லீவில் வீட்டிற்கு விருந்தாளி வந்து பின் நாங்கள் வெளியில் போனதால் ஞாபகம் வருதே அடுத்த பாகத்திற்கு கால தாமதம் ஆகி விட்டது. பரவாயில்லை மன்னித்து விட்டுடலாம். முதல் பாகத்தில் சொன்னது போல. இன்னும் சில பாடல்களும் ஞாபகத்துக்கு வருகின்றன.
1. நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல துதி செய்
2. அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூற ஓட்டு
ஒரு பங்கு உனக்கு ஒரு பங்கு எனக்கு
ஒரு பங்கு அப்பாக்கு ஒரு பங்கு காக்காக்கு
3. மழை வருது மழை வருது நெல்ல வாருங்க
முக்கா படி அரிசி போட்டு முருக்கு சுடுங்க
ஏர் இழுக்கற மாமனுக்கு எண்ணி வையுங்க
சும்மா இருக்கற மாமனுக்கு சூடு வையுங்க
4. பச்ச மிளகா காரம், பன்னண்டு மணி நேரம்
டீச்சர் வந்தாங்க, டியூப்லைட் போட்டாங்க
வாத்தியார் வந்தாரு, வணக்கம் வெச்சாரு
இன்ஸ்பெக்டர் வந்தாரு, இழுத்து போட்டு அடிச்சாரு

5. அதோ பார் காரு, காருக்குள்ள யாரு?
நம்ம மாமா நேரு, நேரு என்ன சொன்னாரு?
நல்லா படிக்க சொன்னாரு.
6. மொட்ட பாப்பாத்தி, முருக்கு சுட்டாலாம்,
எண்ண பத்தலயாம், கடக்கி போனாலாம்,
காசு பத்தலயாம், கடக்காரன பாத்து கண்ணடிச்சாலாம்.
7. தம்பி தம்பி டா, என்னா தம்பி டா?
குருவி குடுடா, என்னா குருவி டா?
மஞ்ச குருவி டா, அது எப்டி கத்தும் டா?
கீச் கீச்னு கத்தும் டா.
8. ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி
அம்மா வர நேரமாச்சி தூங்கு தங்காச்சி.
ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி
அம்மா வர நேரமாச்சி தூங்கு தங்காச்சி.

9. சின்ன சின்ன பை(யி)
காச போட்டு வை(யி)
அம்மா சொல்வது மெய்(யி)
சொல்ல கூடாது பொய்(யி)
10. கணபதி பாப்பா மோரியா
ரவா லட்டு தாரியா?
கணபதி பாப்பா மோரியா
ரவா லட்டு தாரியா?
இம்புட்டு தாங்க என் நினைவில் உள்ள பாடல்கள். உங்களுக்கு இதிலிருந்து எதாவது ஞாபகம் வருதா? உங்களுக்கு வேறு ஏதாவது பாட்டு தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Comments
bala
ஹா ஹா ஹா பாலா. நல்லா எல்லா நினைவையும் தூண்டறீங்க.
பூ பூ புளியம்பூ
பொட்டில வச்ச தாழம்பூ
தாழம்பூ வ ரெண்டாக்கி
தங்கச்சி கைல மூனாக்கி
சித்தாத்தா அடுப்புல்
கத்தரிக்கா வேகல
மாமா வர சோக்குல
மல்லிகை பூ பூக்கல.
இது பாடுவோம்.
