காலிஃப்ளவர் மசாலா தோசை சமையல் குறிப்பு - படங்களுடன் - 13545 | அறுசுவை


காலிஃப்ளவர் மசாலா தோசை

வழங்கியவர் : arusuvai_team
தேதி : புதன், 12/08/2009 - 10:52
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
2.75
4 votes
Your rating: None

 

 • பச்சரிசி - ஒரு கப்
 • புழுங்கல் அரிசி - ஒரு கப்
 • முழு வெள்ளை உளுந்து - அரை கப்
 • காலிஃப்ளவர் - ஒரு பூ
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
 • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 • பாதாம் - 8
 • தக்காளி - ஒன்று
 • பெரிய வெங்காயம் - ஒன்று
 • பச்சை மிளகாய் - ஒன்று
 • நெய் - ஒரு மேசைக்கரண்டி
 • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
 • உப்பு - ஒரு மேசைக்கரண்டி+முக்கால் தேக்கரண்டி

 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பாதாமை துருவி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரை கொதிக்க வைத்து அதில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு ஒரு நிமிடம் கழித்து நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து மிளகாய் வாசனை போகும் வரை வதக்கவும்.

கொதி தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் காலிஃப்ளவரை எடுத்து மசாலாவில் போட்டு கால் கப் தண்ணீரை தெளித்து பிரட்டி மூடி வைத்து இடையில் கிளறி விட்டு 10 நிமிடம் வேக விடவும்.

10 நிமிடம் கழித்து தண்ணீர் சுண்டியதும் திறந்து நன்கு கிளறி இறக்கி விடவும்.

தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைமாவில் ஒரு மேசைக்கரண்டி உப்பு, துருவிய பாதாமில் பாதி அளவு எடுத்து சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்த்து அதில் ஒரு பாதியில் மீதம் இருக்கும் பாதாமை தூவவும். மற்றொரு பாதியில் செய்த மசாலாவை வைத்து மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.

2 நிமிடம் கழித்து வெந்ததும் பாதாம் தூவிய பகுதியை மடக்கி மேலே நெய் ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து தோசையை திருப்பி போட்டு மொறு மொறுவென்று ஆனதும் எடுக்கவும்.

சுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை தயார். இதை எளிதில் செய்து விடலாம். தக்காளி சாஸ் உடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் போட்டு தண்ணீர் ஊற்றி முக்கால் மணிநேரம் ஊற வைக்கவும். அதே போல உளுந்தையும் ஊற வைக்கவும். அரிசி, உளுந்து இரண்டும் ஊறியதும் கிரைண்டரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மசாலா தோசை செய்ய மாவை புளிக்க விட கூடாது.அட்மின்

அட்மின் அட்மின்.... தோசை சூப்பர். ஆனா செய்தது யாருன்னு சொல்லவே இல்லையே....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோசை செய்தது

இந்த தோசை செய்முறையை வழங்கியது ஒரு இஸ்லாமிய குடும்பத்தலைவி. தன்னைப் பற்றின தகவல்களை அவர் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், இங்கே குறிப்பிடவில்லை. (பெயர் போடாமல் குறிப்புகள் வந்தால், அது "அவருடையதாக" இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் நீங்கள் கேள்வி எழுப்புவது தெரிகின்றது. :-))

தொடருங்கள் உங்கள் சுவையான சமையலை

வாவ் சுவையான சத்தான காலிபிளெவர் தோசை, இனி பெயர் போடாமல் வந்தா உங்கள் குறிப்பா?
தொடருங்கள் உங்கள் சுவையான சமையலை....

Jaleelakamal

நன்றி சொல்லிடுங்கோ அட்மின்.

அது என்ன... "அவருடையதாக" இருக்கும்???!! யார் அந்த "அவர்"? :( எனக்கு ஒன்னும் புரியல.... இப்படி பேர் போடாம நிறைய பேர் குறிப்பு குடுக்கறாங்களா?? நான் இப்படி தான் ஒரு முறை மனோ மேடம் குறிப்புன்னு தெரியாம பேரை காணோம்'னு கேட்டுபுட்டேன். அடி வாங்காம தப்பிச்சதே பெரிய விஷயமா போச்சு. செய்தவங்க தளத்தை பார்க்கலன்னா, நீங்களே சொல்லிடுங்கோ.... செய்து பார்த்துட்டேன், இன்று காலை.... ரொம்ப நல்லா இருந்துச்சு. நல்ல குறிப்புக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா