மதம் - அறுசுவை கதை பகுதி - 14856

Jey maami pages

மதம்

அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த ராகவன் ”எங்க உங்கம்மா” என்று மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த வித்யாவிடம் கேட்டான். “சலீம் அண்ணா வீட்டுக்குப் போயிருக்காங்க” என்று பயந்து கொண்டே சொன்னாள் வித்யா.

“அவனை அண்ணான்னு சொல்லாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். உங்கம்மாவுக்குத்தான் அறிவே கிடையாது. உனக்குமா? சொந்த அண்ணனை பாலுன்னு பேர் சொல்லி கூப்பிடற. எவனோ உனக்கு அண்ணனா?” என்று கோபமாகக் கத்தினான் ராகவன்.

உள்ளே படுத்துக்கொண்டிருந்த பாலு, அப்பா வந்து ஏதாவது கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தான். அவன் பயந்தது போலவே ராகவன், பாலு படுத்துக்கொண்டிருந்த அறைக்குள் வந்து எட்டிப்பார்த்து விட்டுச் சென்றான்.

”ஓடா உழைச்சு, களைச்சு வீட்டுக்கு வர புருஷனுக்கு ஒரு வாய் காபி குடுக்கக்கூட ஆள் இல்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியின் முன் உட்கார்ந்தான் ராகவன்.

”அப்பா காபி இந்தாங்க” என்று பயந்து கொண்டே கொடுத்த வித்யாவிடம் “என்ன உங்கம்மா பிளாஸ்க்ல போட்டு வெச்சுட்டுப் போயிட்டாளா? எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லிக்கொண்டே காபி கோப்பையை வாங்கிக்கொண்டான் ராகவன்.

வாசல் கேட் திறக்கும் ஓசை கேட்டது. “நான் வரேன் ஆன்ட்டி” சலீமின் அக்கா ஜமீலாவின் குரல். ஸ்கூட்டியில் லலிதாவை வீடு வரை கொண்டு விட்டுச் செல்கிறாள் ஜமீலா.

இங்கொன்றும், அங்கொன்றுமாக சிதறிக் கிடந்த ராகவனின் காலணிகளைப் பார்த்த லலிதா, ’ஐயையோ! என்னிக்கும் இல்லாத அதிசயமா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டார் போல இருக்கே. வீடு வேற அமைதியா இருக்கே. என்ன பூகம்பம் வெடிக்கப்போகிறதோ’ என்று பயந்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.

ஏதாவது ஒரு காரணத்துக்காக வீட்டில் இருப்பவர்களை வறுத்து எடுப்பது ராகவனுக்கு வாடிக்கைதான். ஒருநாள் மதிய சாப்பாட்டில் முடி இருந்தது என்று கத்துவான். இதை ஏன் அங்க வெச்ச, அதை ஏன் எடுத்த என்று வீட்டில் எப்போதும் ஒரே ரகளைதான். ஏதோ ஒரு உப்பு சப்பில்லாத காரணத்துக்காக கத்துவது அவன் வழக்கம். உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்பான். அவன் மிரட்டுகிற மிரட்டலில் ஒழுங்காய் செய்யும் வேலைகளைக்கூட தப்பும் தவறுமாய் செய்து விடுவார்கள். சில நேரங்களில் அவன் எதற்குக் கத்துகிறான், ஏன் தன்னைத் திட்டுகிறான் என்பது கூடப்புரியாமல் விழிப்பாள் லலிதா.

மேலும் ராகவனுக்கு மற்ற மதத்தவர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. லலிதாவும் எத்தனையோ முறை நயமாகச் சொல்லிப்பார்த்து விட்டாள். “ஏங்க நாமெல்லாம் சாதாரண மனுஷங்க. நமக்கு எதுக்குங்க மதமெல்லாம். நாம என்ன பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கவா போறோம். மனுஷன, மனஷனாப் பாருங்க. நல்ல நண்பர்களா இருக்கறதிலே என்ன தவறு” என்று. ஆனால் ராகவன் மனம் மாறுவதாக இல்லை.

