எங்கட செல்லங்கள்(பிராணிகள்) பற்றிக் கதைக்க வாங்கோ - 2

இதிலே, நீங்கள் வளர்த்த, வளர்க்கின்ற, வளர்க்கப்போகும் செல்லங்களின் சேட்டைகள், கூத்துக்கள், கொடுமைகள்:), விரும்பினால் பெயர் எல்லாம் வந்து சொல்லுங்கள். நானும் சொல்கிறேன்.

அத்துடன் இதில் எழுதப்படும் கதைகளுக்கு, படிக்கும் உங்கள் மனதில், தோன்றுபவற்றைப் பின்னூட்டமாகவும் கொடுங்கள்.

இது பகுதி இரண்டாகத் தொடர்கிறது. இதன் முதற் பகுதியைக்காண இங்கு செல்லுங்கள்...
www.arusuvai.com/tamil/forum/no/12514

வாருங்கள் ..... தொடருங்கள்....

அதிரா,நான் இது தான் முதல் முறை உங்களுடன் பேசுகிறேன்.உங்க குறிப்புகள் படித்ததுண்டு.எப்படியோ....உங்களில் செல்லங்கள் பற்றிய கதைகளை தொடர்ந்து 2 ஆவது பகுதி ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்.எனக்கு அதைப்பற்றி அனுபவம் சுத்தமாக இல்லை.அதனால் தான் இப்பக்கமாக வந்தாலும் படிப்பதோடு சரி, பின்னோட்டம் அனுப்ப ஒன்றுமில்லை. தொடருங்கள் உங்கள் செல்லங்களை பற்றி......

அன்புடன்
உமா.

உமா....
மிக்க நன்றி. உங்களுடன் கதைப்பது இதுதான் முதல்தடவை, ஆனால் நன்கு பழகியதுபோல் இருக்கு, உங்கள் பதிவுகள் இடையிடையே பார்த்து வருவதால்.

செல்லம் அதிரா என, என்னைத்தான் யாரோ அழைக்கிறார்கள்:) என, செல்லமாக ஓடிவந்தேன்.... (இங்கே வேறு எதுவும் கதைக்கப்படாது என்பதால் என்னைக் கன்றோல் பண்ணிக்கொள்கிறேன்:) ). பதிவுகளைப் பார்த்து ரசியுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உமா உங்கள் குறிப்புகள் எல்லாம் படித்திருக்கிறேன். நன்றாகவும் விளக்கமாகவும் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

god is my sheperd

நன்றி அதிரா,நன்றி ஃபெல்சியா
என்னை பற்றி பேச இது சரியான இடமில்லை.இது வேறு முக்கிய இழை என்பதால்...அதை பற்றி மட்டுமே இங்கு பேசலாம்.

என் குறிப்புகளை பார்வையிடுவதற்கும்,உங்களின் பாராட்டுகளுக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
உமா.

எல்லாருக்கும் வணக்கம்...எங்க ரெய்ன் தனது 2வது பயணத்தைத் தொடங்கிவிட்டது...145 பெட்டிகள் வரை நீண்ட ரெய்ன் பயணத்தை பயணக் களைப்பு தெரியாமல் கலகலப்பாக்கி எல்லாரையும் மிரட்டி,அதட்டி,உருட்டி,கெஞ்சி இத்தனையயும் செய்து தன் அன்பாலேயே ஐஸ் வைத்து அசத்திய அதிரா அவர்களுக்கு பாராட்டுக்களைக் கூறி //** அடுத்த பயணத்தை, என் கையால் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைக்கிறேன். [ராசியான கை அதிரா..இந்த ரெய்னும் தாராளமாக வெகு தொலைவு ஓடி விடும்.. :)]**//

ஒவ்வொரு முறையும் பூனையம்மிணிகள் குட்டி போட்ட பின்னரும் நான் "வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு" இருப்பேன்..வீட்டில் ஒரு பூனைக்குத்தானே அனுமதி?? இந்த அம்மணிகள் ஒவ்வொரு முறையும் குறைந்தது 3 குட்டிகளாவது போடுவார்கள்..அந்தக் குட்டிகளை எல்லாம் அண்டை,அயலார் வீடுகளில் யாரவ்து வாங்கிக் கொள்ளக்கூடாதா என்று என் மனம் ஏங்கும்....ஒவ்வொரு முறையும் யார் வாங்கிக் கொள்வார்கள்?

