எனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே?

வணக்கம் தோழிகளே , எனது மகனுக்கு 3மாதங்களாகிறது, நானும் என் கணவரும் மட்டுமே உள்ளோம் உதவி இல்லை ,என் கணவரும் முழு நேரமும் வேலைக்கு சென்று விடுவார்.நான் மட்டுமே குழந்தையை கவனித்துக்கொள்வேன். எனது குழந்தை எப்போதுமே அழுகின்றான், எப்போதுமே நான் அருகில் இருக்க வேண்டி உள்ளது தூங்கும் போது கூட நான் எழுந்துவிட்டால் தானும் எழும்பி அழுகை , நான் தான் சமையல் ஆனால் என்னால் ஒரு வேலையும் பார்க்க முடியவில்லை சாப்பிட கூட முடியாது.நாளாக நாளாக நிலமை மோசமாக உள்ளது .பல வேளை இவன் ஏன் அழுகின்றான் என புரியல எனக்கு சலிப்பாக உள்ளது . விரக்தி நிலைக்கு வந்துவிட்டேன் . எனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே?

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்; நாமும் கூட. :-)

குழந்தைகள் அழாமல் இராது. அழுவதற்குக் காரணம் ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது இல்லை. பால் கொடுத்துப் பார்க்கலாம். வயிறு நிறைந்த பின்னும் அழுதால் வாயு இருக்கலாம். அதற்கு ஏதாவது செய்யலாம். சில சமயம் தனிமையாக இருப்பதாலும் அழும். பல சமயம் காரணம் இல்லாமல் அழும். உறக்கம் வந்தால் அழும்; உறங்க முடியவில்லையானாலும் அழும். களைப்பாக இருந்தால் அழும். களைப்பு - அதிக நேரம் பெரியவர்கள் தூக்கி வைத்திருப்பதாலும் குழந்தையோடு விடாமல் பேசிக் கொண்டு இருந்தாலும் கூட வரும். கண்களும் மூளையும் களத்துப் போகும் இல்லையா! தனக்குத் தனிமை வேண்டும் என்பதையும் அழுதேதான் சொல்லும் குழந்தை. குழந்தைக்கு அதன் இடத்தைக் கொடுத்துவிட்டு விலகிப் பாருங்கள். பசி இல்லை, அரவணைப்பு வேண்டி இருக்கவில்லை (இதை நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.) வாயுத்தொல்லை இல்லை, பாம்பர் ஈரமாக இல்லை என்றும் இருந்து அழுதால் அழ விட்டுவிடுங்கள். கொஞ்ச நேரம் அழுதுவிட்டுத் தூங்கிவிடுவார் அல்லது தனியே விளையாட ஆரம்பிப்பார். ஆரம்ப நாட்களில் இருந்தே இப்படிப் பழக்கி விட்டால் சுகம். பெரியவர்கள் இருவரும் தைரியமாக இருந்தால் அழ விடுவீர்கள். விரைவில் குழந்தைக்கும் பழகி விடும்; உங்களுக்கும் பழகி விடும்.

குழந்தையை அழாமல் வைத்து வளர்ப்பது அவசியம் இல்லை. நீங்கள் பெரிதாக யோசிக்க வேண்டாம். உங்களுக்கு ஓய்வு தேவை என்றிருக்கும் போது முக்கிய காரணங்கள் இல்லாமல் குழந்தை அழுதால் எடுக்க வேண்டாம். குழந்தைக்கே அம்மா வரமாட்டார் என்று புரிந்து போகும். தானாக வேறு பக்கம் கவனத்தைத் திருப்பும்.

சும்மா சொல்லவில்லை. என் மருமகள் தனியேதான் குழந்தையை வைத்திருக்கிறார். அவர் வளர்ப்பு பார்க்க வியப்பாக இருக்கும். ஒவ்வொரு விதமான சத்தத்துக்கு,ம் என்ன அர்த்தம் என்கிறது இப்போது எங்களுக்கே புரிகிறது. அவதானித்துப் பாருங்கள். உங்களாலும் புரிந்துகொள்ள முடியும்.

அழும் போதெல்லாம் தூக்காத குழந்தை, பிற்காலத்தில் தன் பிரச்சினைகளுக்குத் தானே தீர்வு காண்பதில் சிறப்பான குழந்தையாக வளரும். கவனிக்காமலே விடச் சொல்லவில்லை நான். எதுவும் அளவோடு இருந்தால் போதும்.

நீங்கள் சாப்பிட உட்காரும் முன் குழந்தைக்குப் பாலூட்டிவிடுங்கள். பிறகு உங்கள் சாப்பாட்டு வேளையில் அழுதாலும் சாப்பிட்டு முடிக்காமல் எழும்ப வேண்டாம். நீங்கள் உணவைக் கவனிக்காவிட்டால் குழந்தைக்கு எப்படிப் பால் இருக்கும். குழந்தையோடு பேசுங்கள். 'அம்மாவுக்குப் பசிக்குது, சாப்பிட்டுவிட்டு வருகிறேன்,' என்று சொல்லிவிட்டு உங்கள் வேலையைக் கவனியுங்கள். குழந்தை உறங்கும் சமயம் மீதி வேலைகளை அவசரமாகப் பார்த்து முடித்து விடுவது தான் பெரும்பாலானோர் செய்வது. குழந்தை உறங்கும் போது நீங்களும் ஒரு குட்டித் தூக்கமாவது போட்டுவிடுங்கள். வேலைகள் முடியாவிட்டால் எந்தப் பாதகமும் இல்லை. அவை கிடக்கட்டும்.

வேறு யாருக்காவது உதவும் என்று இதை எழுதுகிறேன். மகனும் மருமகளுமாக பிரசவத்திற்கு முன்பே ஒரு மாதமாக எதைச் சமைத்தாலும் இரண்டு பங்காகச் சமைத்து ஃப்ரீஸரில் வைத்திருந்தார்கள். அவர்களது நட்பு வட்டமும் அன்பளிப்பாக ஃப்ரீஸ் செய்யக் கூடிய சத்தான உணவுகளாகச் சமைத்து தம் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்கள். எல்லாவற்றிலும் என்ன உணவு என்பதும் தேதியும் எழுதி இருந்தது. தனித்து இருக்கும் போது சமைக்க நேரம் கிடைக்காத நாட்களிலும் தாய்க்குக் களைப்பாக இருக்கும் சமயமும் உள்ளே இருப்பதில் பிடித்ததை எடுத்துச் சாப்பிடுவார். நீங்கள் உங்கள் கணவர் வீட்டில் இருக்கும் சமயம் இரண்டு நாட்களுக்கு அளவாகச் சமைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். ஒன்றுவிட்டு ஒரு நாளாவது ஓய்வு கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா நானும் சில வேளை அழவிடுவேன் ஆனால் அவன் கை கால்களை உயர்த்தி வீரிட்டு கத்தும் போது பயமாக உள்ளது . எனினும் நீங்கள் கூறியதை நான் முயற்சி செய்கிறேன்

சிலசமயம் யோசனையாகத் தான் இருக்கும். வாயுத் தொல்லை இல்லை என்று நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.

குழந்தைக்குத் தெரியும் வீரிட்டுக் கத்தினால் அம்மா தூக்குவார் என்பது. :-)

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா

மேலும் சில பதிவுகள்