மன அழுத்தம் குறைய

தோழிகளே நான் இருப்பது வாடகை வீடு தான் . எங்கள் வீட்டின் அருகில் இருப்பவர்கள் சொந்த வீட்டு உரிமையாளர்களே.

நான் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை. எப்போதாவது பிள்ளைகளை பள்ளியில் விட போகும் முன் பிள்ளைகளிடம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பேசுவர்கள்.
நானும் சில நிமிடம் பேசுவது உண்டு.

இப்படி இருக்கும் பட்சத்தில் என்னிடம் பேசும் போது நல்லவர்கள் போல் பழகுவார்கள் நான் வீட்டிற்குள் வந்தபின் குறை கூறுகிறார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் நான் அவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்.

ஆனால் என்னைப்பற்றி குறை கூறுவதை மட்டும் நிறுத்த வில்லை.

காரணம் என்ன என்பது எனக்கும் புரியவில்லை.

அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து அடுத்தவர்கள் வீட்டில் நடைப்பதை மிகவும் கேவலமாக விமர்சிப்பார்கள் . கேவலமாக விமர்சனம் செய்த குடும்பத்திடமே பாசமாக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்.

பிரச்சனை என்று வந்தால் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நான் தனித்து நிற்கிறேன்.

இப்படி இருக்கும் அவர்கள் சிலசமயம் தேவையில்லாத வாக்குவாதங்களை உருவாக்கி என்னிடம் பிரச்சனை செய்வார்கள். பேசும் போது மிகவும் கேவலமான வார்த்தைகளை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தை எனக்கு மிகவும் வருத்தம் தரும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.

என்கணவரே அவர்களிடம் பேச தவிர்ப்பார்.

கதவை அடைத்து கொண்டு நாங்கள் அமைதி காப்போம்.

எதிர்த்து பேசினால் வார்த்தைளோ மிக மோசமாக வரும் என்பதால் தான்.

நான் இப்படி பட்ட பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது தோழி

இவர்கள் கூறும் சொற்களை கேட்டால் 2நாட்கள் சாப்பிட கூட மறுத்துடுவேன். அதையே நினைத்து கொண்டு இருப்பேன்.

என் மனநிலையை நான் எப்படி மாற்ற முயற்சி செய்தாலும் முடியவில்லை.

முன்பும் யாரோ இதே போல ஒரு கேள்வியைக் கேட்டிருந்து பதில் சொன்ன ஞாபகம் வருகிறது.

//நான் இருப்பது வாடகை வீடு தான்.// மீதிப் பேரும் வாடகைக்கு இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். உலகம் எம் எல்லோருக்கும் 'வாடகை வீடு' தான். எவருக்கும் எந்த வீடும் நிரந்தரம் இல்லை. திடீரென்று ஓர் நாள் எதிரே எமனின் வாகனம் வந்து முட்டும். வாடகை செட்டில் பண்ணாமலே கிளம்பி விடுவோம். :-)

//நான் யாரிடமும் அதிகம் பேசுவது இல்லை.// கொஞ்சமாகப் பேசலாம். காணும் போது சிரித்த முகத்தோடு குசலம் விசாரிப்பதை தவிர்க்க வேண்டாம்.

//வீட்டிற்குள் வந்தபின் குறை கூறுகிறார்கள்.// என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? காமராவில் ரெக்கார்ட் ஆகிறதா! புரியவில்லை. யாராவது சொன்னார்களா? நம்பாதீர்கள். அவற்றில் உண்மை இராது இருக்கலாம். நீங்கள் குழம்புகிறீர்கள் என்பது தெரிந்து யாரோ உங்களைக் குழப்பி ரசிக்கிறார். நீங்கள் கவனியாது விட்டால் மெதுவே இந்தப் பேச்சை உங்களிடம் எடுப்பதைக் குறைத்துக் கொள்வார். நீங்கள் பெரிதுபடுத்தினால், சொன்னவர்களுக்கு வெற்றி. தொடருவார்கள். பிரச்சினைகள் உருவாகும், மெதுவே பெருக்கும். நிம்மதி குலையும்.