இந்தக் காரணத்தால் பல முறை நான் பள்ளியிலிருந்து வருவதற்கு முன்பே பூனைக் குட்டிகள் மறைந்திருக்கும்...அம்மா யாரிடமாவது கொடுத்து எங்காவது விட்டு விடச் சொல்லி இருப்பார்கள்...ஒவ்வொரு முறையும் நான் அழுது முடித்து சமாதானமாக பல தினங்கள் எடுக்கும்...
அப்பொழுதெல்லாம் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்...நான் பெரியவளாகி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆராம்பித்து என் பூனைகளுக்கென்றே தனியாக ஒரு வீடு கட்டுவேன்..பூனைகள் போடும் குட்டிகள் எல்லாவற்றையும் நானே வளர்த்து ஒரு "பூனைச் சரணாலயம்" வைப்பேன் என்று.

பூனை வளர்த்தவர்கள் எல்லாருக்கும் இந்த வலி தெரியும் என்று எண்ணுகிறேன்...அந்தப் பால் மணம் மாறாத குட்டிகளைப் பிரிவது எவ்வளவு கொடுமை என்று அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்...குட்டிகள் கண் திறக்கும் முன்பே கொண்டு விட்டு விடுங்கள் என்று சிலர் கொடூர ஐடியாவெல்லாம் கொடுப்பார்கள்..ஆனால் அவை வளர்ந்து தானாய் பசும்பால் குடிக்கப் பழகிய பின்னர் தான் வீட்டை விட்டு வெளியேற வேன்டும் என்பது என் உத்தரவு..யாரும் அதை மீற மாட்டார்கள் எங்கள் வீட்டில்...ஆனால் அத்தனை தினங்களுக்குள் பூனைக்குட்டிகளின் குறும்புகளில்..அம்மாப் பூனையுடன் அவை விளையாடும் அழகினில் மனம் மயங்கிவிடும்...குட்டிகள் வீட்டை விட்டுச் சென்ற சில நாட்கள் அம்மாப் பூனை படும் பாடும்..அது குட்டிகளைத் தேடும் காட்சியும் ரொம்ப பரிதாபமாக இருக்கும்....இருந்தாலும் சில தினங்களில் அடுத்த டெலிவரிக்கு இந்த பூனையார் ரெடியாகி இருப்பார்..இந்த இறைவனின் படைப்புகளை நினைக்க நினைக்க அதிசயம்தான்!??

அடுத்து என் நினைவலைகளில் மிதப்பது என் "மிக்கி"...இவன் என்னுடன் பேருந்தில் எங்க வீட்டுக்கு வந்த அம்மணியின் வாரிசுகளில் ஒருவன்..

//** இப்படி சொல்லலாம் என்று எழுதிக் கொண்டு இங்கே வந்து பார்த்தால்...ரசிகர்கள் முந்திக் கொண்டு விட்டார்கள்...அதனால் என்ன?? விமர்சனங்கள் , கருத்துகள் தானே ரெய்னுக்கு எரிபொருள்?? :)**//

அன்புடன்,
மகி

என்ன ஆச்சரியமா இருக்கா?இங்கே என்னை பார்த்தது?ஹைய்யா....நான் முந்திவிட்டேன்.

அதுசரி,பூனை சரணாலயம் கட்டியாச்சா சொல்லுங்க...

உமா பார்க்க வருகிறேன்.

