பட்டிமன்றம் 10

நம்முடைய நடுவர் கவிசிவா அவர்கள் நல்ல தீர்ப்பை வழங்கியதோடு இல்லாமல் நல்லதொரு தலைப்பையும் கொடுத்து உள்ளார்கள். அவர் கொடுத்த தலைப்பு இதுதான்..

"இன்றைய ஊடகங்கள் இளைஞர்களை சீரழிக்கிறதா?சீர்படுத்துகிறதா?”

ஊடகம் என்றால் மீடியா அதாவது..செய்திதாள், டிவி..இப்படி..

இளைஞர்கள் என்றால் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களை விட்டு விடுவோம்..மற்ற எல்லோரும் இளைஞர்தான்..40 வயதுக்கு மேலும் எடுத்து கொள்ள வேண்டாம்..ஏனெனில் ஒரு இளைஞனின் வாழ்க்கை சீராவதும் சீரழிவதும் அந்த வயதுக்குள் தான் என்பதால் இதை எடுத்து கொள்வோம்..

போன பட்டிமன்றத்தில் வந்து அசத்திய அசத்தாத அனைத்து தோழிகளையும் இந்த பட்டிமன்றத்திற்கு வந்து கருத்துக்களை கூறி அசத்துமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்..

யாரும் யார் மனதையும் புண்படுத்தாத கருத்துக்களை மட்டும் தெரிவிக்கும் படியும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..(என் தோழிகளை பற்றி நன்றாக தெரியும் இருந்தாலும் ஒரு முறைக்காக கூறி கொண்டேன்,அவ்வளவுதான்..)

அதனால் தைரியமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

ஆரம்பமாகட்டும் வாக்குவாதங்கள்...

என்றும் ப்ரியமுடன்
தாமரை..

வணக்கம் நடுவர் அவர்களே.. இந்தாங்க முதல்ல ஜில்லுனு ரோஸ்மில்க் குடிங்க. ஹாங்.. இப்போ வாதத்துக்கு போவோம்.

இன்றைய ஊடகம் - செய்தித்தாள் - யார் யாரை குத்தி கொன்னாங்க, யாருக்கு யாரோடு கள்ள காதல் நல்ல காதல் இதெல்லாம் முதல் பக்கத்துல. வேலை வாய்ப்பு செய்திகள், சமூகத்தில் நல்ல இடம் அடைவது எப்படி, நாட்டுக்கு நல்லது செய்வது எப்படி - இதெல்லாம் ஒண்ணு இருக்கவே இருக்காது இல்லனா பின் பக்கத்துல பொடி எழுத்துல போட்டுருப்பாங்க.

பத்திரிக்கை - ஆனந்த விகடன், கல்கி மாதிரி பாரம்பரியமிக்க பத்திரிக்கைகளே பக்கத்துக்கு பக்கம் த்ரிஷா, நயந்தாரா, அஜீத், விஜய் தான். நல்ல கதைகள், வாழ்வில் வெற்றியடைந்தோரின் பேட்டிகள் - ஒக்கட்டி லேது. இவங்களே இப்படினா மற்ற குப்பை பத்திரிக்கைகளை பத்தி கேக்கணுமா?

டி.வி - அடடா.. எனக்கு இன்னும் நினைவு இருக்கு.. தூர்தர்ஷன் மட்டும் இருந்தது அப்போ. வாரா வாரம் போடும் ரங்கோலி, சித்ரஹார், ஒலியும் ஒளியும், பன்மொழி படம் (அதுல என்னிக்காவது தமிழ் படம் போடுவான்), மிலே சுர் மேரா துமாரா, செவ்வாய்கிழமை நாடகம் - இதெல்லாம் எப்படி அனுபவிச்சு பார்த்தோம்னு. ஆனா இப்போ? காலை முதல் மாலை வரை சீரியல் (அதுலயே இப்போலாம் ஆசிட் ஊத்தறாங்க, மனித வெடிகுண்டு வெடிக்கறாங்க என்ன ஒரு முன்னேற்றம்), காந்தி ஜய்ந்திக்கு ஸ்பெஷல் திரைபடம் "காதல் கொண்டேன்", ஸ்பெஷல் "அசின்" பேட்டி - நல்ல வேளை காந்தி தாத்தா செத்துட்டாரு இதெல்லாம் பார்க்காம. (அது சரி அவர் இருந்தா, காந்தி ஜயந்திக்கு வந்துருக்காது இதெல்லாம், நேரு ஜயந்திக்கு வந்துருக்கும்..)