//இப்படி இருக்கும் பட்சத்தில் நான் அவர்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்.// எப்படி இருக்கும் பட்சம்!! உங்களுக்குத் 'தெரிந்தவை' உண்மையில் நிகழ்ந்தனவா என்பது 'உங்களுக்கு' தெரியாது. பேசுவதை நிறுத்துவதால் மற்றவர்கள் 'பேச்சுத் தலைப்பாக' நீங்கள் மாறுவீர்கள். பேசிக் கொண்டே இருந்தால் என்றாவது உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

//என்னைப்பற்றி குறை கூறுவதை மட்டும் நிறுத்த வில்லை.// உங்கள் கணவரிடம் சொல்லியிருந்தால் நம்புங்கள். கமராவில் பதிவாகி இருந்தால் நம்புங்கள். மற்றவர்கள் குறை கூறியதாக உங்களிடம் 'குறை கூறியவர்' தான் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய ஆள். மீதிப் பேரை விட பயங்கரமான ஆள் இவர் தான். :-) இவரைத் தவிர்த்து மீதி ஆட்களோடு இலகுவாகப் பழகலாம்.

//காரணம்// நீங்கள் தான். உங்கள் மனது. இந்த ஒரு விடயத்தை மனதில் எடுக்கும் நேரத்தை வேறு உபயோகமான விடயங்களைப் பற்றிச் சிந்திக்கச் செலவிடுங்கள். இதைச் சிந்திப்பது எந்த வகையிலும் பயன் கொடாது.

//அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து// இதைக் கண்ணால் பார்த்திருப்பீர்கள். தூர இருந்து கூடத் தெரியும். //அடுத்தவர்கள் வீட்டில் நடைப்பதை// அது அவர்களுக்குத் தெரியாது. வீட்டிற்கு சுவர்கள், கதவு எல்லாம் உண்டே! வீட்டுக்கு வெளியே நடப்பது தானே தெரிய வரும்!! //மிகவும் கேவலமாக விமர்சிப்பார்கள்.// ;) உங்களுக்கு எப்படித் தெரியும்! 'விமர்சிப்பார்கள்' என்றிருந்தால் வேறு, 'கேவலமாக விமர்சிப்பார்கள்' என்பது... உங்கள் ஊகம் தானே! ஊகம் = சந்தேகம். வேண்டாம். நல்லதை நினையுங்கள். மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்று விவாதிப்பதாக ஊகிக்க முடியாதா?

//கேவலமாக விமர்சனம் செய்த குடும்பத்திடமே பாசமாக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்.// ம்... மனிதர்கள் வினோதமானவர்கள். விமர்சிப்பவர்கள் உதவவும் செய்வார்கள். பாசம் கொள்வார்கள். ஆகாது என்பது இல்லை. நீங்கள் ஊகிக்கிறீர்கள். உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். இந்த எண்ணத்திற்கு நினைவுகளால் நீரூற்றிப் பசளையிட்டு வளர்க்கிறீர்கள். வேறு ஏதாவது வேலைக்கு அந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள்.

தனிப்பட ஒவ்வொரு வீடாக உங்கள் குடும்பத்தோடு விசிட் பண்ணுங்கள். அரை மணிக்கு மேல் செலவளிக்க வேண்டாம். அயலவர் பேச்சு வராமல் பொது விடயங்களைப் பேசுங்கள், நலம் விசாரியுங்கள். அந்த வீட்டார் பிறந்த நாட்களை பேச்சுவாக்கில் அறிந்து சர்ப்ரைஸாக ஒரு கார்ட் போடுங்கள் அல்லது சின்னதாக ஒரு பரிசு கொடுங்கள். நிலமை மாறும்.

//பிரச்சனை என்று வந்தால்// என்ன பிரச்சினை?

//அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நான் தனித்து நிற்கிறேன்.// அவர்கள் உங்களைத் தனிமைப்படுத்தவில்லை. 'நீங்களாக' தனிமையைத் தெரிவு செய்து தனித்து நிற்கிறீர்கள். நீங்கள் தான் அவர்களோடு ஒட்டவில்லை. ஒற்றுமை நல்லது தானே! இல்லையா!

