பட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா

சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.எனக்கு அளிக்கபட்ட இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி. தலைப்பை பார்த்தவுடன்
இந்த தலைப்பு தேவையா என்று தோன்றும். ஆனால் செல்போன்களால் நன்மை, தீமை இரண்டும் இருப்பதால் இதை விவாதித்து பார்க்கலாமே என்று தோன்றியது. ஆகவே இந்த வாரம் நான் திருமதி. பஜீலா அவர்களுடைய தலைப்பான செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா..என்பதை தேர்ந்தெடுத்து உள்ளேன். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது தேவையா என்று விவாதிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை விவாதிக்கலாம்.

//ஒரு வேளை தீர்ப்பு சொல்லற வேலைய ஈசியாக்கிடலாமுன்னு நினச்சிட்டு இருக்கீங்களோ :) ?? எதிரணியில யாருமே இல்லைன்னா - அப்புறம் நீங்க தான் இறங்கி பேசணும், இப்பவே சொல்லிட்டோம் :) //

சந்தனா, அவ்வளவு ஈஸியா நினைச்சுட்டீங்களா? எதிரணிக்கு ஆட்களை ஏற்பாடு பண்ணிட்டோமில்ல:) வாங்க வந்து அவங்களுக்கு பதில சொல்லுங்க.

அப்பாடா!! எதிரணிக்கு ஆள் கிடைச்சாச்சு.
லக்ஷ்மி சங்கர், ஆயிஸ்ரீ நீங்களன்றோ என் வேலையை காப்பாற்றிய தெய்வம். எங்கே என் வேலைக்கு வேட்டு வந்து விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன், எதிரணிக்கு யாரும் வராததால்:) அதற்காக நான் தருகிறேன் உங்களுக்கு ஸ்பெஷல் டீ இந்தாங்க:)

லக்ஷ்மி நீங்க சொல்வதும் சரிதான். செல்ஃபோன் மோகம் சின்ன குழந்தைகளிடம் கூட உண்டு.

//அவங்க வாக் அண்ட் டாக் use பண்ணிட்டு பேசிட்டு போகும்போது எதிரில் வரவங்க அவங்க கண்ணுக்கே தெரியாது கர்ணனின் கவச குண்டலம் மாதிரி அத வச்சுக்குட்டு இருக்கிறது //

படிச்சுட்டு ஒரே சிரிப்பு:) போனை கையில் கெட்டியா வைத்துக் கொண்டு இருப்பவர்களே, இவங்க சொல்வதையும் கேளுங்க

ஆயிஸ்ரீ, உங்கள் கருத்தை அழகா பட்டியல் போட்டுடீங்க. இதை படிச்ச பின்னுமா இன்னும் செல்ஃபோனை ஆஃப் பண்ணாம இருக்காங்க?

உங்க அணியில் ரெண்டே பேர்தான் மனம் தளராதீங்க:-) நான் சூடா, ஜில்லுன்னு எது வேணுமோ சப்ளை செய்ய்கிறேன்:)

தனிஷா, உங்க தோழிக்கு நடந்த சம்பவம் கேட்கவே கஷ்டமா இருக்கு. நல்ல வேலை அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.

அதிரா டயரியா குளிசை கலந்து தருவாங்களாமே எனக்கு பயமா இருக்கு:)

தேன்மொழி உங்க கருத்துக்களுக்கு நன்றி. பாருங்க தேன்மொழி இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலும் அதை தெளிவிக்கிறாங்களாம். பொருத்தது போதும் செல் அவசியமில்லை அணியினரே! பொங்கி எழுங்கள்!!

சுகா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. செல் இல்லாமல் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் நல்ல விவரமா சொல்லிட்டீங்க. எதிரணியினரே நல்ல பதிலோடு வாங்க:)

வாங்க கவி. சுருக்கமா சொன்னாலும் அழகா சொல்லிட்டீங்க. கவி இப்படி சொல்லி போட்டாங்க பாருங்க:) //மூட்டைப்பூச்சி இருக்குதுன்னு வீட்டையே தீயிட்டு கொளுத்த மாட்டோம்.//
ஆகவே எதிரணியினரே ஸ்ட்ராங்கான பாய்ண்ட்டோடு வாங்க.

சுபா,அப்ப உங்க கதை நாளைக்குத்தானா:) இப்படியே ஒவ்வொரு நாளும் சொல்லி சஸ்பென்ஸை பில்டப் பண்ணுவோம். இறுதி நாளன்று சஸ்பன்ஸ் என்னன்னு சொல்லிடுங்க. ஹி.ஹி. இந்த த்ரெட்டை ஓட்ட நான் கையாளும் மார்க்கட் சீக்ரட் அது:) நடுவர் போனா போகுதுன்னு என்னை அடிக்க மாட்டீங்கதானே:-) உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

ஜலீலா, உங்களை வெகு நாள் கழித்து பார்ப்பதில் மிகுந்த சந்தோஷம். உங்கள் மகனுடன் அடிக்கடி பேச முடிவது நல்ல விஷயம். ஜலீ அந்த உண்மை கதை சுபாவுடையது. அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டாங்களாம்:)

தேவா, மனோகரி அக்கா, மனோ மேடம்
நீங்கள் அனைவரும் நலமா? வழக்கமாக பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளும் உங்களை எல்லாம் காணவில்லையே. உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளோம்.

மிக நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்துள்ள நடுவர் வானதி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும். இதில் பங்கு பெறும் இரு அணியினருக்கும் எனது வாழ்த்துக்கள். நடுவர் அவர்களே செல்போன் நமக்கு அவசியமற்றது என்ற அணிக்கு சாதகமாக வாதாட வந்துள்ளேன். இந்த செல்போன்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அவரவர்களின் காதுகளிலேயே நிரந்தரமாக பொருத்திக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவிற்கு இதன் உபயாகம் பெருகிவிட்டது தான் அவசியமற்றது, என்று அதனை வலியுறுத்தவே எங்கள் அணி திரண்டுள்ளதை அனைவரும் அறிவீர்.

நடுவர் அவர்களே இதன் அவசியம் தேவைப்படுவோருக்கு மட்டும் பயன்படட்டுமே! நாங்கள் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. உதாரணமாக ஒரு மருத்துவருக்கு தேவைப்படலாம், ஒரு காவலாளிக்கு தேவைப்படலாம், தீயணைப்பு தொழிலில் ஈடுபட்டிருப்பவருக்கு தேவைப்படலாம், ஒரு வக்கிலுக்கு தேவைப்படலாம், ஒரு அரசியல்வாதிக்கும் இன்னும் இவ்வாறு மக்களின் அத்தியாவசிய சேவைக்கருதி அவர்களை விரைவில் சென்றடையும் நோக்கில் அவர்களுக்கு இதன் அவசியம் தேவைப்படலாம், ஆனால் கூடையில் மீனை சுமந்து சென்று விற்பவருக்கு செல்போனின் அவசியம் எதற்கு? அந்தளவிற்கு அதில் மல்டி மில்லியன் டாலர் புழங்கும் வியாபாரம் ஒன்றும் நடக்கவில்லையே? இப்படி தேவையே இல்லாமல் ஆளாலுக்கு ஒரு செல்போனை வைத்துக் கொண்டு அதை பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, இன்னும் இளையச் சமுதாயத்தைப் பார்க்கும் போதுதான் ஏதோ ஒரு பைத்தியக்கார உலகத்தில் அவர்கள் சஞ்சரிப்பதுப் போன்ற பிரம்மையை இதன் வளர்ச்சி காட்டுகின்றது.

இதன் உபயோகம் என்பது மக்களின் நன்மைக்கான கண்டுபிடிப்பு என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமுமில்லை, இதில் புதுசு புதுசா வந்துக் கொண்டிருக்கும் மாற்றங்களுக்கும் நாங்கள் விரோதிகளும் அல்ல, ஆனால் இதை தூங்கும் போதுக்கூட, கூடவே வைத்துக் கொண்டு தூங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தான் தீமையான வளர்ச்சியைக் குறிக்கின்றது, சிறியவர் முதல் பெரியவர் வரை எத்தனைப் பேர் இதை முறையாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றால் மிகவும் குறைவு தான்.பொது இடங்களில்,இதை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு தரும் இடைஞ்சல்கள் தான் எத்தனை எத்தனை? அதில் மிகப்பெரிய இடைஞ்சலாக வாகன விபத்துக்களைக் கூறலாம், என்னத்தான் கவனமாகவே வாகனத்தை நாம் ஓட்டிச் சென்றாலும் செல் போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுபவரைப் பார்த்தால் நமக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும், அதிலும் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு ஓட்டுபவரைப் பார்த்தால் இன்னும் பயமாக இருக்கும். செல்போனை பிடித்துக் கொண்டு ஒரு கையில் ஓட்டுபவராவது கொஞ்சமாவது தன்னை சுதாகரித்துக்கொள்ள நேரிடும் ஆனால் அவ்வாறும் இல்லாமல் பேச்சிலேயே கவனத்தை வைத்துக் கொண்டு தனக்குத் தானே பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் ரோபார்ட் மாதிரி வண்டி ஓட்டுபவரை என்னவென்று கூறுவது? இன்னும் இரண்டு சக்கர வாகனமானால் சொல்லவே வேண்டாம், வெளியில் செல்பவர் வீட்டிற்கு திரும்புவார்களா என்ற கேள்விக்குறிக்கே காரணமாவதும்கூட இந்த செல்போன் கொடுத்த அசெளகரியம் தானே.

