சமையல் அரிச்சுவடி - பாகம் 3

ஃபில்டர் காஃபி


Cooking lessonsஇன்ஸ்டன்ட் காஃபியை அடுத்து ஃபில்டர் காஃபி போடுவது எப்படியென பார்ப்போம்.

4 பேருக்கு போடுவதென்றால் ஃபில்டரில் மேலேயுள்ள அடுக்கில் ஒன்றரை மேசைக்கரண்டியளவு காஃபித்தூள் போட்டு லேசாக அழுத்தி விடவும். ஒரு டம்ளர் நன்கு கொதிக்கும் நீரை காஃபித்தூள் உள்ள அடுக்கில் ஊற்றி, கலக்குவதற்காக உள்ள தகட்டால் லேசாக கலக்கி மூடி வைக்கவும்.

1/2 மணி நேரத்திற்குள் டிக்காஷன் கீழேயுள்ள அடுக்கில் இறங்கி இருக்கும். (ரொம்ப ஸ்ட்ராங்காக வேண்டுமென்றால் 2 மேசைக்கரண்டியளவு காஃபித்தூள் போடலாம்). 1/4 டம்ளர் டிக்காஷனுடன் 3/4 டம்ளர் கொதிக்கும் பாலும், 2 தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்து, சர்க்கரை கரையும்வரை மட்டும் ஆற்றி, நுரை பொங்க கோப்பையில் ஊற்றி கொடுக்கவும். ஃபில்டர் காஃபிக்கு பால் எப்போதும் திக்காக இருக்க வேண்டும், தண்ணியாக இருந்தால் காஃபி ருசிக்காது.

இரண்டாவது காஃபி சுமாராக இருந்தால் பரவாயில்லையென்றால் எல்லா டிக்காஷனும் எடுத்த பிறகு இன்னுமொரு 1/2 டம்ளர் கொதிக்கும் நீரை காஃபித்தூளின் மேல் ஊற்றினால் சிறிதுநேரத்தில் டிக்காஷன் கிடைக்கும். இதில் சுமாரான காஃபி கலக்கலாம். (விளம்பரத்தில் வரும் மாமியார் போல் இல்லாமல் நம் வீட்டு ஆட்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.)

ஃபில்டரை கழுவும் போது துளைகளில் காஃபித்தூள் இல்லாமல் கழுவி வைத்தால் தான், அடுத்த முறை டிக்காஷன் சுலபமாக இறங்கும்.

எப்போதும் டிக்காஷனை நேரடியாக அடுப்பில் வைத்து சூடு பண்ண கூடாது. அவ்வாறு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். காஃபி கலந்த பிறகும் அடுப்பில் வைத்து சூடு செய்தால் காஃபியின் சுவை மாறி விடும். அதனால் கலக்கும் பால் எப்போதும் கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். அப்படியும் டிக்காஷனை சூடு செய்தே ஆக வேண்டுமென்றிருந்தால் கொதிக்கும் தண்ணீரில் டிக்காஷன் உள்ள டம்ளரை சிறிது நேரம் வைத்திருந்து எடுக்கவும்.

சாதா காஃபி:

2 டம்ளர் காஃபிக்கு ஒரு மேசைக்கரண்டி தேவைப்படும். ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு, ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரை அதில் ஊற்றி, ஒரு ஸ்பூனால் நன்கு கலக்கி, மேலாக சிறிது தண்ணீரை தெளித்து மூடி வைக்க வேண்டும்.

5 நிமிடத்தில் தூள் கீழே இறங்கி விடும். கலக்காமல் மேலாக டிக்காஷனை வடித்து, (வடிகட்டியால் ஒரு முறை வடிப்பது நல்லது) ஒரு டம்ளர் பால், 4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கினால் காஃபி ரெடி.