சினிமா - இது தானே எல்லாத்துக்கும் தாத்தா? ஏதோ ஒருத்தரோட வாழ்க்கைலயே காதல் மட்டும் தான் முக்கியமான பாகம்ங்கற மாதிரில்ல படம் எடுக்கறாஅங்க? ஸ்கூல் காதல், காலேஜ் காதல், வேலை காதல், பார்த்த காதல், பாக்காத காதல், இணைய காதல், ஃபோன் காதல் - என்னங்க இது, காதல் முக்கியம் தான், காதல் இல்லாம உலகமே சுத்தாது தான், அதுக்காக எல்லோரும் காதலிச்சே ஆகணும்னா இருக்கு? வாழ்க்கைல வேறு விஷயமே இல்லையா படம் எடுக்க? அத்தி பூத்த மாதிரி ஒரு நல்ல படம் வரும் ஆனா அதை குருவியும் பில்லாவும் அடிச்சு சாப்பிட்டுடும்.

இப்போ போதாக்குறைக்கு புதுமைங்கற பேர்ல கிராமத்து காதல் - வாழ்க்கைனு வன்முறைல தோய்ச்சு படம் எடுக்கறது. சமீபத்தில் வந்த சக்கரக்கட்டி படத்தில் ஹீரோவோட இண்ட்ரோ பார்த்தீங்களா யாராவது? என்னல் இன்னும் கூட நம்ப முடியவில்லை, ஒரு மனிதன் அதை ஒரு சீன்னு எடுத்து அதில் ஒரு நடிகனும் நடித்து, எத்தனியோ முறை ரஷ் பாத்து, ட்ப்பிங் பண்ணி, ரிலீஸூம் பண்ணியாச்சு - ஒரு இடத்துல, ஒரே ஒரு நொடி கூட இந்த மாதிரி அபத்தமா ஒரு குழந்தைக்கு சீன் வெக்கலாமானு தோணலியா இவங்க யாருக்கும்? ஆண் - பெண் இருவருக்கும் ஏதோ ஒன்று இருந்தே ஆக வேண்டும்ங்கற மாதிரி சித்தரிக்கறதுல சினிமா அடைஞ்ச வெற்றி இருக்கே.. அடேங்கப்பா..

இணையம் - இதை பற்றி குறை ஒண்ணுமே சொல்ல முடியாது, மேல சொன்ன எல்லா ஊடகமும் செய்ய வேண்டிய டேமேஜை ஒரு இளைஞனுக்கு செய்து விடுகின்றன. அதை தாண்டி இணையத்திற்கு வரும் போது எல்லையில்லா ஒரு பரந்த வெளி கிடைக்கிறது. புகுந்து விளையாடுறாங்க.. ஆர்குட்ல பாக்கத அசிங்கமா, அந்த தளத்துல பாத்த மெஜாரிட்டி இந்திய - ப்ரேசிலிய இளைஞகர்கள் தான். இளைய சமுதாயத்தோட பொன்னான நேரம் எவ்ளோ இதுல செலவாகுதுனு தெரிஞ்ச நமக்கு இதயமே வெடிச்சுடும்.