இவைகள் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி அவர்களின் நிம்மதியையும் குலைத்து வருகின்றது என்றால் மிகையாகாது. இந்த செல்போனால் வீட்டில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் குறந்தபட்சம் அன்றாடம் நிம்மதியாய் சாப்பிட்டவர் எத்தனைப் பேர்? குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சிறிது நேரம் சந்தோசமாய் பேசக்கூட முடியாதபடி இடையில் யாருக்காவது போன்கால் வந்து அவங்க முழு கவனமும் அதன் மீது திரும்பிவிடும் பிறகு எங்கே அவர்களிடம் பேசுவது அல்லது பேச வைப்பது? இதற்குத் தான் சுவிட்ச் ஆஃப் போன்ற ஆப்ஷன்கள் இருக்கின்றதே என்றுக் கேட்க்லாம், ஆனால் அவங்க கவனமெல்லாம் அந்த நேரத்தில் போனில் யாராவது கூப்பிட்டார்களோ.... ( வேறென்ன தப்பிக்கத் தான்... அப்படி யாராவது கூப்பிட மாட்டாங்களா என்று ) என்று ஜடமாக அமர்ந்துக் கொண்டிருந்தால் எப்படி குடும்ப விவகாரங்களில் முழுமையாக ஈடுபட முடியும்? இவ்வாறு முக்கிய தருணங்களில் கூட குடும்பத்தினரின் கவனத்தை சிதறடிப்பதிலும் பெரும் பங்கு வகித்து தீமையைத் தருகின்றது. இவ்வாறு மக்களின் மனநிம்மதியைக் குலைக்கவந்த இதன் அவசியம் இல்லாமல் மக்களால் வாழவே முடியாதா இது தான் எங்கள் தரப்புக் கேள்வி? இன்னும் கேட்டால் குடும்ப பிரச்சனையை அலுவலகத்திற்கும், அலுவலகப் பிரச்சனையை வீட்டிற்குள்ளும் வரவிடும் ஒரு தேவையற்ற பாலமாக இது இயங்கி தீமையைத் தருகின்றது. இதனால் இந்த அவசர உலகில் குறைந்துக் கொண்டிருக்கும் மனித நேயம் கூட ஒரேயடியாக அழிந்துவிடும் ஆபத்தும் இருக்கின்றது! நமக்கோ அல்லது பிறர்க்கோ பக்கத்தில் நடக்கவிருக்கும் ஆபத்துகூட அறியாமல் அதில் முழ்கிகிடப்பவர்கள் தான் அதிகம்.

பெருபாலானவர் இந்த செல்போன் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உதவுகின்றது என்று கூறுகின்றார்கள். இது எந்த விதத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றது என்று தெரியவில்லை. வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்குத் தானே அனுப்புகின்றார்கள்? போர்களத்திற்கு இல்லையே!!!? மேலும் மற்ற இடங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்றால் நல்ல பாதுக்காப்பான சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கலாமே? ஏன் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு குழந்தைகளைத் தள்ள வேண்டும். இது குழந்தைகளின் மனநிலையைக் எவ்வாறு கெடுக்கின்றது என்பதை அறியாமல் பெற்றோர் செய்யும் மாபெரும் தவறே இந்த சாதனத்தை மட்டுமே நம்பி அவர்களுக்கு அதை கொடுப்பது தான். இதனால் தங்கள் குழந்தைகளின் தன்னப்பிக்கையை சிறு பிராயத்திலேயே மழுங்கடிக்கச் செய்கின்றார்கள் என்றே கூறலாம். எவ்வாறெனில் பிரச்சனைகள் வந்தால் அதை எதிர்க் கொள்ளத்தெரியாத இன்னுமொரு கோழைகளையும், அதோடு மட்டுமல்லாமல் பணத்தின் அருமைத் தெரியாத பொருப்பற்ற பிள்ளைகளையும், பேச்சாற்றல் அற்ற குழந்தைகளையும், மேலும் இதுப்போன்ற சாதனங்களின் உபயோகத்தால் சிந்திக்கும் திறனற்ற குழந்தைகளையும் உருவாக்குகின்றார்கள் என்பது தான் எங்கள் தரப்பு உண்மை. மேலும் இந்த செல்போன்களை கல்விக்கூடங்களில்க்கூட இதன் உபயோகத்தில் முறைக்கேடுகள் நடக்கின்றது என்பதை அறிந்து அது தடைச்செய்யப்பட்டு வருகின்றது, இதிலிருந்தே இதன் தேவை அவசியமற்றது என்று விளங்கும்.

மேலும் நடுவர் அவர்களே, இதைக் கொண்டு தங்களுக்குச் சாதகமான விசயங்களுக்கு பல வகைகளில் தவறாக பயன்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. வேலைக்கு விடுப்பு தேவையென்றால்கூட நேரிடையாக கேட்க்க தயங்கிக் கொண்டு டெக்ஸ்ட் மெசேஜ் என்ற வசதியை பயன்படுத்தி சுலபமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்கின்றார்கள், இது ஒரு தனி ஒருவனின் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் யுத்திக்குத் தான் துணைப் போகின்றதே ஒழிய தைரியமாக ஒரு பிரச்சனையை அணுக அந்த வசதி துணைப் புரியவில்லை என்பது தான் நிஜம். இன்னும் ஒரு சிலரால் ஒரு பத்து நிமிடம்கூட பேருந்துக்கோ, மருத்துவமனையிலோ, இன்னும் பல பொது இடங்களில் கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அங்கு பொருமை இழந்து வருவதற்கும் காரணம் இந்த செல்போன்கள் இருப்பதால் தானே. இன்னும் சிலர் என்னமோ பன்னாட்டு தூதுவர்களுக்குகூட பேச அவ்வளவு விசயம் இருக்குமோ இருக்காதோ தெரியவில்லை, அந்தளவிற்கு சுற்றுப்புறச் சூழ்நிலையை மறந்து அதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது தான் வேதனைக்குறியது!. இதில் காதலர்களை விட்டுவிடுவோம் அவர்களுக்கு பேச நிறைய விசயம் ( என்ன பெரிசா! அதில் மிக்கவாரு சண்டை தானே! ) இருக்கும், ஆனால் பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பவர்கள்/நண்பர்கள் பகல் முழுவதும் கூடவே இருந்து வீட்டிற்கு வந்தப்பின்னும் அதற்குள் அப்படி என்னத்தான் அவசியம் இருக்கு? அவர்களாவது பரவாயில்லை, அப்போது தான் தன் வீட்டுக்காரர் அலுவலகத்திற்கு புறப்பட்டிருப்பார் அதற்குள் எங்க இருக்கீங்க? இவ்வளவு நேரமா ஆப்பீஸ் போய்சேர? காலையில் இட்லிக்கு வெச்ச சட்னி நல்லா இருந்ததா? சாயங்காலம் சீக்கிரம் வந்துடுங்க அப்படியே வரும்போது பிரெட் ஒரு பாக்கேட் மறக்காமல் வாங்கியாதுருங்கன்னு (ஏன்... கடைக்காரர் இவங்க போய் கேட்டால் கொடுக்கமாட்டாரோ!!!) சொன்னதையே திருப்பி திருப்பி செல்போனிலும் கூறி இப்படி அவசியமே இல்லாமல் ஏதோ கையில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக மற்றவர்களைப் போட்டு சொரிபவர்கள் தானே அதிகம்.

