எத்தனை வகைகள்? எத்தனை விதங்கள்? ‍பகுதி 1

சமீபத்தில் ஒரு பெண்மணி சொன்னார் – இப்பல்லாம் பர்கர், பிஸ்ஸா, சப்வே, கேஎஃப்ஸின்னு எத்தனை வித விதமா சாப்பிடறாங்க, நம்ம காலத்துல எல்லாம் இப்படியா? நாம என்னத்தைக் கண்டோம்’ என்று புலம்பினார்.

எனக்கன்னவோ இதை ஒத்துக் கொள்ள முடியலை. காரணம், அவங்க சொன்ன அந்த ‘நம்ம காலம்’, ‘அந்தக் காலம்’ , ‘எங்க காலம்’, எல்லாத்தையும் பாத்துட்டுத்தான் வந்திருக்கேன்.

வெரைட்டி, விதங்கள், வகைகள் எல்லாத்தையும் அந்தக் காலத்துல இருந்தே செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் எதையும், எல்லாவற்றையும் பண்டிகைகளுடன் இணைத்து, விதவிதமான வகை வகையான சாப்பாடு.

பண்டிகைகள் பற்றி நினைக்கும்போதே, எங்க வீடுகளில் பக்தி என்பதை விட, அவை சம்பந்தப்பட்ட உணவுத் தயாரிப்புகளுக்கு நாங்க செய்யும் ஏற்பாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கும், என்றுதான் தோன்றுகிறது.

மளிகை சாமான் வாங்கும்போது, அந்த மாசம் என்ன பண்டிகை, அதற்கு செய்ய வேண்டிய சிறப்பு உணவுகள், அதுக்காக என்னென்ன வாங்கணும் என்று திட்டமிடுவோம்.

பண்டிகை அன்னிக்கு செய்ய வேண்டிய சிறப்பு உணவுகளை பரபரப்பாக செய்துட்டு, சாமி முன்னால வச்சு, சும்மா சாஸ்திரத்துக்கு ஒரு காட்டு காட்டிட்டு, மொக்கு மொக்குன்னு மொக்கிடுவோம்.

சித்திரை மாசம் பிறந்தவுடன் சித்திரை முதல் தேதியன்னிக்கு அவலில் வெல்லப்பாகு தேங்காய் கலந்து இனிப்பு, வேப்பம்பூ ரசம், மாங்காய் பச்சடி, சாம்பார், அவியல் என்று அமர்க்களமாய் செய்து சாப்பாடு. வருட முதல் நாளில் அறுசுவையும் இருக்கணும் என்பதற்காக இந்த மெனு.

நாம்தான் வருடம் 365 நாட்களும் அறுசுவையோடுதான் இருக்கிறோம் என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

அப்புறம் சித்திரா பவுர்ணமி அன்னிக்கு ஆறு இருக்கிற ஊர்களில், சித்திரான்னங்கள் செய்து எடுத்துகிட்டு, ஆற்றங்கரைக்குப் போய், நிலவொளியில் உட்கார்ந்து, கூட்டம் கூட்டமாக பேசிக்கிட்டு, சாப்பிட்டுட்டு வருவாங்க. நாம பேசாம நம் வீட்டு வாசலில், மொட்டை மாடியில் உக்காந்து சாப்பிடலாம்.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா பிரமாதமா நடக்கும். அதுக்கு சுத்துப் பட்டு கிராமங்களில் இருந்து வண்டி கட்டிக்கிட்டு, மதுரைக்கு வருவாங்க. வண்டிகளின் மேலே, சரம் சரமா, உப்புக் கண்டம் கட்டி, தொங்க விட்டிருப்பாங்க. வண்டிகளை அங்க அங்க நிறுத்தி, கொண்டு வந்திருக்கும் பொருட்களை வச்சு, சமைச்சு சாப்பிடுவாங்க.

சித்திரா பவுர்ணமி விரதம்னு சொல்லி, அரிசி சேர்க்காம, பாசிப்பருப்பு கஞ்சி செய்வாங்க. வெல்லமும் பாலும் சேர்த்து, வெயிலின் உஷ்ணத்தைத் தணிக்கும் சூப்பரான உணவு இது.