அன்புத் தோழி உமா,
நான் தண்ணிக்கு மட்டுமே அண்ணி.. :)உறுப்பினராகாமல் அறுசுவையில் சுற்றிக் கொண்டிருந்த என்னைக் கூட இந்த இழை இங்கே எழுத வைத்து விட்டது...உங்களை இங்கு பார்த்ததில் ஒரு ஆச்சரியமும் இல்ல..சந்தோஷம். :)
நீங்களுந்தான் எவ்வளவு பேருக்கு டவுட் மட்டுமே க்ளியர் பண்ணுவீங்க?? அப்பப்போ எல்லா இழைகளிலும் உங்க தலையக் காட்டுங்கோஓஓஓ.....

அன்புடன்,
மகி

//டி.டி.ஆர். இமாவைத்தான் காணல..//
வந்தாச்சு மகி. ஆனால் புன்னகைக்கத்தான் யோசனையாக இருக்கிறது.

அடுத்து யாரைப் பற்றி சொல்லட்டும்? சுதந்திரமான என் செல்லங்கள் பற்றிச் சொல்லட்டுமா?

எங்கள் வளவு சிறியதாக இருந்தாலும் மரங்கள் அடர்ந்து போய் சோலை மாதிரி இருக்கும். கொய்யா, வித விதமான மா மரங்கள், தேசி, தோடை, தென்னை, மாதுளை, அன்னமின்னா எல்லாம் இருந்தது.

இந்தக் குட்டித் 'தையல் சிட்டுக்கள்' எப்போதும் உயரம் குறைவான தேசி, தோடைச் செடிகளில்தான் கூடு கட்டி வந்தன. முதலில் கீழ் நோக்கித் தூங்கும் மூன்று இலைகளைத் தெரிந்து துளைகள் செய்து வைக்கும். பிறகு அவற்றை ஒன்றோடொன்று சேர்த்து ஒரு முக்கோணக் கூம்பு போல் வருமாறு தைத்து வைக்கும். உமிழ் நீரைத்தான் தையல் இழையாக மாற்றும் என்று நினைக்கிறேன். இழை பார்வைக்கு அப்படித்தான் தெரிந்தது.

இந்தக் கூட்டுக்கு கூரையாக அமையும் விதமாக நான்காவது இலை ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டிருக்கும். அது மழை நீர் உள்ளே போகாதவாறு பாதுகாப்பதோடு குஞ்சுகளையும் எதிரிகள் கண்ணிலிருந்து மறைத்து வைக்க உதவும். அதற்கு ஏற்றாற்போல் அங்குமிங்குமாகத் தையல் போடப்பட்டிருக்கும்.

தையல் வேலை முடிந்ததும் உள்ளே படுக்கை தயாராகும். தும்புகளை வட்டமாகச் சுற்றி வைத்து அதன்மேல் சிட்டுக்களின் உமிழ்நீர் இழைகளால் மெத்தை அமைக்கப் பட்டிருக்கும். எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் யாரும் சொல்லிக் கொடுக்காமல் அவ்வளவு நுட்பமாக எப்படி அவைகளால் செயற்பட முடிகிறது என்று ஆச்சரியப்படும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கூடுகள்.

இலைகளில் துளைகள் கண்டதுமே நான் அவதானிக்கத் தொடக்கி விடுவேன். அவர்கள் வரும்போதெல்லாம் நான் ஏதாவது அவர்களோடு பேசிக்கொண்டே இருப்பேன்.

ஆரம்பத்தில் என்னைக் கண்டதும் ஒலி எழுப்பி இணையை எச்சரிப்பவர்கள் பின்பு என் வரவு பாதுகாப்பானது என்று புரிந்து நான் விலகுமட்டும் அவர்கள் வேலையைத் தொடர்வதற்காக அமைதியாகக் காத்திருப்பார்கள்.

மூன்று முட்டைகள் இட்டு சிட்டும் அடைக்கு அமர்ந்ததும் கூடு உள்ள கிளை பாரத்தில் சிறிது இறங்கி இருக்கும்.