ஏன் செய்தித்தாள், டி.வி, பத்திரிக்கை, இணையம், சினிமா இதுல எல்லாம் நல்லதே வர்றதில்லயா, நாங்கலாம் இதெல்லாம் இருந்து தானே முன்னுக்கு வந்துருக்கோம்னா, கரெக்ட். நிச்சயம் நல்லது வருது. நானும் ஆனந்த விகடன், கேபிள் டீவி, மெகா சீரியல், சினிமா எல்லாத்து கூடவும் இருந்து தான் இப்போ நல்ல நிலைமைல இருக்கேன். ஆன இதெல்லாம் இல்லாம இருந்து இருந்தா நிச்சயம் இன்னும் நல்லா வந்துருப்பேன். இது ஏதோ பழி போடும் வேலை அல்ல. நான் ஸ்கூலில் இருந்த வரை ஸ்கூல் டாப்பர் தான், காலேஜில் நல்ல மார்க் தான், இப்போது வேலையும் நல்ல வேலை தான். ஆனா இதுக்கு மேல செய்யறதுக்கு எனக்கு மேலே சொன்ன ஊடககம்லாம் பெரிய டிஸ்ட்ராக்ஷனாகவே இருந்தது. நானா டிஸ்ட்ராக்ட் ஆகலனாலும், என் ஸ்கூல்மேட்ஸ் எல்லாம் நைட் க்ளப், பப்னு பேசும் போது நான் மட்டும் தனித்து இருந்தேன். இதெல்லாம் போனால் தான் 'கூல்' ஆட்டிட்யூடானு யோசிச்சுருக்கேன். காலேஜில் க்ளாஸ்ரூம் காதல் ரூமா தான் இருந்தது. காதலிச்சா தான் காலேஜ் போறதுக்கே மதிப்போனும் யோசிச்சுருக்கேன். எத்தனி பேர் என்னை மாதிரி யோசனையோடு நிறுத்தி கொள்கிறார்கள்? என்னை போன்று ஓரளவு படித்த குடும்பம், நல்ல சூழ்நிலையில் வளர்ப்பு, நல்ல அப்பா - அம்மா இருந்துமே நான் வெகு சுலபமாக தவறி போய் இருப்பேன். ஏதோ என் நல்ல நேரம் அவ்வாறு நடக்கலை. ஆனா இம்மாதிரி சூழ்நிலைகள் இல்லாம இருக்கும் அடி வர்க்கத்தினர் தானே இந்தியாவில் அதிகம்? அவ்வளவு ஏன், இப்போ என்னோட ஒரு ஒன்று விட்ட கஸின் +1 படிக்கிறாள். ஆர்குட்டில் இருக்கிறாள், 400 - 450 தோழர்களாம் அதுலே. முக்காவாசி யார் என்ரே தெரியாத ஆண்கள். ஸ்கூல் பக்கம் உனக்காக காத்திருக்கேன் வானு பேசிக்கறாங்க. நான் எவ்வளவோ சொல்லியாயிற்று - இதோ பார் இந்த வருடங்கள் முக்கியமானவை, தயவு செய்து படிப்பில் கவனம் செலுத்து, நானும் 5 வருடங்களுக்கு முன் இதே நிலைமையில் தான் இருந்தேன், தெரியாதவர்களை சேர்க்காதே, பேசாதே, பார்க்காதே - ஊஹும்.. விதி யாரை விடுது? அவள் அவ போக்குல போறா, நல்ல படியா வதா சரினு இருக்கேன். என்னை விட 5 வயது சிறியவள் அவளை என்னாலேயே மாற்ற முடியவில்லை. பெற்றோர் தடுத்தால் மட்டும் நிற்பார்களா? ஊடகங்கள் தன் பொறூப்புணர்ந்து செயல் பட்டா தான் இதுக்கு விடிவு. யார் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் என்று அவர்கள் சரியாக வெளிச்சம் போட்டால் தான், 'இளைய சமுதாயத்து'க்கு காது கேக்கும். இல்லனா சில சமர்த்து பசங்க மட்டும் படிச்சு முன்னுக்கு வரும், மத்தது எல்லாம் தல தலனு தறுதலையா தான் சுத்தணும்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நடுவர் மற்றும் அனைத்து தோழிகளுக்கும் வணக்கம்.இன்றைய ஊடகங்கலில் நன்மையும் இருக்கிறது,தீமையும் இருக்கிறது.எது அதிகம் என்று பார்க்கும்பொழுது நன்மை தான் அதிகம்.அவரவர்கள் பயன்படுத்தும் விதம் பொறுத்து இருக்கிறது.பரந்து விரிந்த உலகத்தில் ஊடகங்கள் மூலம் எல்லா விபரமும் இளைஞர்களால் அறியப்படுகிறது.வாழ்வில் முன்னேறி சீர்படவேண்டும் என்று நினைப்பவர்கள் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுவார்கள்.எனவே இன்றைய ஊடகங்களால் இளைஞர்கள் சீர்படுகிறார்கள் என்பதே உண்மை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்க ரோஸ் மில்க் ரொம்ப நல்லா இருந்தது பா.வந்ததும் நடுவரை நல்ல கவனிச்சிட்டீங்க..ரொம்ப நன்றிபா..நானும் முதலில் பதிவு போடுபவர்களுக்கு..கையில் தாமரை பூக்கள் கொடுத்து வரவேற்களாம் என்று நினைத்திருந்தேன்..இந்தாங்க..தாமரை பூக்கள்..அடுத்து வரும் அனைவருக்கும் ரோஜா பூ கொடுப்பேன்...
முதலில் வந்துள்ள ஹேமா ஊடகங்கள் இளைஞர்களை சீரழிக்கிறது என்று வாதாடி தன் அருமையான கருத்துக்களை எடுத்து வைத்து இருக்கிறார்..
1.ஊடகங்கள் தன் பொறுப்புணர்ந்து செயல்படனும்னு சொல்லிருக்காங்க..
2.சரியாக இருந்தால் இன்னும் பெரிய நிலமையில் இருப்பேன்னு சொல்லிருக்காங்க..
3.மொத்தத்தில் ஊடகங்கள் நல்ல விஷயத்தை விட தீய விஷயங்களுக்கு தான் அதிகம் துணை நிற்கிறது என்று சொல்லி இருக்காங்க..