வைகாசியில் எதுவும் ஸ்பெஷல் இருக்கான்னு தெரியல. அதே போலதான் ஆனி மாசமும். (ரெண்டு மாசம் போனாப் போகுதுன்னு ரெஸ்ட் விட்டுடுவாங்கன்னு நினைக்கிறேன்)

ஆடி பிறந்தாச்சா, அமர்க்களம் ஆரம்பம். ஆடிக் கும்மாயம், ஆடிக் கூழ், இது தவிர, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி இப்படி சொல்லிக்கிட்டு, வடை பாயசம் பணியாரம்னு செய்து சாப்பாடு நடக்கும்.

ஆவணி பிறந்தவுடன் பிள்ளையார் சதுர்த்தி, இதை முன்னிட்டு விதவிதமா பழங்கள், கொழுக்கட்டை, வடை, பாயசம், இப்படி.

எப்படியும் பண்டிகைன்னா மத்தியான மெனுவில் சாம்பார், ரசம், அவியல், பச்சடி, அப்பளம் இருக்கும். (தீபாவளி தவிர)

இந்தக் கொழுக்கட்டையில்தான் எத்தனை? பூரணம் – அதுவும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்பு/பாசிப்பருப்பு பூரணம், பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்து, அப்புறம் வெல்லம் சேர்த்து பிடி கொழுக்கட்டை இப்படி வெரைட்டிக்கு ஒரு அளவே கிடையாது. இதோட சுண்டல், வடை – வடையிலும் ஆமை வடை, உளுந்த வடை, என்று ஏதாவது வித்தியாசம் உண்டு.

கோகுலாஷ்டமியை மறந்துட்டேனா- வெல்லச் சீடை, முறுக்கு, அவல் பாயசம், பால் பாயசம், அக்கார அடிசல் என்று தீபாவளியும் பொங்கலும் கலந்து வந்த மாதிரி ஒரு ஃபீலிங்.

அக்கார அடிசல் இருக்கே – இதை பாயசமா, பொங்கலா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

பொங்கல்னா முந்திரிப்பருப்பு நெய் இதெல்லாம் தூக்கலா இருக்கும்.

பாயசத்தில் பால் அதிகம்.

அக்காரவடிசலில் பால், நெய், முந்திரிப்பருப்பு, ஏலக்காய், அதோட பச்சைக் கற்பூரமும் மணக்கும்.

இங்கே கொஞ்சம் நிறுத்தி இந்த இனிப்புகள் பத்திக் கொஞ்சம் –

வெள்ளை நிறத்தில் இருக்கும் சீனியை உபயோகிக்காதீங்க என்று சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டார். எப்படிங்க சீனி இல்லாம இனிப்பு செய்யறதுன்னு நிறைய பேருக்கு யோசனை.

ஆனா, நம்ம மக்கள் ப்ரவுன் நிறத்தில் இருக்கும் இனிப்பிலும் எத்தனை விதங்கள் உபயோகிச்சாங்க தெரியுமா?

மண்டை வெல்லம் – சர்க்கரைப் பொங்கலுக்கு, அதிரசத்துக்கு, பாயசத்துக்கு.

அச்சு வெல்லம் – சர்க்கரைப் பொங்கல், பணியாரம், குழந்தைகளுக்கு வெறுமனேயே சாப்பிடக் கொடுக்க.

கருப்பட்டி – களி செய்வாங்க, கருப்பட்டி காஃபி போடுவாங்க.