உள்ளே நுழைந்த லலிதாவைப் பார்த்த ராகவன் “என்ன அறிவில்ல ஒனக்கு. எத்தனை தடவை சொல்லறது? ஏன் ரம்ஜானுக்கு செஞ்சு, மீந்த ஓசி ஸ்வீட் ஏதாவது கிடைக்கும்னு அவங்க வீட்டுக்குப் போனியா? எனக்குப்பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் போன?” வழக்கம்போல் விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள். மேலும் சலீம் வீட்டுக்காரர்களையும் சொல்ல நாகூசும் வார்த்தைகளால் ஏசினான். எப்போதும் வாய் மூடி மௌனியாக இருக்கும் லலிதாவால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை. தன்னை, பெற்ற பெண்ணைப்போல் அன்புடன் நடத்தும் நல்ல மனிதர்களை அவன் ஏசுவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

”ஏங்க உங்க மதவெறிக்கு ஒரு அளவே இல்லையா? நம்ப பையன் வலது கை உடைஞ்சு பள்ளிக்கூடம் போய் இன்னியோட 15 நாளாச்சு. இந்த 15 நாளும் அந்தப் பையன் சலீம் நம்ப வீட்டுக்கு வந்து என்ன பாடம் நடந்ததுன்னு பாலுவுக்கு சொல்லிக் கொடுத்து, நோட்ஸ் எழுதிக் குடுத்து – இத்தனைக்கும் அவங்களுக்கு ரம்ஜான் நோன்பு. நோன்பு இருக்கற அந்தக் குழந்தை இந்த நேரத்தில் கூட தினமும் நம்ப வீட்டுக்கு வந்துட்டுப்போறான். தேர்வுக்குள்ள நம்ப பாலுவுக்கு கை சரியாகணும்னு அவங்க வீட்ல ஒவ்வொரு தொழுகையிலேயும் வேண்டிக்கறாங்களாம். எங்கோ யாரோ தப்பு செய்தா அதுக்கு ஏங்க ஒட்டு மொத்தமா எல்லாரையும் வெறுக்கறீங்க?

போன வருஷம் கஷ்டப்படறான்னு பத்தாயிரம் ரூபா கொடுத்து உதவினீங்களே உங்க நண்பர் முருகன். அவர் பையன் ரமேஷ் கூட நம்ப பாலுவோட வகுப்பிலதான் படிக்கிறான். அவங்க வீட்ல யாரும் ஒருநாள் கூட நம்ப பையனை வந்து எட்டிக்கூட பார்க்கல. நான் அவங்களை தப்பா சொல்லல. உங்க மதத்தைச் சேர்ந்தவங்க யாராவது தப்பு செய்தா என்ன செய்வீங்க? வீட்டை விட்டு தள்ளி வெச்சுடுவீங்களா? இல்ல ஊரை விட்டே தள்ளி வெச்சுடுவீங்களா?”

இத்தனை நாளாக மனதில் தேக்கி வைத்திருந்த கோபம் மடை திறந்த வெள்ளமாக வெளியே வந்து விட்டதோ? இப்படிப் பேசுவது நம்ப அம்மாதானா என்று ஆச்சரியத்துடன் ஆவென்று வாய் பிளந்து கொண்டு பார்த்தனர் பாலுவும், வித்யாவும். உண்மை சுடவே பதில் சொல்ல முடியாமல் வாய் மூடித் தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தான் ராகவன்.
அருமை

வணக்கம் மாமி நலமா?
நம்ம நாட்டு நடபுக்கு பயன்படும் கதை
நல்ல கருத்து........,,,,,,

ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி நலமா?

நல்ல கருத்து......குழந்தைகள் / பெரியவர்கள் இந்த மாதிரி கதைகள் படிக்கும் போது மதம் என்ற எண்ணங்கள் இருந்தாலும் திருந்த உதவும், தவறான எண்ணம் என்று உணர முடியும்.

போன கதையும் அருமையாக இருந்தது.

உங்கள் இலட்சியத்தில் கண்டிப்பா வெற்றி பெறுவீர்கள்!!!!