கொடுத்துள்ள அளவுக்கும் குறைவாக காஃபித்தூள் போட்டால், காஃபி தண்ணீரைப் போல் ருசியே இருக்காது. இது எல்லாமே சிக்கிரி கலந்த காஃபித்தூளுக்கு தான். சிக்கிரி கலக்காத காஃபித்தூளில் காஃபி போட்டால் ருசி இருக்கும், திக்னெஸ் கிடைக்காது. சிக்கிரி கலந்த காஃபித்தூளில் தான் மணமும் ருசியும் அதிகமிருக்கும். 30 % சிக்கிரி, 70 % காஃபித்தூள் ஓரளவுக்கு சரியான காம்பினேஷன். அதற்கும் குறைவாக சிக்கிரி கலந்தால் காஃபியின் திக்னெஸ் குறைந்து கொண்டே போகும்.

பால் பவுடரில் காஃபி போடும் முறை:

ஏற்கனவே நான் கூறியது போல் பவுடரை கரைத்து பால் காய்ச்சி வைத்துக்கொண்டு மேலே சொன்ன முறைகளில் அந்தந்த காஃபியை போடலாம்.

காஃபியும் போட்டாச்சு. அடுத்து.....

ஒரு வாரம் பொறுத்திருங்க :)

Comments

செல்வி... ஃபில்டர் காஃபி போட அம்மா சொல்லி குடுத்திருக்காங்க. அப்போ போடல.. இப்போ நீங்க சொன்ன பிறகு ஒரு முறையாது முயற்சி செய்ய வேணும்'னு முடிவு பண்ணிட்டேன். மிக்க நன்றி. நல்லா சொல்றீங்க. தொடர்ந்து இந்த பகுதி படிச்சுட்டு தான் இருக்கேன், பின்னூட்டம் தர தான் முடியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேஷ்..பேஷ்..செல்விக்கா, ரொம்ப நல்லா இருக்கு. அந்த படத்துடன் உங்க விளக்கம் சூப்பர். என்னதான் காஃபி மேக்கர் அது இதுன்னு இப்ப எல்லாம் இருந்தாலும் இந்த பழைய மாடல் ஃபில்டர் காஃபிக்கு, அதுவும் நம்மூர் காபி பொடியில் செய்வதற்கு இணை ஏதும் இல்லை. அடுத்த முறை இந்தியா வரும்போது காஃபி ஃபில்டர் ஒன்னு வாங்கனும் போல இருக்கு.

உங்க ஃபில்டர் காபி சூப்பர்......... முன்பு உங்களிடம் பேசி இருக்கிறேன் ஞாபகம் இருக்கா அம்மா இல்லை மறந்துவிட்டீர்களா என்று தெரியவில்லை:) நான் உங்க போட்டோவை மகளிர் பக்கத்தில் பார்த்தேன் நீங்களும் அழகா இருக்கீங்க. உங்க டிப்ஸ்ஸூம் ரொம்ப அழகா இருக்கு. நன்றி அம்மா.

காஃபியில் இவ்வளவு விஷ்யம் இருக்கா?சூப்பர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு செல்வி மேடம்,

உங்க பதிவுகள் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்குதான் பதில் போட நேரம் கிடைத்தது.

சின்னக் குழந்தைக்கு சொல்ற மாதிரி, பொறுமையாக சொல்லி இருக்கீங்க. புதிதாக சமைக்கத் தொடங்குவர்களுக்கு இது மிகவும் தேவையான ஒன்று.

Small things does matter என்பார்கள். அது போல சின்ன சின்ன விஷயத்தையும் மறக்காமல் குறிப்பிட்டு இருக்கீங்க.

நான் என் தோழிக்கு இட்லி மாவு அரைப்பதற்கு அளவு, அரைக்கும் முறை, எல்லாம் சொன்னேன். இரண்டு நாள் கழித்து அவள் சொன்னாள் - “ அரிசி மாவு, உளுந்த மாவு எல்லாம் நீங்க சொன்ன மாதிரி செய்தேன், ஒரே பாத்திரத்தில் இரண்டு மாவையும் எடுத்தேன், ஆனால் இரண்டையும் சேர்த்து கரைக்கணும்னு எனக்குத் தெரியல” என்று. முதலில் எனக்கு சிரிப்பும் கோபமும் வந்தாலும், யோசிக்கும்போது நான் முழுமையாகச் சொல்லவில்லை என்பது புரிந்தது. நீங்க சொல்லும்போது படிப்பவர்களுக்கு சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு, தெளிவாக எழுதி இருக்கீங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி வனிதா. நானும் அப்படித்தான். எல்லாமும் படிக்கிறேன்னு கூட சொல்ல முடியாது. புது அறுசுவையில் இன்னும் முழுசாக பார்க்கக் கூட முடியவில்லை.