பனங்கல்கண்டு – பால், அப்புறம் பதனப்படுத்தி வைக்கும் இனிப்புக்கு. –

திருச்செந்தூருக்கு யாராவது போனா ‘சில்லுக் கருப்பட்டி’ வாங்கிட்டு வரச் சொல்லுங்க. பனை ஓலையால் செய்த கொட்டானில் (ஓலையில் செய்த பெட்டி) பாக் பண்ணி விப்பாங்க. சுக்கு, கருப்பட்டி சேர்த்து செய்த இனிப்பு இது. களைப்பா இருக்கு, ஏதாவது சாப்பிடணும்னு தோணுறப்ப, ஒரு சில்லு எடுத்து வாயில் ஒதுக்கிக்கிட்டா அவ்வளவு நல்லாயிருக்கும் தெரியுமா! பாக்கெட்டில் விற்கும் குளுகோஸ் எல்லாம் தேடவே மாட்டீங்க அப்புறம்.

நாட்டுச் சர்க்கரை – இது சீனி மாதிரி தூளாக இருக்கும். எலுமிச்சம்பழ ஜூஸ், பானகம் இதிலெல்லாம் சேர்ப்பாங்க.

இது தவிர தேன் சேர்த்தும் பழங்கள் சாப்பிடுவாங்க.

மேலே சொன்ன இனிப்பு ஊக்கிகள் ஏதாவது வாங்கறோமா இப்ப.

இவை எல்லாமே இரும்புச் சத்தும் இயற்கையான சுவையும் உள்ளவை.

ஆச்சா, அடுத்ததா புரட்டாசி – கேக்கவே வேணாம் – இந்த மாசம் – சுண்டல் மாசம்!!

பட்டாணி சுண்டல், பாசிப்பயறு சுண்டல், பாசிப்பருப்பு சுண்டல், கடலைப்பருப்பு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டல்(இதிலும் கருப்பு, வெள்ளை, சின்னது என்று உண்டு), அதோட பொட்டுக்கடலையைப் பொடிச்சு, சர்க்கரைப் பொடியைக் கலந்து ஒரு பொடி தருவாங்க, சூப்பராக இருக்கும். இதை எப்படி சாப்பிடுவது என்று என் பள்ளித் தோழியின் வீட்டுக்கு கொலுவுக்குப் போனப்ப அவ சொல்லித் தந்தது இன்னும் நினைவு இருக்கு.

‘நிறைய அள்ளி வாயில் போட்டுடக் கூடாது, புரை ஏறிடும், கொஞ்சம் கொஞ்சமா நாக்கில் வச்சு, ரசிச்சு சாப்பிடணும்’ என்று அவ சொன்ன மாதிரி சாப்பிட்டது, மனசில் இன்னும் தித்திக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவங்க வீட்டில் சாப்பிடக் கூப்பிடுவாங்க. வடை, பாயசம், சித்திரான்னம், என்று வயிறும் மனசும் நிறையும்.

சரஸ்வதி பூஜை – இதில் கொழுக்கட்டை கிடையாது. மத்தபடி பழங்கள், சுண்டல், வடை, பாயசம் உண்டு.

இந்த சீசனில் கிடைக்கும் நாவல் பழம், அப்புறம் விளாம்பழம். இதை குலுக்கிப் பார்த்து ஒட்டாமல் இருக்கான்னு பாப்பாங்க. அதை உடைச்சு, உள்ளிருக்கும் சதைப் பற்றில் இனிப்பு கலந்து தருவாங்க.

அதோட எள்ளுருண்டையும் ஸ்பெஷலாக செய்வாங்க.

ஆஹா ஐப்பசி பொறந்தாச்சு! தீபாவளி வந்தாச்சு! ஸ்வீட், காரம் இதெல்லாம் கணக்கே கிடையாது. அசைவம் சாப்பிடும் வீடுகளில் மட்டன் சமைப்பாங்க. மதுரையில் எங்க வீட்டுகிட்ட ஒரு கசாப்பு கடை இருந்தது. தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடியே 3-4 எக்ஸ்ட்ரா ட்யூப் லைட் கட்டி, ஜெகஜ்ஜோதியாக இருக்கும் தீபாவளிக்கு முதல் நாள் விடிய விடிய ஆடு உரிச்சு, தொங்க விட்டு, விப்பாங்க.