வாழ்த்துக்கள் மாமி!!!!

with love

nalla kadhai

mami nalama nalla kadhai nalla porul raghavan pola nirayaper irukkanga, avargal idhaipondra kadhaikal padithu maruvaargala.

life is short make it sweet.

Super மாமி...

மாமி... எங்க இருந்து இப்படிலாம் கதை யோசிக்கறீங்க???!! Super. ரொம்ப நல்ல கதை, எதார்த்தமா இருக்கு. இப்போ நாட்டுக்கு தேவையான கருத்தும் கூட. வாழ்த்துக்கள் மாமி... கலக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மதம் மதம்னு

மதம்னு அலையயறவங்களூக்கு இந்த கதை நல்ல கருத்தை தெரிவிக்கிறது.மாமி உங்க பரந்த மனதும் புரிகிறது.நல்ல முற்போக்கான சிந்தனை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சமூகப்பார்வை!

ஜெயந்தி மாமி!
நல்லாயிருக்கீங்களா? கதை ரொம்ப அருமை. இங்க நாங்கள்ளாம் எல்லா மதத்தினரும் ஒருதாய் மக்களாத்தான் பழகறோம். என் குழந்தைகளின் நண்பர்களில் வேற்று மதத்தினரை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
இருந்தாலும் இன்னும் அங்கங்கு மதவேற்றுமை உணர்வு இருந்துகிட்டுதான் இருக்கு.
ரொம்ப அழகான சமூகப்பார்வையோடு கூடிய கதை!
பாராட்டுக்கள்!

பாராட்டுக்கள்

தேர்ந்த எழுத்தாளர்கள் போல இத்தனை சூப்பரா கதை எழுதறது பிரமிப்பா இருக்கு. ரொம்ப நல்ல கருத்துள்ள கதை. சொல்லப்போனால் சிறு வயதிலிருந்து குழந்தைகளுக்கு இதையெல்லாம் சொல்லித் தந்தால் பிரச்சணைகள் இல்லாத எதிர்காலத்திற்கு அடிப்படையாக இருக்கும். ஆனால் பெற்றோர்களின் கருத்தே குழந்தைகளுக்கு கதைகளாகவும் போய் சேருவதால் இதெல்லாம் என்று மாறுமோ என்ற நினைப்புதான் மேலோங்குகிறது. ஒரு காலத்தில் எல்லோருமே ஒரு மதத்தின் கீழே இருந்துவிட்டு, இன்று பிரிவினையால் அடித்துக் கொள்வதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. இப்போது நாட்டுக்கு தேவையான கருத்தை அழகாக கதையாக்கி சொல்லி இருக்கிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

அனைவருக்கும் நன்றி

சோபியா மணி
சுபத்ரா
கீதாஜி
வனிதா
ஆசியா
கீதாலட்சுமி
தேவா
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் ஊக்குவிப்பு என்னை மேலும் எழுத வைக்கிறது. தயவு செய்து எழுத்தில் குற்றம், குறை இருந்தால் சொல்லுங்கள். என்னைத் திருத்திக்கொள்ள உதவும்.
நன்றி
ஜேமாமி

மாமி

மாமி கதையும் எழுதுவீங்களா சூப்பர் மாமி!! கதை அருமையா இருக்கு.

ஜெயந்தி மாமி உங்களின்

ஜெயந்தி மாமி உங்களின் எழுத்துக்கள் நிஜமாவே என்னை அசற வைத்து விட்டது போங்க.
நல்ல நட்புக்கு மதம் ஒரு தடையல்ல என்பதை ரொம்ப நல்லா சொல்லி இருப்பது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.
நானும் என் தோழியும் எங்கள் குழந்தைகளும் இப்படிதான் பழகிகொண்டு இருக்கோம்.ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா பல நேரங்களில் உதவி செய்துக்குவோம்.எங்கள் நட்புக்குள் மதம் ஒரு தடையல்ல (எங்கள் குழந்தைகளுக்கும்...)
நீங்கள் எழுதிய கதை அதனாலோ என்னவோ என்னை மிகவும் கவர்ந்து விட்டது ஜெயந்தி மாமி.

என்றும் அன்புடன்,

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.