topic_image


கடைசி இரண்டு வாக்கெடுப்பும் கொஞ்சம் சீரியஸ்ஸான வாக்கெடுப்பா இருந்ததால, இங்கே விவாதத்தில அனல் பறந்துச்சு. அடுத்தும் இன்னொரு ஹாட் டாபிக் கொடுக்கத்தான் ஆசை. இருந்தாலும் எப்போதும் விவாதம் சீரியஸ்ஸா இருந்தா போரடிச்சுடும்ங்கிறதால கொஞ்சம் காமெடி கலந்த டாபிக் இந்த முறை வாக்கெடுப்பிற்கு வந்திருக்கு. அதற்காக இதை ரொம்ப காமெடி மேட்டரா நெனைச்சிட வேண்டாம். இதுவும் ஒரு வகையில சீரியஸ்ஸான மேட்டர்தான். ஆனா, விவாதத்தில அனல் இருக்காது. நிறைய காமெடி இருக்கும்ணு நம்புறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னே, இது சம்பந்தமா ஒரு விவாதம் மன்றத்துல நடந்துச்சு. அதை வச்சி வந்ததுதான் இந்த வாக்கெடுப்பு. சிலர் கருத்து சொல்றப்ப, குழந்தைகள் குறைவா இருந்தா அடுத்த தலைமுறையில உறவுகள் இல்லாம போயிடும்னு வருத்தப்பட்டாங்க. இது எந்த வகையில சரியானதுன்னு எனக்கு தெரியல. இரத்த சொந்தங்கள் மட்டும்தான் நமக்கு சொந்தம்னு இன்னமும் நாம ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறோம் அல்லது வாழ விரும்புறோம்ங்கிறதை இந்த கருத்து சொல்ற மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு.

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க..? வழக்கம்போல விவாதத்தை தொடங்குங்க. (தனிப்பட்ட யாரையும் தாக்காம..)

பி.கு: அதிகக் குழந்தைகள் வேண்டும் என்று வலியுறுத்தும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அந்நாட்டினவராய் இல்லாது, இந்தியராய் மாறி இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவும். இந்திய சூழ்நிலையை மனதில் வைத்து வாக்கு கொடுங்கள். கருத்து தெரிவியுங்கள்.


என்னுடைய சாய்ஸ்
அக்டோபர் 11, 2007 - 11:38pm - வழங்கியவர் Manohari

என்னுடைய சாய்ஸ் நிச்சயமாக 3+ தான். இந்த நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பதெல்லாம் வறுமைக் கோட்டிற்கு கீழிருக்கும் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு வேண்டுமானால் உதவலாமே ஒழிய, பொதுவாக இன்றைய வாழ்க்கை முறைக்கு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் வாழ்க்கை முறையை நிர்ணயிப்பது குழந்தைகள் அல்ல குழந்தைகளைப் பெற்று வளர்க்க தெரியாமல் இருக்கும் அவர்களின் பெற்றோர்கள் தான். வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்று தெரியாமல் தத்தளித்து, பிறகு குழந்தைகளின் மிகுதியால் தான் குடும்பம் நலிவடைகின்றது என்ற முடிவுக்கும் வந்து விட்டார்கள்.

என்னைப் பொருத்தவரையில் இன்றைக்கு மட்டுமல்ல என்றைய சூழ்நிலையானாலும் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பது அது எந்த நாடானாலும் மக்கள் தான் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியும்.

உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் பக்கத்து தெருவில் இருக்கும் பள்ளிகூடத்திற்கு குழந்தைகளை அனுப்பி படிக்க வைப்பதை விட, இரண்டு ஊர் தள்ளியிருக்கும் கான்வென்ட்டில் எக்கசக்கமாக பணத்தை டொனேஷனாகக் கொடுத்து படிக்க வைத்தால் தான் குழந்தைக்கு தரமான கல்வி கிடைக்கும் என்று நம்புகின்ற பெற்றோர்கள் நிறைய உள்ளார்கள்.

பள்ளிகூடம் சரியில்லை என்றால் அதை எவ்வாறு சரி செய்வது என்று நான்கு பெற்றோர்கள் கூடி ஆராய்ந்தால் சரியாகாத விசயம் இருக்காது. ஆனால் அதற்கு பதிலாக குழந்தைகளை வேறு பள்ளிக்கூடத்திற்கு மாற்றுவது, அதற்கேற்றார் போல் அதிக வாடகையில் வீட்டில் வசிப்பது இவையெல்லாம் எந்த விதத்தில் நியாயம். இதுப் போல் குழந்தைகளை குறைச் சொல்லி நிர்ணயிக்கும் எந்த செயலுக்கும் குழந்தைகள் பொருப்பேற்க இயலாது என்று தான் கூறுவேன்.

குழந்தைக்கு பிடிக்கின்றதோ இல்லையோ வாரத்தில் ஒரு நாள் கூட பாக்கி இல்லாமல் எல்லா தினமும் பாட்டு டான்ஸ் விளையாட்டுபயிற்சிகள் என்று இவர்களுக்கு பிடித்ததிலெல்லாம் குழந்தைகளை சேர்த்து விடும் பெற்றோர்களைப் பார்த்து மற்றவர்களும் அதை செய்து பெருமைப் படுவது. ஆடம்பரமாக குழந்தைகளை வளர்ப்பதில் மகிழ்ச்சிக் கொள்வது.

இவ்வாறு குழந்தைகளுக்கு தேவையே இல்லாத விசயங்களில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி விட்டு பிறகு ஒரு குழந்தையோடு நிறுத்தியிருக்கலாம், அல்லது இரண்டோடு நிறுத்தியிருக்கலாம் என்று வருத்தப்படுவது போன்ற எல்லா தவறுகளையும் செய்வது பெற்றோர்கள் தானே ஒழிய குழந்தைகள் அல்ல.

ஆகவே முதலில் மக்களின் மனதில் வாழ்க்கை முறையைப் பற்றி தெளிவான சிந்தனை வர வேண்டுமே ஒழிய குழந்தைகளின் எண்ணிக்கையைக் கொண்டு எந்த காலத்திலும் வாழ்க்கை முறையை மாற்ற முடியாது என்பது என் கருத்து.

உடல் ஒத்துழைப்பு கொடுத்தால் ஒன்றுக்கு மேல் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் அவர்களுக்கு எது தேவையோ அதை மட்டும் கருத்தில் கொண்டு ஈயடிச்சான் காப்பி போல் மற்றவர்கள் செய்வதையெல்லாம் செய்து குழந்தைகளையும் வருத்தி உங்களையும் வருத்திக் கொள்ளமல் இருந்தாலே வாழ்க்கை சந்தோசமுடன் இருக்கும் என்பது எனது கருத்து.இந்த தலைப்பில் எனது கருத்தைக் கூற வாய்பளித்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி.

அவரவர் தனிப்பட்ட முடிவு
அக்டோபர் 12, 2007 - 12:58am - வழங்கியவர் DEVA

இந்த விஷயத்தில் ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்து கருத்துக்கள் வேறுபடும். தனிப்பட்ட ஒருவரின் விருப்பு, வெறுப்பு சார்ந்த விஷயமாகவும், அவரவர் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும்தான் ஒருவர் இந்த விஷயத்தில் தனது கருத்துக்களை வெளியிட முடியும் என்று தோன்றுகிறது. பல விஷயங்களில், பொதுவாக ஒரு கருத்தும் தனக்கென்று வரும்போது வேறு முடிவும் எடுப்பதுதான் மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்னிருக்கும் மனநிலை, முதல் குழந்தை பிறந்த பிறகு வேறாக இருக்கும். எது நல்லது என்று பார்த்தோமானால் நிச்சயம் குழந்தை வேண்டாம் என்ற நிலையிருக்கக்கூடாது என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். இதிலும் சில விதி விலக்குகள் இருக்கலாம்.