சைவ வீடுகளில் தீபாவளி மதியத்துக்கு சாப்பாடு சிம்பிளா வத்தக் குழம்பு, சுட்ட அப்பளம் இப்படித்தான் இருக்கும். ஏன்னா, பலகாரம் சாப்பிட்டே வயிறு ரொம்பிப் போயிடும் இல்லையா.

ஓடிடுச்சு தீபாவளி, வந்துடுச்சு கார்த்திகை. இதுக்கு பொரி உருண்டை, அப்பம், மாவிளக்கு – இந்த மாவிளக்கிலும் ரெண்டு வகை, ஒண்ணு வெல்லமும் பச்சரிசி மாவும் கலந்து பிசையறது, இண்ணொன்னு பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து, அதோட விளக்கு மாதிரி செய்து, அதில் நெய் ஊத்தி விளக்கு ஏத்துவாங்க. நெய்யில் ஊறி, விளக்கு ஏத்தினதால் லேசா கருகி, அந்த விளக்கு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.(காரைக்குடி பக்கம் விரதத்துக்கு/நோன்புக்கு இதே மாதிரி செய்வாங்கன்னு நினைக்கிறேன்.)

அப்புறம் மார்கழி – பீடை மாசம்னு சொல்றதெல்லாம் சும்மா. சாப்பிடுவதில் எந்தக் குறையும் வைக்கறதில்லை. காலையில் தூக்கத்தை கொஞ்சம் தள்ளி வச்சுட்டுப் போனால், மாசம் முப்பது நாளும் கோவிலில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை கிடைக்கும்.

இதோட திருவாதிரைக் களி, அதுக்கு காய்கறி சேர்த்த தாளகக் குழம்பு.

அனுமார் பெயரை சொல்லி வடை.

அப்புறம் வைகுண்ட ஏகாதசி வந்தால் ஒரே ஜாலிதான். ஏன்னா, அன்னிக்கு மூணு வேளையும் பலகாரம்தான்.

மதியத்துக்கு சாதம் கிடையாது. அதுக்குப் பதிலா சப்பாத்தி, அரிசி உப்புமா, ரவா உப்புமா. இதிலே ஒரு குஷி.

மறு நாள் துவாதசிக்கு நெல்லிக்காய், அகத்திக் கீரை இருக்கும்.

‘அமாவாசையைக் கெடுத்தது அரைக் கீரை, துவாதசியைக் கெடுத்தது துவரம்பருப்பு’ன்னு சொலவடை சொல்லி, சமையலில் பாசிப்பருப்புதான் சேர்ப்பாங்க.

அகத்திக் கீரையைப் பற்றி இங்கே சொல்லிடறேன். இதை அடிக்கடி சாப்பிடக் கூடாதாம். மாசத்துல ஒரு நாள் அல்லது ரெண்டு நாள்தான் சாப்பிடணுமாம்.

அகத்திக் கீரை வயித்துப் புண் வாய்ப் புண்ணை ஆற்றும், ரத்தத்தில் இருக்கும் விஷத்தை முறிச்சிடும் அப்படின்னு சொல்வாங்க. அதே சமயம் அடிக்கடி சாப்பிட்டா, ரத்தத்தையே முறிச்சிடும் அப்படிம்பாங்க. இதுக்கு எனக்கு விளக்கம் தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க.

தை பொறந்தாச்சு. பொங்கல், காய்கறிக் குழம்பு.

எங்க வீட்டில் இருந்த பணியாளர் ஒருவர் திகட்டாம ஒரு பானை சர்க்கரைப் பொங்கல்னாலும் சாப்பிடுவார். எப்படின்னு கேட்டப்ப அந்த ரகசியத்தை சொன்னார். கொஞ்சம் பொங்கல்(அதாவது ஒரு தட்டு நிறைய) சாப்பிட்டதும் திகட்டி, திணறினால், கொஞ்சம் அவியல், குழம்பு சாப்பிடணுமாம். அப்புறம் மறுபடியும் பொங்கல். பேஷ், பேஷ்.

