
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து நடித்து, தாமிரா இயக்கி, மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்து இருக்கும் படம் ரெட்டச்சுழி.
இதுவரை தரமான படங்களை மட்டும் கொடுத்த வந்த S பிக்சர்ஸ் இந்த முறையும் அந்த பெயரை காப்பாற்றும் வகையில் இந்த படத்தை கொடுத்து உள்ளார்கள். தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்த இரு பெரும் இயக்குனர்களை இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காண்பது மகிழ்ச்சி. பசங்க படத்திற்கு பிறகு சிறுவர்களை கதை நாயர்களாக கொண்ட மற்றும் ஒரு படம் இது.
40 வருடமாக எதிர் எதிர் வீட்டில் இருந்து மோதி கொள்ளும் பெரியவர்கள் காங்கிரஸ்வாதி பாலச்சந்தர் மற்றும் காம்ரேட் பாரதிராஜா. பெரியவர்களை போலவே சின்ன வாண்டுகளும் அதே பகைமை உணர்வுடன் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்கள். பாராம்பரியமாக கடைப்பிடித்து வரும் தமிழ் சினிமா இலக்கணப்படி இரு வீட்டு இளசுகளும் காதல் கொள்கிறார்கள். அப்புறம் என்ன.. பெரிசுகள் எதிர்க்க, வாண்டுகள் ஆதரிக்க, இளசுகள் எவ்வாறு கைப்பிடித்தார்கள் என்பதே ரெட்டச்சுழி யின் ஒன் லைன் கதை. என்ன ஏற்கனவே பார்த்துப் பார்த்து சலித்த கதை போல் இருக்கா? உண்மை தான். புதிய பானையில் பழைய கள்ளை தான் நமக்கு தந்து உள்ளார் இயக்குனர் தாமிரா. நல்லவேளை கள் கெடாமல் சிறிது புளித்து தான் உள்ளது.
இரு பெரும் ஜாம்பவான்களை சேர்ந்து நடிக்க வைத்தால் கதையை யாரும் கண்டுக்க மாட்டார்கள் என்று இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு விட்டார் போலும். அதே போல் அவர்களை சீரியஸாக நடிக்க வைப்பதா இல்லை காமெடி பண்ண வைப்பதா என்று குழம்பி உள்ளது பல காட்சிகளில் தெரிகிறது. அதனால் இந்த படம் சீரியஸ் படமா இல்லை காமெடி படமா என்ற குழப்பம் படம் நெடுக நமக்கும் நீடிக்கிறது. பாலச்சந்தர் கதாபாத்திரத்தையும் ஹீரோவாக வருபவரை வைத்தும் இது காமெடி படம் என்று நாமாக யூகித்துக் கொள்ள வேண்டி உள்ளது.
வீட்டை விட்டு ஒடி போகும் ஹீரோ, வழக்கப்படி மிலிட்டரி ஆபிசராக திரும்பி வருவது, பாலச்சந்தர் பாரதிராஜா வை பார்த்து பிள்ளை பெறாதவன் எல்லாம் ஆசிரியர் பெற்றோர் சங்கத்துக்கு தலைவரா என்று கேட்பது நமக்கு அதிர்ச்சியை தான் தருகிறது, அதுவும் இந்த வசனத்தை பாலச்சந்தரை பேச வைக்க தாமிராவுக்கு எப்படி தான் எண்ணம் வந்ததோ? சிறுவர்கள் பாலச்சந்தரை பார்த்து நீ செத்து போ என கூறுவது, அவ்வளவு சிறுவர்கள் யாரு, அவர்களின் உறுவுமுறை என்ன என்பதை போன்ற பல அபத்தங்கள் படம் முழுவதும் நிரம்பி கிடக்கிறது. ஹீரோவாக வருபவர் காதலிக்க சிறுவர்களிடம் ஐடியா கேட்பது, அஞ்சலியுடன் இரு டூயட் பாடுவது என தன் வேலை முடித்துக் கொண்டார். பாவமாக இருக்கிறது அவரை அப்படி பார்க்க. அஞ்சலி வருகிறார், போகிறார். அவ்வளவு தான். நல்ல நடிப்பு திறமையை உள்ளவர்களை இப்படி வீண் அடிப்பதில் எந்த பயனும் இல்லை.
பாலசந்தரின் எடுப்பிடியாக வரும் மனோபாலாவும், அஞ்சலின் போலீஸ் முறைமாமனாக வரும் கருணாஸ்ம் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் யாருமே மனதில் ஒட்டவில்லை அல்லது அவர்களுக்கு வேலை ஏதும் இல்லை.