தனி குழந்தையாக இருந்தால் அதற்கென்று பின்னாளில் யாரும் இல்லாமல் தவிக்கக்கூடும் என்று சிலர் சொல்லலாம். அது ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமும்கூட. இன்றும் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே நான் என் தம்பிக்கோ அல்லது அக்காவிற்கோ போன் செய்வேன். ஏனென்றால் நமது குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம், பழக்க வழக்கம் அவர்களுக்கும் நன்றாக புரியும். நண்பர்களுக்கு நமது குடும்பம் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் புரியாமல் கூட இருக்கலாம். ஆனால் இது பொதுவான தினமும் நடக்கும் பிரச்சனைகளுக்குத்தான். சில சமயம் குடும்பத்தில் யாரிடமும் சொல்லாத விஷயங்களைக் கூட நண்பர்களிடம் எளிதாக சொல்லிவிடலாம். முக்கியமாக ஆண்களுக்கு சொந்தங்களைவிட, நண்பர்களிடம் தனது விஷயங்களை சொல்வது, ஆலோசனை பெறுவது நடைமுறையில் இருக்கிறது. சொந்தங்களிடம் பல நேரங்களில் தனது குடும்ப விஷயங்களை உறவினர்களிடம் சொல்லாமல் மறைப்பதும் இருக்கிறது. இதனால் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்டால் அது தனித்து விடப்படக்கூடும் என்ற அச்சம் தேவையில்லாதது என்பது என் கருத்து. உலகில் இன்னொரு மனிதன் இருக்கும்வரை எந்த மனிதனும் தனித்து வாழமாட்டான். நண்பர்கள், பெற்றோர்கள் , துணை , அவனது குழந்தைகள் என்று அவனது உலகம் விரிந்துக் கொண்டேதான் இருக்கும்.

அந்தக் காலத்தில் அம்மாக்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களே தனது உலகம் என்று கருதி தாங்கள் அனுபவிக்காத வசதி வாழ்க்கையை தனது குழந்தைகள் அனுபவிக்கும்போது அதை தங்களது வெற்றியென நினைத்தார்கள். இன்றைய சூழலில், இளைய தலைமுறையினர் தாங்களும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும், தங்களது குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைகிறார்கள். எனவேதான் இரண்டுக்கு மேல் யாரும் பெற்றுக் கொள்ள நினைப்பதுமில்லை. அது வேலைக்குப் போகும் அம்மாவாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகாத அம்மாவானாலும் சரி.

இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போகின்றார்கள். இதில் ஒரு குழந்தையை ஒழுங்காக வளர்க்கவே முழி பிதுங்குகிறது. இதில் இரண்டாவது குழந்தையையும் துணைக்கு என்று பெற்றுக் கொண்டு அதனையும் படுத்தி, நாமும் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறேன். கொண்டை இருக்கிறவள் , அள்ளி முடிகிறாள் என்பது போல எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அத்தனையையும் நல்ல முறையில் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு, அதற்குத் தேவையான வளமான எதிர்காலத்தை நம்மால் நிச்சயம் தர முடியும் என்றால் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். அதனை விடுத்து துணைக்கு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு இரண்டாவது குழந்தையையும் க்ரீச்சில் விட்டுவிட்டு வேலைக்குப் போகிற அம்மாக்கள் தங்களது தரப்பு நியாயம் என்னவென்று சொன்னால் அதனைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

இதில் பல அம்மாக்கள் குழந்தைகளிடம் பாகுப்பாட்டை விதைக்கிறார்கள். இல்லை என்று சொன்னாலும் பல வீடுகளில் தெரிந்தோ தெரியாமல் இதை செய்கிறார்கள். அவன் நல்லா படிக்கிறான், நீயும்தான் இருக்கியே என்று சொல்வதும், அவள் அமைதி, நீதான் வாலு என்று சொல்வதும் பல வீடுகளில் சகஜமாக இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறக்கும்போதே தனக்கு இருந்த முக்கியத்துவம் இனி கிடைக்காது என்பதை பல குழந்தைகள் எளிதாக புரிந்துக் கொண்டு அதனை ஏற்றுக் கொண்டு விடுகின்றன. ஆனால் சில சமயம் அந்த குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு தப்பான முடிவுகளையும் எடுக்கின்றன. எங்களது எதிர் வீட்டில் இருப்பவருக்கு 3 குழந்தைகள். 2 குழந்தைகள் நன்றாக படிக்கும். இரண்டாவது பையன் படிப்பில் சுமார்தான். மற்றபடி பழக்க வழக்கத்தில் மிகவும் நல்ல பையன். ஒரு வழியாக Bsc பாஸ் செய்து Msc சேர்ந்தான். அதற்குள் அவன் தம்பி இஞ்சினியரிங் முடித்து விட்டான். இவன் அரியர்ஸ் எழுதி PG சேர நாளாகிவிட்டது. அவன் அம்மாவின் திட்டுக்கள் தாளாமல் ஒரு நாள் தூக்கு மாட்டிக் கொண்டான். அது அவன் உயிரைப் போக்காமல் அவனை குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்கி, படுத்த படுக்கையாக்கி 3 மாதங்கள் கழித்து இறந்தும் போய்விட்டான். இப்போது அவன் அம்மா அழுது கொண்டிருக்கிறார்கள். எனக்கு அவரை அடித்து உதைக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். நிறைய பெற்றுக் கொண்டு வீட்டையே நிறைக்க வேண்டும் என்றுக்கூட சொல்லியதுண்டு. எல்லாமே முதல் குழந்தை பிறக்கும்வரை. இப்போது ஒரு குழந்தையே போதும் என்று தோன்றுகிறது. மற்றவர்களுடைய குழந்தையை கொஞ்சித் தூக்கி விளையாடியதற்கும் தனக்கென்று வரும்போது அதில் உள்ள கஷ்டங்களும் பட்டுப் புரிகிறது. தூங்காத இரவுகள் இன்னும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. இத்தனை நாள் வீட்டில் இருந்ததால் அத்தனை தெரியவில்லை. வேலைக்குப் போகும்போது அதுவும் சேர்ந்துக் கொண்டு பல சமயங்கள் எல்லோரும் எதற்காக இத்தனை குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.சொல்லப்போனால் இப்போதெல்லாம் நல்ல வேளை கொஞ்ச வருடங்களாவது குழந்தை வேண்டாம் என்று இருந்தோமே இல்லாவிடில் வாழ்க்கையில் கல்யாணமாகி நல்ல நினைவுகள் என்ற ஒன்றே இருந்திருக்காது என்று தோன்றுகிறது. குழந்தைகள் இன்றும் பிடிக்கிறது. ஆனால் இன்னொன்று பெற்றுக் கொள்ள பிடிக்கவில்லை. துணைக்கு நண்பர்கள், அம்மா, அப்பா என்று குழந்தையின் உலகை நிறைக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றதே.