உங்கள் பதிவுகள் இத்தோடு நில்லாமல் அடுத்தடுத்து தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கருத்துக்களை பதிக்கும் படி கேட்டு கொள்கிறேன்..

இந்தாங்க ரோஜா பூ..இந்த பட்டுமன்றத்திற்கு தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்...
இவுங்க சீர்படுத்துகிறது என்று பேசி இருக்காங்க..

1.நன்மையும் உண்டு தீமயும் உண்டு..ஆனால் அதிகம் நன்மை தான் என்கிறார்கள்..
2.உலக நிகழ்வுகள்,விவரம் எல்லாம் ஊடகம் தான் தெரிவிக்கிறது..நல்லதை எடுத்து தீயதை விட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்..

தங்களின் பதிவுகள் இன்னும் தொடர வாழ்த்துகிறேன்..

தாமரைக்கு நன்றி தாமரை. என் வாதத்தை சுருங்க சொல்லணும்னா - "துள்ளுவதோ இளமை"னு ஒரு படம் வந்ததே - கன்னா பின்னானு 2.5 மணி நேரம் படம் காட்டிட்டு, கடைசி 15 நிமிடம் விஜயகுமார் அட்வைஸ் பண்ணுவார். அப்படி தான் இப்போ ஊடகங்களும்.