பெரிய தலையும் உப்பிய வயிறும் இறகுகளில்லாத உடலுமாக அசிங்கமாக இருக்கும் குஞ்சுகளுக்கு கண்கள் மூடி இருந்தாலும் தாய்ப் பறவை இரையோடு வந்ததும் எப்படியோ தெரிந்து விடும். மூன்றும் ஒன்றை ஒன்று முட்டி மோதி போட்டி போட்டுக் கொண்டு வாயைத் திறக்கும்.

தாய்ப் பறவையும் தந்தைப் பறவையும் உணவு ஊட்டுவதற்கு நடுவே நானும் ஊட்டுவேன். அதற்கு பெற்றோரிடமிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பாது.

சமைத்த ஒரு பருக்கை சோற்றை மசித்து இரண்டு மூன்றாகப் பிரித்துக் கொண்டு மெல்லிய ஈர்க்கில் குத்திக் கொள்வேன். கூடு உள்ள கிளையை மெதுவே தட்டினால் குஞ்சுகள் தாய் என்று எண்ணி வாயைத் திறக்கும். மிகப் பத்திரமாக அலகினுள் வைத்தால் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

குஞ்சுகள் பிறகு கண் திறந்து; இறகு முளைத்து; பெற்றோர் பறைவைகள் அவற்றை பறக்கப் பழக்கி சுயமாக இரை தேடப் பறக்கும் வரை நானும் அவர்களைத் தொடர்வேன்.

நாளாவட்டத்தில் கூடு கட்டப்பட்ட இலைகள் முதிர்ந்து காய்ந்து சருகாகி விடும்.

பிறகு திரும்பவும் அவர்கள் இணைகளுடன் என் தோட்டத்தைத் தேடி வருவார்கள். மீண்டும் கதை தொடரும்.

ஒரு முறை ஒரு சோடித் தையல் சிட்டுக்கள் என் இக்ஸோரா பூச்செடியில் கூடு கட்டின. வழமை போல் எல்லாம் நடந்தது. எல்லாம் சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்தது. இந்தக் குட்டிக் குடும்பத்தைப் பார்க்க என் வீட்டிற்கு வராத விருந்தாளிகள் எல்லாம் வந்திருக்கிறார்கள்.

குஞ்சுகள் பறக்க ஒன்றிரண்டு நாட்கள் இருக்கையில் ஒரு நடுநிசியில் சிட்டுக்களின் அவலக்குரல் கேட்பது போலவும் பூனை சிட்டுக்களைப் பிடித்து விட்டது போலவும் ஒரு உணர்வு வந்து உறக்கம் தடைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் உறக்கம் முழுவதாகக் கலையவில்லை.

காலையில் கண் விழித்ததும் முதல் வேலையாகத் தோட்டத்தில் போய்ப் பார்த்தேன். அது கனவல்ல. உண்மையில் சப்தம் கேட்டுத்தான் இருக்கவேண்டும். யார் வீட்டுப் பூனையோ வந்து கூட்டைப் பிரித்து குஞ்சுகளையும் ஒரு பெரிய சிட்டையும் பிடித்து உண்டு விட்டது.

தனித்து விடப்பட்ட மற்றப் பறவை, இருட்டில் தொலைந்து போன தன் குட்டிக் குடும்பத்தைத் தேடி இரண்டு மூன்று நாட்கள் அவலக் குரல் கொடுத்து அலைந்து திரிந்தது. பின்பு அதுவும் காணாமல் போயிற்று.

‍- இமா க்றிஸ்

நாயாரின் தொடர்ச்சி....
பகுதி ஒன்றிலிருந்து இதில் தொடர்கிறேன்.

எனக்கென்னவோ அந்த நாய்க்குட்டியை விட மனமே இல்லை. அம்மாவிடம் சொன்னேன், நாங்களே வளர்ப்போம் என்று. அம்மா சொன்னா, இது அவருடையதுதானே, ஆனால் அவரிடம் இக்குட்டி போகும்போல் தெரியவில்லை, எதற்கும் பொறுத்துப் பார்ப்போம் என்று.

