![]() அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கங்கள். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்று கவிஞர் பாடினார். அந்த அமுதாகிய தமிழ் மொழியால் இங்கே அறுசுவையில் நாம் அனைவரும் இணைக்கப்பட்டு, பல்வேறு அமுது குறித்து ஆலோசித்து, விவாதித்து, விவரித்து வருகின்றோம். இன்று உலகின் பல்வேறு நாடுகளில், நகரங்களில் வசிக்கும் தமிழர்களாகிய நீங்கள் அனைவரும், தமிழகத்தின் ஏதோவொரு ஊரில் இருந்து புறப்பட்டவர்கள்தான். அது பிரசித்திப் பெற்ற நகரமாக இருக்கலாம். யாரும் அறிந்திராத சிறு கிராமமாக இருக்கலாம். அந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர் என்ற முறையில், அந்த மண்ணின் பெருமை குறித்து அறிந்தவர் உங்களைவிட வேறு யாரும் இருக்க முடியாது. விரைவில், தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும், உணவுத்துறைச் சார்ந்த பிரசித்திப் பெற்ற பல விசயங்களை சேகரித்து, மற்றவர்கள் அறியும் பொருட்டு அறுசுவையில் வெளியிட உள்ளோம். இதற்கு உதவும் முகமாக, உணவுத்துறை சம்பந்தமாக நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் ஏதேனும் சிறப்பு இருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கவும். உதாரணமாக, உங்கள் ஊரில் உள்ள சிறப்பு வாய்ந்த உணவகம், சிறந்த சமையல் கலைஞர், சிறப்பு உணவு, சிறப்பாய் சமைக்கக்கூடிய தனிநபர்கள், கோயில் பிரசாதம், நல்ல டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்... இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழக எல்லைக்குள் அடங்கிய எந்த நகரம், கிராமமாக இருந்தாலும் குறிப்பிடவும். எங்கள் குழுவினர் உங்களது ஊருக்குச் சென்று, மேலும் விபரங்களை சேகரித்து, படங்கள் எடுத்து, கட்டுரையாக அறுசுவையில் வெளியிடுவர். இதற்கு உதவும்விதமாக உங்கள் ஊரைப் பற்றின விபரங்களை சற்று விரிவாகக் குறிப்பிடவும். எந்த மாவட்டம், எந்த நகரம், எந்த ஊருக்கு அருகில் உள்ளது, எப்படிச் செல்லலாம் என்பதையும் குறிப்பிட்டால், எங்களது குழுவினர் சரியான இடத்தைச் சென்றடைய மிகவும் உதவியாக இருக்கும். அன்புடன் ஜனவரி 26, 2007 - 3:50pm - வழங்கியவர் admin
|

