துபாய் பூசணிக்காய் கறி

தேதி: April 6, 2009

பரிமாறும் அளவு: (4 -7) நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

துபாய் பூசணிக்காய் (பெரியது) - ஒன்று
நறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு)- அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - (2 - 3) மேசைக்கரண்டி
கறிவேப்பிலை(வெட்டியது) - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - அரைப்பாதி
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மெட்ராஸ் கறித்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உள்ளி(பூண்டு வெட்டியது) - 2 பல்
இஞ்சி (விழுது) - சிறிதளவு
பால் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழச்சாறு) - சிறிதளவு


 

துபாய் பூசணிக்காயின் தேவையற்ற பகுதிகளை அகற்றி விட்டு அதனை இரு பலகையில் வைத்து ஓரளவு பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும்.
அதை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொரிய விடவும்.
வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய உள்ளி(பூண்டு),இஞ்சி விழுது ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு அதனுடன் வெட்டி கழுவிய துபாய் பூசணிக்காய் துண்டுகளை அதில் போட்டு வதக்கவும்.
ஓரளவு வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து அவியவிடவும்.
பூசணிக்காய் ஓரளவு அவிந்ததும் அதனுடன் பால், கறிவேப்பிலை, உப்பு, அஜினோமோட்டோ ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் அவியவிடவும்.
பின்பு அதனுடன் தேசிக்காய்சாறு(எலுமிச்சம்பழச்சாறு) விட்டு நன்றாக கலந்து சிறிது நேரத்தின் பின்பு சுவையான துபாய் பூசணிக்காய் கறி தயாராகி விடும்.
பின்பு துபாய் பூசணிக்காய் கறி உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சோறு(சாதம்)பாண், இடியப்பம், பிட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் இக்கறியை வைத்து பரிமாறவும்.


துபாய்பூசணிக்காய் கறி சுவையானது செய்வதற்கு இலகுவானது. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு புரோட்டீன், வைட்டமின் A,B1,B2,B3,B5,B9,C9,E, மினரல், கரோட்டீன், கால்சியம், இரும்பு, மெக்னீஸியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் ஆகிய பல சத்துகள் அடங்கியது. கவனிக்க வேண்டிய விசயங்கள் - பூசணிக்காயை நன்றாக கரண்டியால் கலக்ககூடாது. கறியில் பூசணிகாய்த் துண்டுகள் ஓரளவு காணப்பட வேண்டும். நிறைய நேரம் அவிய விடக்கூடாது நிறைய பால் விடக்கூடாது. மாற்று முறை - நிறைய பால் விட்டு நன்றாக குழைந்த பதமாகவும் செய்யலாம் மிளகாய்த்தூள் மெட்ராஸ் கறித்தூள் போடாமலும் செய்யலாம். எச்சரிக்கை - பூசணிக்காய் அலர்ஜி உள்ளவர்கள், சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அது என்ன டுபாய் பூசணிக்காய்.சாதா பூசணிக்காய் இல்லையா..பெருஞ்சீரகத்துக்கு அருகில் தனியா என்று ப்ராக்கெட்டில் இருக்கு இரண்டும் இரண்டு தானே

அதானே... பெருஞ்சீரகம்'னா சோம்பு. தனியான்னா மல்லி விதை. இதில் எது? தளிகா... பூசணிக்காய் துபாய் இல்லை... ரெசிபி தான் துபாய்'னு நினைக்கிறேன். இல்ல... டுபாய்'ன்றது பூசணிக்காய் பேரா?? ஒரே குழப்பமா இருக்கே. இது டுபாயா துபாயா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெருஞ்சீரகத்துக்கு அருகில் சோம்பு என்று எழுதுவதிற்கு பதிலாக தனியா எழுதிவிட்டேன் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரே பொருளின் பெயர் வெவ்வேறாக இருப்பதால் அதனை மாறி எழுதிவிட்டேன்,இது பூசணிக்காயில் ஒரு வகை இதன் வடிவம் காம்பு பகுதிக்கு கீழ் ஓரளவு தடிப்பானதாகவும் நீளமானதாகவும் இருக்கும் அதன் கீழ் பகுதி உருண்டையாக இருக்கும் அத்துடன் இந்த பூசணிக்காய் துபாயில் தான் கூடுதலாக விளைவதாக கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இது எல்லா நாட்டிலும் உள்ள இலங்கை கடைகளில் கிடைக்கும் என நான் நினைக்கின்றேன் இதனை butternut என்று அழைப்பதாக சுரெஜினி கூறுகின்றார்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

இப்படி ஒரு பூசணிக்காயை நான் இங்கு பாஅர்த்ததாக நினைவில்லை நம்ப ஜலீலக்காவிடம் கேட்போம்...எதனால் பூசணிகாய் கறியை சர்க்கரை நோயாளிகள் வைத்தியர் ஆலொசனை படி சாப்பிடனும்..பூசணிக்காய் அனைவருக்கும் ஏற்றது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

பொதுவாக பூசணிக்காயில் சீனி(சக்கரை)சத்து ஓரளவு அதிகமாகவே காணப்படும்.இதனால் தான் பூசணிக்காய் இனிப்பு சுவையுடன் காணப்படுகிறது ஆனால் துபாய் பூசணிக்காயில் காணப்படும் சீனி(சக்கரை)சத்தின் அளவு மற்றைய பூசணிக்காயில் காணப்படும் சீனி(சக்கரை)சத்தின் அளவை விட கூடுதலாக இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர் இதனால் தான் சில நாடுகளில் உள்ள கர்ப்பினி பெண்களுக்கு வைத்தியர்கள் பூசணிக்காயை சாப்பிடவேண்டாம் என்று கூறுகிறார்கள்(இது நாட்டிற்கு நாடு வித்தியாசப்படுகிறது) துபாய் பூசணிக்காய் ஓரளவுநீளமாக காணப்படும் இது ஒரு சில போத்தலின் வடிவத்தை போன்றது அத்துடன் தளிக்கா நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் என்று கூறுங்கள் எனக்கு இயலுமானால் அது உங்களுடைய நாட்டில் எந்த கடைகளில் கிடைக்கும் என்பதை அறிந்து சொல்லுகிறேன்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

பெருஞ்சீரகத்துக்கு அருகில் சோம்பு என்று எழுதுவதிற்கு பதிலாக தனியா எழுதிவிட்டேன் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரே பொருளின் பெயர் வெவ்வேறாக இருப்பதால் அதனை மாறி எழுதிவிட்டேன்,இது பூசணிக்காயில் ஒரு வகை இதன் வடிவம் காம்பு பகுதிக்கு கீழ் ஓரளவு தடிப்பானதாகவும் நீளமானதாகவும் இருக்கும் அதன் கீழ் பகுதி உருண்டையாக இருக்கும் அத்துடன் இந்த பூசணிக்காய் துபாயில் தான் கூடுதலாக விளைவதாக கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இது எல்லா நாட்டிலும் உள்ள இலங்கை கடைகளில் கிடைக்கும் என நான் நினைக்கின்றேன் இதனை என்று butternut என்று அழைப்பதாக சுரெஜினி கூறுகின்றார்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"