Be simple be sample
ஞாபகம் வருதே
பள்ளி காலங்களில் பாடியவைகளை (ஒருசில பாடல்கள் தவிர) ஞாபக படுத்திட்டிங்க. எனக்கு தெரிந்த இன்னும் சில பாடல்கள்
"அதோ பார் காக்கா
கடைல விக்குது சீ(ய)க்கா
பொண்ணு வரா ஷோக்கா
எழுந்து போடா மூக்கா"
"அதோ பார் மைனா
தோட்டத்துல கொய்னா
அப்பா பேரு நைனா
நான் போறேன் சைனா"
"முக்குவன் பிள்ளை முறுக்கு சுட்டு
வாணியன் பிள்ளை வாங்கி பறிச்சி
தட்டான் பிள்ளை தட்டி பறிச்சி
கொல்லன் பிள்ளை கொண்டோடுச்சி"
அன்புடன்
ஜெயா
ரேவ்ஸ்
சூப்பர். இந்த பாட்டு நாங்களும் பாடிய ஞாபகம் உண்டு. சூப்பர் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம். சூப்பர் ரேவ்ஸ். ரேவ்ஸ்னாலே கலக்கல் தா.
எல்லாம் சில காலம்.....
ஜெயா
சூப்பர். இன்னும் நிறைய பாட்டு வரும் போல இருக்கு. சூப்பரா பாடறீங்க. அந்த காக்கா பாட்டு நாங்களும் பாடிய நினைவு இருக்கு. ஆனா மத்த பாட்டுலாம் தெரில. இப்போ தெரிஞ்சிக்கறேன். பாட்டுலாம் சூப்பர் ஜெயா.
எல்லாம் சில காலம்.....
ஞாபகம் வருதே
dear balanayagi,
நீண்ட நாட்களுக்குப்பிறகு அறுசுவை பக்கம் வந்தால், உங்களுடைய
பாடல் பதிவு.பழைய ஞாபகங்களை நினைவூட்டுகிறது.இப்போதுள்ள பிள்ளைகளின்
வாயில் அர்த்தபுரியாத தமிழ் மற்றும் ஆங்கில பாடல் முணுமுணுப்புதான் கேட்க
முடிகிறது.இப்பாடல்களை படித்தாலே உம்மனாமூஞ்சியின் இதழில் புன்முறுவல்
பூக்கும்.என் நினைவில் நிற்பவை;
குத்தடி குத்தடி முனியக்கா
குனிஞ்சு குத்தடி நெல்லக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி கோவக்கா
மீதி நினைவிற்க்கு வரவில்லை. தெரிந்தவர்கள் முடிக்கவும்.
அன்புடன் மாலினிமாமி
அன்புள்ள பாலா
டியர் பாலா ரவா லட்டை சீக்கிரம் அனுப்பவும்.
நல்ல நல்ல பாடல்கள், இந்த தலைப்பின் கீழ் உள்ள பாடல்கள் அனைத்துமே சின்ன குழந்தைகள் பாடக்கூடிய பாடல்கள். மழலைகளுக்கு இந்தப் பாடல்களை
கற்றுக் கொடுத்தால் விரைவில் கற்றுக்கொள்வார்கள். என் குழந்தை சரியாகப்
பேசவில்லையே, திக்கிப் பேசுகிறானே என்று வருத்தப்படும் அம்மாக்கள் இந்தப்
பாடல்களைக் கற்றுக் கொடுக்கவும். பிறகு பாருங்கள் குட்டிப் பாப்பாக்களின்
பாட்டுத்திறமையை. பிறகு ?????? பாடல்களில் வரும் சொற்களுக்கு கை,கண், தலை அசைவுகளின் மூலம் பாட்டில் வரும் சொற்களுக்கான பொருளையும்
விரைவில் பிள்ளைகளுக்கு புரியவைக்க முடியும்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பாசத்திற்குரிய பாலா
சூப்பர் ரொம்ப அருமை:))
குத்தடி குத்தடி ஷைலக்கா
குனிஞ்சு குத்தடி ஷைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி டோலாக்கு
அக்கா வந்தா பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சில்லறைய மாத்திக்கோ
சிலுக்கு பைல போட்டுக்கோ
கிலு கிலுன்னு ஆட்டிக்கோ
இன்னும் யோசித்து சொல்லுறேன்.