நானே இன்னொரு குழந்தையை பெற்றுக் கொளவதைக்காட்டிலும் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. எனது கணவரின் விருப்பமும் அதுவே. ஆனால் இருவரது வீட்டினரும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அது நிச்சயம் எங்கள் பேரக்குழந்தையாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார்கள். அடுத்த வருடம் வேலையை விட்டு விடுவேன். அப்போதாவது எனது எண்ணம் நிறைவேறும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாமே இரண்டு குழந்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பதைக் காட்டிலும் , வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கும் ஒரு குழந்தைக்கு அற்புதமான ஒரு வாழ்க்கையை வழங்குவது நல்லது என்று நினைக்கிறேன். இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது. இதுவே நீண்ட பதிவாக ஆகிவிட்டதால் மற்ற சகோதரிகளின் கருத்தையும் படித்துவிட்டு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தனிமரம் தோப்பாகாது
அக்டோபர் 12, 2007 - 7:43am - வழங்கியவர் T S JAYANTHI

மழலைச் செல்வம்

அளவில்லாத செல்வத்திற்கு ஆசைப்படும் மனிதனுக்கு மழலைச் செல்வம் மட்டும் ஒன்று போதுமா? என்னைப் பொறுத்தவரை போதாது. குறைந்த பட்சம் இரண்டாவது வேண்டும். அவரவர் கோணத்திலிருந்து சில காரணங்களுக்காக ஒன்று போதும் என்கின்றனர்.

1. பொருளாதாரம்
2. குழந்தை வளர்ப்பில் உதவி
3. பேறு கால விடுப்பு (2 குழந்தைக்குத்தான் விடுப்பு கொடுக்கிறார்கள்)
4. சோம்பேறித்தனம்
5. அறியாமை (ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் எத்தனையோ பேர் வயதான காலத்தில் ஒன்றுடன் நிறுத்திவிட்டோமே என்று புலம்பக்கேட்டிருக்கிறேன்).

சரி. வேலைக்குப்போவதால் ஒன்றுடன் நிறுத்தி விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் வேலைக்கும் போகாமல் ஒன்றுடன் நிறுத்துபவர்கள் எத்தனை பேர். நமக்குப் பிறகு தன்னுடைய எண்ணங்க்ளைப் பகிர்ந்துகொள்ள கண்டிப்பாக ரத்த சம்பந்த சொந்தங்கள் வேண்டும்.
நேற்று என் பையனுக்கு லீவ். தங்கை காலேஜிலிருந்து வந்ததும் காப்பி போட்டுக் கொடுத்திருக்கிறான். அவள் அண்ணனுக்கு காலி பிளவர் பஜ்ஜி போட்டுக் கொடுத்திருக்கிறாள். நாம் எல்லாம் சின்ன வயதில் எவ்வளவு ஜாலியாக இருந்திருக்கிறோம். நாங்கள் 5 பேர் (4+1) தினமும் ஸ்கூலில் இருந்து வந்து மயிலை கபாலி கோவிலுக்குச்சென்று விளையாடி விட்டு வருவோம். ஆஹா, எப்பேர்ப்பட்ட நாட்கள். ஏதோ அந்த சுகங்கள் நம் பிள்ளைகளுக்குக் கிடைக்காவிட்டாலும் ஒரே ஒரு அண்ணன், தம்பி, தங்கை, அக்கா ஏதாவது ஒன்றாவது வேண்டாமா. எனக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைதான். ஆனால் காலத்தின், வீட்டின், நாட்டின் கட்டாயம் கருதி 2 தான் பெற்றுக் கொண்டேன். நிறைய பெற்றுக்கொள்ள ஆசைதான். ஒரு குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் தங்களுடைய சுய நலம் கருதி தான் ஒன்றுடன் நிறுத்தி விடுகின்றனர்.
சின்ன வயதிலிருந்தே ஒரே குழந்தையை தம்பி, தங்கையே வேண்டாம் என்று பெற்றோரே சொல்ல வைத்து விடுகின்றனர். எதிர்காலத்தில் மாமா, மாமி, சித்தப்பா, சித்திபோன்ற உறவுகளே இல்லாமல் போயிடுமோ?
எனவே சிந்தியுங்கள் தோழியரே, ஒரு குழந்தை உள்ளவர்கள் சிந்தித்து நல்ல முடிவெடுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி

உடன்பாடில்லை
அக்டோபர் 12, 2007 - 2:24pm - வழங்கியவர் ambika_dt

எனக்கு நாம் இருவர் நமக்கிருவர் என்பதில் உடன்பாடில்லை,நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பதே சரி.அவனவனுக்கு EMI கட்டியே வாழ்கை போயிடும் போல இருக்கு..இதுல ஒரு குழந்தைக்கு மேல் தேவையே இல்லை.. 3,4 குழந்தைகள் இருக்கும் இடத்தில் ஒரு குழந்தை இருந்தால் அதனை நன்றாக பார்த்து கொள்ள முடியும்.. நம் வீடு என்ற வட்டத்தை தாண்டி மற்ற குழந்தைகளிடமும் நட்பாக பழக வாய்புள்ளது..

எத்தனை குழந்தைகள் ?.
அக்டோபர் 12, 2007 - 3:03pm - வழங்கியவர் ANITHASHANTHI

எனக்கு ஏத்தது "நாம் இருவர் நமக்கு இருவர்".அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ற இதனை டிசைட் செய்யலாம்னு நான் நினைக்கிறேன்.ஒரு குழந்தை இருந்தால் நாளை உறவு என்று சொல்லிகொள்ள ஆள் இல்லாமல் தனியாக போய்விடும் என்பது என் கருத்து.

அனிதா

தேவா
அக்டோபர் 12, 2007 - 3:24pm - வழங்கியவர் ANITHASHANTHI

ஹாய் தேவா
தத்து எடித்து வளர்க்க ஒரு பெரிய மனது வேண்டும்.கண்டிப்பாக பெரியோர்களுக்கு ஏற்று கொள்ளவது கடினம் தான்.பெரியவர்கள் ஏன்? நான் அதைபற்றி யோசிச்சாலே கஷ்டம் தான் என்று தோனுது...என்னால் ஏற்று கொள்ள முடியாதுனு தான் நினைக்கிறேன்.உங்க பெரண்ட்ஸ்,இன் லாஸ் அனைவரையும் கன்வின்ஸ் பண்ணி ,பாகுபாடு இல்லாமா அந்த குழந்தையை வளர்க்க எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

அனிதா

வேண்டாம்
அக்டோபர் 12, 2007 - 5:10pm - வழங்கியவர் ambika_dt

பொருளாதாரத்தை விட நான் மற்றொன்றையும் நினைக்கிறேன்.. ராஜா காலமாக இருந்தாலாவது மற்ற நாடுகளை கைபற்றி இடத்தை பெருக்கி கொள்ளலாம் நம்ம நாடு இருக்கிற சைஸுக்கு 110 கோடி ரொம்ப ஓவர்.. எங்கயோ கேட்ட நியாபகம்..முதலாவது அவசியமானது,இரண்டாவது ஆடம்பரமானது,மூன்றாவது அனாவசியமானது.. எனவே என்னை பொருத்தவரை இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்..

2
அக்டோபர் 12, 2007 - 8:16pm - வழங்கியவர் thalika

நிறைய பிள்ளைகள் பெற்றுக் கொள்ள இஷ்டம்னு வெளிப்படையா நிறைய பேர் சொல்வது கிடையாது...அது ஏதோ கேவலம்,அறியாமை அப்படிங்கர காரனத்தினால இஷ்டத்துக்கு குழந்தைகளை பெற்று விடுவதுன்னு தான் வெளிய பேசுவாங்க...தேவாவின் கருத்தே என் கருத்தும்.ஆனால் எனக்கு ஒன்றல்ல வீட்டில் இருப்பதால் இரண்டு பிள்ளைகளை என்னால் கவனிக்க முடியும் என்று தோன்றுகிரது....

