ஹோல் மீல் சப்பாத்தி

தேதி: September 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மாவு செய்ய:
கோதுமை மாவு - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
தயிர் - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஃபில்லிங் செய்ய:
கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர் - 1 கப் (மிக பொடியாக அரிந்தது)
டோஃபு - 50 கிராம்
வெங்காயம் - 1(பொடியாக அரிந்தது)
பச்சைமிளகாய் - 2 (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து(பொடியாக அரிந்தது)
மல்லிக்கீரை - 2 மேசைக்கரண்டி(பொடியாக அரிந்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி


 

துவரம் பருப்பை குழைய வேகவைத்து நன்றாக மசிக்கவும். கோதுமை மாவுடன் மசித்த பருப்பு, தயிர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
டோஃபுவை பிழிந்து ஈரம் போக டிஸ்யூ பேப்பரில் 10 நிமிடம் வைத்து பின் பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பாதி வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பின்னர் பொடியாக அரிந்த காய்கறிகளும் உப்பும் சேர்த்து வதக்கவும்.
காய் நன்றாக வெந்ததும் மிளகாய்தூள் சேர்த்து வாசனை போக வதக்கவும்.
உதிர்த்த டோஃபு சேர்த்து வதக்கி மல்லிக்கீரை சேர்த்து கிளறி இறக்கி ஆற விடவும்.
பிசைந்த மாவிலிருந்து எலுமிச்சை அளவு எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் 1 மேசைக்கரண்டி அளவு பூரணம் வைத்து மூடி சப்பாத்தியாக இடவும்.
தோசைக்கல் காய்ந்ததும் லேசாக எண்ணெய் விட்டு இரு புறமும் சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
ஆனியன் ரைத்தாவோடு சாப்பிட சுவையாக இருக்கும்.


எல்லா சத்துக்களும் அடங்கிய சுவையான சப்பாத்தி. தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை. மசாலா வாசனை பிடிக்கும் என்றால் காய் வதக்கும் போது சிறிது கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் போதும். இந்த சப்பாத்தி செய்ய ஏற்ற அளவில் காய்கறிகள் ரெடியாகிவிடும்.மாவை கிண்ணம் போல் செய்யும் போது மத்தியில் கனமாகவும் ஓரங்களில் கொஞ்சம் மெலிதாகவும் இருந்தால் பூரணம் வைத்து மூடி சப்பாத்தியாக தேய்க்கும் போது சீராக வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த சப்பாத்தியில் மாவு செய்ய தனிமிளகாய் தூள் பயன்படுத்தி இருக்கீங்களா. பில்லிங்க்கு முளைக்கட்டிய பயறு சேர்க்கலாமா.வேறு என்ன என்ன காய்கறி சேர்த்தால் நல்லா இருக்கும்.

ஹாய் வினோஜா ஃபில்லிங்கில் முளைகட்டிய பயிறு சேர்த்தால் சப்பாத்தி திரட்ட சிரமமாக இருக்கும். சரியாக திரட்ட வராது.
முளைகட்டிய பயிறு சேர்க்க விரும்பினால் இரண்டு சப்பாத்திகள் இட்டு ஒரு சப்பாதியுன் மேல் பரவலாக ஃபில்லிங் வைத்து இன்னொரு சப்பாத்தியால் மூடி ஓரங்களை அழுத்தி ஒட்டி தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம்

இதில் நான் பயன் படுத்தியிருப்பது தனிமிளகாய்தூள்தான்.

குடைமிளகாய் சேர்க்கலாம். வெந்தயகீரை சேர்க்கலாம். துருவிய முள்ளங்கி சேர்க்கலாம். நம் சாய்ஸ்தான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹோல்மீல் சப்பாத்திக்கு ஃபில்லிங்கில் பச்சை பட்டாணியும்
மசித்து சேர்ர்க முடியுமா. கொஞ்சம் புதினா கீரையும் செர்த்து பண்ணும் ஐடியா இருக்கு.

கோமு அம்மா தாராளமா பச்சைப் பட்டாணி மசித்து சேர்க்கலாம். புதினா சேர்த்தாலும் நன்றாகவே இருக்கும்.
நான் கொடுத்திருப்பது ஒரு பேசிக் ஐடியாதான். நமக்குப் பிடித்த சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்யலாம். கரம் மசாலா சேர்க்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா இன்னைக்கு காலையில் இந்த சப்பாத்தி செஞ்சு பார்த்தேன். நல்லா இருந்துச்சு. எனக்கு பில்லிங் வைச்சு சப்பாத்தி மாதிரி திரட்ட வரல. லேசா தேய்க்கும் போது சப்பாத்தி கல்லுலோட ஒட்டிக்குது. அதனால தோசைகல்லுல வைச்சு போளி மாதிரி கையால தட்டினேன். இதுல காய் வேக வைக்கும்போது தண்ணீர் சேர்க்க கூடாதா.