மாலினி மாமி
உங்க பாட்டின் மீதியை நிகி அனுப்பிட்டாங்க. அருமையான பாடல்கள் எல்லாமே. இங்கே பதிவு போட்ட உடன் எனக்கும் நிறைய கிடைக்கின்றன பழைய ஞாபகங்கள். பாட்டு பாடி தெருவில் ஆட்டம் போட்டது, மண்ணில் விளையாடி மழையில் நனைந்தது எல்லாமே அருமை. இந்த காலத்து குழந்தைகள் சிறு வயதில் நாம் அனுபவித்த ஆனந்தத்தை அனுபவிக்காமலே வளர்கின்றனர்.
எல்லாம் சில காலம்.....
பூங்கோதை
நன்றி பூங்கோதை. தாய்மொழியில் பழகினால் எல்லாமே எளிதில் வரும். ஆனால் இந்த கால பெற்றோர் தமிழும் அல்லாமல் ஆங்கிலமும் அல்லாமல் தமிங்கிலத்தில் பழகுகின்றனர். ஆகவே குழந்தையின் புரிதல் தாமதமாகிறது. இதை பெற்றோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் சில காலம்.....
நிகி
அழகா அனுப்பி இருக்கீங்க. சூப்பர் நிகி. செம ஞாபக சக்திபா.
எனக்கு தெரிந்த சிறு திருத்தம்.
பந்தலிலே பாவக்கா தொங்குதடி டோலக்கா
(பாவக்கா அதன் பந்தலுக்கு டோலக்கா தொங்குதுனு வரும். (டோலக்கு, தொங்கட்டான் மாறி))
இதுல எனக்கு தெரிந்த இன்னும் இரண்டு வரிகள்
பொண்ணு வரா பாத்துக்கோ
பரிசம் போட கேட்டுக்கோ.
எல்லாம் சில காலம்.....
பாலா
டோலக்கா... ஆஹா அர்த்தம் அருமை.:))
சூப்பர் பாலா. பாவக்கா அதன் பந்தலுக்கு டோலக்கு தான்.. அருமையான உவமை இல்லியா???
நிகி
ஆமாம் நிகி. இதுலாம் நம் முன்னோர் எப்டி யோசிச்சி இருப்பாங்க? குழந்தைகளுக்கு நல்லா ஈஸியா பாடற மாறி குரும்பாகவும் இன்னும் எவ்ளோ இருக்கு. கிராமத்து பக்கம் போனா இன்னும் கூட கிடைக்கும். எல்லாத்துக்கும் பாட்டு வெச்சி இருப்பாங்க. குழந்தை பிறந்ததில் இருந்து கிழவன் சுடு காடு போற வரைக்கும் எல்லாத்துக்கும் பாட்டு இருக்கு.
எல்லாம் சில காலம்.....
குழந்தைகள் பாடல்..
அருமையான பழைய பாடல்கள்..படிக்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குத் தெரிந்த சில பாடல்கள்..
ஆனை(யானை) ஆனையாம்..
அழகர் ஆனையாம்!
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனையாம்!
குட்டி ஆனைக்கு
கொம்பு முளைச்சிச்சாம்..
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்!
[இதே பாடலில் அழகர்-சொக்கருக்குப் பதிலாக அரசர்-அரசி என்று சொல்லியும் பாடுவதுண்டு]
~~
காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயாம்
ஏண்டியக்கா அழுகறே.. [இமா...அடிச்சிப்போடாதீங்கோ..பாட்டு இப்புடித்தான் வரும்!! ;)]
காஞ்சீபுரம் போகலாம்..
கட்டு முட்டாய் வாங்கலாம்
பிச்சுப் பிச்சுத் திங்கலாம்!
̀~~
வட்ட வட்ட நிலாவே
வண்ண வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா
~~
இன்னும் கொஞம் பாட்டுகள் இருக்கு, இப்போ நேரம் அனுமதிக்காததால் பிறகு வருகிறேன். :)
அன்புடன்,
மகி
கண்ணே!! மணியே
பாலா அழகான பாடல்கள் உங்களால தெரிஞ்சுக்க முடிஞ்சது நன்றிங்க :)
கண்ணே மணியே முத்தம் தா!!