தளிகா:-)

நாமிருவர் நமக்கேன் ஒருவரே ஒருவர், வேண்டும் அட்லீஸ்ட் இருவர்
அக்டோபர் 12, 2007 - 11:11pm - வழங்கியவர் harshini

ஆஹா, அருமையான விவாதம்:-)

நாம் இருவர் இருக்கோமெ, நமக்கும் இருவரா இருந்தா, அப்பாக்கு ஒருத்தர், அம்மாக்கு ஒருத்தர்ன்னு இருக்கலாம் இல்லையா:-)

வீட்டுல குழந்தைங்க இருந்தாலே சந்தோஷம், தானா வரும்:-) ஒரே குழந்தைனா, அதோட விளையாட அது பக்கத்து வீட்டு குழந்தைகள தான் தேடி போகனும். அப்படியே போனாலும், ஒரு நேரத்துக்கு அப்புறம், எல்லா குழந்தையும் அவங்க அவங்க வீட்டுக்கு வரனும். ஆனா தன்னுடைய சகோதரனோ, சகோதரியோ யாக இருந்தால், வீட்டில் கூட அவர்கள், விளையாடலாம்:-) நான் விளையாடலாம்னு சொன்னது வெரும் விளையாட்டுக்கு மட்டும் இல்ல. அவங்க அந்த தனிமையை அனுபவிக்க மாட்டாங்க.

இன்றைய காலத்தில், அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு போறாங்க. அப்ப, குழந்தைக்கு அவங்க வர வரைக்கும் யார் துனையா இருப்பாங்க, சொல்லுங்க. இன்னொரு குழந்தை இருந்தா இவங்க ரெண்டு பேரும் க்ரெச்சோ, ஸ்கூலோ, போய் வந்த வுடன் பேசிக்கொள்ள, பகிர்த்துக்கொள்ள, விளையாட என இருக்க முடியும்:-)

பள்ளிக்கு போகனும்னா கூட துனையா போயிட்டு வரலாம்:-) அதுபோலவே தங்கை tuition போனா, அண்ணன் கொண்டு போய் விட்டுட்டு கொண்டு வரலாம், இது போல நிறைய.

குழந்தைய க்ரெச்ல ஆரம்பத்துல தான் விடப்போறோம்:-) அப்புறம் அந்த குழந்தை வளர்ந்த பிறகு, அது சந்தோஷமா இருக்கும். ஒரு வார இதழில், ரொம்ப நாட்கள் முன்னால் படித்தது. ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும், பெற்றொரும், குழந்தையும் தான் அதிக அளவில் மனதளவில் பாதிக்கப்படுகிறார்களாம்.

அதே போல பெற்றொருக்கும், ஒரே குழந்தை என்பதால் அதை வளர்க்கும் போது அதிக செல்லம் குடுத்து, அந்த குழந்தை மனம் பாதிக்கப்படக்கூடாதுன்னு வளக்கறாங்க. அதனால், அந்த குழந்தை வெளியில் ப்ரெச்சனை என்றால் கூட அதை எப்படி அனுகுவது என்பது கூட தெரியாமல் இருக்க வாய்ப்பு அதிகம்.

இன்னொன்னு, இன்றைக்கு என்று நினைத்து, ஜெயந்தி மேடம் சொன்னது போல அப்புறம் வயதான பிறகு வருத்தப்படுபவர்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனால், அவர்களீல் ஒருவருக்கு கல்யானம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வரும் போது, தோழிகளும் தான் வருவாங்க. ஆனா அவங்களுக்கு ஒரு குடும்பம்னு வரும் போது, எல்லா விஷேசத்திலும் கலந்து கொள்ள முடியாது, சிலருக்கு திருமணம் ஆனவுடன் பழைய படி நட்புடன் இருக்க முடியாது. அதுவே சொந்தம் என்று பார்த்தால், அக்கா குழந்தைக்கு மொட்டை போடறாங்கன்னா, லீவ் போட்டுட்டு வருவாங்க அவங்க தம்பியும், தங்கையும், அவர்களூடைய குடும்பமும்(ஒரு சில குடும்பங்களில் இல்லாமல் இருக்கலாம், பல குடும்பங்களில் சந்தோஷமான தருனக்களிலும், சோகமான தருனங்களிலும், வருபவர்கள், அவர்களுடைய சகோதரர்கள் தான்). Friends என்றால் Friends தான். எத்தனையோ குழந்தைகள், இவர்களால் வளர்க்க முடியாத போது அக்காவின் வீட்டிலோ, தங்கையில் வீட்டிலோ வளர்க்கப்படுகிறார்கள். இது Friends வீட்டில் முடியுமா?

நிறைய யோசித்து பார்த்தால், அட்லீஸ்ட் இருவர் அவசியம். ஒவ்வொரு நிலையிலும், ஒருவர் இருந்தால், எப்படி இருக்கும் இருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்றி நிதானமாக யோசித்தால், நன்றாக புரியும்.

நான் மேலே எழுதியவை, என் கருத்தை சரியாக சொல்ல முடியாமல் போயிருக்கலாம்:-).ஆனால் அனுபவத்தில், பார்த்தது, கேட்டது தான் எழுதி இரூக்கிறேன்:-) ஏதேனும் எதிர் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்:-)

வாய்ப்பளித்தமைக்கு அட்மின் அண்ணாக்கு நன்றிகள்...:-)

அன்புடன்
ஹர்ஷினி :)

2 போதுமே...
அக்டோபர் 13, 2007 - 4:16pm - வழங்கியவர் talkout

அன்பானவர்கட்கு,

எனது தெரிவு இரண்டு...!

ஒன்று இல்லாததற்கான காரணம், என் நண்பர்களில் தனியானவர்கள் பெரும்பாலும் இதையே கூறுகின்றனர். ஆனாலும் தனித்துவிடுவார்கள் என்பது என்னால் ஏற்க முடியாது, ஏனென்றால் இன்றய உலகில் எங்குதான் சேர்ந்த்து இருக்கிறார்கள். பணிக்காகவோ இதர காரணிகளாலோ இதுதான் நிலைமை. (இது என் தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமே)

மூன்று உங்களின் விருப்பம், அதைவிட+... தெரியவில்லை!

ஆனால்...
எல்லாவற்றிற்கும் முதலில் நான் படிச்சு... வேலைதேடி... பெண்தேடி... அந்த பெண்ணின் விருப்பத்தை தெரிந்து... பிறகுதான் இரண்டா என்று தெரியும்... :)
நிறையவே காலம் இருக்கு எனக்கு யோசிக்க ;)

இப்படிக்கு,
நிமல் பிரகாஷ்
---
thetalkouttrojans.blogspot.com
nimalaprakasan.googlepages.com

குழந்தை தத்து எடுப்பது பற்றி
அக்டோபர் 15, 2007 - 1:50am - வழங்கியவர் DEVA

அனிதா குறிப்பிட்டிருந்தபடி , இது ஒரு பெரிய டிசிஷன் தான். நானும் பல சமயங்களில் இந்த ஆசை மனதில் இருந்தாலும் இது நடைமுறைக்கு சரி வருமா என்று பல கோணங்களிலும் சிந்தித்திருக்கிறேன். ஆனால் இது நாட்டில் யாரும் செய்யாத விஷயமில்லை. வெளி நாட்டிலும், நமது நாட்டிலும் பலர் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் என்ன ஒற்றுமை என்றால் அவர்களில் பல பேர் பிரபலமானவர்களாக சினிமா துறையை சேர்ந்தவர்களாக இருப்பதுதான். இது ஒரு வகை என்றால் குழந்தை இல்லாதவர்கள் தத்தெடுப்பது இன்னொரு வகை.