பின்னேரம் ஆகியது. புது மாப்பிள்ளை மதிலால் எட்டிப்பார்த்துச் சொன்னார், ஒருக்கால் நாய்க்குட்டியைக் கொண்டுவந்து எங்கள் தூணில் கட்டிவிடுவீங்களோ என்று. குரல் கேட்டதும்
கண்விழித்த குட்டி குலைக்கத் தொடங்கிவிட்டது. அம்மா சொன்னா, நீங்கள் வந்து அவிழ்த்துக்கொண்டு போங்கோ என்று. மாப்பிள்ளை நல்ல உஷாராக வந்தார். நாய்க்குட்டி எழும்பிப் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ஏய் சத்தம் போடாதே என உறுக்கிப்பார்த்தார். அது விடாமல் குரைத்தது, எனக்கும் அம்மாவுக்கும் சிரிப்பை அடக்கமுடியாமல் அவதிப்பட்டோம். கடைசியில் அவருக்கு முடியாமல் போகவே, சொன்னார் கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும் என்று.

அன்றுமுதல் அக்குட்டிக்கு எங்கள் பரம்பரைப் பெயரை வைத்து வளர்க்கத் தொடங்கினோம். நான் தான் அதன் எல்லாப் பொறுப்பும். எல்லாமே நேரத்துக்குச் செய்வேன். காலையில் கட்டுவது, மாலையில் சாப்பாடு வைத்துவிட்டு, அவிட்டுவிடுவது. பகலில் தேவைப்பட்டால் அவிழ்ப்பது. எல்லோரையுமே வழமைபோல் எங்கள் வளவால் போய்வர நாய்க்குட்டி
அனுமதித்தது. ஆனால் சிலபேரை மட்டும் கண்டாலே அவருக்குப் பிடிக்காது.

அதை நாய்க்குட்டி என்று சொல்வதே தப்பெனப் படுகிறது. கதைக்க மட்டும் தெரியாதே தவிர, மற்றதத்தனையும் அதற்குத் தெரியும். நாம் சொல்வதெல்லாம் புரிந்துகொள்ளும், பதிலுக்கு
தானும் ஊ..... ஊ..... என் என்னோடு கதைக்கும். சட்டையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல், வாயால் என் சட்டையைக் கடித்து இழுப்பார். எனக்கு பொழுது போகாதுவிட்டால், முற்றத்தில் நின்று, அவர் பெயரைச் சொல்லி, என் கையை உயர்த்தி இரு விரல்களால் சுண்டுவேன், உடனே விழையாடத் தொடங்கிவிடுவார். ஆளும் நல்ல உயரம். என் தோள்வரை பாய்ந்து பாய்ந்து விழையாடும், விடவே மாட்டுது, கடைசியில் நான், அம்மா, அம்மா என்று கத்தினால், அம்மா "டேய்" என்று ஒரு குரல் கொடுத்தால் போதும், மிக நல்ல பிள்ளையாக கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கும் அம்மா எங்கே நிற்கிறா என்று. அம்மாவைக் காணவில்லையாயின் மீண்டும் என் மீது பாயத் தொடங்கிவிடும்.

காலையில் அம்மாதான் வழமையாக எழுந்து கதவைத் திறப்பா. நான் என் அறையில் படுத்திருப்பேன். கதவை அம்மா திறந்ததும்தான், நேரே ஒரே ஓட்டமாக என் கட்டிலுக்கு வந்து, ஒரே பாய்ச்சலில் என் மீது ஏறி, தன் முதுகை என்மீது வைத்து புரளும், இருபக்கமும் புரளும், சில நாட்கள் நான் நித்திரையில் திடுக்கிட்டு விழிப்பேன்.