கட்டிக்கரும்பே முத்தம் தா!!
வண்ணக்கிளியே முத்தம் தா!!
வாசக்கொழுந்தே முத்தம் தா!!
தேனே பாலே முத்தம் தா!!
தெவிட்டாக் கனியே முத்தம் தா!!
மானே மயிலே முத்தம் தா!!
மடியில் வந்து முத்தம் தா!!
சின்ன சின்ன கல் பொறுக்கி
சிங்கார பாலம் கட்டி
பாலத்துமேல ஏறிக்கிட்டு
பவுன்(பஃபூன்) வேசம் போட்டுக்கிட்டு
தில்லாலங்கடி தில்லாலே
எனக்கு மனசு நல்லாலே!!.
தோழிகளின் பாடல்களும் மிக அருமை.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
சுருக்கு பை
நிகி&மாலினி(மாமி)(மாலினினு அழைக்கலாம் தானே) இதே பாட்டை நாங்களாம் இப்படித்தான் பாடுவோம்.
குத்தடி குத்தடி சைலக்கா!!
குமிஞ்சு குத்தடி சைலக்கா!!
பந்தலிலே பாவக்கா!!
தொங்குதடி லோலாக்கு!!
பைய(ன்) வருவான் பாத்துக்கோ!!
பணம் கொடுப்பான் வாங்கிக்கோ!!
சுருக்கு பைல போட்டுக்கோ!!
சும்மா சும்மா நடந்துக்கோ!!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
குழந்தைப் பாடல்கள்
படங்களிலிருப்பவர் பாலநாயகியின் பையனா? அழகாக இருக்கிறார்.
//டீச்சர் வந்தாங்க, டியூப்லைட் போட்டாங்க// ஆஹா! டீச்சர்னா இவ்வளவுதானா! :-)
முதல் இரண்டு பாடல்களும் எங்கள் பக்கமும் உள்ளவைதான். மீதி அனைத்தும் எனக்குப் புதிது. சிலவற்றுக்கு அர்த்தம் புரியவில்லை. உ+ம் //ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி// அறுசுவைல ரேவதியை, 'ரே!' என்று அழைப்பது தெரியும். :-) 4 x ரே - ரைமிங்குக்காக என்று புரிகிறது. மீதி!! கொட்டாஞ்சி - சிரட்டையா! அதற்கு ரேட்டு!! விளக்கம் ப்ளீஸ்!!
பாடல்கள் சிலவற்றைக் கேட்கையில் அவற்றைச் சின்னவர்களுக்கு ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதன் நோக்கம் புரியவில்லை. ஒரு நாள் சிறுமி ஒருவர், 'பீட்டர் ஓட்டுற ஸ்கூட்டர் வேணுமா? ஸ்கூட்டர் ஓட்டுற பீட்டர் வேணுமா?' என்னும் வரிகள் வரும் 'சிறுவர் பாடல்' ஒன்றைப் பாடிக் காட்டினார். அன்றிலிருந்து எனக்குச் சிறுவர் பாடல்களில் தொனிக்கும் அர்த்தம் என்ன என்று ஆராய்கிற குணம் பிடித்துக் கொண்டது. :-) //காசு பத்தலயாம், கடக்காரன பாத்து கண்ணடிச்சாலாம்.// :-) இதையெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு, 'சின்னவர்களைச் சினிமா கெடுக்குது; சினிமாப் பாட்டுக் கெடுக்குது,' என்போம். :-) பிள்ளைகள் அர்த்தம் கேட்டால் விபரிக்க வேண்டும் அல்லவா! அந்தப் பாடலின் முதல் இரண்டு சொற்கள் கூட... எனக்கும் அர்த்தம் தெரியாது, ஆனால் ஊகிக்க முடிகிறது. //சூடு வையுங்க// ;( யாராவது இப்போதைய சின்னவர்களுக்கும் இந்த மாதிரிப் பாடல்களெல்லாம் சொல்லிக் கொடுக்கிறீர்களா? சின்னவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடல்கள் வெறுமனே சொற்களின் குவியலாக மட்டும் இருக்கக் கூடாது. நல்லதைச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும், சிலவற்றைத் தவிர்க்கலாம் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.
