வழங்கியவர் : kavisiva
தேதி : செவ்வாய், 17/11/2009 - 15:13
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
இந்த துவரனை முள்ளுவாளை அல்லது துப்பு வாளை எனப்படும் முள் அதிகமுள்ள மீனில் சமைத்தால் சுவை அதிகம். திருக்கை மீனிலும் சுவையாக இருக்கும். சதைப்பற்றுள்ள எந்த மீனிலும் செய்யலாம்.
- சுத்தம் செய்த மீன் - 300 கிராம்
- சின்ன வெங்காயம் - 20 முதல் 25 எண்ணம்
- மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- அரைக்க:
- தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)
- மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
- தாளிக்க:
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
- உளுந்து - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
![]() |
மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கழுவி வைக்கவும். |
![]() |
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி மீன் துண்டுகள், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். |
![]() |
மீன் வெந்ததும் எடுத்து ஆற வைத்து முள் நீக்கி தனியே எடுத்து வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து வைக்கவும். தாளிக்க வேண்டியவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். |
![]() |
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். |
![]() |
அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். |
![]() |
வதக்கியவற்றுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீன், அரைத்த மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். |
![]() |
சுவையான முள்ளுவாளை துவரன் தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும். |
முள்ளுவாளையிலிருந்து முள் எடுப்பது சற்று அதிக வேலை என்றாலும் சுவை அதிகம். வேக வைத்த மீனிலிருந்து சிறிது பிய்த்தெடுத்து பெரிய முட்களை நீக்கி விட்டு சதைப்பகுதியை விரல்களுக்கிடையே வைத்து மெதுவாக நெருடினால் கையில் சிறிய முட்கள் தட்டு படும். அவற்றை நீக்கி விடலாம். நாம் ஒருவர் சிரமம் பார்க்காமல் இதை செய்தால் சுவையான இந்த மீனை நம் வீட்டில் எல்லோரும் சுவைக்கலாம். பொரிக்கவோ குழம்போ செய்தால் முள் அதிகம் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். இதை குழந்தைகளும் பயமில்லாமல் சாப்பிடுவார்கள்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்







ஹாய் கவி,எப்படி இருக்கீங்க?பார்க்கவே ஆஹா நாவில் எச்சில் ஊறுகின்றது.மீன் வாங்கி உடனே செய்ய ஆசையாக இருக்கின்றது.ஆனால் முள்ளு வாலையில் தான் செய்யனும் என்று சொல்றீங்க...அதான் கொஞ்சம் உதைக்குது.
என் கணவர் தான் மீன் மார்க்கெட் செல்வார்.இந்த மீன் எல்லாம் வாங்க தெரியாது.முள் அவ்வளவாக இல்லாத மீன் தான் குழந்தைகளுக்காக வாங்கி வருவார்.எனவே மற்ற மீனிலும் செய்து பார்க்கலாமா?நேரம் கிடைக்கும் போது சொல்லுங்களேன்.
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
குறிப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியதற்கு அட்மினுக்கும் அறுசுவை குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றி அப்சரா. நான் நலமே. நீங்க எப்படியிருக்கீங்க? எந்த சதைப்பற்றுள்ள மீனிலும் செய்யலாம். சுறா மீனில் செய்தால் மட்டும் சூடாகவே சாப்பிட வேண்டும். சல்மன்,தூனா போன்ற மீன்களில் நன்றாக இருக்காது. திருக்கை மீனில்(string ray) சுவையாக இருக்கும். பாறை மீனில் செய்தாலும் நன்றாக இருக்கும். ஆனா எல்லாவற்றிலும் அதிக சுவை முள்ளுவாளைக்குத்தான்.
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!