ரிச் வெஜிடபுள் கிச்சடி

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ரவை - 3 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
பொடியாக நறுக்கிய காரட், பீன்ஸ், பட்டாணி - 1 கப்
பட்டை - 2
பிரியாணி இலை - 2
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரி - 10


 

முதலில் வெங்காயம், தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும்.
பூண்டினை தோல் உரித்து வைக்கவும்.
பச்சை மிளகாயினை இரண்டாக பிளந்து கொள்ளவும்.
முதலில் நாண் ஸ்டிக் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முதலில் முந்திரியை வறுத்து தனியாக வைத்து பின் அதில் ரவையை வறுத்து அதையும் தனியே வைக்கவும்.
பிறகு அதே கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி பட்டை மற்றும் பிரியாணி இலை போடவும்.
அதன் பின் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு சேர்க்கவும்.
பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிவைத்துள்ள 1 கப் காரட், பீன்ஸ் மற்றும் பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் 6 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் வறுத்து தனியே வைத்துள்ள ரவையை இதில் கொட்டி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி தட்டு போட்டு மூடி 5 - 8 நிமிடம் வேகவைக்கவும்.
பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கொத்தமல்லி தூவி நன்றாக கிளறவும்.
கடைசியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும். நெய் சேர்ப்பதால மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
இப்பொழுது சுவையான கிச்சடி ரெடி.
இதனை தேங்காய சட்னி, பஜ்ஜியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கீதாச்சல் ரிச் வெஜிடபுள் கிச்சடி நன்றாகயிருந்தது. நானும் சில நேரங்களில் இதுமாதிரித் தான் செய்வேன். இன்று தக்காளிக்கு பதில் இறக்கும்போது எலுமிச்சைசாறு ஊற்றி கிளறி இறக்கினேன், சுவையாகயிருந்தது. தவறாக நினைக்கவில்லை யென்றால், நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் எனச் சொல்வீர்களா? ஏனென்றால், உங்களின், நம் பாரம்பரிய சமையல் குறிப்புகள் பெரும்பாலும் அப்படியே நாங்கள் (எங்கள் வீட்டில்) செய்வதுபோலவே இருப்பதால் கேட்கிறேன்.

அன்புடன்:-)..........
உத்தமி:-)

உத்தமி அக்கா,
எப்படி இருக்கிங்க…மிகவும் மகிழ்ச்சி. ஆமாம் நானும் கூட சில சமயம் ஒரு மாறுதலுக்காக எலுமிச்சை பழம் சேர்ப்ப்பேன்.
நான் சென்னை பொண்ணு தான். பாட்டி வீடு எல்லாம் கஞ்சிபூரம்.
மற்றபடி பிறந்த்து, வளர்ந்த்து, வாழ்ந்த்து எல்லாம் சென்னை தான். இப்பொழுது தான் இங்கு யூஸில் 3 1/2 வருடமாக இருக்கேன்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அக்கா, உங்க ரிச் வெஜிடபிள் கிச்சடி செய்தேன். நன்றாக இருந்தது. நெட் ப்ராப்ளம் ஆனதால் பிரியாணி இலை போட மறந்து விட்டேன். மேலும் நெய்யை முதலிலே சேர்த்துவிட்டேன். நன்றி அக்கா.

மிகவும் நன்றி அரசி.
அடுத்த முறை செய்யும் பொழுது பிரியாணி இலை சேர்த்து இதே போல செய்து பாருங்கள்…நெயினை கடைசியில் இப்படி சேர்ப்பதால் நிறைய சேர்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை… மிகவும் சுவையாக இருக்கும்…
குழந்தைகள் நலமா?
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா கிச்சடி நானும் இதுபோல்தான் செய்வேன்.நன்றாக இருந்தது.
செல்வி

சவுதி செல்வி

மிகவும் நன்றி செல்வி.
அன்புடன்,
கீதா ஆச்சல்