'குணசிறி புல்டோ' (bulto toffee from Sri Lanka)

யாரிடமாவது 'புல்டோ' (bulto toffee) செய்முறை கிடைக்குமா? கொடுத்து உதவ முடியுமா?

:-) நான் பார்வையாளராக மட்டும் இருந்து பார்க்கப் போகிறேன் ஜெயா.

எங்கள் பக்கம் மூன்று வகைக் கருப்பட்டிகள் புழங்கின. கித்துள் கருப்பட்டி, பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி. மூன்றுக்கும் சுவை வேறுவேறு. எல்லாவற்றையும் சர்க்கரை என்று பொதுவாக ஒரு பெயரிட்டு அழைப்போம். வெண்பளிங்காக, பொடியாக இருப்பது சீனி; பெரிதாக இருந்தால் கற்கண்டு என்போம். பனை வெல்லம் என்கிற வார்த்தைப் பயன்பாடு இருக்கவில்லை. பனக்குட்டானில் கொஞ்சம் சுண்ணச்சுவை தூக்கலாக இருக்கும். பனங்கற்கண்டு... பார்க்கவே அழகு. இந்தியாவில் வேறு மாதிரிச் சொல்வது தெரியும்.

குழப்பம் பலருக்கு இருக்கிறது ஜெயா. கூகுள் சர்ச் போட்டுப் பாருங்கள். எல்லாவற்றுக்கும் எல்லாப் படங்களும் வருகிறது. :-) இங்கு யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். :-)

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் தோழிகளே கருப்பட்டியும் பனை வெல்லமும் ஒன்றே.வெறும் வெல்லம் என்று குறிப்பிடுவதற்குப் பதில் பனை வெல்லம் என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் ஒருமுறை மன்னிக்கவும்.
தமிழ்நாட்டில் பொதுவாக‌ கருப்பட்டி/பனை வெல்லம் என்றால் பனை மரத்தின் பதநீரில் இருந்து எடுப்பதையே குறிக்கும். இது சற்று கருனிறத்தில்(பிரவுன்) இருக்கும்.தேங்காய் சிரட்டையின் அச்சில் வார்க்கப்பட்டிருக்கும்.
வெல்லம் என்பது கரும்புச்சாறில் இருந்து எடுக்கப்பட்டது. இது பொன்னிறத்தில்(கொல்டன் பிரவுன்) இருக்கும். இதில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் என்று இரு வகை. அச்சு வெல்லத்தில் சிறிது உப்பு இருக்கும்.
பனங்கற்கண்டு என்பது பனை மரக் கள்ளில் இருந்து எடுக்கப்பட்டது. கண்ணாடிப்போல் சிறு சிறு துண்டுகளாக‌ இருக்கும், இது அதிகமாக‌ மருந்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

2008ல் நான் கேட்ட கேள்வியை நினைவில் வைத்திருந்து சுரேஜினியும் உமா டன்ஸ்டனும் புல்டோ செய்முறையை என்னோடு பகிர்ந்திருந்தார்கள். இருவருக்கும் என் அன்பு நன்றிகள். நேற்று முயற்சி செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது.

முன்பே மிட்டாய்களைச் சுற்றுவதற்கான கடதாசியை அளவாக வெட்டி வைத்துவிட வேண்டும். ஒரே சமயம் இரண்டு அடுப்புகளில் வேலை செய்ய வேண்டும், அதனால் இரண்டு பாத்திரங்கள் & இரண்டு தனிக் கரண்டிகள் வேண்டும். பதம் பார்க்க ஒரு குட்டிக் கரண்டி தேவை. கை துடைக்க ஒரு துண்டு, மிட்டாய் உருட்ட ஒரு பலகை, பாக்குவெட்டி / கத்தி, வாழை இலை - இத்தனையும் தயாராக வைத்துவிட்டு வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

350 மி.லீ கெட்டியான தேங்காய்ப்பாலை ஒரு அடுப்பில் சுட வைத்து (கொதிக்கக் கூடாது.) அடுப்பைக் குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த அடுப்பில் 200 கிராம் சீனியைக் கருக்கி (காரமல் பதம்) - இதற்குச் சரியாக வரத்தக்கதாக பால் இருக்கும் அடுப்பைச் சற்றுத் தூண்டி விடலாம். பாலை காரமலில் மெதுவே ஊற்றிக் கொண்டு கலக்கிக் கொள்ள வேண்டும். (ஊற்றுவதற்கு துணைக்கு ஆள் இருப்பது நல்லது. ஆவி சர்ரென்றி கிளம்பிக் கொண்டு இருந்தது.) அடிப்பிடிக்காமல் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை தேவைக்கு ஏற்றபடி கூட்டிக் குறைக்கலாம். உலர்ந்த உலோகக் கரண்டியின் பின்பக்கம் ஒரு துளி கலவையை வைக்க, திரட்டக் கூடியதாக இருக்க வேண்டும் - இதுதான் பதம். கலவையை வாழையிலையில் குவியலாகக் கொட்டிவிடவேண்டும். சில நிமிடங்கள் விட்டு கலவையின் ஒரு ஓரமாகக் கொஞ்சம் கிள்ளி (சூடு பொறுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால் கை வெந்து போகும்.) திரட்டிக் கொண்டு பலகையில் போட்டு நீளமாக உருட்டி (இதற்குள் மெதுவே இறுக ஆரம்பித்திருக்கும்.) ஒரே அளவாக துண்டுகள் போட்டு முதலில் ஒரு கடதாசியில் சுற்றி, மேலே பெரிய கடதாசித் துண்டு ஒன்றில் மிட்டாய் சுற்றுவது போல் அலங்காரமாகச் சுற்றி, ஆறியதும் காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகக் கலவை முழுவதையும் உருட்டி வெட்டி வைத்துவிட்டு பிறகு சுற்ற ஆரம்பிப்பது நல்லது. கலைவையை எடுக்கும் போது வெளி ஓரமாக வட்டமாகச் சுற்றி எடுத்துக் கொண்டே வந்தால் கலவை இறுகுவதற்குள் முழுவதையும் பிடித்து முடித்துவிடலாம். இதற்கு துணைக்கு யாரையாவது வைத்துக் கொள்ள வேண்டும். இடைக்கிடை கையைத் துடைத்துக் கொள்வது அவசியம். அல்லாவிட்டால் கையில் எண்ணெய் சேர்ந்து உருட்டுவது சிரமமாகும்.

முழுவதையும் உருட்டும் முன் இறுகிவிட்டாலும் மீண்டும் இளக்கி எடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளி வாழை இலையில் வைத்து 10 விநாடிகள் மைக்ரோவேவ் செய்ய, உருட்டும் பதம் வந்துவிடுகிறது. மீண்டும்... கை கவனம்.

ஒருவிதமாக என் பல வருட தேடல் நிறைவுக்கு வந்திருக்கிறது. :-) அறுசுவைக்கு நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்