பேரன் வருவான் - வாணி - அறுசுவை கதை பகுதி - 14959 - பக்கம் 3

Stories

பேரன் வருவான் - வாணி

"பாட்டி இன்னைக்கு இராத்திரிக்கு மேலே தாங்காது போல இருக்கு" மருத்துவர் என் மகனிடம் மெதுவாகச் சொன்னது, என் காதிலும் தெளிவாக விழுந்தது. என் கட்டிலை சுற்றி என் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கூடி இருந்தார்கள். கூட்டத்தில் மெல்லிய விசும்பல் ஒலி கேட்டது.

பாவம். இவர்களுக்கெங்கே விளங்கப் போகுது, என் பேரன் கண்ணன் வரும் வரை என் உயிர் எங்கேயும் போகாது என்பது. பேரனை நினைத்த உடனே கோசலை பாட்டியின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போன்ற புத்துணர்ச்சி. கண்ணன் இப்போது விமானத்தில் வந்து கொண்டிருப்பான். கோசலைப் பாட்டிக்கு கண்ணனுடன் சென்ற முதல் விமானப் பயணம் கண்முன் ஓடியது. மனது மட்டும் கண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தது.

"உனக்கு நினைவிருக்கிறதா கண்ணா.. 4 வருடங்களுக்கு முன்பு உன் தாத்தா இறந்த போது, உடைந்து போயிருந்த என்னை அருகில் இருந்து கவனித்துக்கொண்டது நீதான். இதற்காகவே அமெரிக்காவில் இருந்து வந்தாய். நான் தளர்ந்து போய் அழுத போதெல்லாம் என்னை அணைத்துக் கொண்டாய். இந்த வீட்டிலேயே இருந்தால் கணவரின் நினைவுகள் வாட்டி வதைக்கும் என்று என்னை அமெரிக்கா வரும்படி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாய்.

விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் என்னை அமரவைத்து, உற்சாகமாக பேசிக் கொண்டே இருந்தாய். ஜன்னலுக்கு வெளியே ஒடிய மேகக் கூட்டத்தை கண்டு நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் சோர்ந்து படுத்தபோது எனக்கு குளிராமல் போர்வை போர்த்தி விட்டதை நான் ரசித்தேன்.

உன்னைப் போலவே உன் மனைவியும் என் மேல் கொள்ளை பிரியமாக இருந்தாள். உன் அலுவலகத்தில் நடைபெற்ற நத்தார் தின கொண்டாட்டம் - நான் எவ்வளவோ மறுத்தும் என்னையும் கூட்டிச் சென்றாயே. நீ நுனி நாக்கு ஆங்கிலத்தில் உரையாட, நான் பெருமையுடன் உன்னைப் பார்த்துக் கொண்டு நின்றேன். என்னை உன் வெள்ளக்கார நண்பர்களுக்கு பெருமையாக அறிமுகம் செய்தது, ஒரு பெற்ற தாயின் பரிவுடன் எனக்கு சாப்பாடுகள் எடுத்து தந்தது, இப்படி பல நினைவுகள் என் நெஞ்சில் இன்னும் பசுமையாக இருக்கு.

குளிர் ஒத்து வராமல் நான் ஊர் போகிறேன் என்று சொன்னபோது உன் முகத்தில் தோன்றிய கவலை ரேகைகள் பார்த்து நான் நொறுங்கிப் போனேன். வழியனுப்ப விமான நிலையம் வந்த நீ என்னுடன் சிரித்துப் பேசினாலும், உன் உள்ளம் அழுதது எனக்கு மட்டுமே தெரியும்."

நான் படுத்திருந்த அறையில் மயான அமைதி நிலவியது. எங்கோ காலடிச் சத்தங்கள் கேட்டது. "பாட்டியின் பேரன் வந்துவிட்டான் போலிருக்கு.." யாரோ சொன்னார்கள்.

ஆனால் அது நீயில்லை என்று எனக்குத் தெரியும். உன் காலடிச் சத்தம் எனக்குத் தெரியாதா. நீ குழுந்தையாக இருக்கும் போது ஓடி விளையாடிய வீடு இது. உன் ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும். எனக்கு ஒன்றுமே ஆகாது. நீ மெதுவாக வா என்று கண்ணனிடம் சொல்ல உதடுகள் துடித்தன.

"ஒவ்வொரு மாசமும் எனக்கு நீ கடிதம் எழுதுவாயே. அந்த ஒரு நாளுக்காக மற்ற 29 நாட்களும் நான் உயிர் வாழ்ந்தேன். தபால்காரர் வரும் வரை வாசலிலே காத்திருப்பேன். தண்ணீர், சாப்பாடு எதுவுமே இறங்காது. அன்று உன் கடிதம் வராவிட்டால் எதையோ இழந்து விட்டதைப் போல ஒரு உணர்வு. நீ எழுதிய கடிதங்கள் எல்லாமே இதோ என் தலையணைக்கு அடியில் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நீ ஊருக்குள் வந்து விட்டாய் என்று என் உள்ளுணர்வு சொல்கின்றது. நீ வந்ததும் இந்தக் கடிதங்களை எல்லாம் உனக்கு காட்ட வேண்டும். இப்போது என் அறையில் ஒரு நறுமணம். அது நீயே தான் என்று எனக்குத் தெரியும். கண்களை திறக்க முயற்சி செய்து தோற்றுப் போகிறேன். உன் கை என் தலையினைத் தடவுகின்றது.

"ஏன் மவுனமாக இருக்கின்றாய் ? ஏதாவது பேசு. விமானத்தில் வந்த அனுபவங்களை எப்போதும் போல எனக்குச் சொல். நான் இங்கே தான் இருக்கிறேன்..." என் மனது கதறியது.

"நீ அழுகிறாயா..?" விசும்பல் ஒலி கேட்கிறது. என் கைகளை உயர்த்துகிறேன் உன் கண்ணீரைத் துடைக்க. ஆனால் என் கைகள் அசையவில்லை. என் உடம்பு குளிர்ந்து போய் இருந்தது. மருத்துவர் என் நாடித் துடிப்பை பார்த்து விட்டு, எதுவுமே பேசாமல் வாசலுக்குப் போகின்றார். நான் உன் பக்கத்திலேதான் இருக்கின்றேன். உன்னை அழ வேண்டாம் என்று சொல்கிறேன். ஆனால் நீ உடைந்து போய் அழுகிறாய்.

"நான் தனியாக இல்லை. இதோ உன் தாத்தாவும் என் பக்கத்திலே நிற்கிறார். எனக்கும் உனக்கும் இடையில் தோன்றிய இந்த பந்தம் ஏழு ஜென்மங்கள் வரை தொடரும். உனக்கு மகளாக வந்து பிறப்பேன். அப்போதுதான் நீ சின்ன வயதில் செய்த சேட்டைகளை நான் மீண்டும் உனக்குச் செய்யலாம். கவலைப்படாதே கண்ணா.. உன் மடியில் தவழ வருவேன்.."
நல்ல எழுத்து

ஹாய் வாணி, கதை ரொம்ப நல்லா இருக்கு. முதல் கதை மாதிரியே தெரியல. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. இன்னும் இது போல் பல கதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.

வாணிக்கு...

அருமையான கதை.
நல்ல கதைக்களம்.

வானதி, உங்கள் 'அட' போடவைக்கும் கதைகளுக்கு மத்தியில் அழ வைத்த கதை.

வாழ்த்துக்கள்.

நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்...
நடப்பவை நல்லதாக அமையட்டும்...

தேவா, s. குமார்

தேவா, மிக்க நன்றி. நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன். இன்னும் கதைகள் கொடுக்க கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். உங்கள் எல்லோரின் பின்னூட்டங்களும் மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

குமார், எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு உங்கள் பின்னூட்டத்தை இங்கே பார்த்ததும். மிக மிக நன்றி.

வாணி

வாணி,

கதை மிக அருமையாக நெஞ்சைத் தொடுவதாக இருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள். கண்ணனைப் போலவே எனக்கும் இரண்டு பேரன்கள். நான் மனம் தளர்ந்து போகும் போதெல்லாம் ஆறுதல் சொல்வார்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
அன்புடன் செபா.

செபா ஆன்டி

செபா ஆன்டி, நீங்கள் நலமா?. மிகவும் நன்றி. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு உங்கள் பின்னூட்டம். பாராட்டிற்கு மிக்க நன்றி.
வாணி

ஹாய் வாணி

ஹாய் வாணி உங்களின் கதை இன்றுதான் படித்தேன் .படித்து முடித்ததும் என்னை அறியாமலே கண்ணீர் வந்துவிட்டது.என் அம்மாவின் அம்மா(பாட்டி) நினைவு வந்தது.

நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அழகிய வரிகள் உணர்வுகளுக்கு உயிருட்டியது. நன்றி.

தாங்களும்,தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும்,செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். அன்புடன் திவ்யா ப்ரபாகரன்.

NICE STORY

HAI VANI,THIS STORY IS VERY NICE, I REMEMBER MY GRANDMOTHER LOVE.PLEASE TRY TO GIVE MORE STORIES LIKE THIS.WE ARE WAITING FOR YOUR SOTRIES.

REGARDS

MANO

சிறுகதை

எரிக், நலமா? மிகவும் நன்றி.

திவ்யா, பாராட்டிற்கு மிகவும் நன்றி.

மனோ பாரதி, மிக்க நன்றி. மேலும் கதைகள் கொடுக்க முயற்சி செய்கிறேன். பாராட்டிற்கு நன்றிகள்.

அருமை வானதி

அருமை வானதி