இதனால் யாருக்கு நன்மை இருக்கின்றதோ இல்லையோ! மக்களைச் சுரண்டும் வியாபாரிகளும், வக்கிர புத்திக்கு துணைப்போகும் சமூக விரோதிகளும் தான் நன்மை அடைந்து வருகின்றார்கள் என்பது தான் உண்மை. ஆகவே செல்போன்களின் வளர்ச்சி மக்களுக்கு நன்மை விளைவிக்கவில்லை மாறாக தீமைகளே அதில் அதிகம் உள்ளதால் அது ஒரு அவசியமற்ற ஒன்று என்று கூறி எனது முதல் சுற்று வாதத்தை முடிக்கின்றேன் நன்றி. வாதம் தொடரும்.

அறுசுவை அடிக்கடி கிடைக்காமல் போவதால்தான் நானும் அடிக்கடி அறுசுவைக்கு வர இயல்வதில்லை. என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி!!

இந்த தலைப்பிற்கு பொதுவாக எதிரணியினர் அதிகம் இருக்க மாட்டார்கள்!!. ஏனென்றால் நமது தினசரி உணவு போல இந்த அலைபேசி ஆகிவிட்டது. உலகம் இன்றைக்கு இயங்குவதே இதனால்தான் என்று ஆகிவிட்டது. பல வித நன்மைகள் இதனால் என்பதால் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. முன்பெல்லாம் எங்களின் இளைமைக்காலத்தில் குழந்தை பிறந்தால் தொலைவில் இருக்கும் கணவருக்கு அதைத் தந்தி மூலம் தெரிவித்து அதற்கு பதில் தந்தி வரவே 15 நாளாகி விடும். இப்போதோ, பிரசவம் ஆகி சில நிமிடங்களுக்குள்ளேயே கணவர் எத்தனைத் தொலைவிலிருந்தாலும் மனைவி உடனே தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம். ஏன், நானே வெகு காலமாக அலைபேசியை உபயோகிக்க மறுத்து வந்தேன். அப்புறம், தனியாக இரவு நேரங்களில் வீட்டில் இருக்கும் சமயங்களில் திருடர்களின் பாதிப்பு ஏற்பட்டால் காவல் துறைக்கு தகவல் சொல்ல இந்த அலைபேசி மிகவும் உபயோகமானது என்று வற்புறுத்தப்பட்ட பிறகுதான் மறுக்காமல் ஒத்துக்கொண்டேன்.

ஆனாலும் இன்றைய இளைஞர்களிடையே இதன் உபயோகத்தால் நிறைய பிரச்சினைகளும் தீமைகளும் ஏற்படுவதையும் மறுக்க முடியவில்லை. பெற்றோர் அறியாமல் இரவு நேரங்களில் தவறுகளுக்குத் துணை போக இது மிகவும் உபயோகப்படுகிறது இன்று!! அப்புறம் பொது-சமூக நாகரீகம் இதனால் இன்று மிகவும் குறைந்திருக்கிறது!! பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றியே சிந்தனையில்லாமல் கொஞ்சல்கள், திட்டல்கள், மிரட்டும் ரேஞ்சில் சப்தங்கள், அப்புறம் இருக்கவே இருக்கிறது- எதிராளிக்குத் தெரியாமல் விரும்பிய கோணங்களில் அவர்களைப் படம் பிடிப்பது, அல்லது படம் எடுத்து மிரட்டுவது, மிரட்டி பணம் பறிப்பது என்று சமூகச் சீரழிவுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன!! இதை எழுதிக்கொண்டே இருக்கும்போது, வானொலிச் செய்தியில், “இலங்கையில் கல்லூரி மாணவி ஒருத்தி அலைபேசி உபயோகித்து கல்லூரியில் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டு, அதனால் ஏற்பட்ட மாணவர் போராட்டத்திற்குப் பின் கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகள் அலைபேசி கல்லூரியில் உபயோகிப்பதைத் தடை செய்துள்ளது” என்று தெரிவிக்கிறார்கள்!!
மிக முக்கியமான சீரழிவாக நான் கருதுவது, இன்றைய இளம் பிஞ்சுகள்கூட இந்த அலைபேசியால் கெடுவதுதான். இது பெற்றோரில் செல்லத்தால் ஏற்படுவது. ஏற்கனவே இன்றைய தொலைக்காட்சிகளும் அதிகப் படிப்புச்சுமையும் அவர்களை காற்றாட விளையாட முடியாமல் வெளியுலகின் அழகுகளை ரசிக்க முடியாமல் நல்ல விஷயங்களைப் படிக்க முடியாமல் கெடுக்கின்றன. இப்போது கைபேசியும் அவைகளுடன் சேர்ந்து இளம் பிஞ்சுகளை இயந்திர மயமாக்கிக் கொண்டு விடுகிறது. நல்ல வார்த்தை, பண்புகள், மரியாதை இப்படி நல்லவற்றைக்கற்றுக்கொள்வதற்கெல்லாம் இப்போது நேரமே இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கை இப்படி இயந்திரங்களோடு இயந்திரமாகப் போகும்போது, நல்ல விஷயங்களெல்லாம் காற்றோடு காற்றாக மறைந்து போய்க்கொண்டே இருக்கின்றன!!