பாடல் 10 - விநாயக சதுர்த்தியன்று ஃபேஸ்புக்ல சிலர் 'கணபதி பாப்பா மோரியா' என்று போட்டிருந்ததைப் படித்திருக்கிறேன். என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. தமிழ் அல்லவென்று நினைக்கிறேன். சமஸ்கிருதம் போலவும் தெரியவில்லை. இதையும் விளக்கினால் புரிந்துகொள்வேன்.
~~~~~~~
மகி... அது நீங்களாக எழுதவில்லை என்பது தெரியும். ;))
- இமா க்றிஸ்
குழந்தைப் பாடல்கள்
நாங்க பாண்டிச்சேரியில் இருந்தபொழுது பக்கத்து வீட்டு பாட்டி நிறைய சொல்லுவாங்க. அவற்றில் ஒன்று
பாப்பா பாப்பா என்ன வேண்டும்? பழம் வேண்டும்
என்ன பழம்? பலாப்பழம்
என்ன பலா? வேர்ப்பலா
என்ன வேர்? வெட்டிவேர்
என்ன வெட்டி? விறகு வெட்டி
என்ன விறகு? மர விறகு
என்ன மரம்? பனை மரம்
என்ன பனை? தாளி பனை
என்ன தாளி? விருந்தாளி
என்ன விருந்து? மண விருந்து
என்ன மணம்? பூ மணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா !
இதே போல இன்னொரு பாட்டு கூட உண்டு. அதனுடைய ஆரம்பம் தெரியல.
என்ன வாழை? கற்பூர வாழை
என்ன கற்பூரம்? ரச கற்பூரம்
என்ன ரசம்? மிளகு ரசம் ........ இப்ப்டி போகும்.
குழந்தைப் பாடல்கள்
(சாஞ்சாடம்மா சாஞ்சாடு)
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக் கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
குட்டிப் பெண்ணே சாய்ந்தாடு
மணிப் புறாவே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
குழந்தைப் பாடல்கள்
அன்பு இமா,
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. \\Rain Rain go away \\ என்ற பாடலை நம் இந்தியாவில் குழந்தைகளின் வாயினால் பாடவைக்கலாமா என்ற சர்ச்சை எங்களுக்குள் ஒருமுறை வந்ததிலிருந்து நானும் கூட இதை பற்றி யோசிப்பதுண்டு. பின்வரும் பாடல் எங்கள் ஊரில் பாடும் பாட்டு என அங்குள்ள பிள்ளைகள் சொல்ல கேட்டிருக்கிறேன். இன்னும் நிறைய வரும். மறந்துவிட்டது.
\\ முக்குவன் பிள்ளை முறுக்கு சுட்டு
வாணியன் பிள்ளை வாங்கி பறிச்சி
தட்டான் பிள்ளை தட்டி பறிச்சி
கொல்லன் பிள்ளை கொண்டோடுச்சி \\
எல்லாமே இனத்தை குறிப்பனவாகவும், பிடிங்கிட்டு போகிறதாகவும் இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு எல்லா பிள்ளைகளும் வேற்றுமை பாராது அப்போது விளையாடுவாங்களாம். அதை குறிக்கவே இந்தப் பாடல்னு சொன்னாங்க. அதனால் தான் இதை பதிந்தேன். மன்னிக்கவும்.
அன்புடன்
ஜெயா
குழந்தைப் பாடல்கள்
//எல்லா பிள்ளைகளும் வேற்றுமை பாராது// :-) என் மனதிலுள்ளதைச் சரியாகச் சொல்லுவேனா என்று சந்தேகத்தோடு இந்தப் பதிலைத் தட்டுகிறேன் ஜெயா. //மன்னிக்கவும்.// அதுல்லாம் வேணாம். நான் உங்க பாடலைப் பார்க்காமல் போட்ட கமண்ட் அது.