நான் வீட்டுக்கு வரும் போது வனி கையால் ஃபில்டர் காஃபி, ஓகேவா?

அன்புடன்,
செல்வி.

ஹாய் வின்னி,
நலமா?
காஃபி மேக்கர் எல்லாம் வேஸ்ட். ஃபில்ட்டர் காஃபி போல வருமா? குட்டியாக ஒரு ஃபில்ட்டர் வாங்கிக்கலாம். பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வின்னி.

அன்புடன்,
செல்வி.

அன்பு அனுஷா,
நிறைய பேருடன் பேசும் வாய்ப்பு ஏற்படுவதால் சிறிது தடுமாற்றம்:-) எப்பன்னு சொன்னா ஞாபகம் வந்துடும்.
மிக்க நன்றி அனு.

அன்புடன்,
செல்வி.

அன்பு ஆசியா,
இன்னும் கூட நான் மறந்தது ஏதும் இருக்கும்.
நன்றி ஆசியா.

அன்புடன்,
செல்வி.

அன்பு சீதாலஷ்மி மேடம்,
நலமா?
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஏதோ எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.
இத்தனை விளக்கமாக நான் எழுதுவற்கு என் கணவர் தான் காரணம். எழுதியதைப் படித்து அவர் கேட்கும் சந்தேகங்களை விளக்குவது போல் மாற்றி எழுதுவேன்.

உண்மைதான். சில நேரங்களில் நாம் சாதாரணாமாக நினைக்கும் விஷயங்கள் மற்றவர்களைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும்.

உங்களின் தொடர்கள் பயனுள்ளவையாக உள்ளது. நன்றாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

அன்புடன்,
செல்வி.

பில்டர் காப்பி தானே... ஓ... கண்டிப்பா போட்டுடலாம். எப்போ வரீங்கன்னு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பில்டர் காபினா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு மடக்கு காப்பினாலும் அந்த பில்டர் காபி குடிக்கிற மாதிரி ஆகுமா. ஆனா எனக்கு போட தெரியாது, அம்மாவுக்கும் தெரியாது. ஆனா எங்க ஆன்ட்டி சூப்பரா போடுவாங்க நானும் ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போதுலாம கேட்டுட்டு வருவேன் ஆனா இங்க வந்து மறந்துடுவேன், இப்ப உங்களோட இந்த பதிவ படிச்சதுமே போய் வாங்கிட்டு வந்து இன்னக்கி காபியும் போட்டாச்சு சூப்பர்ப். என்னவொரு விளக்கம் அவ்வளவு தெளிவா சொல்லி இருக்கீங்க. நானும் உங்க பதிவுகள விடாம படிச்சுட்டு இருக்கேன். ரொம்ப நன்றி செல்வி மேடம்.

(விளம்பரத்தில் வரும் மாமியார் போல் இல்லாமல் நம் வீட்டு ஆட்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.)supper selvi ma

all is well

அன்பு வனி,
வருமுன் சொல்கிறேன்.
நன்றிப்பா!

அன்புடன்,
செல்வி.

ஹாய் தேவி,
பில்டர் காஃபி போட கத்துக்கிற அளவுக்கு நான் சொல்லிக் கொடுத்திருக்கேன்னா, ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

பாராட்டுக்கும், தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சுந்தரமதி (அழகான பெயர்),
அங்காங்கே இப்படி ஏதாவது சொல்கிறதுண்டு. யாரும் கண்டுக்கலையேன்னு நினைச்சேன். நீ சொல்லிட்டே! நன்றி!

அன்புடன்,
செல்வி.

azakana peyara? athu en perum en hus perum serthu nan vachunden .thanks

all is well

செல்வி மேடம் எப்படி இருக்கீங்க? நீங்க சொல்லி கொடுத்துக்கிட்டு வரும் சமையல் அரிச்சுவடி பகுதி ரொம்ப நல்லா இருக்கு.

சிக்கிரினா என்ன அது எங்கு கிடைக்கும்