//எங்கேயாவது கிளம்புகிறோம்?????வழி மறந்துவிட்டால்!!!!!!!! பொதுத் தொலைபேசி தேடி அலைவதிற்குப் பதில் கையில் ஒரு செல்போன் இருந்தால் அதிலிருந்து அழைத்து வழியைத் தெரிந்துக் கொள்ளலாம். நேரம் மிச்சம்.//
//பாதி வழியிலே ஒருவிபத்து ஏற்பட்டால் வீட்டுக்கோ, போலிசுக்கோ, மருத்துவமனைக்கோ போன் பண்ண செல்போன்தான் கை கொடுக்கும்//
டவர் இல்லாத ஊர்ப்பக்கம் என்னங்க செய்வது ரீசார்ஜ் பண்ணிய செல்லு கைல இருந்தாலும்...கொஞ்சம் டவர் எங்கல்லாம் இருக்குன்னு பாத்து அங்கேயா போயி வழியை தொலைக்க முடியும்...நம்ம நாட்டுல செல்போன் டவர் இல்லாத, சிக்னல் எடுக்காத ஊர்கள் நிறைய இருக்கு... போன் பண்ணாலும் கூட, எம்மக்களுக்கு(சாதாரணப்பட்ட) போலிசும், உதவியும் தானா வராது என்பது எல்லாருக்கும் தெரிந்தது...
//பிள்ளையிடம் செல்போன் இருப்பதால்தான் பெற்றோருக்கு தெரிகிறது, இப்போ பிள்ளை எங்கே இருக்கிறார் என்று//
செல் இல்லாமல் டென்சன் தான்.. செல்லில் கேட்டு அங்கே இருக்கிறயானு விசாரித்து நிம்மதி அடைகிறோம்.. பத்திரமா போக வேண்டிய இடத்தை அடைந்து விட்டதை உறுதி செய்கிறோம்.. சரி... பழகி போச்சு.. இன்று செல்லை பாட்டரி போட வில்லை.. ஆஃப் ஆகி விட்டது.. அல்லது செல் மிச்சிங்க்...அல்லது ஒரு மீட்டிங்.. ஏதோ ஒரு காரணத்தால், செல்லை தொடர்பு கொள்ள முடியவில்லை... அப்பப்பா.. எத்தனை டென்சன்...
மனதிற்கு உடனே பதில் கொடுக்க இயலாமல் அவஸ்தை...
பொறுமையோ, நிதானமோ தொலைகிறது...
//ஸ்கூல் டூர், காலேஜ் டூர், ஆபிஸ் டூர் இப்படி நாம போறதுக்கு வீட்ல அனுமதிக்க மாட்டாங்க.//டூர் போயிட்டு வந்தாச்சா? போற இடத்துல எஅதும் பிரச்சினைனா, என்ன செய்வதுன்னு தயராகத் தான் டூர் ப்ளான் போடனும்ங்க.. செல் இருக்கேன்னு கிளம்பிட கூடாது.. எங்கே டூர் போகிறோம், ஓரளவிற்கு சுற்றுலா பாதுகாப்புக்கு என்று யாரை அணுக வேண்டும், எதிர் பாராத ஆபத்துகளில் தற்காத்து கொள்வது, முதலுதவி(எப்பவுமே அவசியம் தானே) போன்ற விசயங்களையும் ஒவ்வொரு மாணவரும் தனியே நோட் பண்ணிக் கொண்டு செல்வது ப்ரக்டிகலாக பிரச்சினை நேருகிற சமயத்துல பேருதவியாய் இருக்க்கும்... எப்படியும் வெகு தூரப் பயணம் என்பதால், பெற்றொர் என்னதான் செல்லில் தொடர்பு கொண்டாலும் உடனே செல்ல முடியதில்லையா?
//செல்போனில்தான் என்னென்ன வசதிகள், ஜீ.பீ.ஆர்.எஸ், எம். எம். எஸ், இண்டர்நெட் என்று இன்னும் எத்தனையோ வசதிகள். இந்தியாவில் பிறந்த குழந்தையை 5 நிமிஷத்தில் அமேரிக்காவில் பார்க்கும் வசதியை இந்த செல்போன்தான் கொடுக்குது//
அறிவோம் எதிரணியினரே... நீங்க பேச அப்புறம் பாயின்டு வேண்டாமா?
//வெளிநாட்டில் இருந்து லேண்ட் லைனுக்கு போன் பண்ணுவார் கணவர் மனைவிக்கு குடும்பத்தில் அவளால் எல்லோர் முன்னிலையிலும் சகஜமாக கூட பேச முடியாது. எவ்வளவு கஷ்டம் இருவருக்கும்//
எல்லார் முன்னிலையிலும் ஆமா, இல்லைன்னு தம்பதியர் பேசுகையில் அங்கே சொல்லாத வார்த்தைகளில் காதலும், அக்கறையும் கண்டிப்பாய் இருவர் நெஞ்சிலும் உணரப்படும்..
எல்லொரும் இருக்கையில செல்போனை வைத்துக் கொண்டு தனியே ரூம்க்குள் சென்று பேச முடியாது இல்லையா? சிக்னல் கிடைக்கலன்னு வெளியே செல்லவும் முடியாமல் போகலாம்.. சற்று முன் தானே அதே செல்லில் பாட்டி பேசி இருப்பார் தெளிவாய்...
//புதிதாக திருமணம் செய்ய போகிறவர்களுக்கும், காதலர்களுக்கும் இந்த செல்பேசி கண் கண்ட கடவுளை போன்று விளங்குகிறது//
கண்ணாலே கானாமல், நிச்சயிக்கப் பட்ட ஆளை எண்ணி கல்யாண நாளுக்கு காத்து இருந்தவர்களும் உண்டு... மிஸ்ஸ்டு கால் எடுக்கலைன்னா சண்டை, கவனிக்கலயா சண்டை, ஏன் குட் மார்னிங் சொல்லல? யாரு கிட்ட இப்ப பேசிட்டு இருந்தெ..பிஸியா இருந்தது சண்டை.. அப்புறம் நடக்க வேண்டிய சண்டை கல்யாணத்துக்கு முன்னாலே.. வம்பை விலை குடுத்து தான் வாங்க வேண்டி இருக்கு... லான்ட் லைனில் பேசினாலும்.. அப்பா சேரில், அம்மா அருகில் துணி மடித்துக் கொண்டு, அண்ணன் டி வி பார்க்க, ஹாலில் உட்பி யுடன் பேசினால் அந்த கணங்களில், செல்லில் தனியே ரூமில் உக்காந்து பேசுவதை விட த்ரில் அதிகம் தானே..
//எதிரணியினர் மாணவர்கள் தவறான வழியில் பயன்படுத்துறாங்க ஆ ஜோக்ஸ் அடிச்சுகிறாங்க, கெட்ட படங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்று கோஷம் போடாதீங்க. யூத் என்றால் எல்லாம்தான் இருக்கும்//
எல்லாம் சொல்லிட்டு நீங்க சொல்லாதீங்கன்னா எப்படி... எங்க இளைஞர்கள் தன் கையில் உலகம் வந்து விட்டதுன்னு செல் கிடைத்ததும் எண்ணுகிறார்கள்.. ஆனல், அவர்தம் உலகம் செல்லுக்குள் முடன்ஙி போய் விடுவதை உணராமல்...எத்தனை விசயம் செல்லை தாண்டி இருக்கு.. ஒரு நல்ல புத்தகம் படிக்கிறோமா, பொது அறிவை வளர்க்கிறோமா, இயற்கையை இரசிக்கிறோமா? இரசனை மாறித் தான் போயி இருக்கிறது இந்த செல்லால்......
//10 நன்மைகள் இருக்கும் இடத்தில் 2 தீமைகள் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.இப்போது இந்த தலைப்பின் படி செல்போனால் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகள் இருக்கும் பட்சத்தில் செல்வோன் எவ்வாறெல்லாம் அவசியம் என்று பார்க்கலாம் வாங்க!!! //
சில நன்மைகளா, பல தீமைகளா? (.. அவசியமா, தேவையற்றதுன்னு சொல்றோம். )...
நடுவர் கையில் (செல் இல்லை தானுங்களே) தான் இருக்கு...
//டார்ச்சு லைட்டா கூட வச்சுக்கலாம்--அதுவும் எளியவர்களும் வாங்கும் விலையில்.// ரொம்ப முன்னெச்சரிகையா விலையை சொல்லிடரீங்க வெரி குட்...அது...
அந்த லைட் வெளிச்சதுல என்னங்க பாக்க முடியும்.. இதுனால் டார்ச்ச் வாங்கர செலவு மிச்சம்னு செல்லையே வைத்து இருக்கிறீர்களா என்ன? எமெர்ஜென்சி லைட் வேணும்ங்க..
//அலார வசதி.//எதுல அலாரம் வைச்சாலும் ஆஃப் பண்ணிட்டு தூங்குவோம் தானே.. ஆனா, இது தலையணைக்கு அடியில இருப்பதால உடனே ஆஃப் பண்ண மட்டுமே வசதி.. அலாரம் வச்சதுக்கான பயன் கிடையாது...
//பாடல்கள் கேட்க//காதுக்குள் கருவி மாட்டிக் கொண்டு, செல்லில் பாடல் கேட்டுக் கொண்டே பஸ்ஸில் ஸ்டாப் விடுவதில்லையா? நடத்துனர் இறங்க சொன்னாலும் கேட்க காது ஃப்ரியாய் இல்லையே... நீங்களே பாயின்டு கொடுத்து இருக்கீன்ங்க.. இது வேற தோல்லை... எஃப் எம் கேட்காம வேலை பாக்க முடியாது.. அதை செல்லோட தந்து சிந்திக்காதே எப்பவுமேன்னு செல்லு சொல்லுது...
இங்கு இன்னோரு விசயம்.. காலிங் ட்யூனா பாட்டை சிலரு செல்லுக்கு வைச்சு அழகு பாக்குறது.. சாமி கிட்டே சொல்லிப் புட்டேன்ன்னு யாரொ பாடினது கெட்க... பாட்டுடானு காதை நீட்டினா, அடுத்து, ஹல்லொ, சனியனே சொல்லித் தொலை என்ன விசயம்னு கேக்குது.. பாத்தா செல்லுல பேச்சு.....அய்யோ சாமி கண்ண கட்டுதே இந்த செல்லால.. அட, நா வைச்சு இருக்காட்டியும் தொல்லை தன்பா....
//மெயில் பார்க்கலாம் --> பாக்கெட் இன்டர்நெட் மூலமாக//
மக்கள் எல்லொருமே அவ்ளோ பிஸியான பிசினஸ் மக்களா(ப்ளூரல்)?
//போட்டோ, வீடியோ, வாய்ஸ் ரெக்காடின்ங்// நன்மை தான் ஆனா, இதோட குவாலிடி லெவெல் லிமிட்டேட்...
/அதன் நன்மையை கருத்தில் கொண்டு எப்படி தீமையை நன்மையாக்கனும் பார்த்து மாற்றுவது தான் புத்திசாலித்த்னம்/
எல்லொருமே புத்திசாலியா இருந்துட்டா பிரச்சினை தான் எங்கேயும் இல்லையே.. டாலரில் விலை குடுத்து அங்கு வாங்கிய கைப்பெசி இங்கு வேற சிம் கார்டை ஏற்பது இல்லை... தூக்கி எறிய மனமும் இல்லை, நாம புத்தி சாலியும் இல்லையே.. வேஸ்ட் தானே..அன்னாட்டில விற்று இருக்க வேண்டும்... பாருங்க புத்தி இப்போ வேலை செய்யுது செல்லு வேலை செய்யாதப்ப....
//அதுக்காக கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது தூக்கி காதுக்குள் வைக்கிறோம் கவனம் சிதறி ஆக்சிடண்ட் ஆகிறோம் என்றெல்லாம் சொல்லவேண்டாம்.ட்றைவ் பண்ணூம்போது எப்படி பயன்படுத்தவேணுமோ அப்படித்தான் உபயோகிக்கிறோம்//
ட்ரைவ் பண்ணும் போது "செல் பேசவேக் கூடாது"னு சட்டம் பெரிய நாடுகளிலேயும் உண்டு.. ப்ளு டூத் போட்டு பேசினாலும்,வாய் பேசுது, கை ஸ்டியரிங்க் வீல் பிடிக்குது... மூளை ஒன்னே ஒன்னுதானே.. காமன்ட்(command) குடுக்கனும்... இல்லை இதெல்லாம் அனிச்சை செயல்களா...
சைடுல வண்டிய நிப்பாட்டித் தான் பேசனும்.. (தனியே வண்டில போகையில தான்..)
//முக்கியமாக வீட்டுக்கு வெளியே சென்றால் நமக்கு செல்போன் இல்லாமல் வெளியில் உலவுவதை நினைத்துப்பார்க்கமுடியுமா//
நினைத்துப் பர்ருங்கன்னு சொல்லுறோம்.. என்ன செய்ய இயலும்... வேறு வழிகள் என்னன்னு முன்னெச்சரிக்கையாய்.. இந்த பட்டி மன்றம் சாக்கில்.. சமயத்தில் கண்டிப்பாய் உதவும்(செல் கைல இருக்கு சரி... சார்ஜ் இல்ல... ஏதோ லாக் ஆகி போச்சு, பயன் படுத்த முடியல ...வாட் டு டூ)..
//மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்துவதுபோல்தான்//
மூட்டைப் பூச்சின்னு யாரும் சொல்ல வில்லை.. செல் அவசியம் இல்லைனு தான் சொல்லுறோம்.. இந்த உதாரணஒப்பீடு பொருத்தமாய் இல்லை.. செல் வேண்டாம் என்பது=வீட்டை கொழுத்துவது.... செல் வேண்டாம் என்றால், மாற்று வழிகள் (எற்கனவே உள்ளதை தான்) பார்க்கனும் .. வீட்டை பத்திரமாப் பாத்துக்கோங்க... (செல் கைல இருக்குனு டக்குனு கிளம்பாம... கொஞ்சம் வீட்டுக்குள் ரெஸ்ட் எடுங்கப்பா...)
//இப்போது நாம் குடும்பங்கள் எல்லாம் வேலை நிமித்தமோ அல்லது வேறு காரணங்களாலே ஒரே நேரத்தில் விட்டில் இருக்க முடிவதில்லை //
எல்லொரும் வீட்டில் இருந்தாலும் ஆளுக்கொரு செல்ல்போன் வட்டம் இருக்கும்... சினிமாக் காட்சிகளில் பார்த்தது இல்லையா.. 5 வித உரையாடல் கேட்கலாம்... 5 பேர் இருந்தால்...
//இப்படி உடலோட ஒரு அங்கமாவே ஆயிப் போயிட்ட எங்கட செல் போனை பத்தி கேட்டா என்னத்த சொல்ல !! :)//
பாத்தீங்களா, நம்மலப் பத்தியே நமக்கு தெரியல.. அது அங்கம் இல்லை...முதலில்..உயிருள்ள செல் நம் உடலில் உள்ள செல்கள்..அதைத் தான் பேணிகாக்க வேண்டும்..
செல் ஒரு கருவி, தொடர்பு கொள்ள உதவும் ஒரு கருவி ...
கருவியை தனியே வைத்து விட்டு நன்றாக சாப்பிட வேண்டும் உடலைப் பேண... வாக் அன்ட் டாக்,ரன் அன்ட் டாக், ஈட் அன்ட் டாக்(!), ஸ்லீப் அன்ட் டாக், ப்ளே அன்ட் டாக்..டாக் அன்ட்ட் டாக்(ஒரே சமயத்தில் இங்கே ஒரு பதில், செல்லில் ஒரு பதில்.. அப்பேற்பட்ட பிஸியாக்கி விடுகிறது இந்த செல்)... இது எல்லாம் நாட் ஹெல்தீ....

