கிட்ஸ் மோர் குழம்பு

தேதி: May 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

பெரும்பாலும் குழந்தைகளுக்கு பால் சார்ந்த உணவுகள் மோர், தயிர் எல்லாமே பிடிக்கும். அதை அவர்கள் ருசிக்கும் விதத்தில் சத்தோடு கொடுக்க ஒரு சம்மர் ஸ்பெஷல் இந்த குழம்பு. இந்த உருண்டை குழம்பு குறிப்பினை திருமதி. இளவரசி அவர்கள் தன் தோழியிடம் கற்று கொண்டு அதை நம்முடனும் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

மோர் - 2 கப்
தேங்காய்துருவல் - கால் கப்
துவரம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
வறுத்து பொடித்த தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சரிசி - ஒரு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் - ஒன்று (விருப்பப்பட்டால்)
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - சிறு பல்
சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மோர் உருண்டைக்கு:
உளுத்தம்பருப்பு - அரை கப்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் - 1(விருப்பப்பட்டால்)
உப்பு - தேவைக்கு
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க


 

முதலில் துவரம்பருப்பு, அரிசி, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய் மற்றும் மல்லிப்பொடி சேர்த்து மையாக அரைக்கவும்.
மோரில் அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அதோடு மஞ்சள்தூள் சேர்த்து கொள்ளவும். உளுத்தம் பருப்பை வடைக்கு அரைப்பது போல் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். அதனுடன் அரிசி மாவு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அரிசி மாவு சேர்த்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த உருண்டைகளை மிதமான சூடு உள்ள நீரில் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பின் தேங்காய் அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும்.
பச்சை வாசனை போக தீயை மிதமாக வைத்து கொதிக்க விட்டு பின் மோரை ஊற்றி நுரைக்க கொதிக்க விடவும்.
நன்கு நுரைத்து வரும் போது உருண்டைகளை எடுத்து அதில் போடவும். மெதுவாக கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான குழந்தைகள் விரும்பும் மோர் உருண்டை குழம்பு தயார். பெரியவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் சுவைக்கேற்ப மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு இளவரசி... வாழ்த்துக்கள். நானும் இது போல் தான் செய்வேன்... ஆனால் வெறும் உளுந்து, உப்பு தான் அரைத்து போண்டா போல் போடுவேன். இது சற்று வித்தியாசமாக இருக்கு. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி, நல்ல ரெசிப்பி. ஒரு சந்தேகம். தவறாக நினைக்க வேண்டாம்.
//பொரித்து எடுத்த உருண்டைகளை மிதமான சூடு உள்ள நீரில் ஊற வைக்கவும்.//

ஏன் மிதமான சுடு நீரில் போட வேண்டும்.

வாணி

குறிப்பினை வெளியிட்ட அட்மின் மற்றும் நண்பர்களுக்கு என் முதல் நன்றி ..

வனி,நலமா? ...ஜஸ்ட்...உளுத்தம்பருப்புதான் கூடுதல் வாயுத்தொல்லைன்னு சொல்லுவாங்க இல்லை அதுக்காகத்தான் சீரகம் ,பெருங்காயம்.. மற்றபடி சும்மா அரைத்தாலும் சுவை நல்லாதான் இருக்கும்....ரொம்ப நன்றி வனி பின்னூட்டத்திற்கு :-

வாணி, தவறாக நினைக்கவில்லை...சரியான சந்தேகம்தான்..வெந்நீரில் ஊறவைத்து போட்டால் அதிகம் மோர் உள்ளிழுக்காது...அப்படியே போட்டால் எல்லா மோரையும் உள்ளிழுத்து விட்டு குழம்பு மிகவும் கெட்டியாகிவிடும்..
அதனால்தான்....

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாணி :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி, பதிலுக்கு மிக்க நன்றி. இந்த வெள்ளிக் கிழமை செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன். பார்க்கவே செய்ய வேண்டும் போல ஆவலைத் தூண்டும் படங்கள்.

வாணி

இளவரசி ,
நல்ல குறிப்பு. எங்க வீட்டில் எல்லோருக்கும் மோர் குழம்பு பிடிக்கும். செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

Save the Energy for the future generation