பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு

தேதி: July 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

பேபிகார்னில் கால்சியம், புரோட்டீன், வைட்டமின், நார்சத்து என எல்லாமே உள்ளது. குடல் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கீரையைப்போல, இதையும் இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது. இதில் பொதுவாக மஞ்சூரியன் மாதிரி ஃப்ரை வகைகள்தான் செய்வார்கள். இதில் காரக்குழம்பு வேர்க்கடலை (புரோட்டீன் சத்து) சேர்த்து செய்திருக்கிறார் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.

 

பேபிகார்ன் – 10
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
புளி – எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் – 2
சாம்பார்பொடி - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
அரிசி ஊறிய நீர் - 1 கப் (குழம்புக்கு தேவையான அளவு)
தேங்காய்ப்பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைத்துக் கொள்ளவும் அல்லது தேங்காய் துருவல் இருந்தால் அதிலிருந்து கெட்டியான பால் அரை கப் எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியுடன் சாம்பார் தூளை சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். புளியை அரிசி ஊற வைத்த நீரில் போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
பிறகு வேர்க்கடலை மற்றும் நறுக்கின பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிய பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி விடவும்.
ஒரு கொதி கொதித்ததும் நறுக்கின கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.
சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தொடர்ந்து புதுமையான ரெசிப்பி கொடுத்து வருவது மிக்க மகிழ்ச்சி.நிச்சயம் இது ருசியாகத்தான் இருக்கும்.செய்து பார்க்க வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இளவரசி அக்கா,

உங்களுடைய இந்த குறிப்பு உங்களுடைய எல்லா குறிப்பையும் போலவே பார்க்கவே பிரமாதமா இருக்கு. சீக்கிரம் செய்து பார்த்துவிட்டு சொல்றேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!