அப்பாஆஆ.. ரொம்ப நன்றிங்க லஷ்மி பதில் போட்டு களைத்து போயி இருந்தேன்.. இளநீர் ரொம்ப இதமாய் இருந்தது...
//அவங்க ரோட்ல போகுபோது பேசிட்டு போவாங்க பாத்தா தனியா எதோ பேசிட்டு போற மாதிரி இருக்கும்// நீங்க வேற நம்ம கிட்டே தான் ஏதோ சொல்றான்னு பாத்தா சிரிப்பான், திடீர்னு முறைச்சு கிட்டே பேசுவான்.. ஓ காதுல ஒன்னு இருக்கே..
பழகி போச்சுங்க்க.. உண்மையாலுமே யாரும் நம்மல கூப்பிட்டா(பெயரை சொன்னால் பார்த்து விடுவோம்) இப்பொ எல்லாம் பார்க்கத் தோணுவது இல்ல..
//நல்ல விஷயத்தை தீய வழியில் செயல்படுத்துவது மனிதனின் தவறு. இதில் செல்போன் என்ன பாவம் செய்தது?//
இதைத் தான் நாங்களும் சொல்றோம்.. அது கருவி, இருந்தாலும் பாவம் தானே, அதுக்கும் ரெஸ்ட் கொடுங்க...
//அறிவு கெட்ட தனமாக செயல்படும் மனிதர்களை பொறுத்தது//
கண்காணிக்கனும், நம்மை சுற்றி இவர்கள் இருக்கிறார்களா என்று.. செல் விசயத்தில் அடுத்தவன் வச்சு இருந்தாலும் நாம் உஷாராத் தான் இருக்கனும்ங்க...
//அடுத்த 10 நிமிஷத்தில் போலிஸ் வந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். அன்று அவர் கையில் மொபைல் இருந்ததால் தப்பித்துக் கொண்டார். இல்லையெனில் இன்று உயிரோடு இருந்திருப்பாரோ என்னவோ..!/ செல் எனும் கருவியால் நன்மை உங்கள் தோழிக்கு.. இறைவனுக்கு நன்றி..