குழந்தைகளுக்கு செய்யறோம்னு சொல்லி சிறு வீட்டுப் பொங்கல்னு ஒரு அவுட்டிங். எல்லாரையும் கூட்டிகிட்டு, வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பூ தச்சு, அலங்காரம் பண்ணி, ஆத்தங்கரைக்குப் போய், அங்கே கும்மியடிச்சு, ஆடிப் பாடி, கொண்டு போன உணவுகளை எல்லோருமாக சந்தோஷமாக சாப்பிட்டுட்டு வருவாங்க.

மாசி மாசம் – நிறைய பேர் குல தெய்வம் கும்பிடப் போவாங்க. இதுக்கு சாப்பாடு கொண்டு போறதுக்கு ஸ்பெஷலாக நிறைய இட்லி, அதுக்கு தொட்டுக்க சிவப்பு மிளகாய் போட்டு கெட்டியாக தேங்காய்த் துவையல், அப்புறம் மிளகாப் பொடியும் எண்ணெயும் கலந்து தனியாக ஒரு பாட்டிலில் இருக்கும். அதோட புளி சோறு, தயிர் சோறு, ஊறுகாய், வத்தல், வடகம்.

ஊருக்குப் போனதும் சாமி கும்பிடுறோமோ இல்லையோ, அதுக்கு முன்னால சாப்பாட்டுக் கடை. வாழை இலைகளை ஒரே மாதிரி கட் பண்ணி, நியூஸ் பேப்பரில் சுத்தி எடுத்துட்டுப் போவோம். அதைப் பிரிச்சு, அதில எல்லோருக்கும் இட்லி, துவையல், பொடி வினியொகம் நடக்கும்.

எத்தனை பேர் போறோம்னு கணக்கு பண்ணி தலைக்கு இத்தனை இட்லி, எதுக்கும் இருக்கட்டும்னு கூடுதலாக ஐந்தாறு பேருக்கும் காணுகிற மாதிரிதான் எடுத்துட்டுப் போவோம். பசிக்கல பசிக்கலன்னு சொல்லிகிட்டே அத்தனையும் காலி ஆகிடும்.

சிவன் ராத்திரி முடிஞ்சதும் பனி விலகி, வெயில் ஆரம்பிச்சுடும்.

மாசி மாசம் பிறந்ததும், கூழ் வடகம், வத்தல் வேலை ஆரம்பிச்சுடும்.

உலகத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச டிஷ் எது தெரியுமா?

எனக்கு மட்டுமில்ல, எங்க வீட்டில் பெரும்பாலானவங்களுக்குப் பிடிச்சதும் அதுதான்.

கூழ் வத்தல் போடுறதுக்கு, புழுங்கலரிசி அரைச்சு, மறு நாள் அதை பச்சை மிளகாய் விழுது, பெருங்காயம் உப்பு சேர்த்து, கூழாக் காய்ச்சி வடக மாவா செய்வாங்க – செம டேஸ்டா இருக்கும்.

இந்த லோக்கல் மேட் கூழை, ஃபாரின் பாரிட்ஜ் ரேஞ்சுக்கு – ஒரு கிண்ணத்தில் போட்டு, ஸ்பூன் வச்சு, துளித் துளியா, ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவோம்.

இதை விட சூப்பரான டிஷ் ஒண்ணு இருக்கு.

காலையில் வடகம் பிழிஞ்சதும், மதியம் 11 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் மாடிக்கும், கிழேயுமா நடப்போம். காக்கா விரட்டறதுக்கு இல்ல.

பிழிஞ்ச வடகம், மேல் பக்கம் காய்ஞ்சு, உள் பக்கம் கூழாவே இருக்கும். அதை பிச்சு பிச்சு சாப்பிட்டா – அடடா, அதுக்கு இணை உலகத்துல இல்லவே இல்ல.

இதே மாதிரிதான் வெங்காய வடகமும். கலந்த மாவு கொஞ்சம், அப்புறம் அரை குறையாக காய்ஞ்ச்து, அதே போல மோர் மிளகாய்க்கு கலந்து காய வச்ச மொளகா – இவையெல்லாம் பழைய சோத்துக்கு சரி ஜோடி. ஒரு குண்டான் சாதமும் சொல்லாம கொள்ளாம காலி ஆகிடும்.

