மன்ற விதிமுறைகள்

அறுசுவையின் சிறப்பு பகுதிகளில் மன்றம் முக்கிய அங்கம் வகிக்கின்றது. ஆனால், இதற்கு முன்பு மன்ற விதிகளை தெளிவுப்படுத்தாத காரணத்தால், நிறைய விதிமுறை மீறல்கள் இருந்ததோடு, சில நிகழ்வுகள் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியது. புதிய தளம் வெளியாகும்போது மன்ற விதிமுறைகளை கடுமையாக்கி, அதனை பாரபட்சம் இன்றி நடைமுறைப்படுத்துவது என்று முடிவு செய்திருந்தோம். எனவே, மன்றத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் இந்த விதிமுறைகளை படித்து, மனதில் கொண்டு, விதிமுறை மீறல் இல்லாமல் நடந்துகொள்ள அன்புடன் வேண்டுகின்றோம். விதிமுறை மீறி நடக்கும் மன்ற உரையாடல்கள் விளக்கம் எதுவுமின்றி நீக்கப்படும். பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் உறுப்பினர்கள் பெயரும் உடன் நீக்கப்படும். தயவுசெய்து எங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

Forum என்பதற்கும் Chatting என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சாட்டிங் என்பது ஒருவருடன் ஒருவர் அல்லது ஒரு குழுவுடன் பேசுவது. இதனை மற்றவர்கள் கவனிப்பது இல்லை. இவை பொதுவில் இருப்பது கிடையாது. சம்பந்தபட்டவர்கள் மட்டுமே பார்வையிட முடியும். ஒரு அறைக்குள் அல்லது வீட்டிற்குள் பேசிக் கொள்வது போன்றது. அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். மன்றம் அப்படியல்ல. இது ஒரு பொது மேடை போன்றது. இங்கே நீங்கள் பேசுவது அனைத்தும், பார்வையாளர்கள் அத்தனை பேரையும் சென்றடையும். உங்கள் உரையாடலை உலகமே கவனிக்கும். தயவுசெய்து இந்த ஒரு விசயத்தை மனதில் கொண்டு மன்றத்தில் உரையாடவும். நீங்கள் கொடுக்கும் பதிவுகள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக, சுவாரஸியமானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

நான் நலம், நீங்கள் நலமா என்று வரிசையாக 50 பெயர்களை கொடுத்து நலம் விசாரித்தல் மன்றத்தில் தேவையில்லாத ஒன்று. இது போன்ற பார்மாலிட்டிஸ் தயவுசெய்து மன்றத்தில் வேண்டாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் நாங்கள் செலவு செய்கின்றோம் என்பதை தயவுசெய்து மனதில் கொள்ளுங்கள். அப்படி பொருள், நேரம் செலவு செய்து வெளியாகும் பதிவுகள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்பட்சத்தில், நாம் செலவழிப்பதில் ஒரு அர்த்தம் உள்ளது. எனவே, தேவையில்லாத பதிவுகளை தயவுசெய்து குறைத்துக்கொள்ளவும்.

மன்றத்தில் அரட்டை பகுதி குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளது. சிலர் அந்த பகுதியையே எடுத்துவிடுமாறு அறிவுறுத்துவார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மன்றத்தில் பயனுள்ள விசயங்களை பற்றி உரையாட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதேசமயம், சில பொழுதுபோக்கு விசயங்களும் இருக்க வேண்டும் என்பதும் அவசியமே. இதனால்தான் அரட்டைக்கென தனிப்பகுதி கொண்டு வரப்பட்டது. இப்போதைய பிரச்சனை, இந்த அரட்டை என்பது, அரட்டைக்கென உள்ள பகுதியையும் தாண்டி, எல்லா பதிவுகளிலும் தொடர்கின்றது என்பதுதான். ஒரு சீரியஸ்ஸான த்ரெட்டில்கூட இரண்டு மூன்று பதிவுகளுக்கு பிறகு அரட்டை ஆரம்பமாகிவிடுகின்றது. ஒருவர் உயிர் போகின்ற பிரச்சனையை கொடுத்து இருப்பார். அதன்கீழே ஒருவர் பதில் கொடுத்துவிட்டு, அப்புறம் நீங்க நலமா, உங்க வீட்டு பூனை, நாய் எல்லாம் நலமா என்று டாபிக்கை திசை மாற்றி விடுகின்றார். இதுபோன்ற பதிவுகளை இனி அனுமதிக்க இயலாது. தயவுசெய்து மற்ற த்ரெட்களில் அரட்டையை புகுத்தாதீர்கள். அப்படி கொடுக்கப்படும் பதிவுகளும், கொடுப்பவர் பெயரும் கண்டிப்பாக நீக்கப்படும்.