இவ்வளவு ஓட்டைகளுக்கும் நடுவில் படத்தை தாங்கி பிடிப்பது பாலச்சந்தரின் எகத்தாளம், பாரதிராஜாவின் நடிப்பு, சில சிறுவர்களின் நடிப்பு, மற்றும் சிறுவர்கள் மூலமாக வரும் நக்கல் வசனங்களும் தான். தாமிரபரணியை யாரு அடகு வைச்சா இவன் மீட்க என்பதாகட்டும், என்ன சொல்லுறார் உங்க வேலர் என காலாட்டிக் கொண்டே கேட்பதாகட்டும், 2011 ல் நாம தாண்டா என அலப்பறை விடுவதாகட்டும், சேரன் மகாதேவி முதல்வரே என அழைப்பதை ரசிப்பதாகட்டும் என பழம்பெரும் கிராமத்து காங்கிரஸ் பெருசை கண்முன் கொண்டு வருகிறார் பாலச்சந்தர். ஆனால் சில காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் அவரது நடிப்பில் தெரிவது எல்லாம் நாடகத்தனம் தான். சைக்கிளில் காற்றை பிடுங்கி விடுவது, போஸ்டரை கிழிப்பது போன்றவற்றை சகித்து கொள்ளவது சிரமம் தான். 60 யை தாண்டினால் வயதானவர்களும் குழந்தைகள் தான் என்ற அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
பாரதிராஜா படம் நெடுக காம்ரேட்டாகவே வாழ்ந்து உள்ளார். தண்ணீர் பிரச்சனையை பேசுவதாகட்டும், பூர்ஷ்வா என விளக்கம் கொடுப்பது ஆகட்டும், தேவைப்படும் இடத்தில் எல்லாம் சரியாக முக பாவனைகள் காட்டுவது ஆகட்டும் என நடிப்பிறகு ராஜாவாக அசத்தி உள்ளார். அஞ்சலி ஹீரோவை உசுர விட பிடித்து இருக்கும் எனக் கூறும் காட்சியில் பாரதிராஜா நடிப்பிற்கு ஒரு சோறு பதம். ஆனால் யானை பசிக்கும் சோளக்கதிரு அளவுக்கு தான் அவருக்கு வாய்ப்பு.
படம் முழுவதும் சிறுவர் சிறுமிகளின் ஆக்ரமிப்பு தான். பல இடங்களில் வயதுக்கு மீறிய பேச்சும் செயலும் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் சில இடங்களில் சபாஷ் போட வைக்கிறார்கள். அதிலும் குஷ்பு என்று ஒரு சிறுமிக்கு பெயர் வைத்து குஷ்பு நீ பேசாதே, நீ பேசினா பிரச்சனை ஆகும், செருப்பை கழற்றி போட்டு வா என்ற இடங்களுக்காக இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. பாரதிராஜாவிடம் சரிக்கு சரியாக நின்று தோழரே, நலமா என்று கேட்கும் சிறுவன் நம்மை கவருகிறான்.
அஞ்சலியிடம் உன் மனசில் என்ன இருக்கு என ஹீரோ கேட்கும் போது, டீச்சர் மனசில் என்ன இருக்கும், லாங் லாங் எகோ, ஒன்ஸ் ஆப்பான் ய டைம் என அலட்சியமாக கூறுவதும், கருணாஸ் சை, மாமா, இந்த டிரஸ் ல நீ போலீஸ் போலவே இருக்க என கலாய்ப்பது என நம்மை கலகலப்படைய செய்கிறார்கள்.
படத்தின் பாடல்கள் ஒன்றும் மனதை தொடவில்லை. அந்த குறையை பின்னணி இசையில் சரி செய்து உள்ளார் கார்த்திக் ராஜா. செழியனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமை. பல இடங்களில் வசனங்கள் செம ஷார்ப்.
படம் முழுவதும் வரும் நாடகத்தன்மை போர் அடித்தாலும், பாலச்சந்தர் பாரதிராஜாவின் கலக்கல் கூட்டணிக்கும், சிறுவர்கள் மூலமாக தாமிரா வெளிப்படுத்தும் வசனங்களுக்காவும், நெளிய வைக்கும் இரட்டை அர்த்த வசனமோ, குத்து பாடல்கள், பஞ்ச் டையலாக் இல்லாமைக்காகவும் இந்த படத்தை குடும்பத்துடன் சென்று கண்டுக் களிக்கலாம்.
மொத்தத்தில் ரெட்டச்சுழி யின் சுழி சுமார் தான்.
படம் : ரெட்டச்சுழி (2010)
தயாரிப்பு : S Pictures
நடிப்பு : பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி, கருணாஸ்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : செழியன்
எழுத்து இயக்கம் : தாமிரா
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
சிவா... உங்க பேச்சை கேட்டு பையா பார்த்துட்டேன். ரொம்ப நல்லா இருந்தது, எனக்கு பிடிச்சுது. :)
அய்யோ அய்யோ... ரெட்டசுழி விளம்பரம் பார்த்தப்போவே பார்க்கணும் போல் இருந்தது... இப்படி சுமாருன்னு சொல்லிட்டீங்களே... பார்க்குறதா வேணாமான்னு குழப்பிட்டீங்களே!!! இருந்தாலும் விடுறதில்ல... பார்த்துட்டு வந்து உங்களை பேசிக்கறேன். :(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பார்த்தாச்சு. எனக்கும் இதே அபிப்பிராயம்தான் வந்தது.
இமா
எனக்கும் இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும் போதுலாம் இந்த படத்த பார்க்கனும்ங்ற ஆர்வம் ரொம்பவே இருந்துச்சு. சில சீன்ல அந்த குட்டி பசங்களோட சேட்டைகள் நல்லா இருந்துச்சு. இப்ப இங்க விமர்சனம் படிச்சுட்டு சுமார்னு தெரிஞ்சதும் எதிர்பார்ப்பு எல்லாம் போய்டுச்சு. ஆனாலும் நிச்சயம் இந்த படம் பார்ப்பேன் எப்படி தான் படம் இருக்குனு. (opinion differs)
SABHASH! SARIYANA VIMARSANAM SIVA!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
சமீபத்தில் வெளி வந்த ‘காதலாகி’ படம் எப்படி இருக்கிறது?
அப்புறம் இந்தப் படத்தை நமது அட்மின் அவர்கள் பாத்தாரா?
அன்புடன்
சீதாலஷ்மி