பங்குனி – தெரியல எனக்கு.

இதெல்லாம் பண்டிகைகளோட சேர்த்து வெளுத்து வாங்கற சாப்பாட்டு வகைகள் – அதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம். இப்படி சொல்லிகிட்டே, செய்துகிட்டே, சாப்பிட்டுகிட்டே இருந்துட்டு, ‘ வெரைட்டியே இல்ல’ன்னு சொன்னா எப்படி?

இது மட்டுமா? ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் நடக்கும் முக்கியமான கொண்டாட்டங்களுக்கும் உணவு வகைகள் - ஸ்பெஷல் வெரைட்டிகள்தான்.

அதை அடுத்த பகுதியில் – உடனே உடனே சூட்டோடு சூடாக, சொல்லிடுறேன். ஏன்னா ஆறின கஞ்சி பழங்கஞ்சி ஆகிடும்.

5
Average: 4.8 (6 votes)

Comments

எவ்ளோ பெரிய‌ விஷயத்தை அழகா சொல்லியிருக்கீங்க‌. நிஜமாவே இதுல‌ இருக்கிற‌ நிறைய‌ விஷயம் பாதிபேர்க்கு தெரிஞ்சே இருக்காது. அந்த‌ பாதில‌ நானும் இருக்கேனு, சொல்லிக்க‌ கூச்சமா இருக்குங்க‌..:(

//அகத்திக் கீரை வயித்துப் புண் வாய்ப் புண்ணை ஆற்றும், ரத்தத்தில் இருக்கும் விஷத்தை முறிச்சிடும் அப்படின்னு சொல்வாங்க. அதே சமயம் அடிக்கடி சாப்பிட்டா, ரத்தத்தையே முறிச்சிடும் அப்படிம்பாங்க. இதுக்கு எனக்கு விளக்கம் தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க.\\
திரு. வலம்புரி ஜான் அவர்கள் முன்னாடி டிவில‌ உணவு முறைகளைப்பற்றி அழகாக‌ சொல்வார். அதில‌ அகத்தி கீரைப்பற்றி சொல்லி ஞாபகம் இன்னும் என் நினைவுகளில் இருக்கு.. அகத்தி கீரையில் சுண்ணச்சத்து (Calcium) அதிகம் இருப்பதால் அடிக்கடி சேர்க்காமல் வாரம் ஒருமுறை சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லதுனு சொன்னதாக‌ ஞாபகம். பாகற்காயையும் அதுபோலவே கூறினார். ஏனேனில் பாகல் காய்லயும் அதே சுண்ணாம்புசத்துதான் அதிகம் இருக்கிறது என்பதால்.

அழகா, கோர்வையா விஷயங்களை அடுக்கி சென்றிருக்கிறீர்கள். மிக‌ அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எல்லா மாசத்துக்கும் அருமையா சாப்பாடு ஐட்டங்களை சொல்லியட்டிங்க‌. இந்தந்த‌ பண்டிகைகளுக்கு இன்ன‌ இன்ன‌ உணவு செய்யனும்னு இப்ப‌ தான் எனக்கு தெரியுது. நல்ல‌ பகிர்வு. கீ போர்ட் தனியா கிடைத்ததும் எல்லாருடைய‌ பதிவுக்கும் என் பதிவு வரும். இதை மிஸ் பண்ண‌ முடியல‌. கஷ்டபட்டு அடிச்சுட்டேன். :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அவசரத்தில் படித்துவிட்டு ஓடாமல் ஆறாமர உட்கார்ந்து ரசித்துப் படிக்கவேண்டிய இடுகை என்பது புரிகிறது. நாளைமறுநாள் இரண்டு பகுதிகளின் கீழும் நிச்சயம் என் கமண்ட் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

ஆகா என்ன ருசிப்பு என்ன ரசிப்பு..பேசாம ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க
எல்லாரும் மூட்டையை கட்டிட்டு வந்திடறோம் :)

ஆமா நீங்க சமையல் களஞ்சியமா/புத்தககளஞ்சியமா/டிப்ஸ் களஞ்சியமா?/அன்பு களஞ்சியமா?
இப்படியெல்லாம் கேட்பேனா ?இதெல்லாம் இன்னபிர சேர்த்து எல்லாம் நீங்க தான் :)
நல்ல சுவையுள்ள பதிவும்மா?