நல்லது இருக்கு, ஆனா இவ்ளோ miniscule அளவுல இருந்தா, அது இல்லாததுக்கே சமம். நல்லது கெட்டது பிரித்து பார்க்க தெரிந்தால் தான் இன்னேரம் நாடே முன்னேறி இருக்குமே? ஏன் இல்ல? சுதந்திரம் கிடைச்சு ஆகிடுச்சே இவ்ளோ வருஷம்? நம்மை விட பெரிய சீரழவிகள் எவ்ளோ பத்த மற்ற குட்டி குட்டி நாடுகள் முன்னேரலையா? நாம் முன்னேறி கொன்டு தான் இருக்கிறோம். ஆனால் இத்தனை கோடி ஜனத்தொகையில், பெரும்பான்மையான இளைய சமுதாயத்திற்கு நிறைய உக்கமும், வழிகாட்டலும், கொஞ்சம் ஜனரஞ்சகமான விஷயமும் தர வேண்டிய ஊடகம், அவர்களுக்கு கெட்டதை நிறைய கொடுத்து தடையாக இருக்கிறது என்றே கூறுகிறேன். இப்படி பட்ட ஊடக கெடுதலுக்கு நடுவிலே நீந்தி முன்னேறணும்னா 200 ஆண்டுகள் ஆகும்னா, ஊடகம் பாஸிடிவ் விஷயங்களை செய்தால் 50 ஆண்டுகளில் முன்னேறிடலாம்னு சொல்றேன்.

அவ்ளோ தான் தாமரை, சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ல முடியாது. எனக்கு யாரு ரோஸ்மில்க் தருவாங்க சொல்லுங்க? ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ரொம்ப சரியாக தான் யோசிக்கிறீங்க.. சரியாக மனதில் பட்டதை தெளிவாக சொல்லியும் இருக்கிறீர்கள்..நானே தரேன் பா ரோஸ்மில்க்..இந்தாங்க குடிச்சிட்டு மறக்காமல் கிளாஸ் தூக்கி போட்டுருங்க..பதிவுக்கு மீண்டும் நன்றிகள்..

நடுவர் தாமரை அவர்களே. ஊடகங்கள் இளைஞர்களை நல்வழி படுத்துகிறது என்ற வாதத்தை நான் முன்வைக்கிறேன்.

எதிரணியினர்(இப்போதைக்கு ஒருவர்) ;) சொன்னவற்றை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஏன் கெட்டதை மட்டுமே பார்க்கிறீர்கள்? பத்திரிக்கை என்றால் குமுதம் ஆனந்த விகடன் குங்குமம் மற்றும் தான் பத்திரிகைகளா? வேறு ஒன்றுமே இல்லையா? டைம்ஸ், போர்ப்ஸ், ரீடர்'ஸ் டைஜெஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பைனான்ஷியல் review, பிசினஸ் world இன்னும் ஏகப்பட்ட அருமையான பத்திரிக்கைகள் இருக்கின்றனவே. நீங்கள் என் tabloids மற்றும் பார்க்கிறீர்கள்?? தற்போதைய இளைஞர்கள் விஷயம் தெரிந்தவர்கள். எதை படித்தால் முன்னேறலாம் என்ற விஷயம் அறிந்தவர்கள். உருப்படாத விஷயத்தை படித்து உருப்போடுவதை விட மேலும் மேலும் முன்னேற நல்லதை தேர்ந்தெடுத்து படிக்கும் பக்குவம் அவர்களுக்கு உள்ளது.

திரைப்படங்கள் என்றால் காதல் கொண்டேன் இல்லன்னா துள்ளுவதோ இளமை மட்டும்தானா உள்ளன? வெய்யில் மாதிரி அருமையான படங்களும் தான் திரையிடப்பட்டுள்ளன. ஆங்கில படங்களிலும் தான் American pie மாதிரி படங்களும் வருகிறது Philadelphia, Road to Perdition போன்ற மிக அருமையான படங்களும் வருகின்றது. ஏன் அது எல்லாம் உங்கள் கண்களுக்கு படவில்லை???

இணைய தடங்களிலும் அறிவை வளர்க்க எவ்வளவு தளங்கள் உள்ளன? நான் தற்போதுதான் இன்னொரு degree முடித்தேன். ஏன் படிப்புக்கு எத்தனை எத்தனை தளங்கள் உதவியது என்று என்னால் list போட்டு சொல்ல முடியும். எத்தனை எத்தனை articles on so many different subjects are out there?? எல்லாம் இருக்கின்றன நடுவர் அவர்களே. அதை தேடி எடுக்கும் மனப்பக்குவம் உள்ள இளைஞர்கள் வெற்றி அடைகிறார்கள். நான் மட்டமான விஷயத்தை தான் படிப்பேன் பார்ப்பேன் என்று சொல்லுபவர்கள் முன்னேறுவதில்லை.