//தேவையில்லாத வாக்குவாதங்களை உருவாக்கி என்னிடம் பிரச்சனை செய்வார்கள்.// நீங்கள் பேசுவது இல்லை எனும் போது இது எப்படி! அப்போ பேசுகிறீர்கள் என்று கொள்ளலாமா? //கேவலமான வார்த்தைகளை சொல்கிறார்கள்.// என்ன வார்த்தைகள்?

//அவர்கள் சொல்லும் வார்த்தை எனக்கு மிகவும் வருத்தம் தரும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.// என் அனுமானம்... என் வார்த்தைகளும் உங்களுக்கு மிகவும் வருத்தம் தரும் வார்த்தைகளாகவே இருக்கும், என்பது. இது கல்யாணி; இதுதான் கல்யாணி. தவறு இல்லை. வெளியே வாருங்கள். பிடிக்காதவற்றை நினைப்பதைத் தவிருங்கள்.

//என்கணவரே அவர்களிடம் பேச தவிர்ப்பார்.// :-) புரியவில்லை! உங்கள் கணவரும் நீங்களும் மனிதர் தானே! உங்களை விட அவர் எந்தவிததிலும் மேல் என்பது / மாற்றிச் சொன்னால்.... நீங்கள் உங்கள் கணவரை விட எந்த விதத்திலும் குறைவானவர் என்பது கிடையாது. அதே போல் வாடைக்கு இருந்தாலென்ன அல்லது சொந்தக் குடியிருப்பாக இருந்தாலென்ன ஒன்றுதான். எல்லோரும் மனிதர் - எம் வாழ்க்கையை வாழ்கிறோம். எம்மை குறைத்து மதிப்பிடுவதும் நாம் தான்; எம் மதிப்பைக் கூட்டிக் கொள்வதும் நாம் தான்.

//கதவை அடைத்து கொண்டு நாங்கள் அமைதி காப்போம்.// சந்தோஷமாக இல்லை நீங்கள். ஏன் வேறு வீடு பார்த்துப் போகக் கூடாது! மன ஆரோக்கியம் முக்கியம் இல்லையா!

//எதிர்த்து பேசினால் வார்த்தைளோ மிக மோசமாக வரும் என்பதால் தான்.// எதிர்த்துப் பேச வேண்டாம். சாமர்த்தியமாகப் பேசலாமே! சிந்தித்து ஒவ்வொரு வார்த்தையையும் பயன்படுத்தலாம். உங்கள் தொனியில் உறுதியும் தெளிவும் அதற்கு மேல் நியாயமும் இருந்தால் சிந்திப்பார்கள்.

//இவர்கள் கூறும் சொற்களை கேட்டால்// பேசுவதில்லை என்கிறீர்கள். பிறகு எப்படி?

//என் மனநிலையை நான் எப்படி மாற்ற முயற்சி செய்தாலும் முடியவில்லை.// மாற்ற வேண்டாம்; மறக்கவும் வேண்டாம் - நினைக்காதிருங்கள் போதும். எந்த நிகழ்வானாலும் அந்த இடைத்திலேயே சிந்தனையை விட்டுவிட்டு எடுக்கும் அடுத்த காரியத்திலும் முழுமையாக மனதை ஈடுபடுத்துங்கள். பெய்ண்டிங் செய்வீர்களா? பென்சில் ஸ்கெட்ச் போதும். வரைய ஆரம்பியுங்கள். மனசு இலகுவாகும். மெதுவே ஒரு பக்குவம் வரும்.

மகிழ்ச்சி எம் உள்ளே தான் இருக்கிறது; அது வெளியே இருந்து வருவது இல்லை.

‍- இமா க்றிஸ்

நீங்கள் சொல்லும் கருத்துகள் அனைத்தையும் நான் மதிக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் மனம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்கிறேன்.

சந்தேகம் ஏதும் இல்லை அம்மா
அவர்கள் நடந்து கொள்ளும் முறை,
அவர்களின் சைகை பேச்சுக்கள் இவை அனைத்துமே என் மனமாற்றத்திற்கு காரணம்.

ML

மேலும் சில பதிவுகள்