அரட்டை பகுதி மட்டும் பல நூறு பதிவுகள், த்ரெட்கள் என்று அதிகரித்துக்கொண்டே செல்வது, மக்களின் விருப்பம் எதுவாக இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. அரட்டை த்ரெட்டில் இருப்பவை மற்றவர்கள் படிக்கும்போது சுவாரஸ்யத்தை கொடுப்பதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நிறைய பதிவுகள் வெறும் நலம் விசாரிப்புகளாக இருக்கின்றன. சில பதிவுகள் படிக்கும்போது எரிச்சலை உண்டாக்குகின்றன. தேவையில்லாத பதிவுகளை அப்படியே விட்டுவைத்தல், சர்வர் ஸ்பேஸ் மற்றும் லோடிங் டைம்மை அதிகரிக்கின்றது. எனவே, அரட்டைப் பகுதியில் இருக்கும் பழைய த்ரெட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீக்கப்பட்டுவிடும். அதனை தொடர்ந்து க்ளீன் செய்து வருவது பல விசயங்களில் நன்மை தரும். அரட்டை பகுதி மட்டுமல்லாது, மற்ற பகுதிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தேவையற்ற பதிவுகள், நீண்ட காலமாக பதிலே இல்லாத பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும்.

புதிதாக த்ரெட் தொடங்கும்போது மன்றத்தில் உள்ள பிரிவுகளில் அதற்கு பொருத்தமான பிரிவினை தேர்வு செய்து அதன்கீழ் தொடங்கவும். இப்போது நிறைய புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படி எந்தப் பிரிவில் சேர்ப்பது என்ற குழப்பம் இருந்தால், பொதுப்பிரிவுகளின் கீழ் அதனை சேர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் பகுதியில் 'உல்லன் நூலில் ஸ்வெட்டர் பின்னுவது எப்படி' என்பது போன்ற கேள்விகள் பொருத்தமற்றது. எனவே, த்ரெட் தொடங்கும்போது அதற்கு பொருத்தமான பிரிவின் கீழ் த்ரெட் தொடங்கவும்.

புதிய த்ரெட் தொடங்கும்போது, த்ரெட் தலைப்பு மிகவும் நீளமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும். ஒரு குறிப்பிட்ட நீளத்தை தாண்டினால், அதன்பிறகு வரும் எழுத்துக்கள் நீக்கப்பட்டுவிடும். எனவே த்ரெட் தலைப்பை சுருக்கமாக கொடுங்கள். மிகவும் முக்கியமான விசயம், பதிவுகளுக்கு பதில் கொடுக்கும்போது, அதில் உள்ள தலைப்பில் மூன்று அல்லது நான்கு வார்த்தைகளுக்கு மேல் கொடுக்காதீர்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விடுங்கள். சிலர் இடைவெளியே இல்லாது பெரிய வரியாக தலைப்பு கொடுக்கின்றார்கள். இது டெம்ப்லேட்டை பாதிக்கும் விசயம். அறுசுவையின் தோற்றம் மாறிவிடும். அப்படி கொடுக்கப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். தயவுசெய்து பதில்களுக்கு கொடுக்கும் தலைப்பை இரண்டு மூன்று வார்த்தைகளில் கொடுக்கவும். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி(ஸ்பேஸ்) விடவும்.