தற்போது மும்பையில் நடந்த கொடூரங்களை ஊடகம் இல்லையென்றால் நம்மால் (வெளி நாட்டில் வசிப்பவர்கள்) உடனுக்குடன் தெரிந்து கொண்டு இருக்க முடியுமா? எங்கோ அமெரிக்காவில் நடக்கும் தேர்தலை பற்றியும் ஒபாமா பற்றியும் எங்கோ ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்த உமாவுக்கு எப்படி தெரியும்? ஊடகம் மூலமாகத்தான் நடுவர் அவர்களே. திரை சீரியல்கள் பற்றி மற்றும் ஏன் பேசுகிறார்கள்? BBC, CNN, History channel, National Geographic என்று எத்தனை வித விதமான channels இருக்கின்றன? அவை என்ன இளைஞர்களை கெட்ட வழிக்கு தூண்டுகிறதா?

நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் எல்லா இடத்திலும், வகைகளிலும் உண்டு. அதை இனம் பிரித்து பார்க்கும் பக்குவம் உள்ள இளைஞன் முன்னேறுகிறான். மற்றவன் பின் தங்குகிறான். இதற்கு காரணம் அவர்களின் தன்மை, முன்னேற வேண்டும் என்ற அவா, தீயதை தள்ளிவிடும் maturity இவை தான் காரணமே தவிர ஒட்டு மொத்தமாக ஊடகங்களை குறை சொல்ல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

உமா

நடுவர் அவர்களே....
இந்தாங்கோ பால், சொக்கலேற் பவுடர் கொஞ்சம் போட்டது, நல்லாயிருக்கும் குளிருக்கு, முதலில் குடியுங்கோ.

எனக்கு நேரம் கிடைத்தால் நான் எல்லாத் தலைப்பிலும் பங்குகொள்வேன். இப்போ குறைவான நேரம், அதனால் சோட் அன்ட் சுவீட்டாக என்னுடைய கருத்து.

அதைத்தான் நான் எழுத நினைத்ததை அப்படியே உமா முந்திரிக் கொட்டைபோல் முந்திக்கொண்டார், உமா இது நல்லாவே இல்லை, எல்லாவற்றையும் நீங்க எழுதினால், அதிரா என்னத்தை எழுத?:)

சரி சரி, நானும் சொல்வதென்னவென்றால், ஊடகங்களால் சீரளிவு என்பதை விட நன்மைகளே அதிகம். நல்லவை கெட்டவை எங்குதான் இல்லை, எல்லாம் நாம் எடுத்துக்கொள்ளும் விதத்திலேயே இருக்கிறது. அன்னம் போல வாழ வேண்டும் என்பார்கள். அதாவது நல்லது கெட்டதைப் பிரித்தறிந்து, நல்லதை எடுத்துக்கொள்ளும் திறமை இன்றைய இளைஞர்களிடம் இருக்கிறது.

எமக்கு என்ன ஒரு தேவைக்கும் ஊடகங்களின் மூலம் நிறைய விஷயங்கள் கிடைக்கிறதே. ஊடகங்களூடாகவே இன்றைய கல்விகூட வளர்ச்சியடைகிறது. சும்மா இருக்காமல், நியூசைக் கேட்டும் பேப்பரைப் படித்தும் கொன்டிருப்பதால் தான் இன்றைய இளைஞர்களுக்கு உலக அறிவு அதிகம் கிடைக்கிறது. மேல் நாட்டில் நடப்பதை கீழ் நாட்டில் இருப்பவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதும் ஊடகங்களின் உதவியால்தான். பிள்ளைகளுக்கு பொது அறிவை வளர்த்துக் கொடுப்பதும் ஊடகமே... இதனால் முன்னேற்றமே அதிகம்.

