பருப்பு உருண்டை குழம்பு

தேதி: October 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (9 votes)

 

கடலைப்பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - அரை கப் + 3 மேசைக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
பீட்ரூட் - கால் பாகம்
இஞ்சி - கால் அங்குல துண்டு
பூண்டு - 16 பல்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 2 கொத்து
கறிவேப்பிலை - 2 கொத்து
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - ஒன்று
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட் மற்றும் பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை தனித்தனி பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் ஊற வைத்த துவரம் பருப்பை முதலில் எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு போட்டு அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, ஒன்றரை தேக்கரண்டி சோம்பு போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து மிக்ஸியில் கடலைப்பருப்பை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த அரைத்த பருப்புடன் துருவிய கேரட், பீட்ரூட், பொடியாக நறுக்கின வெங்காயம், தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு கலந்துக் கொள்ளவும்.
கலந்தவற்றை உருண்டையாக பிடித்து இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு ஒரு முறை வதக்கி விட்டு அதனுடன் பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கி விடவும்.
2 நிமிடம் கழித்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்க்கவும்.
பிறகு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றவும். மேலும் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி 8 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
மிக்ஸியில் முக்கால் கப் தேங்காயை போட்டு முக்கால் தேக்கரண்டி சோம்பு, இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். குழம்பை திறந்து அரைத்த விழுதை ஊற்றி மிக்ஸியில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து ஊற்றவும். மேலும் கால் கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் வேக வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வைத்து விடவும். அதில் கொத்தமல்லித் தழையை தூவி பரிமாறவும்.
கேரட், பீட்ரூட் சேர்ந்த கலர்புல்லான பருப்பு உருண்டை குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பைக் கொடுத்திருக்கும் விதம் அருமை. அதிலும் குறிப்பாக‌, மண்சட்டியில் சமைத்திருப்பது, பார்க்க அழகாக‌ இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

நான்கு நாளைக்கு முன் அம்மா செய்தார்கள். ஆனால் காய்கறிகள் போட மாட்டோம். காய் சேர்த்து செய்து பார்க்கணும். இதற்கு நாங்கள் சின்ன வயதில் வைத்த பெயர் 'பால்ஸ் கிரேவி'

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

உருண்டை குழம்பு சூப்பரா இருக்கு. நான் காய் கறி சேர்த்து செய்ததில்லை. வித்யாசமா இருக்கு. இது போன்றும் செய்து பார்கிறேன். குறிப்பு நன்கு விளக்கமாக‌ அருமையாக‌ உள்ளது.

எல்லாம் சில‌ காலம்.....