மீண்டும் இதனை தெரிவிக்கின்றேன். நீங்கள் மன்றத்தில் உரையாடுவதை எல்லோருமே பார்க்கின்றார்கள். எனவே நீங்கள் மிகவும் பர்சனல் என்று நினைக்கும் விசயங்களை தயவுசெய்து மன்றத்தில் தெரிவிக்க வேண்டாம். மெயில் ஐடி, ஊர் விபரங்கள் எல்லாம் தெரிவித்துவிட்டு, பிறகு திடீரென, தெரியாமல் செய்துவிட்டேன், அதனை நீக்கவும் என்று வரும் மெயில்களுக்கு இனி எங்களிடம் இருந்து பதில் வராது. எனவே, நீங்கள் எந்த பதிவையும் கொடுப்பதற்கு முன்பு, ஒன்றுக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். ஒருமுறை கொடுத்தவற்றை மீண்டும் மாற்றவோ, நீக்கவோ இயலாது.

புதிய த்ரெட் தொடங்குவதற்கு முன்பு, அந்த த்ரெட் சம்பந்தமாக ஏற்கனவே மன்றத்தில் எதேனும் த்ரெட் உள்ளதா என்று பார்த்துவிட்டு, இல்லாதபட்சத்தில் புதிதாக தொடங்கவும். மன்றத்தில் ஏற்கனவே வெளியான த்ரெட்கள் மீண்டும் மீண்டும் தொடங்கப்படும்போது, பதில் கொடுப்பவர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. அதற்கு பதிலும் கிடைக்காது. எனவே உங்கள் பிரச்சனை குறித்த த்ரெட் ஏற்கனவே மன்றத்தில் உள்ளதா என்பது தேடிப்பார்த்துவிட்டு, பிறகு தொடங்கவும். அதுசம்பந்தமான த்ரெட் இருக்கும்பட்சத்தில் உங்களது கேள்வியை அங்கேயே பதிவு செய்யவும். புதிய த்ரெட் தேவையில்லை.

ஆன்மீகம் அறுசுவைக்கு பிரச்சனையான ஒரு பகுதியாக இருந்ததால், அதனை முற்றிலும் நீக்கிவிட்டோம். இனி ஆன்மீகம், அரசியல் குறித்த பதிவுகளுக்கு அனுமதி இல்லை. மன்றத்தில் உரையாடும் உறுப்பினர்கள் தங்களை குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களாக காட்டிக்கொண்டு உரையாடாமல், ஒரு சாதாரண உறுப்பினராக உரையாடவும். மதம் சார்ந்த பதிவுகள், அதனை வெளிக்காட்டும் அடையாளங்கள் நீக்கப்படும். நடுநிலையான மனிதர்களுக்கு மத அடையாளங்கள் தேவையில்லை. அதுவும் இதுபோன்ற பொது மன்றத்தில் அதற்கு அவசியமே இருப்பதில்லை. எனவே ஒரு சாதாரண உறுப்பினராக இங்கே உரையாடவும்.

எல்லோரும் த்ரெட் தொடங்கலாம் என்ற வசதி, நேயர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் சுதந்திரம். தயவுசெய்து அதனை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். எல்லாவற்றிற்கும் ஒரு புதிய த்ரெட் தொடங்குவது, நல்ல பயனுள்ள த்ரெட்களை பட்டியலில் பின்னுக்கு தள்ளுகின்றது. இதனால் நிறைய நல்ல த்ரெட்கள் பார்வையாளர்கள் கண்களில் படுவதில்லை. சூடான தலைப்புகளில் பத்து தலைப்புகளும் அரட்டை த்ரெட்டாகவே எப்போதும் இருப்பது ஆரோக்கியமானது அல்ல. இந்த நிலை தொடருமாயின், புதிய த்ரெட் தொடங்கும் உரிமையை ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படும். மன்றத்தின் முக்கிய நோக்கம், பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்வதும், பிரச்சனைகளுக்கு, சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பதும்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள். அரட்டை என்பது இரண்டாம் பட்சம் அல்ல. நூறாம்பட்சமாக இருக்க வேண்டும். எனவே, இந்த விசயத்தில் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து, மன்றத்தின் நோக்கம் நிறைவேறிட உதவிடுங்கள்.