காலர் ட்யூனாமே, ஒரு பாதிரியாருக்கு விளம்பரம் வருது செல் கம்பெனியில இருந்து... ஏதோ பட்டனை பிரஸ் செய்து விட்டார் (அவ்விளம்பரம் போன் கால் போல ரிங்க் அடிக்க்கும், நாம் எடுப்போம்.. சாதாரணமாக பேசும் அக்குரல்.நாம யாருங்கன்னு கேட்டுடு இருப்போம்... இந்த பாடலை உங்க காலர் ட்யூனா செட் பண்ணனும்ன இதை பிரஸ் பன்னுனு சொல்லும், இல்லேன்னே இன்னொன்னை பிரஸ் பண்ண சொல்லும்...)/இவர் எதயோ பிரஸ் பண்ண, கல்யானம் தான் கட்டிக்கிட்டு ஒடி போகலாமா பாட்டு செட் ஆகித் தொலைய.... அவருக்கு இந்த விசயம் தெரிய வரல(போன் பண்ணுறவருக்குத் தான் கேட்கும் இல்லையா).. மாச பில்லுல 30 ரூ அதிகம் மட்டும் தெரிந்தது. போன் பண்ணுறவர்ல கொஞ்சம் விவரம் தெரிந்தவரு(எதிரணிய்ல சொல்லுற புத்தி சாலியான ஒருத்தர்) கெஸ் பண்ணி பாதிரியார் கிட்டே சொல்லுறார்.. அவர் அடைந்த மன உளைச்சல் நினைத்து பாருங்க.. இம்சை தானே...சமீபத்துல படித்த செய்தி இது.....