//எல்லா பிள்ளைகளும் வேற்றுமை பாராது அப்போது விளையாடுவாங்களாம்.// இந்தப் பாடல் வரி தெரிந்த குழந்தைகளுக்கு நிச்சயம் பிறந்த நாடு, பேசும் மொழி எல்லாம் கடந்து இன்னொன்றும் இருப்பது தெரிய வருகிறதே!! 'வேற்றுமை' பாராட்ட பெரியவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சின்னவர்களுக்கு ஒரு வயது வரை, 'வேற்றுமை' என்கிற ஒன்று இருப்பது தெரியாது. பிறகு அதைச் சுற்றியுள்ள உலகம்தான் அறிமுகப்படுத்தி வைக்கிறது. சின்னவர் இந்தப் பாடலுக்கு அர்த்தம் கேட்டார்களானால் கொஞ்சம் தெரிய வருமல்லவா! வேற்றுமை பாராட்டக் கூடாது என்று சொல்லிக் கொடுப்பதை விட வேற்றுமை என்கிற வார்த்தையை அறிமுகம் செய்யாதிருப்பது நல்லதில்லையா! தானாகத் தெரியவந்தால் அப்போது வேற்றுமை பாராட்டாமலிருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லலாம்.
:-) பாலநாயகி, அவங்க போட்ட போஸ்ட்டோட நோக்கத்தையே வேற ட்ராக்ல கூட்டிப் போறேன்னு என் மேல கோச்சுக்கப் போறாங்க. இமா கிளம்பிட்டேன். இனி இந்தப் போஸ்ட் பக்கம் வர மாட்டேன். டாட்டா ஜெயா.
- இமா க்றிஸ்
:) :)
~~
மகி... அது நீங்களாக எழுதவில்லை என்பது தெரியும். ;))
~~/////அதானே...இல்லன்னா "குழந்தைக் கவிஞர்" -அடை மொழியோடு அல்லவா இருப்பேன்?? ஹிஹ்ஹி..ஹி!
~~
வந்ததுக்கு ஒரு பாட்டு..
~~
கை வீசம்மா கைவீசு
கடைக்கு போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கை வீசு..
~~
அன்புடன்,
மகி
ஞாபகம் வருதே!!
நானும் வந்ததுக்கு ஒரு பாட்டு... இது என் அறுசுவைத் தோழி ஒருவர் சொல்லிக் கொடுத்தது. :-))
//சின்ன சின்ன வாத்து.. சிங்கார வாத்து
அங்குமிங்கும் ஓடுது தன் அம்மாவை விட்டு
அம்மா பேச்சைக் கேட்காத சின்ன வாத்து
சிறகை விரித்து சிங்காரமாய் பறந்து போனது
காத்திருந்த பருந்தோ விரைந்து வந்தது
சின்ன வாத்தை கொத்திச் செல்ல பறந்து வந்தது
அம்மா வாத்து ஓடி வந்து சண்டை போட்டது.
தோற்றுப் போன பருந்தோ பறந்து போனது.//
- இமா க்றிஸ்
பால நாயகி
ஹாய்,
எல்லோரையும் பிள்ளைகளாக்கி பள்ளியில் சேர்த்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.
''மா மரத்தில் ஏறலாம், மாங்காயைப் பறிக்கலாம்
தென்னை மரத்தில் ஏறலாம் தேங்காயைப் பறிக்கலாம்
புளிய மரத்தில் ஏறலாம் புளியங் காயைப் பறிக்கலாம்
வாழை மரத்தில் ஏறலாம் வழுக்கி, வழுக்கி விழலாம்'' என் ஞாபகத்தில் வந்தப் பாடல் இது தாங்க.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
தோழிகளே...