எமக்கு ஒரு நோயோ, அல்லது பிள்ளைகளுக்கு ஒரு தேவையோ எதுவாயினும் உடனே தட்டுவது இணையத்தைத்தானே, இப்போ கொப்பி, புத்தகப் படிப்பைக் காட்டிலும் ஊடகத்தூடான படிப்பே அதிகமாகிவிட்டது.

ஊடகங்களால் இளைஞர்கள் நன்மையே அடைகிறார்கள் நடுவர் அவர்களே..... நாற்பது வயது வரை என நீட்டியிருக்கிறீங்க, அந்த வயதிலுமா ஊடகங்களைப் பார்த்துச் சீரழியப்போகிறார்கள்.... இல்லவே இல்லை.

பறவாயில்லை... பறவாயில்லை... இருக்கட்டும் இருக்கட்டும்... கை தட்டுவதை நிறுத்துங்கோ..... அப்படி என்ன நிறையச் சொல்லிட்டேனா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தாமரையாய் வீற்றிருக்கும் நடுவர் அவர்களுக்கும் மற்றும் எல்லா தோழிகளுக்கும் வணக்கம். ஊடகங்கள் இளைனர்களை சீர்படுத்துகிறது என்பதே என்வாதம்.
முதலில் பத்திரிக்கைகளை எடுத்துக் கொள்வோம்.எதிரணியினர் சொன்ன அதே குமுதம் ஆனந்த விகடன் பத்திரிக்கைகளையும் ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற புத்தகங்களையும் நான் சிறு வயது முதலே படித்து வருகிறேன். உண்மையை சொன்னால் என் பதின்ம வயது(teen age) தடுமாற்றங்களில் நான் சிக்குண்டு சீரழியாமல் போனதற்கு எதிரணியினர் சொன்ன அதே பத்திரிக்கைகளில் வந்த கட்டுரைகளையும் உண்மை சம்பவங்களையும் படித்ததுதான். அந்த வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியை, இது இனக்கவர்ச்சிதானே தவிர காதல் இல்லை என்ற உண்மையை எனக்குப் புரிய வைத்தது இந்த பத்திரிக்கைகள்தான்.எதுவும் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.இதே ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வந்த "மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்" எத்தனை பேருக்கு உதவியிருக்கிறது! இன்றும் என் மனம் குழப்பமடையும் போது அந்த புத்தகத்தை எடுத்து படிக்கிறேன்.ஒரு தெளிவு கிடைக்கிறது. சினிமா செய்திகளையும் குப்பை செய்திகளையும் மட்டுமே படிப்பேன் என்றிருக்கும் இளைஞனை ஊடகம் மட்டுமல்ல ஆண்டவன் நினைத்தால் கூட சீர்படுத்துவது கடினம்.

அடுத்து சினிமா ஏன் துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன் படங்களை மட்டும் பார்க்கிறீர்கள்.ஆட்டொகிராஃப்,வெயில்,பிரிவோம் சந்திப்போம்,மொழி போன்ற அருமையான படங்களும் வருகின்றனவே.இவையெல்லாம் நல்ல கதையுள்ள படங்கள் மட்டுமல்ல ஆபாசமில்லாத நல்ல பொழுது போக்கு படங்களும் கூட. அதிலும் ஆட்டோகிராஃப் படத்தில் வரும் "ஒவ்வொரு பூக்களுமே..."பாடல் எத்தனை இளைஞர்களை ஊக்குவித்திருக்கிறது. நல்லதும் கெட்டதும் நிறைந்ததுதான் உலகம். நல்லவற்றைத் தேடிப் போவது இளைஞர்களின் கடமை.