அம்மாவுக்கு மட்டும் பயப்படும் , அம்மாக்கு தெரியும் நேரே என் அறைக்குத்தான் வந்திருப்பார் என்று, அம்மா, "டேய் வெளியே வாடா" என்பா, உடனே ஓடிப்போய் அறைகதவுக் கேட்டினோடு நின்று
என்னையும் அம்மாவையும் பார்க்கும். அம்மா போனால் மீண்டும் ஓடிவந்து புரளும். நான் எழுந்து வெளியே போகும்வரை இது நடக்கும்.

எங்கள் வீட்டுக் கோழிகளை அவருக்கு அடையாளம் தெரியும். கோழிகள் அவர்மீது ஏறி உளக்கிக்கொண்டும் போகும், காணாதவர்போல் படுத்திருப்பார். ஆனால் தப்பித்தவறியும் அடுத்த வீட்டுக் கோழி வளவுக்குள் வந்திடக்கூடாது, பாய்ந்து கலைக்கும், சிலவேளை கோழிகள் மேலே எழும்பிப் பறக்கும். இதனால் பக்கத்து வீட்டுக்காரரும் நினைத்திருக்கலாம், நாம்தான் கலைக்கிறோம் என்று. ஆனால் எமக்கே தெரியாவிட்டாலும் நாய்ப்பிள்ளைக்கு அடையாளம் தெரிந்துவிடும்.

நான் காலையில் எழுந்து ரீ குடித்த பின்னரே அவரைக் கட்டுவேன். நான் ரீ குடிக்கும்போது, என்னைப்பர்த்து வாலாட்டும், கொடுக்காவிட்டால் ஊ..... ஊ.... என்று கேட்கும், அதன்பின்னர் அவரது டிஷ்ஸிலும் கொஞ்சம் ஊத்துவேன் குடிப்பார். ஆனால் எனக்கு இப்ப நினைக்க கவலையாக இருக்கு, நான் குடிக்கும்போது அவருக்கும் ஆத்திக் கொடுத்திருக்கலாம், அந்நேரம் எனக்கு மூளை வேலை செய்யவில்லை. இப்பத்தான் கவலைப்படுகிறேன். பால் காய்ச்சிக் கொடுப்போம், ஆனால் நான் குடிக்கும்போது கொடுக்க நினைப்பதில்லை. அவர் கேட்டால் மட்டுமே கொடுப்பேன். அவரும் தினமும் கேட்பார்:).

நாங்கள் சைவமான நாட்களில் அவருக்காக, எலும்பு/ கருவாடு வாங்கி புறிம்பாக சமைத்துக் கொடுப்போம். சைவம் அவருக்குப் பிடிப்பதில்லை. தினமும் இரவில் அவரது தட்டிலே சாப்பாட்டை வைத்து, ஆளை அவிட்டு விடுவோம். சாப்பிட்டு விட்டு போவார். கொஞ்ச நாளாகப் பார்த்தோம், முக்கால்வாசிச் சாப்பாடு மட்டுமே சாப்பிடுவார், கால்வாசி பிளேட்டில்
இருக்கும். கொஞ்சம் தள்ளிப்போய் படுத்திருப்பார். சாப்பாட்டை யாரும் எடுத்துவிடாதபடி காவல் காப்பதுபோல். நாங்கள் பிளேட்டுக்கு கிட்டப் போனால் ஓடிவந்து மிகுதியையும் சாப்பிடுவதுபோல் பாவனை செய்வார், ஆனால் சாப்பிட மாட்டார். கொஞ்ச நேரம் பொறுத்து மீண்டும் போனால் சாப்பாடு முடிந்திருக்கும். இது என்ன மர்மம் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என்று, ஒருநாள் சாப்பாட்டை வைத்துவிட்டு ஒளித்திருந்து பார்த்தோம்.

வழமைபோல் இவர் முக்கால் வாசியைச் சாப்பிட்டார், கால்வாசியை மிச்சம் வைத்துவிட்டு போய்த் தள்ளிப் படுத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் மற்ற மரத்துக்கு கீழே ஒரு சத்தம் கேட்டது, யாரோ நடப்பதுபோல், உடனே இவர் ஓடிச் சென்றார், ( அது அடுத்த வீட்டு பெண்நாய்), முகத்தோடு முகம் வைத்து கதைப்பதுபோல் பாவனை செய்தார், உடனே அவ இவரோடு வந்தா, பிளேட்டுக்கு கிட்ட கூட்டிவந்துவிட்டார், அவ சாப்பிட்டா, இவர்
பார்த்துக்கொண்டிருந்தார். சாப்பாடு முடிந்ததும் இருவரும் ஓடி ஓடி விளையாடியபடி போனார்கள்.

இதைப் பார்த்து எங்களுக்கு நம்பவே முடியாமல் போய் விட்டது. ஒரு நாய், இப்படி மனிதர்கள் போல நடந்துகொள்கிறதே என்று. அவரை நாய் என்பதைவிட ஒரு தம்பி என்று சொல்லலாம். அந்தளவிற்கு அறிவு இருந்தது. சனிக்கிழமைகளில் தவறாமல், சம்போ போட்டுக் குளிக்க வார்த்து துடைத்துவிடுவேன். கறுப்பு உடம்பு பளபளவென்று மின்னும்.

குளிக்க வாடா என்றால், உடனே வந்து குளிக்கும் இடத்தில் நிற்பார். இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். அதுதான் கடைசியாக நாங்கள் வளர்த்த நாய். அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை வளர்க்க. இதோடு சேர்த்து பூனையும் வளர்த்தோம், அதன் கதையையும் சொல்லி, இவரது முடிவையும் அதில் சொல்கிறேன். அந்த நாயை நாங்கள் வளர்த்தது கிட்டத்தட்ட 3 வருடங்களே, பின்னர் கைவிட்டோம். இப்போ நினைக்க மிகவும் கவலையாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆகா மகி, என் இவ் இழைமூலம்தான் நீங்கள் உள்ளே வர நினைத்தீங்கள் என்பதைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியயக இருக்கு தெரியுமோ? இருந்தாலும் இந்தக் கதையை இவ்வளவு லேட்டாகச் சொல்லியிருக்கப்படாது:)?

//ராசியான கை அதிரா..இந்த ரெய்னும் தாராளமாக வெகு தொலைவு ஓடி விடும்.. :)]//

இப்படிச் சொல்லிச் சொல்லியே அதிராவைக் கவிழ்த்தாலும் கவிழ்த்துப் போடுவீங்களோ என்றுதான் நடுக்கமாக இருக்கு:), ஒவ்வொரு அரட்டைக்கும் ஒவ்வொரு "செல்லக்" கதை எழுதவேணும்:)...

மகி பூனைக்கு சரணாலயம் எனச் சொல்லிச் சொல்லியே நீங்கள் நாட்டை விட்டு வந்திட்டீங்கபோல இருக்கே:). விரைவில் ஆரம்பியுங்கோ, மறக்காமல் அற்றஸ் தாங்கோ, நானும் அதில் இணைந்துகொள்கிறேன்:).

என்ன எல்லோரும் உங்கள் வீட்டுக்குப் பேரூந்தில்தான் வருகிறார்களோ:)? மிக்கியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இமா வந்தாச்சோ.... நீங்கள் குறிப்பிட்ட அத்தனை மரங்களும் எங்கள் வளவிலும் இருந்தது. ஆனால் குருவி ஒருகாலமும் கூடுகள் கட்டுவதில்லை, அதற்குக் காரணம் எங்கள் வீட்டில் எப்பவும் பூனை நாய் இருப்பதால் என்றே நினைக்கிறேன். கூட்டில் குருவி முட்டையைப் பார்க்க அழகாக இருக்கும் என்ன? பாவம் கடைசியாகப் பொரித்த குஞ்சுகள். நீங்கள் சோறூட்டிய விதத்தை நினைக்க ஆசையாக இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்