மன்றத்தை மேலும் சிறப்பாய் எடுத்துச் செல்ல, எல்லோருக்கும் பயனுள்ளதாய் இதனை மாற்றிட, சில விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வருகின்றோம். இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகின்றோம். தயவுசெய்து விதி மீறல்கள் இல்லாமல், மன்ற உரையாடல்களை கொண்டுச் செல்லவும்.

பாபு அண்ணாவுக்கு எனது பனிவான வணக்கங்கள்.நான் தொடங்கி வைத்த த்ரெட்களில் ஏதும் தேவையற்றதாக இருந்தால் அதை நீக்கிவிடுங்கள்...உங்களது விதிமுறைகள் இந்த அறுசுவை தளத்திற்க்கு தேவையான ஒன்றுதான்....ஒருவர் அதிகபட்சமாக எத்தனை த்ரெட் உண்டாக்கலாம்?எனது த்ரெட்களில் பெரும்பாலும் பொது பிரிவில்"புதிர் மற்றும் விளையாட்டுக்கள்' என்ற பிரிவில்தான் 6 அல்லது 7 த்ரெட் இருக்கிற்து.(நீங்கள் என்னை மட்டும் குறிப்பிட்டு பேசவில்லை என்பதை நான் அறிவேன்).எனது த்ரெட்கலில் தேவையற்றதாக இருக்கிறதா?எனக்கு தெரிய படுத்துங்கள்.என்னுடைய ஒத்துழைப்பு எப்பொதும் அறுசுவைக்கு உண்டு சார்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

of course u r opening so much thread and its irritating.. its difficult for people who want to search something urgent... so much unwanted topics by u.. sorry to say this..

ok sir.i am sorry.so what to do?can i continue my threads or not?answer me and u can remove my memebrship if u want also.sorry to disturb u.thank u for ur reply

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

முன்னொரு காலத்தில் (!!!??) அரட்டை மன்றம் எல்லாருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. எப்படா விடியும் மன்றத்தில் என்னல்லாம் நடந்திருக்கும் என்று ஓடி ஓடி வந்து பார்த்திருக்கிறேன்.... என்னோட போனில் அருசுவை பேஜ் வரலையே என்று விழித்திருக்கிறேன்.... சில பதிவுகளை என்னோட பேவரிட்டில் போட்டு அடிக்கடி வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்...அந்த சுவாரசியமான நாட்கள் எங்கே ??
ஒரு தலைப்பை பார்த்ததும்... அட...இது நமக்கு தெரியுமேன்னு ஓடி வந்து பதில் சொல்ல இப்ப தோணலை.. காரணம்... இதெல்லாம் கூகிள் பண்ணியே தெரிஞ்சுகலாமே...கூகிளில் கிடைக்காத பதில்கள் உங்களுக்காக தர யாரும் தயங்குவதில்லை...

இல்லைன்னா நாம பதில் சொன்னாலும்.. இது எனக்கு தெரியும் வேற உனக்கு என்ன தெரியும்ன்னு பதில் கேள்வி கேட்டா .. உங்களுக்கு பதிலளிப்பவரின் ஆர்வத்தை குறைக்கிறீர்கள்.... எல்லாரும் எல்லா விஷயத்திலும் எக்ஸ்பர்ட் இல்லை... ஏன்... ஒரே விஷயம் கூட எனக்கு ஏ டு இசட் தெரியும் என்று சொல்ல முடியாது...

