பேரன் வருவான் - வாணி - அறுசுவை கதை பகுதி - 14959 - பக்கம் 2

Stories

பேரன் வருவான் - வாணி

"பாட்டி இன்னைக்கு இராத்திரிக்கு மேலே தாங்காது போல இருக்கு" மருத்துவர் என் மகனிடம் மெதுவாகச் சொன்னது, என் காதிலும் தெளிவாக விழுந்தது. என் கட்டிலை சுற்றி என் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கூடி இருந்தார்கள். கூட்டத்தில் மெல்லிய விசும்பல் ஒலி கேட்டது.

பாவம். இவர்களுக்கெங்கே விளங்கப் போகுது, என் பேரன் கண்ணன் வரும் வரை என் உயிர் எங்கேயும் போகாது என்பது. பேரனை நினைத்த உடனே கோசலை பாட்டியின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற புத்துணர்ச்சி. கண்ணன் இப்போது விமானத்தில் வந்து கொண்டிருப்பான். கோசலைப் பாட்டிக்கு கண்ணனுடன் சென்ற முதல் விமானப் பயணம் கண்முன் ஓடியது. மனது மட்டும் கண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தது.

"உனக்கு நினைவிருக்கிறதா கண்ணா.. 4 வருடங்களுக்கு முன்பு உன் தாத்தா இறந்த போது, உடைந்து போயிருந்த என்னை அருகில் இருந்து கவனித்துக்கொண்டது நீதான். இதற்காகவே அமெரிக்காவில் இருந்து வந்தாய். நான் தளர்ந்து போய் அழுத போதெல்லாம் என்னை அணைத்துக் கொண்டாய். இந்த வீட்டிலேயே இருந்தால் கணவரின் நினைவுகள் வாட்டி வதைக்கும் என்று என்னை அமெரிக்கா வரும்படி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாய்.

விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் என்னை அமரவைத்து, உற்சாகமாக பேசிக் கொண்டே இருந்தாய். ஜன்னலுக்கு வெளியே ஒடிய மேகக் கூட்டத்தை கண்டு நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் சோர்ந்து படுத்தபோது எனக்கு குளிராமல் போர்வை போர்த்தி விட்டதை நான் ரசித்தேன்.

உன்னைப் போலவே உன் மனைவியும் என் மேல் கொள்ளை பிரியமாக இருந்தாள். உன் அலுவலகத்தில் நடைபெற்ற நத்தார் தின கொண்டாட்டம் - நான் எவ்வளவோ மறுத்தும் என்னையும் கூட்டிச் சென்றாயே. நீ நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரையாட, நான் பெருமையுடன் உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றேன். என்னை உன் வெள்ளக்கார நண்பர்களுக்கு பெருமையாக அறிமுகம் செய்தது, ஒரு பெற்ற தாயின் பரிவுடன் எனக்கு சாப்பாடுகள் எடுத்து தந்தது, இப்படி பல நினைவுகள் என் நெஞ்சில் இன்னும் பசுமையாக இருக்கு.

குளிர் ஒத்து வராமல் நான் ஊர் போகிறேன் என்று சொன்னபோது உன் முகத்தில் தோன்றிய கவலை ரேகைகள் பார்த்து நான் நொறுங்கிப் போனேன். வழியனுப்ப விமான நிலையம் வந்த நீ என்னுடன் சிரித்துப் பேசினாலும், உன் உள்ளம் அழுதது எனக்கு மட்டுமே தெரியும்."

நான் படுத்திருந்த அறையில் மயான அமைதி நிலவியது. எங்கோ காலடிச் சத்தங்கள் கேட்டது. "பாட்டியின் பேரன் வந்துவிட்டான் போலிருக்கு.." யாரோ சொன்னார்கள்.

ஆனால் அது நீயில்லை என்று எனக்குத் தெரியும். உன் காலடிச் சத்தம் எனக்குத் தெரியாதா. நீ குழுந்தையாக இருக்கும் போது ஓடி விளையாடிய வீடு இது. உன் ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும். எனக்கு ஒன்றுமே ஆகாது. நீ மெதுவாக வா என்று கண்ணனிடம் சொல்ல உதடுகள் துடித்தன.

"ஒவ்வொரு மாசமும் எனக்கு நீ கடிதம் எழுதுவாயே. அந்த ஒரு நாளுக்காக மற்ற 29 நாட்களும் நான் உயிர் வாழ்ந்தேன். தபால்காரர் வரும் வரை வாசலிலே காத்திருப்பேன். தண்ணீர், சாப்பாடு எதுவுமே இறங்காது. அன்று உன் கடிதம் வராவிட்டால் எதையோ இழந்து விட்டதைப் போல ஒரு உணர்வு. நீ எழுதிய கடிதங்கள் எல்லாமே இதோ என் தலையணைக்கு அடியில் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நீ ஊருக்குள் வந்து விட்டாய் என்று என் உள்ளுணர்வு சொல்கின்றது. நீ வந்ததும் இந்தக் கடிதங்களை எல்லாம் உனக்கு காட்ட வேண்டும். இப்போது என் அறையில் ஒரு நறுமணம். அது நீயே தான் என்று எனக்குத் தெரியும். கண்களை திறக்க முயற்சி செய்து தோற்றுப் போகிறேன். உன் கை என் தலையினைத் தடவுகின்றது.

"ஏன் மவுனமாக இருக்கின்றாய் ? ஏதாவது பேசு. விமானத்தில் வந்த அனுபவங்களை எப்போதும் போல எனக்குச் சொல். நான் இங்கே தான் இருக்கிறேன்..." என் மனது கதறியது.

"நீ அழுகிறாயா..?" விசும்பல் ஒலி கேட்கிறது. என் கைகளை உயர்த்துகிறேன் உன் கண்ணீரைத் துடைக்க. ஆனால் என் கைகள் அசையவில்லை. என் உடம்பு குளிர்ந்து போய் இருந்தது. மருத்துவர் என் நாடித் துடிப்பை பார்த்து விட்டு, எதுவுமே பேசாமல் வாசலுக்குப் போகின்றார். நான் உன் பக்கத்திலேதான் இருக்கின்றேன். உன்னை அழ வேண்டாம் என்று சொல்கிறேன். ஆனால் நீ உடைந்து போய் அழுகிறாய்.

"நான் தனியாக இல்லை. இதோ உன் தாத்தாவும் என் பக்கத்திலே நிற்கிறார். எனக்கும் உனக்கும் இடையில் தோன்றிய இந்த பந்தம் ஏழு ஜென்மங்கள் வரை தொடரும். உனக்கு மகளாக வந்து பிறப்பேன். அப்போதுதான் நீ சின்ன வயதில் செய்த சேட்டைகளை நான் மீண்டும் உனக்குச் செய்யலாம். கவலைப்படாதே கண்ணா.. உன் மடியில் தவழ வருவேன்.."




நெகிழ்ச்சியான கதை வாணி,

வாணி,
சூப்பர்ப்பா.... ரொம்ப நல்லா கோர்த்து எழுதியிருக்கீங்க...நெகிழ்ச்சியான கதை..படிக்கும் அனைவருக்கும் தங்கள் பாட்டி,தாத்தா நினைவு கட்டாயம் வரும்......வாழ்த்துக்கள் வாணி

Kalai

எழுத்தாளர் வானதியின் உருக்கமான கதை

உண்மையே தான் என்று நம்பும் அளவு எழுத்தின் ஆழம் உள்ளது.நெகிழ்ச்சி ஏற்படுத்த இப்படி பட்ட எழுதுக்களால் தான் முடியும்.அறுசுவையில் என் கதை வந்துள்ளது என்று சின்னக்குழந்தை போன்ற உன் குதூகலம் என்னையும் தொற்றிக்கொண்டது .அந்த பாட்டி நீ தானோ,மகளாய் பிறந்து உண்மையை எழுதுவது போல் உள்ளது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள வாணி-பாசம், பந்தம்

அன்புள்ள வாணி,

பாசம், பந்தம் எல்லாம் காலம் மாற்றத்தில்,
எங்கே காணாமல் போய் விடுமோ ...
- என்ற அச்சம் எல்லோருக்கும் உண்டு..

மனதில் ஈரம் இருக்கும் வரை தான்
நம்மைச் சுற்றி இருக்கும் உலகமே இனிக்கும்..

மண்ணில் ஈரம் இருக்கும் வரை தானே
புல், பூண்டு, உயிர்.. எல்லாமே அது போல்...

அருமையான கதை..

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்,...

சாதரணமாய் வார்த்தைகளால் சொல்ல இயலாததை சொல்வது, எழுத்தாளரின் திறமை...
அருமையான எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யும் அறுசுவைக்கும் நன்றிகள் பல..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வாழ்த்துக்கள்

எழுத்தாளர் வாணி இவ்வளவு நாள் எங்கே ஒளிந்து கொண்டு இருந்தீங்க. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. கதை மனதை மிகவும் தொட்டது..

kavitha

அன்புள்ள வாணி,
கதை ரொம்ப அருமையாக இருந்தது
எனக்கு இந்தியாவில் இருக்கும் எனது பாட்டி நினைவு வந்து விட்டது
அவங்களும் என்னை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க
நிறைய விஷயம் படிச்சு எங்க எல்லாருக்கும் சொல்வாங்க
நிஜமா நெஞ்சை தொடுவது போல இருந்தது
வாழ்த்துக்கள்
நிறைய எழுதுங்க
அன்புடன்,
கவிதா

என்றும் அன்புடன்,
கவிதா

வானதி

உங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள் வானதி!
அன்புடன், மகி.

அன்புடன்,
மகி

அனாமிகா, ப்ரியா, சந்தனா.

அன்பின் அனாமிகா, நலமா? உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

ப்ரியா, மிக்க நன்றி. முதல் தடவை உங்களுடன் பேசுகிறேன். ஊக்கத்திற்கு நன்றிகள்.

சந்தனா, வாங்க. நலமா? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜெய்லானி, தங்கமணி, கலா

ஜெய்லானி, வாங்க. நீங்கள் எல்லோரும் கொடுத்த ஊக்கத்தினாலேயே கதைகள் எழுதுகிறேன். மிக்க நன்றி.

அப்பாவி தங்கமணி, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

கலா, உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியாக இருக்கு. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. மிக்க நன்றி. நீங்கள் நலமா? வயிற்றில் இருக்கும் குட்டிப் பாப்பா நலமா?

நன்றி

.
ஆசியா அக்கா, நீங்கள் எல்லோரும் கொடுத்த ஊக்கமே என்னை எழுத தூண்டியது. தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி.

//அந்த பாட்டி நீ தானோ,மகளாய் பிறந்து உண்மையை எழுதுவது போல் உள்ளது.//
ஒரு வகையில் உண்மை தான் அக்கா.

ஆயிஸ்ரீ, நீங்கள் சொல்வது உண்மைதான். வெளிநாடு வந்த பின்னர் தான் பழைய வாழ்க்கையை நிறையவே மிஸ் பண்ணுவது போல இருக்கு. இயந்திரமாக மாறி விட்ட வாழ்க்கையில் யாருக்கும் நின்று நிதானமாக பேசக் கூட நேரமில்லை.
உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி.

வின்னி, மிக்க நன்றி.

கவிதா, மகி

கவிதா, நலமா? எனக்கும் அடிக்கடி பாட்டியின் நினைவு வரும். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

மகி, நலமா? மிக்க நன்றி.