ஆனால் ஏற்கனவே ஒரு குழந்தை இருந்து மற்றொரு குழந்தையைத் தத்தெடுப்பது மிகவும் குறைவு. இப்போதுதான் எனக்கே அந்த விஷயத்தில் ஒரு தெளிவான மனநிலை ஏற்பட்டிருக்கிறது. நம்மில் பலர் வீட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஒரு குழந்தையின் மீது காட்ட யோசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. வளர்ப்பு பிராணிகளிடம் ஜாதி பார்ப்பதில்லை. ஆனால் மனிதனிடம் மட்டும் பார்க்கிறார்கள். எந்த குழந்தையும் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னையின் வளர்ப்பிலே என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த நல்ல வாய்ப்பினை ஒரு குழந்தைக்கு நாம் கொடுக்க தயங்குவது ஏன்? காதல் திருமணங்களுக்கு ஒரு காலத்தில் இருந்த எதிர்ப்புகள் இப்போது எத்தனையோ குறைந்திருப்பதைப்போல இந்த நிலைமையும் கூடிய சீக்கிரம் மாறினால் நன்றாக இருக்கும்.

நம்மால் அப்படி ஒரு குழந்தையை வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க்க முடியாவிட்டாலும் , ஆசிரமத்தில் வளரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து அது பெரியவனாகும் வரை ஸ்பான்சர் செய்யலாமே. அதன் படிப்புக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொண்டு அதற்கு நல்ல ஒரு எதிர் காலத்தை உருவாக்கலாமே. இது வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கு சாத்தியமே. நாம் KFC போன்ற இடங்களுக்கு சென்று ஒரு நாள் செலவழிக்கும் பணமே கூட அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு போதும். என்னால் மாதா மாதம் நினைவு வைத்துக் கொண்டு அனுப்புவது பல சமயங்களில் முடியாமல் போய்விடும் என்பதால் என் அம்மாவிடம் வருடத்திற்கென்று கொடுக்க சொல்லி விடுவேன். பணம் அதிகம் இருந்தால் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லை. நாம் சில விஷயங்களில் சாதாரணமாக செலவழிக்கும் சிறு தொகையும் அவர்களுக்கு பெரிதும் பயன்படும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடம்பிற்கு எதுவும் வந்துவிட்டால் கடவுளுக்கு காணிக்கையாக வேண்டுவதை விட இப்படி எதாவது இந்த குழந்தைகளுக்கு செய்வதாக வேண்டிக்கொள்ளலாமே. இதற்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். நம்புங்கள். இதுவரை நான் அப்படி வேண்டியது நடந்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஊருக்கு செல்லும்போது, ஊரை சுற்றிப் பார்ப்பதோடு ஒரு நாள் இதற்கென ஒதுக்கி எதாவது ஆசிரமத்துக்கு சென்று உங்கள் குழந்தைகளின் கையால் அவர்களுக்கு பரிசளிக்க செய்யுங்கள். புதிய உடுப்புகளோ, பென்சில் பாக்ஸ், ஸ்வீட்ஸ் இப்படி எதுவாக இருந்தாலும் நிச்சயம் உங்களுக்கு சந்தோஷத்தையே அது கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல சிந்தனையை வளர்க்க உதவும்.

இங்கே போன மாதம் பீச்சுக்கு சென்ற போது ஒரு பெண்ணை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து, நீங்க இண்டியனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்டாள். நான் என்னவென்று கேட்டேன். உங்கள் ஊரில் அஸ்ஸாமில் இருக்கும் ஒரு Tribal குழந்தையை நான் தத்தெடுத்திருக்கிறேன். அவனுக்கு நாந்தான் ஸ்பான்சர். அவன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறான். ஆனால் அது இண்டியன் லாங்க்வேஜில் இருக்கு. நான் உங்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைக்கிறேன். எனக்கு அதை ட்ரான்ஸ்லேட் செய்து அனுப்பி வையுங்கள். அப்படியே நான் எழுத நினைக்கும் பதிலையும் ஆங்கிலத்திலிருந்து அந்த மொழிக்கு மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டாள். அவள் அனுப்பி வைத்த கடிதத்தில் 3 வது படிக்கும் பிபூல் என்ற பையன் அழகான ஹிந்தியில் தனது கையெழுத்தில் நன்றி சொல்லி அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்த போது அழுகை வந்தது. நான் என் வாழ்க்கை முழுதும் உங்களை நினைத்துக் கொள்வேன் என்று எழுதியிருந்தான். அவன் அவளை இதுவரை பார்த்ததும் கிடையாது. யாரென்றும் தெரியாது. ஆனாலும் அவன் மனதில் அவளை எந்த அளவு நினைத்து நன்றி சொல்லி இருக்கிறான் என்பது அந்த கடித்ததில் புரிந்தது. அந்தப் பெண் பெரிய பணக்காரி இல்லை. என் ஆபிசின் அருகில் இருக்கும் ஒரு கம்பெனியில் கார்பெட் கிளீனிங் வேலையில் இருக்கிறாள். குறைந்த சம்பளமே. அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கணவனும் இல்லை. இந்த நிலையிலும் உதவி செய்யும் அவளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அதுவும் நம் நாட்டுக் குழந்தைக்கு.

என் மனதில்,அப்படி குழந்தை தத்தெடுக்கும் போது அது ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஏனெனில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அறுசுவை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தினால் எனக்கும் சில விஷயங்கள் தெளிவாகலாம். என் உலகம் என் வீட்டோடுதான். நான் தான் சொசைட்டி என்று நினைக்கிறேன். மாற்றங்களை நாம்தான் ஏற்படுத்த முடியும். தானாக வராது.

தேவா உங்களுக்கு பெரிய மனது
அக்டோபர் 15, 2007 - 2:55am - வழங்கியவர் Janaki2411

தேவா உங்களுடைய பதிவை பார்த்தேன். தத்து எடுப்பதை விட நாம் ஸ்பான்சர் செயவதே சிறந்தது என்பது என் கருத்து. நம் சமுதாயத்தை நம்மால் மாற்ற முடியாது. நாம் ஒரு நிகழ்ச்சி போனால் அந்த குழந்தையின் முன்பே இது தத்து பிள்ளை என்று சொல்லி காட்டி குழந்தையின் மனதை கஷ்டப்படுத்துவார்கள். அதனால் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஸ்பான்சர் செய்யலாம் அது நல்ல கருத்து. நான் இந்தியாவில் இருந்த போது என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு ஆசிரமம் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி தருவேன். அது படிப்பு சம்பந்த பட்டுதோ அல்லது அன்றாட தேவைக்கு வாங்கி தருவேன். ஆனால் இங்கு வந்த பிறகு ஸ்பான்சர் செய்யலாம் என்று இருக்கிறேன்.

ஜானகி

ஒன்றுக்கு மேல் வேண்டும்
அக்டோபர் 15, 2007 - 5:40am - வழங்கியவர் rosemary

இங்கு எழுத பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை.இன்றுதான் உள்ளே வர முடிகிறது.இரண்டு குழந்தைதான் என்னோட விருப்பம்.ஆனால் படிப்பு,வேலை,கவனித்துக்கொள்ள ஆள் போன்ற பல காரணங்களால் ஒன்றுக்குமேல் யோசிக்க முடியவில்லை.