இந்த அக்காரவடைசல் மட்டும் பண்னினதேயில்ல நான்..எனக்கு ரகசியமா ஒரு பார்சல் அனுப்புங்கோ

அன்புடன்
இளா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு அருட்செல்வி,

பாராட்டுக்கு மிகவும் நன்றி.

கிட்னியில் கல் இருந்தால், கால்சியம் உள்ள‌ உணவைக் குறைச்சுக்க‌ சொல்றாங்க‌.

பால், தக்காளி, கோஸ் இதெல்லாம் கூட‌ தவிர்க்கணும்றாங்க‌.

எல்லாப் பொருட்களையும் அளவோடு எடுத்துக்க‌ வேண்டியதுதான். வேற‌ என்ன‌ செய்யறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரம்யா,

உங்க‌ பதிவைப் பார்த்ததும் ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு.

அதிகம் வரக் காணோமேன்னு யோசிச்சிட்டுதான் இருந்தேன். கீ போர்ட்தான் காரணமா, பொறுமையாக‌ சரி பண்ணிட்டு வாங்க‌, வெயிட்டிங்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

பொறுமையாகப் படிச்சுட்டு சொல்லுங்க‌ இமா, உங்க‌ பதிவிற்காக‌ ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இளவரசி,

பாராட்டுக்கு மிகவும் நன்றி.

இந்தப் பகுதி அனுப்பும்போதே, எனக்கும் அக்காரவடிசல், கத்தரிக்காய் பொரியல் இதெல்லாம் செய்யணும்னு தோணிடுச்சு:)

குறிப்பு செய்து படங்களுடன் அறுசுவைக்கு அனுப்புகிறேன், அப்படியே உங்களுக்கும் அனுப்பிடறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஒவ்வொரு மாதம்வாரியாக பண்டிகைகளோடு உணவுகளை வரிசைப்படுத்திவரிசைப்படுத்திய விதம் ரொம்ப ரொம்ப அருமைங். . படிச்சதே அவ்வளவும் சாப்பிட்ட மாதிரி இருக்குங்க :-)
ரொம்ப அருமைங்.

நட்புடன்
குணா

அன்பு குணாங்,

ரசிச்சுப் படிச்சதுக்கும், உங்க‌ பதிவுக்கும் நன்றி, குணாங்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா அசத்திட்டீங்க‌, நிறைய‌ பண்டிகைகள் இதுல‌ படிச்சதும் தான் நியாபக்த்துக்கே வருது. நீங்கள் சொல்லி இருப்பது அத்தனையும் படிக்க‌ படிக்க‌ இப்ப‌ இருக்கற‌ இளைய‌ தலைமுறையினர் நிறைய‌ மிஸ் பண்றோம் தோணுது. இப்ப‌ எங்கம்மா அந்தந்த‌ பண்டிகையோட‌ மகத்துவம் தெரிஞ்சு கொண்டாடுறோம்.
இத்தனை வகைகள் இருக்கான்னு ரொம்பவே ஆச்சரியமாவே இருக்கு.
அப்போ செய்யும் ஒவ்வொரு பலகாரங்களுமே அந்தந்த‌ காலத்துக்கு ஏற்ற‌ மாதிரியும் இருக்கும் இல்லம்மா.