இங்க இருக்கும் உறுப்பினர்களில் உரையாடுபவர்கள் பலரும் பெண்கள்..சில எக்சப்ஷன் இருக்கு :)///
ஒரு வெப்சைட்டுக்கு போனா அங்க இருப்பவர்களின் யூச‌ர் எக்ஸ்பீரியன்ஸ் நல்லா இருக்கணும்... இங்கயும் இருக்குது... ஆனா இந்த 'மொக்கை' டாப்பிக் எல்லாம் விட்டுட்டு ஒரு சுவாராசியமாக ஆக்குவது உரையாடுபவர்களின் கடமையும் கூட...
இன்னுமொரு விஷயம்! மத்தவங்களோட பிரைவசியை கட்டாயமாக மதிக்கணும். நானும் இந்த எழுதப்படாத விதிகளை இங்க இருந்து தான் கத்துக்கொண்டிருக்கிறேன். முக்கியமா பொதுமன்ற பிஹேவியர்....

என்னடா ரொம்ப நாள் கழிச்சு வந்திட்டு இப்படி ரூல் பேசறாங்களேன்னு நினைக்காதீங்க... உங்க எல்லாரையும் போல எனக்கும் அக்கறை இருக்கு....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சகோதரர் ஷேக் அவர்களுக்கு,

நிச்சயம் உங்களை மனதில் வைத்து அந்த விதிமுறையை கூறவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த விதிமுறைகளை புதிய தளம் ஆரம்பிக்கும் போதே டைப் செய்துவிட்டேன். அப்போதே வெளியிடவில்லை. மன்ற உரையாடல்கள் குறித்து சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனால் அந்த விதிமுறைகளை சில சேர்க்கைகளுடன் இப்போது வெளியிட்டுள்ளேன். கண்டிப்பாக தனிப்பட்ட முறையில் யாரையும் மனதில் வைத்து விதிமுறைகளை உருவாக்கவில்லை.

சீனியர் உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே இது குறித்து என்னிடம் பேசி இருக்கின்றார்கள். தற்போதைய மன்ற உரையாடல்கள் அவ்வளவு பயனுள்ளதாக இல்லாமல், நிறைய பொழுதுபோக்கு பதிவுகளாக இருப்பதால், அவர்கள் அதிகம் கலந்து கொள்வதில்லை என்பதை என் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அவர்களது கருத்தில் உள்ள நியாயத்தை நான் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் இத்தனை த்ரெட்தான் ஓபன் செய்ய வேண்டும் என்று விதிமுறை வைக்க இஷ்டம் இல்லை. நல்ல பயனுள்ள த்ரெட் என்றால் ஆயிரம்கூட ஓபன் செய்யலாம். எது பயனுள்ள த்ரெட், எது பயனற்றது என்பதற்கு முன்கூட்டியே விளக்கம் கொடுப்பதும் கடினம். பொழுதுபோக்கு த்ரெட்களை ஒரே நேரத்தில் நிறைய திறக்காமல், ஒன்று அல்லது இரண்டு என்று வைத்து, அதனை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு அடுத்த த்ரெட் சென்றால் நன்றாக இருக்கும். சில நாட்களாக சூடான தலைப்புகளில் (active forum topics) வரும் பத்து தலைப்புகளும் பொழுதுபோக்கு தலைப்புகளாக இருப்பது வருத்தத்திற்குரியது.