என் மகன் தனியாகவே இருப்பானே என்பதுதான் என் கவலை.அதற்கு ஏன் தத்து எடுத்துக்கொள்ள கூடாது என எங்கள் வீட்டில் பேசிக்கொள்வோம்.பல விஷயங்களில் இதை செய்தால் சிக்கல்கள்.முதலில் நம்முடைய சொந்தங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.என்னதான் நன்றாக பார்த்தாலும் அவர்கள் எதிரிலேயே மற்றவர்கள் ஏதாவது பேசி பிரச்சனை வந்துவிட்டால்?

மேலும் நமக்கே சில நேரங்களில் மற்றபிரச்சனைகளினால் கோபமாக ஏதாவது பேசி குழப்பங்கள் வந்துவிட வாய்ப்புகள் அதிகம்.சொந்தபிள்ளை என்றால் தீட்டினாலோ அடித்தாலோ நமக்கே அந்த நேரம் கஷ்டமாக இருந்தாலும் பிறகு சரியாகிவிடும்.தத்துபிள்ளை என்றால் நமக்கே குற்ற உணர்ச்சி அதிகமாகும்.மொத்தத்தில் இதில் பிரச்சனைகள்தான் அதிகம்.

குழந்தையே இல்லாமல் தத்து எடுப்பது ஏற்றுக்கொள்ளகூடியது.ஒன்று சொந்தப்பிள்ளை இன்னோன்று தத்துபிள்ளை என்றால் நிறையயோசிக்க வேண்டும்.இதை பாதியில் நிறுத்தவோ மாற்றிக்கொள்ளவோ முடியாது.முடிவெடுத்து தத்து எடுத்துவிட்டால் எந்தபிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கவேண்டும்.வெகு சிலரை இப்படி தத்து எடுக்க பார்த்திருக்கிறேன்.

ஆனால் அந்தகுழந்தைகளின் மனநிலை கொஞ்சம் பரிதாபம்.இதனை நாள் பெற்றோராய் இருந்தவர்கள் தன் சொந்தமில்லை என தெரியும்போது நொருங்கிபோகிறார்கள்.கடைசியில் நல்லதை செய்தும் நிம்மதி போய்விட்டால்??

பிறகு தேவா எழுதிய ஸ்பான்சர் எடுப்பது பிரச்சனையில்லாதது.இதுபோல் சில குடும்பத்தையே தத்து எடுத்துக்கொள்வது,அவர்களுக்கு மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை அனுப்புவது,பிள்ளைகளை படிக்க வைப்பது,இதர செலவுக்கு உதவுவது என சில ஆர்கனைசேஷன்கள் செய்து வருகிறது.இதிற்கு பணம் அனுப்புபவர்கள் பலர் வெளிநாட்டில் சதாரண வேலைபார்ப்பவர்கள்தான்.இதில் நமக்கும் தத்து எடுத்த குடும்பத்திற்கும் நேரடி தொடர்பு இருக்காது.சரி இந்த விஷயங்கள் இங்கு தேவையில்லை.

ஒன்றுக்கு மேல் குழந்தைகள் வேண்டும்.நண்பர்கள் ஒரு எல்லைவரை மட்டுமே.எனக்கு பிரச்சனை என்றால் லீவு போட்டு வா என என் உடன்பிறந்தவர்களை கேட்கமுடியும்.நண்பர்களிடம் திருமணமானதும் அவர்கள் குடும்ப சூழ்நிலைகளால் இது போன்று கேட்க முடியாது.உடன்பிறந்தவர்களால் பிரச்சனை சில நேரங்களில் வந்தாலும் நமக்கென்று வரும் சொந்தங்கள் அதுதான்.

குழந்தை தத்து எடுப்பது பற்றி
அக்டோபர் 15, 2007 - 6:49am - வழங்கியவர் sindhu

சொன்னா நம்பமாடிங்க, இது எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆச, ஒரு குழந்தை தத்து எடுக்கனும்னு.
இத பத்தி பேச எனக்கு வயசு போதாது ஆனா என் கருத்த நான் சொல்ல விரும்புரன். எனோட சின்ன வயசுல இருந்தே நான் சொன்ன விசயம் இது ஒரு குழந்தை பெத்துகனும், ஒரு குழந்தை எடுத்து வளக்கனும்.
பிரக்குரது பெண் குழந்தைய இருந்த ஆண் வளக்கனும், ஆணா இருந்தா பெண் வளக்கனும்
ஒரு குழந்த தத்து எடுக்குரது சும்ம விசயம் இல்ல நிறைய டாகுமென்ட்ஸ் குடுகனும். நான் கொஞ்சம் விசாரிச்சு இருக்கன்.
எத்தன டாகுமென்ட்ஸ்னாலும் சரி என்னொட முடிவு இதுதான்.
ஊர் வாய மூட முடியாது நம்ம பிள்ளையாவே இருந்தாலும் "என்ன பிள்ள அப்பா சாடையும் இல்ல அம்மா சாடையும் இல்ல" நு சொல்ர ஊர் இது.
நாம நம்ம முடிவுல உறுதியா இருந்தா சரி.
பிள்ளைய தத்து எடுக்க போரம்னா அதுக்கு முன்னாடி கண்டிப்பா அத மத்தவங்க கிட இருந்து மறைக்க வழி ஒன்னு தேடிட்டு தான் செய்வம்ல?
எது எப்படி போனாலும் நான் தத்து எடுப்பன், யார் என்ன சொன்னாலும் சரி

hard work and self confidence leads you to the success

பாராட்டுகிறேன் சிந்து
அக்டோபர் 15, 2007 - 6:55am - வழங்கியவர் Janaki2411

சிந்து உங்களுடைய மன தைரியத்தை பாராட்டுகிறேன். நீங்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

ஜானகி

இதுதான் பலம்!
அக்டோபர் 15, 2007 - 11:03am - வழங்கியவர் admin

(திருமதி. மனோ அவர்கள் அவரால் உள்நுழைவு செய்ய இயலவில்லை என்ற காரணத்தால் இந்த பதிலை எனக்கு அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிட்டுள்ளேன். )

திருமதி ஜெயந்தி சொன்ன கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகிறேன். இப்போது அடிக்கடி நான் ஆதங்கப்படும் விஷயமும் இதுதான். திருமதி ஜெயந்தி சொன்னதுபோல சிறுவயதில், நிலா ஒளியில் சினேகிதர்களுடன் விளையாடி மகிழ்ந்ததும், கூடப்பிறந்தவர்களுடன் கதைகள் பேசிக் களித்ததும் வாழ்க்கையின் கவலைகள் தெரியாமல் பாடிப்பறந்ததுமாய் அன்று எங்களுக்கு கிடைத்த கொடுப்பினைகள் இன்றைய குழந்தைகளுக்கு இல்லை. படிப்பின் அழுத்தம், தொலைக்காட்சி இவற்றில் அவர்களின் இளமையின் சந்தோஷங்கள் காணாமல் போகின்றன. இதில் ஒரே ஒரு குழந்தையாக இருந்தால் கேட்கவே வேண்டாம். அந்த குழந்தையின் வாழ்க்கை, பெற்றோர் பேசிய நேரம் போக, பாக்கி நேரங்கள் தொலைக்காட்சி, தனிமை -இதிலேயே கழிந்து உள்ளத்தின் அத்தனை உணர்வுகளுக்கும் வடிகால் இல்லாமல் போகிறது. அந்தக் குழந்தைக்கு சகோதரத்துவம், கூடி வாழ்தலின் அருமை, பகிர்ந்து கொள்ளுதல், தன் பிராயத்து உனர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடிய தோழமை-இவை அனைத்துமே அதன் வாழ்க்கையின் இழப்புக்களாகி விடுகின்றன. திருமதி ஜெயந்தியின் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பரிவும் பாசமும் காட்டிக்கொள்வதைக் கேட்கும்போது எத்தனை இதம்! இந்தப் பரிவும் பாசமும் இந்த வயதோடு முடியப்போவதில்லை. கடைசி வரை வாழ்வில் சுகமான இதமான உறவுகளாய்த் தொடர்ந்து வரும். வாழ்க்கையில் அனைத்து உறவுகளும் கூடவே இறுதி வரை வருவதுதான் மிகப்பெரிய பலம்.

