல பலர் இருக்கலாம்.. எதிரணி போலவும் பலர் இருக்கலாம்.. அந்த ஒப்பனை கூட்டத்திற்காக தான் அங்கங்கே பார்லர்கள் முளைத்துக் கொண்டு வருகிறது.. நம்ம ஆசாமி, ஒரு பொருளை ஒருத்தன் வித்து காசு பார்த்திட்டா,,, அதே கடை அடுத்த நாள் இரண்டு, மூனு முளச்சிடும்.. போட்டி நிறைந்த உலகம் ஆயிற்றே.. போதை பொருளா மாறி வரும் ஒப்பனை உலகம் மட்டும் தப்பிக்குமா என்ன ? சொல்லுங்க நடுவரே? மது கடை இருந்து கொண்டே உள்ளது.. அதுக்காக உலகமே மது அருந்துகிறது என சொல்ல முடியுமா என்ன ?

பச்சை தண்ணீரை முகத்துக்கு அடித்து , துடைத்து வருவதற்கும், லேயர் லேயரா மேக் அப் போட்டு வருவதற்கும் வித்தியாசம் இல்லையா? மேக் அப் போடும் ஆள் தான் வியர்வையில் ரோஸ் பவ்டர் திட்டு திட்டா ஆகி இருக்குமோ.. ரெஸ்ட் ரூம் போகனுமோனு யோசிக்கனும்.. ஆனா இயற்கையா இருப்பவங்க,மேக் அப்க்காக ரெஸ்ட் ரூம் போகாம, வேறு விஷயமா போகும் போது அப்படியே முகத்தை கழுவிக்கிட்டு வரலாம்.

அதாவது நடுவரே.. ஃப்ரண்ட் ஆபிஸ் பொண்ணுனா அழகா இருக்கனும், லிப்ஸ்டிக் போட்டு தான் வரணும்னு ரூள்சே செட் பண்ணிட்டாங்க.. அதை மாற்ற முடியாது. மேக் அப் போட்டு எப்படா கலைக்கலாம்னு சிரமப்படும் எத்தனையோ பேரை பார்த்து இருக்கேன்.. இந்த பிழைப்புக்கு போய் பிச்சை எடுக்கலாம்னு என் தோழி சொல்வாள். எந்த கலர் லிப்ஸ்டிக்னு கூட ஜெனரல் மேனேஜர் சொல்வான் போலனு புலம்புவாள்.. எல்லாமே கமர்ஷியல் ஆயிடுச்சு.. விரும்பி ஏத்துக்கவும், கட்டாயத்தில் ஏத்துக்கவும் வித்தியாசம் இருக்கு..

நாம் பயன்படுத்தும் எல்லா பொருள்களிலும் கெமிக்கல் இருக்கு அதுக்காக வேப்பங்குச்சியிலா பல் துலக்கறீங்கனு கேக்கறாங்க.. நாங்க ஏற்கனவே சொன்னதை போல கெமிக்கல்ஸ்ஸை நம்பி தான் இருக்கோம்..மருந்து மாத்திரைக் கூட கெமிக்கல் தான். அதனால் முடிந்த வரை இயற்கையா இருக்கலாம்னு தான் சொல்றோம்..

சாப்பிடும் உணவுகள் கூட கெமிக்கல்ஸ் கலந்து தான் இருக்கு.. அதை நம்மால் தவிர்க்க முடியுமா? அது போல தான் பேஸ்ட், சோப்பு எல்லாம்.. மேலும் இந்த சோப்பு, பேஸ்ட் இவைகள் ஒப்பனை லிஸ்ட்லே வராது.. ஆண்டிபயாடிக் டெட்டால் சொப்புனா, அது சுத்தத்துக்காக தான் நடுவரே.. ஒப்பனைக்கு இல்லை. விட்டால் இவர்கள் கைக்கு பேண்டைட் போடுவதுக் கூட ஒப்பனைனு சொல்வாங்க போல.. தயவு செய்து சுத்தத்திற்காக பயன்படுத்தும் பேஸ்ட், சோப்பு ,ஷாம்பு போன்றவற்றை ஒப்பனை சாதனங்களுடன் சேர்க்க வேண்டாம் என கூறுங்கள் நடுவரே.. ஒப்பனை என்பது ரோஸ் பவுடர், க்லிட்டர்ஸ்,மஸ்காரா,காஜல், லிப்ஸ்ட்க் போன்ற அழகை மெருகேற்ற உதவும் சாதனங்கள் மட்டுமே..

நேரம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்