கீமா நோன்பு கஞ்சி

தேதி: December 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

அரிசி நொய் - 150 கிராம்
பாசிபருப்பு – 50 கிராம்
மட்டன் கீமா – 200 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 50 கிராம்
கேரட் – ஒன்று
கேபேஜ்(முட்டைகோஸ்) – கால் கப்
பேபி கார்ன் – இரண்டு
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் – ஒன்று
கொத்தமல்லி – கால் கட்டு
புதினா - எட்டு இதழ்கள்
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – 25 கிராம்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை – சிறிது
கிராம்பு – இரண்டு
ஏலம் – இரண்டு
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது


 

மட்டன் கீமாவை சுத்தம் செய்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். காய்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாயை ஆய்ந்து அலசி வைக்கவும். பாசி பருப்பை லேசாக வறுத்து அதில் அரிசி நொய்யை சேர்த்து களைந்து ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அதனுடன் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கவும்.
வதக்கி வைத்துள்ள கீமாவை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சைமிளகாய், கேரட், முட்டைகோஸ், பேபி கார்ன் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கி 5 நிமிடம் வேக விடவும்.
5 நிமிடங்கள் கழித்து ஊற வைத்திருக்கும் நொய் மற்றும் பருப்பை சேர்த்து கிளறி விடவும்.
எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கிளறிய பின்னர் தீயை குறைத்து வைத்து மீண்டும் 5 நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மூடி போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
தேங்காயை அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அதை கஞ்சியுடன் ஊற்றி கலந்து விடவும். தேங்காய் பவுடரை கரைத்தும் ஊற்றலாம்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் வதக்கியவற்றை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான கீமா நோன்பு கஞ்சி தயார். அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் பல வகை கஞ்சிகளில் இதுவும் ஒரு வகையாகும். பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்தும் செய்யலாம். குக்கரில் செய்வதால் அதிக தீயில் செய்யக்கூடாது. ப்ரஷர் அடங்கியதும் உடனே திறந்து நன்கு கட்டி பிடிக்காமல் கிளறி விடவும்.
நோன்பு காலங்களில் என்றில்லை இதை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். உடம்பு சரியில்லாதவர்களுக்கும் கொடுத்தால் நல்ல தெம்பாக இருக்கும். மட்டன் கீமாவிற்கு பதில் சிக்கன் கீமாவும் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்....மிகவும் நன்றாக உள்ளத

ஜலிலா Mdm,

பார்க்க மிகவும் சுவையாக உள்ளது..ஆனால் இதில்
அரிசி நொய் என்றால் என்ன?

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

Keerthi

டியர் அட்மின்( பாபு தம்பி) என்ன நலமா?
நோன்பு கஞ்சி குறிப்பில் ( கடைசியில் குறிப்பு நாலைந்து லைன் அனுப்பி இருந்தேன் அதை இனைக்க வில்லையா?

ஈதுக்கு நான் அனுப்பிய ஸ்வீட்டை போடுவீர்கள் என்று எதிர் பார்த்தேன் .
இரண்டு வகை ஸ்வீட் அனுப்பினேனே ஏன் போட வில்லை?

ஜலீலா

Jaleelakamal

டியர் பரிதா

ஈத் முபாரக் உங்கள் பாராட்டுக்கு நன்றி//
ஜலீலா

Jaleelakamal

டியர் கீர்த்தி கஞ்சி என்றாலே நொய் தான் போடனும் அதாவது அரிசியை மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளனும், நாங்கள் நோன்பு சமயத்தில் ஒரு மாதத்திற்கு தேவையானதை மிஷினில் கொடுத்து உடைத்து கொள்வோம்.

அரிசி ரவை தான் நொய் என்போம்.

ஜலீலா

Jaleelakamal