மகி, அருள் சிவம், இமா, ஜெயா, ரஜினிபாய், அனைவருக்கும் நன்றி. அப்பா எவ்ளோ எவ்ளோ பாட்டு. எப்டியோ எல்லாரையும் பாட வெச்சிட்டேன். இதுல நிறைய நிறைய சந்தோஷம். எல்லாருக்கும் சின்ன வயது ஞாபகம் கொஞ்சம் எட்டி பார்த்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ என்னால முடிஞ்சது.
எல்லாம் சில காலம்.....
இமா
படத்தில் இருப்பது சாக்ஷாத் என் மகனே தான். வாலு. அவனுக்காக தான் இந்த பாடல்களைத் திரும்பவும் நினைவுக் கூர்ந்தேன்.
//டீச்சர் வந்தாங்க, டியூப்லைட் போட்டாங்க// ஆஹா! டீச்சர்னா இவ்வளவுதானா! :-)// அவங்க டியூப்லைட் போட்ட நேரம் அது வேல செய்ல. அத சரி செய்து ஆன் பண்றதுக்குள்ள அவங்க பீரியட் முடிஞ்சி போச்சி. என்ன பண்றது? அன்னிக்கு அவங்க வேல அவ்ளோ தான். பாவம்ங்க மழை கொட்டுது பயங்கர இருட்டு. இல்லன்னா அந்த இருட்டுல புள்ளைங்க என்ன படிக்கும்? அதான்.
//ரேட்டு கொட்டாஞ்சி//கை குழந்தையை மூத்த மகளிடம் வீட்ல விட்டுட்டு அம்மா வெளில போயிருக்காங்க. திரும்பி வரதுக்குள்ள அது அழுது. மூத்தவள்னா அவளும் சிறுமி தான். அவளுக்கு அவளோட மழலை மொழில என்ன பாட்டு வருமோ அத தான் பாடுவா. அர்த்தம் சொல்லி பாட அவளுக்கு அனுபவம் போதாது. ரே ரே ரே ரே ரே னு பாடறதே தாலாட்டு தான். அதன் பின் அவளுக்கு தங்கச்சிய கொஞ்ச வார்த்த தெரில. ரைமிங்கா தங்கச்சி கொட்டாஞ்சினு பாடிட்டா. அம்மா வரும் நேரம் ஆச்சி அழாம தூங்குனு பாடறா. என் அக்கா கூட என்னை பார்த்து இந்த பாட்டு பாடி இருக்கா. ஒரு வேலையா வேற வார்த்தையா கூட இருக்கலாம். மழலை மொழில மருவி இது போல வந்து இருக்கலாம்.
எல்லாம் சில காலம்.....
இமா
பீட்டர் ஓட்டுற ஸ்கூட்டர் வேணுமா? ஸ்கூட்டர் ஓட்டுற பீட்டர் வேணுமா? இதை எளிதாக ஸ்கூட்டர் வேணுமா பீட்டர் வேணுமானு கேக்கலாம். குழப்பத்துக்காக இப்படி. படுத்துகிட்டு போத்தனாலும் போத்திகிட்டு படுத்தாலும் ஒன்னு தான?
//காசு பத்தலயாம், கடக்காரன பாத்து கண்ணடிச்சாலாம்.// இந்த பாடலை நான் பதிவு போடும் போது நிஜமாக உங்களை நினைத்தேன். உண்மையாக மற்றவர்கள் இதை கேட்க மாட்டாங்கனு எனக்கு தெரியும். உண்மையாகவே நீங்க இப்டி ஒரு கேள்வி கேப்பிங்கனு எனக்கு தோன்றியது. ஆனால் குழந்தைகள் கண்ணடிப்பது அழகு. நாங்கள் குழந்தைகளை கண்ணடிக்க சொல்லி கேட்போம். இதனால் குழந்தைக்கு கண் வாய் போன்ற உறுப்புகள் சொல்லி கொடுக்காமல் இதன் மூலம் எளிதாக புரியும். நீங்க ஏன் பெரியவர்கள் இடத்தில் இருந்து யோசிக்கிறீர்கள்? குழந்தைகள் இடத்தில் இருந்து யோசித்தால், கண் அடித்து ஐஸ் வெக்கறாங்க அவங்க. அவ்ளோதான். இதை யாரும் கடையில் போய் செய்ய போவதில்லை. நீங்க ஏன் வேற மாறி யோசிக்கறீங்க. இந்த பாட்டு பாடி முடிக்கும் போது பாடிட்டே கண்ணடிப்போம். இது வாய்க்கும் கண்ணுக்கும் சிறு பயிற்சியும் (excersise) கூட.