மீண்டும் சந்திப்போம்...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வாங்க மனோ மேடம், மனோகரி மேடம்.... ரொம்ப அழகாக, நம் அணிக்கு நேர்த்தியாக கருத்துக்களை அளித்துள்ளீர்கள்.. வெகு நேரமாக வாதங்களுக்கு பதிலாக தர வேண்டி, பதிவுதனை தட்டச்சு செய்து கொண்டு இருந்தேன். உங்கள் பதிவுகளை இப்போது தான் பார்த்தேன்..மிக்க மகிழ்ச்சி..
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

மனோகரி அக்கா இது இது இதுக்குத்தான் நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஒரு அணியில் இரண்டு பேர் மட்டும் போராடி கிட்டு இருக்காங்க. இப்ப நீங்க வந்துட்டீங்க இல்ல. அது போதும் அவங்களுக்கு:) நீங்களும் பங்கு பெறுவதில் எனக்கு மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

//குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பறாங்களா? இல்லை போர்க்களத்திற்கா?//

படித்து விட்டு சிரிச்சுட்டு இருக்கேன் நான்.

உங்களின் கருத்துக்கள் மறுக்கவே முடியாது. எதிரணியினரே அவசியமில்லை என்ற அணி இப்ப படு ஸ்ட்ராங்கா போயிட்டு இருக்கு. வந்து இவங்க கேள்விக்கெல்லாம் பதிலை சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்