எல்லா மாசத்துக்கும் ஏதேனும் ஒரு பண்டிகை இருக்கு என்பதே இப்போதான் நியாபகம் வருது.. கூடவே அந்தந்த விஷேட உணவுகளும் கொடுத்து அசத்திட்டிங்க.. அருமையான பதிவு.. உங்களோட எல்லா பதிவிலுமே நான் எதாவது புதிதாக தெரிஞ்சுக்கறேன்.. :)

வித்யா பிரவீன்குமார்... :)

எங்கள் வாழ்க்கை முறை முற்றிலும் வேறாக இருந்திருக்கிறது. இது போல் அனுபவங்கள் எல்லாம் இல்லை. நீங்கள் ரசித்து வாழ்ந்த வாழ்க்கை எழுத்திலும் தெரிகிறது. படிக்கப் படிக்க வயிறும் நிறைந்துவிட்டது போல ஒரு பிரமை. :-)

இனிமையான இடுகை சீதா.

‍- இமா க்றிஸ்

அன்பு உமா,

காலத்துக்கும் க்ளைமேட்டுக்கும் ஏற்ற‌ மாதிரிதான் பலகாரங்களும் இருந்திருக்கு.:)

வெயில் காலம்னா நீர் மோர் கரைக்கிறது, நீர்ப் பந்தல் வைக்கிறது, குளிர் காலத்துக்கு ஏற்ற‌ மாதிரி, சத்தான‌ சுண்டல்னு எப்படி செய்து சாப்பிட்டு இருக்காங்க‌ பாருங்க‌.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வித்யா,

இன்னும் கூட‌, நிறைய‌ உணவுகள் இருக்கு வித்யா, என்ன‌ விசேஷம்னாலும் அதுக்குன்னு உண்டான‌ வெரைட்டி உணவுதான் முதல்ல‌ தோணும்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

நிஜம்தான் இமா, பண்டிகையும், சாப்பாடும் என்பது மட்டும் இல்லை, உறவுகளும் உற்சாகமுமாக‌ = தினமுமே பண்டிகை போல‌ இருந்த‌ காலங்கள் அவை.

இப்ப‌ நினைக்கும்போது, சில‌ சமயம் மனம் பாரமாக‌ இருக்கும். ஆனா, எல்லா விஷயத்தையும் பாசிடிவ் ஆக‌ எடுத்துக்கணும்னு நினைப்பேன். இப்ப‌ அப்படி இல்லையேன்னு நினைச்சு வருத்தப்படுவதை விட‌, அப்படி ஆனந்தமாக‌ இருக்க‌ வாய்த்திருந்ததை நினைச்சு சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல‌, அந்த‌ நினைவுகளை இங்கே எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும்போது, புகைப்பட‌ ஆல்பத்தை மீண்டும் பார்ப்பது போல‌ மகிழ்ச்சியாக‌ இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

எல்லமே சூப்பர் மெணு அசத்தல் சிறிய விளக்கம் தேவை //அக்காரவடிசலில் பால், நெய், முந்திரிப்பருப்பு, ஏலக்காய், அதோட பச்சைக் கற்பூரமும் மணக்கும்.// பச்சைக் கற்பூரம் மணக்கும் என்றால் என்ன? அதை உணவில் சேர்ப்பார்களா? இல்லை எப்படி வாசனை வரும் ?

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

பச்சைக் கற்பூரம் சமையலில் சேர்ப்பது உண்டு ஃபாத்திமா.

இந்தியாவில் மட்டும் என்றல்ல, ஐரோப்பாவிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஐஸ்க்ரீம் என்று ஒரு பதார்த்தத்தைக் கண்டுபிடித்து அது மிகவும் அரிதான உணவாக இருந்த ஆரம்ப காலங்களில் (ஃப்ரிஜ் இல்லாத காலம்) ஐஸ்க்ரீமில் சேர்த்திருக்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

//பச்சைக் கற்பூரம் சமையலில் சேர்ப்பது உண்டு//. எப்படி சேர்ப்பது ? உணவு மேல் தூவ வேண்டுமா? எதாவது ஒரு உணவு பச்சைக் கற்பூரம் சேர்த்து சமைக்கும் முறை தெரிந்தால் கூறவும் , பச்சைக் கற்பூரம் சேர்ப்பதால் உணவில் கிடைக்கும் பயன் என்ன?

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்