அடுத்து தொலைக்காட்சி
தொலைக்காட்சி என்றாலே சீரியல்கள்தான் என்று ஏன் குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி பார்க்கிறீர்கள். எமது அணியினர் சொன்னது போல எத்தனை நல்ல நல்ல தொலைக்காட்சி நிலையங்களும், நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. அதை ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். இவற்றையெல்லாம் விட்டு விட்டு மிட்நைட் மசாலாவும்,f சேனலும்தான் பார்ப்பேன் என்றால் என்ன சொல்வது? மனதைக் குப்பையாக வைத்து விட்டு ஊடகங்கள் குப்பையைத்தான் கொட்டுகின்றன என்று சொன்னால் நியாயமா? இதே f சேனலைப் பார்க்கும் இளைஞன் ஒரு நல்ல ஃபேஷன் டிசைனராக இருந்தால் அவன் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரியாது.மாறாக தன் துறையில் முன்னேற உதவியாகத்தான் இருக்கும். எதுவுமே நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.
இன்று பல சேனல்களிலும் இளைஞனின் திறமையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் வருகின்றன.உன்னிடம் பாடும் திறமை இருக்கிறதா இங்கே வா நான் உனக்கு மேடை அமைத்துத் தருகிறேன் என்று அழைத்து அவன் திறமையை உலகுக்கு காட்டுகிறது.இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இன்று எத்தனை இளைஞர்கள் முன்னேறியிருக்கிறார்கள். மக்கள் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் எத்தனை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உதவியிருக்கின்றன.
ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு இளைஞர்கள் போதையின் பிடியிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் இளைஞர்களை சீர்படுத்தவில்லையா?

அடுத்து இணையம். இன்று இணையத்தில் கிடைக்காத தகவல்கள் இல்லை.எந்த சந்தேகம் வந்தாலும் இணையத்தைத் தேடினால் விடை கிடைக்கும். ஆனால் இதையெல்லாம் நான் பார்க்க மாட்டேன் வெறும் குப்பைகள்தான் வேண்டும் என்று ஆபாசத் தளங்களை நாடும் இளைஞனை என்னவென்று சொல்வது? இது இளைஞனின் குற்றமா இல்லை இணையத்தின் குற்றமா? இவ்வளவு ஏன் நாம் இப்போது விவாதித்துக் கொண்டிருப்பது கூட இணையத்தில்தான்.உலகின் ஒவ்வொரு மூலையிலிருக்கும் நாம் நம் சந்தேகங்களையும், மனக்குமுறல்களையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்வதும் இதே இணையத்தில்தானே. நம்மில் எத்தனை இளைஞர்களுக்கு இதே அறுசுவை வழி காட்டியிருக்கிறது. ஆறுதல் சொல்லியிருக்கிறது. அவ்வப்போது வரும் விஷக்கிருமிகள் போன்ற பதிவுகளை குப்பை என்று நீக்கிவிட்டு தொடர்ந்து நாம் இங்கே இணைகிறோமே.
நல்லது கெட்டது என்று பகுத்தறியும் தன்மை இளைஞர்களுக்கு வேண்டும். அதை இளைஞர்களிடம் ஏற்படுத்துவது பெற்றவர்களின் கடமை. அதை விடுத்து ஊடகங்கள் இளைஞர்களை சீரழிக்கிறது என்று சொல்வதில் அர்த்தமில்லை.

ஊடகங்கள் இளைஞர்களை சீர்படுத்துகிறது என்று ஆணித்தரமாக சொல்லி முதல் சுற்று வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.அடுத்த சுற்று வாதத்தில் எப்படியெல்லாம் இளைஞனை ஊடகங்கள் சீர்படுத்துகின்றன என்பதை அடுத்த சுற்று வாதத்தில் சொல்கிறேன்.நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சிரிப்பே சிறந்த மருந்து
இன்றைய கால கட்டத்தில் ஊடகங்கள் அத்தியாவசியமானவை. அதைச் சீர் கெடுக்காதவையாகப் பயன் படுத்தச் செய்வது பெரியோர் கைய்யில்தான் இருக்கிறது. அதற்காக ஊடகங்களைக் குறை சொல்ல முடியாது.

சிரிப்பே சிறந்த மருந்து

மேலும் சில பதிவுகள்