பாட்டுக்கு பாட்டு போன்ற த்ரெட்களை முடிவிற்கு கொண்டு வரலாம். அதில் கலந்துகொள்ளும் 5, 6 பேருக்கு ஆர்வம் அதிகம் இருப்பது தெரிகின்றது. ஆனால், அதை படிக்கும் பலரின் (என்னையும் சேர்த்து) பொறுமை சோதனைக்குள்ளாகிறது. :-) பாட்டுக்கு பாட்டு என்பது நேரில் பாடினால்தான் சிறப்பு. உங்களுக்கு பாடல் வரிகள் தெரிகின்றதா என்பதை சோதிக்க முடியும். நேரம் எடுத்து, பாடல்களை அங்கே இங்கே தேடிக் கண்டுபிடித்து, இங்கே பெரிய பதிவுகளாக கொடுப்பதில் என்ன சுவை இருக்கின்றது என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும், சிலருக்கு அதில் ஆர்வம் இருப்பதால் நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏற்கனவே ஒவ்வொரு த்ரெட்டிலும் நூறுக்கு மேல் பதிவுகள் கொடுத்து 4 பாகம் நிறைவு செய்துவிட்டார்கள். எப்படியும் ஒரு 400 பாடல்களாவது கொடுத்து இருப்பார்கள். தமிழ் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வரும் வரை விட மாட்டார்கள் போல் இருக்கிறது. :-) எனவே அதை முடிவிற்கு கொண்டு வரவேண்டிய நிர்பந்தத்தில் நான் இருக்கின்றேன்.

மன்றம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு என்பது போல், அதன் உண்மையான பயன்பாட்டை மறைத்து, ஒரு தோற்றம் உருவாக்கப்படுவதால், அதை மாற்றியமைத்து, அதற்குரிய நிஜ உருவத்தைக் கொடுக்கவே இந்த நடவடிக்கை. இதனால் யாருக்கும் மனவருத்தம் வேண்டாம். மன்ற உரையாடல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக, சுவையானதாக செல்ல வழிவகைகள் செய்யப்படும்.

(பி.கு: மேலே பதில் கொடுத்துள்ள ninjupappu நான் அல்ல. நான் என்று நினைத்து நீங்கள் அதற்கு பதில் கொடுத்திருப்பதாக எண்ணுகின்றேன். )

இலா மேடம் நான் ஏதும் தவறு செய்து விட்டேனா?எனக்கு தெரியபடுத்தவும்.(இதை கேட்பதற்க்கு கூட பயமாய் இருக்கு-இங்கேயும் அரட்டை ஆரம்பம் ஆகிவிட்டதோ என்று)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக், நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. இங்கு யாருமே தவறு செய்யவில்லை. விதிமுறைகள் முன்பே கொடுக்கப்பட்டு அதை மீறி இருந்தால்தான் தவறு. இப்போதுதானே இந்த விதிமுறைகளை கொண்டு வந்திருக்கின்றோம். இதுவரை நடந்தவை எதுவும் வேண்டுமென்றோ, திட்டமிட்டோ செய்யப்பட்டவை அல்ல. அவை குற்றங்களும் அல்ல. அதனால், தாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் எண்ண வேண்டாம்.

தொடர்ந்து பொழுதுபோக்கு தலைப்பிலேயே பதிவுகள் வந்ததால், மன்றம் தன்னுடைய இலக்கில் இருந்து சற்று திசை மாறியது. இப்போது அதை சரியான திசையில் திருப்பி எடுத்துச் செல்ல, இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வளவே.

நன்றி சார்.என்னுடைய த்ரெட்களில் எதை நீங்கள் நீக்கம் செய்யபோகிறீர்கள்?பதில் அளித்தமைக்கு நன்றி.மேலும் மன்றத்தின் விதிமுறைகளை எல்லொருமே ஏற்று நடப்பார்கள்.மேலும் எனது கேள்விக்கு பதில் உடன் அளித்தற்க்கும் நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்புடன் பாபு அவர்களுக்கு!
இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்.. முழுமையாக விதிகள் பார்த்தேன்.. நன்றிகள்..
சரியான முடிவு.
எல்லாரும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய கருத்தாகும்.
சிலர் தமிழல்லாத மொழி எழுத்ததுக்களில் சில கருத்தை எழுதுவதும் கூட கவனத்தில் கொள்ள வேண்டியதென்பது என் தாழ்மையான கருத்தாகும்.

நட்புடன் யோகராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்