எல்லாம் சில காலம்.....
இமா
//:-) பாலநாயகி, அவங்க போட்ட போஸ்ட்டோட நோக்கத்தையே வேற ட்ராக்ல கூட்டிப் போறேன்னு என் மேல கோச்சுக்கப் போறாங்க.// இமா நான் அறிமுக பகுதியிலேயே சொன்னேன். எல்லாவற்றிலும் சரி என்றால் பாராட்டி, தவறுனா அழகா சொல்லி கொடுக்கும் அம்மா நீங்கனு உங்க மேல என்னால எப்டி கோச்சிக்க முடியும்? நீங்க தாளாரமா உங்க கருத்தை பதிவிடலாம். நீங்க என்ன பண்ணாலும் உங்க மேல எனக்கு கோவமே வர மாட்டுது. நீங்க என் செல்ல அம்மாவாச்சே!!! ;)
எப்டியோ கடைசில உங்களையும் பாட வெச்சிட்டோம்ல ;)
எல்லாம் சில காலம்.....
ஞாபகம்
இந்தப் பாட்டில் ஒவ்வொரு வரியிம் முதல் எழுத்தும் உயிர் எழுத்தைக் குறிப்பிடும்.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூற ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்வேன்
ஒப்புரவென்பது பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம். (என் மகளுக்குப் பிடித்தமான, அவள் அடிக்கடி பாடும் தமிழ் பாடல் இது)
குழந்தை மடியில் அமரும் பருவத்தில் குழந்தையின் கைகளை பிடித்து கைத்தட்டி பாடும் ஓரு பாடல் இதோ
தட்டாங்கி கொட்டும் பிள்ள (பிள்ளை)
தயிருஞ் சோறும் திங்கும் பிள்ள
அப்பஞ்சுட்டா(ல்) திங்கும் பிள்ள
அவல் இடிச்சால்(இடித்தால்) திங்கும் பிள்ள.
இந்தப் பாட்டு இப்போதும் எங்கள் வீட்டில் பழக்கத்தில் உள்ளது:)) என் பெரிய மகள் அவ தங்கையை மடியில் வைத்துக் கொண்டு அடிக்கடி பாடும் ஒரு பாட்டு இது.
அப்புறம், சாய்ந்தாடு பாடலில் இன்னும் ஒரு வரியும் உண்டு.
தங்க சிலையே சாய்ந்தாடு.
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு.
எங்க அம்மா பாடும் தாலாட்டுப் பாடல்கள் சிலவற்றின் வரிகள் எனக்கு மறந்து விட்டன:((
பாடல்
தோ தோ நாய்க் குட்டி
துள்ளி வா நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
வீரமான நாய்க்குட்டி
எலியைப் பிடிக்க ஓடும்
புலியைப் போல பாயும்
வாலை வாலை ஆட்டும்
காலை காலைப் பிடிக்கும்
எங்கள் வீட்டு நாய்க் குட்டி
அணில் பாட்டு:
அணிலே அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துத் கொறித்துத் தின்னலாம்
இன்னும் ஒரு பாடல்
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவீ குருவீ கொண்டைக்குப் பூக் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
வாத்து
குள்ள குள்ள வாத்து
கழுத்தை மெல்ல சாய்த்து
அக்கம் பக்கம் பார்த்து
ஆடு ஒரு கூத்து