இளம் வயதில் பொருளாதாரப்பிரச்சினைகள், பிரசவ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகள் காரணமாக ‘ஒரு குழந்தையே போதும்; என்ற முடிவுதான் சரியெனத் தோன்றும். ஆனால் அடுத்தாற்போல இன்னொரு குழந்தை என்பது உங்களின் முதல் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் பலம், என்பதுதான் மிகப் பெரிய உண்மை!

இரண்டு குழந்தைகளுக்குதான்
அக்டோபர் 15, 2007 - 3:51pm - வழங்கியவர் charunetha

என்னுடைய கருத்து இரண்டு குழந்தைகளுக்குதான்
நமக்கு ஒரு பிரச்சனை என்றால் உடன் ஓடி வருபவர்கள் நம் கூடப்பிறந்தவர்களாகத் இருக்கும்.நம்முடைய நண்பர்களுகுக்கோ சித்தப்பா பிள்ளைகளுக்கோ அல்லது பெரியப்பா பிள்ளைகளுக்கோ கண்டிப்பாக அந்த அளவுக்கு அக்கரை இருக்காது என்பது என் கருத்து
நம்முடைய குழந்தைக்கும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்களுடைய சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் பக்கபலமாக வழ்வார்கள்.என்பதில் ஐயமில்லை
அன்புடன்
சுதா

குழந்தை தத்து எடுப்பது பற்றி
அக்டோபர் 16, 2007 - 2:25am - வழங்கியவர் Manohari

அட நம்ப சிந்துவா இது!!!! ஏதிந்த தைரியம்! எப்படி வந்தது? உண்மையை கூற வேண்டுமென்றால் இந்த தலைப்பைக் குறித்த உங்களின் பதிவு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. குழந்தை தத்தெடுக்கும் விசயத்தில், உங்கள் பதிவின் மூலம் உங்கள் திடமான மற்றும் அன்பான இதயத்தையும் காண முடிந்தது. இந்த சிறிய வயதில் எவ்வளவு தெளிவான சிந்தனை!!! பாராட்டுக்கள் கூற நினைக்கின்றேன் ஆனால் அதற்கான அருகதை எனக்கில்லை என்பதால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைப்பதெல்லாம் கைக்கூடி எல்லா செல்வங்களையும் பெற்று சிறந்து விளங்க மனதார வாழ்த்துகின்றேன்.

நான் உனக்கு நீ எனக்கு நமக்கெதற்கு குழந்தை
அக்டோபர் 16, 2007 - 10:16am - வழங்கியவர் T S JAYANTHI

என்று ஒரு காலம் வந்து விடுமோ? 'இந்து' நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன். ஆணின் விந்தையும் பெண்ணின் விந்தையும் சேர்த்து (நம் இந்தியாவில் தான்) குளிர் சாதன அரையில் (மருத்துவமனையில்) வைத்திருக்கிறார்களாம். எப்பொழுது தேவையோ அப்பொழுது எடுத்து கருப்பையில் வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வார்களாம். யார் தெரியுமா? இன்றைய இளைஞர்களில் சிலர். இப்படி சில ஆண்டுகளாக பெட்டியில் உள்ள! குழந்தையும் உண்டாம். இவர்கள் நிறைய சம்பாதித்து செட்டில் ஆகி! பிறகு குழந்தை பெற்றுக் கொள்வார்களாம். என்ன கொடுமை இது.

அடுத்தது தத்து
சிந்து உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தைரியமாக உங்கள் கருத்துக்களைச் சொன்னதற்கு. ஆனால் நடைமுறை வாழ்க்கை. எனக்குத் தெரிந்த ஒருவர் மனைவியின் வற்புறுத்தலுக்காக தத்து எடுத்துக் கொள்ள சம்மதித்தார். ஆனால் அந்தக் குழந்தையை சீ சீ என்கிறார். கிட்ட சேர்ப்பதே இல்லை. அன்பு காட்டுவதே இல்லை. கணவன் மனைவி இருவரும் சம்மத்தித்தால் ஒழிய இது சாத்தியப்படாது. இதற்கு பதில் நம் ரோஸ் சொன்னது போல் அனாதை இல்லங்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாம். நம் குழந்தைகளை அந்த இல்லங்களுக்கு அழைத்துச் சென்று உலகத்தின் மறு பக்கத்தை அறியச் செய்யலாம்.
இன்னொரு விஷயம். என் பொருளை நான் தொலைத்தால் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் வேறொருவர் தொலைத்தால்? இதெல்லாம் உலக வழக்கம்.
ஒரே வீட்டில் இருந்தாலும் எத்தனை பேர் மைத்துனர் குழந்தைகளிடம் பேதம் பாராட்டாமல் இருப்பர். இதுவே இப்படி என்றால் அனாதைக் குழந்தை என்றால்.
இருந்தாலும் சிந்து நீங்கள் நினைப்பதுபோல் நடக்க வாழ்த்துக்கள்.

அப்புறம் மனோகரி அதென்ன 'எனக்கு அருகதை இல்லை'. அவரவர் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். உங்களைத் தாழ்த்துவது போல் இருக்கிறது. அப்படி சொல்லாதீர்கள்.
அன்புடன்
ஜெயந்தி

திட்டமிட்டு வாழ்கிறார்களாம்!!!???
அக்டோபர் 16, 2007 - 10:55am - வழங்கியவர் vidhubha

ஜெ அக்கா, இதற்கெல்லாம் இந்தக்காலத்தில் அதிசயப்படமுடியாது.

வாழ்க்கையின் போக்கில் வாழ்ந்து மடிந்தது அந்தக்காலம். ஆனால் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை உணர்வு. அனேகம் பேர் திருமணத்திற்கு முன்னரே குடும்ப வாழ்க்கையைத் திட்டமிட்டுவிடுகிறார்கள். திருமணமானதும் எத்தனை குழந்தை, எப்போது பெற்றுக்கொள்ளவெண்டும் என்றெல்லாம் திட்டமிட்டுவிடுகிறார்கள். வாழ்க்கையின் ஓட்டத்தில் திட்டங்கள் மாறிப்போனால் விவாகரத்துக்கும் தயாராக இருக்கிறார்கள்.

குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது வாழ்க்கையில் செட்டிலாகவா அல்லது வாழ்க்கைத்துணை மீது நம்பிக்கை வராமலா என்ற கோணத்திலும் யோசிக்கவேண்டியுள்ளது :-)

அப்புறம், தத்தெடுத்து வளர்க்கவேண்டுமென்பது ஆரோக்கியமான சிந்தனை தான். ஆனால் அதில் நடைமுறைச்சிக்கல்கள் அதிகம். ஒரு குழந்தை இருக்கையில் இன்னொரு குழந்தையைத் தத்தெடுக்கும்போது இன்னமும் கவனம் தேவை. நாம் பெற்றெடுத்த குழந்தையின் மனநிலையைப் பற்றியும் யோசிக்கவேண்டும். நமக்கிருக்கும் பக்குவம் குழந்தைகளுக்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

சமீபத்தில் சுனாமியின் பாதிப்பினால் அனாதையாகிப்போன குழந்தைகளைப் பார்த்தபோது நானும் என் கணவரும் இப்படிப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று பேசியதற்கு என் குழந்தைகளிடம் எழுந்த மாற்றமே நான் இவ்வாறு எழுதக்காரணம்...

நாம் செய்யவிரும்பும் உதவியை நல்ல சேவை இல்லங்கள் மூலமாகவோ, பாதிக்கப்பட்டவரை நேரடியாக அணுகி அவர்களின் படிப்பிற்கோ வேலைவாய்ப்பிற்கோ உதவுவதே எனக்கு சரியெனப்பட்டது.

நான் என்ன சொல்ல?
அக்டோபர் 16, 2007 - 10:58am - வழங்கியவர் Subha Jayaprakash

இதில் நான் என்ன சொல்ல?
கேட்டதே நான் தான்...
பதிலும் கிடைத்து நான் மட்டும் முடிவு எடுத்தும் விட்டாகிவிட்டது...
ஆனால் நடைமுறைக்கு இன்னும் சிறிது வேலை செய்யவேண்டியுள்ளது.
எனவே 2 குழந்தைகளுக்கு அவசியம் உள்ளது.
எனக்கு தம்பி உள்ளான்...
ஆனால் என குழந்தைக்கு?

எப்படியும் சித்தப்பா, பெரியப்பா குழந்தைகள் என்றால் பேதம் உள்ளது.
சுயநலம் என்று இல்லை...
அவரவர் குழந்தைகள் என்றால் அவரவருக்குத்தானே தெரியும்!!
எனவே 2 குழந்தைகள் அவசியம்.

கூடி விளையாட இடமிருக்காது
அக்டோபர் 16, 2007 - 1:01pm - வழங்கியவர் ambika_dt

மன்னிக்கவும்..கூடி விளையாட நிறைய குழந்தைகள் பெற்று கொண்டால் நாளை கூடி விளையாட என்ன , நிற்கவே இடமில்லாமல் போய் விடும்.. இதுதான் நிஜம் . நாம் உணர்வின் வசப்படாமல்,அறிவின் வசப்பட்டு யோசித்தால் இது புரியும்..
சிந்து, மனசளவில் பெரிய ஆளாயிட்டீங்க..ஏன்னா என்னால் தத்து எடுத்து வளக்க முடியுமான்னு தெரியல... குழந்தை பிறப்பை திட்டமிடுவதில் தவறில்லைன்னு நினைக்கிறேன், அனுபவஸ்தற்களின் ஆலோசனையோடு..யார் கண்டா இன்னும் 100 வருடங்கள் கழித்து "அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் குழந்தை பெற்று கொள்வார்களாம் "என்று டெஸ்ட் ட்யூப் பேபிகள் பேசக்கூடும்..(சும்மா..கற்பனை..
) 3,4 குழந்தைகள் ,பேர குழந்தைகள் இருக்கிற தாத்தா ,பாட்டியெல்லாம் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.(விதி விலக்கு உண்டு.) ஏற்கனவே 3,4, குழந்தைகள் பெற்றவர்களை தர குறைவாக கூற வில்லை, இனிமேல் பெறும் நாங்கள் யோசிக்க வேண்டும்.. இங்கு(USA) படிப்பதற்கு ஆகும் செலவையும், இந்தியாவில் நாம் படிப்பதற்கு(IIT,REC,govt collages) நம் அரசாங்கம் செலவிடும் தொகையயும் ஒப்பீடு செய்து பார்த்தால் ,அரசாங்கம் நமக்காக எவ்வளவு செலவு செய்கிறது என்பது தெரியும்.நாம் நம் நாட்டிற்காக செய்யும் ப்ரதி உபகாரம் இதுதான்.

உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா
அக்டோபர் 17, 2007 - 11:40pm - வழங்கியவர் Hussainghani

உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 47 விழுக்காடுக்கும் அதிகமாக 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. பண்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியச் சந்தைகளை மொய்ப்பதற்குக் காரணம் பெருமளவில் நுகர்வோரைக்கொண்ட நாடு இந்தியா. எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்காமல் அனைத்து துறைகளிலும் தன்நிகரற்று விளங்கும் நாடு இந்தியா. இன்னும் நம் நாட்டின் பெருமையை அடுக்கிக் கொண்‍டே போகலாம் இந்த அசுர வளர்ச்சிக்கெல்லாம் காரணம் மக்கள் தொகை பெருக்கமே... மக்கள் தொகைப் பெருக்க‍மே காரணம்.

50 கோடிப் பேரைக் கொண்ட பாரதம் காணாத வளர்ச்சி 70 கோடிப்பேரைக் கொண்ட பாரதம் காணாத வளர்ச்சி 90 கோடிப் பேரைக் ‍கொண்ட பாரதம் காணாத வளர்ச்சி 100+ கோடிப் பேரைக் கொண்ட பாரதம் சாதித்துள்ளது.

இன்று இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைப்பவர்கள் இந்தியர்களே.
மக்கள் தொகை வளர்ச்சியை தடுப்பதில் அயல்நாடுகள் கடைப்பிடித்த வழிமுறைகளை இந்தியத் தம்பதிகள் கடைப்பிடிக்கவில்லை. நகர்புரங்களில் உள்ள ஒருசில தம்பதிகள் இதற்கு விதிவிலக்கு. ஆனால் கிராமப்புரங்களில் இன்றும் 5, 6 குழந்தைச் செல்வங்கள் வீட்டில் விளையாடத்தான் செய்கின்றன.

ஒரு 50, 60 வருடங்களுக்கு முன் குதிரை வண்டிகளும், ட்ரம் மற்றும் கை ரிக்ஷாக்களும் ஓடிய சென்னை நகர் வீதிகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள்... இன்றைய சென்னை நகரையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள்... ("சிலிக்கான் சென்னைக்கு வயது368" என்று நான் எழுதிய தொகுப்பை பாருங்கள் http://thatstamil.oneindia.in/
news/2007/08/22/chennai-turns-
368-today.html) தெரிகிறதா வித்தியாசம்.

மக்கள் தொகை பெருக்கம் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணம். ஆனால் இதை தெரியாதவர்கள் தான் மக்கள் தொகை பெருக்கம் கஸ்டம் நஸ்டம் பற்றாக்குறை இன்னும் என்னென்னமோ சொல்வார்கள். அது அல்ல உண்மை.
இன்னும் 1000+ கோடியை தாண்டினாலும் யாருக்கும் எதுவும் பற்றாக்குறை என்று வந்து விடாது அபார வளர்ச்சியையே காணும்.

இந்தியச் சூழலை கருத்தில் வைத்தே கருத்துச் சொல்லியுள்ளேன் ஐயா! நானெல்லாம் ஒரு டசனுக்கு மேல் பெற்றுக்கொள்ள ஆசை... பெற்றுக் கொடுப்பவள் சம்மதித்தாள்?