பீஃப் காஸரோல்

தேதி: June 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

இந்த குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் அறுசுவை உறுப்பினரான திருமதி. இமா அவர்களின் மூத்த மகன் திரு. அலன் க்றிஸ் அவர்கள். இவர் கடந்த ஆறு வருடங்களாகச் சமைக்கிறார். வெஸ்டர்ன் சமையல் நன்றாகச் சமைப்பார். இவர் செய்யும் பீட்ஸாக்கள் மிக நன்றாக இருக்கும். இது அவர் அடிக்கடி விரும்பிச் சமைக்கும் உணவு வகைகளில் ஒன்று.

 

இறைச்சி - அரை கிலோ
காளான் (பட்டன் மஷ்ரூம்) - 8
குடைமிளகாய் - ஒன்று
காரட் - ஒன்று (பெரியது)
பெரிய வெங்காயம் - பாதி
பூண்டு - 2 பல்
பே இலைகள் (bay leaves) - 2 அல்லது 3
ரோஸ்மெரி - 2 நெட்டு
ஸுகினி - ஒன்று (பெரியது)
ரெட் வைன் - 1 1/2 கோப்பை
ஸ்டாக் - 2 Maggi சூப் கட்டிகளை 1 கோப்பை வெந்நீரில் கரைத்து எடுக்கவும்
எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெய் - சிறிது
மா - அரை கோப்பை


 

மேற் சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்து ஆயத்தப்படுத்திக் கொள்ளவும்.
ஸுகினியை வில்லைகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இறைச்சியைச் சுத்தம் செய்து ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
காளான்களை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை விதைகளை அகற்றி விட்டு மீதியை நறுக்கி வைக்கவும். காரட்டையும் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
ஒரு ட்ரேயில் மாவைக் கொட்டி அதில் இறைச்சித் துண்டுகளை போட்டு தாராளமாக மாவில் புரட்டி வைக்கவும்.
பானில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு தாளித்துக் கொள்ளவும். பொரிந்து நிறம் மாற ஆரம்பித்ததும் அதை ஒரு காஸரோல் சமைக்கும் பாத்திரத்திற்கு மாற்றவும். (இதே நேரம் அவனை 160°c யில் முற்சூடு செய்வதற்காகப் போட்டு விடவும்.)
அதே பாத்திரத்தில் இறைச்சித் துண்டுகளை ஒன்றோடு ஒன்று முட்டாமல் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பொரிக்கும் முன் மீண்டும் ஒரு முறை மாவில் பிரட்டிக் கொள்ளவும். தேவையெனில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். துண்டுகளை எல்லாப் பக்கமும் திருப்பிப் போட்டு, மாவு நிறம் மாற ஆரம்பித்ததும் வெங்காயம் பூண்டோடு சேர்க்கவும். வெளிப்புறம் மட்டும் வெந்து இருந்தால் போதும். மாமிசம் வேக வேண்டியது இல்லை.
இனி காரட், குடைமிளகாய், ஒரு கோப்பை வைன், அத்தோடு ஸ்டாக் முழுவதும் சேர்த்து மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.
காய்கறிகள் சுருங்க ஆரம்பிக்கச் சற்று முன்னால் காளான் துண்டுகள், பே இலைகள், ரோஸ்மெரி, மீதி வைன் சேர்த்து ஓரிரு நிமிடம் விடவும்.
காய்கள் சுருண்டு வருகையில் அனைத்தையும் காஸரோல் பாத்திரத்தில் கொட்டவும்.
இவற்றோடு வில்லைகளாக்கி வைத்திருக்கும் ஸுகினியைச் சேர்க்கவும். (விரும்பினால் மீதிக் காய்கறிகள் இறக்கும் முன்பாக கடைசியாக இவற்றையும் சேர்த்து 2, 3 நிமிடங்கள் வேக வைக்கலாம்.)
பாத்திரத்தை அதற்குரிய மூடியால் மூடி, முற்சூடு பண்ணிய அவனில் (160°c) 1 1/2 மணி நேரம் வேக விட்டு இறக்கவும். இதனை மாஷ்ட் பொடேடோஸ், பேக்ட் பொடேடோஸ் அல்லது சோற்றுடன் கூடச் சாப்பிடலாம். பரிமாறும் வேளையில் தேவைக்கு உப்பு, மிளகுதூள் தூவிக் கொள்ளவும்.

மாவில் புரட்டி எடுப்பது சமையலின் போது இறைச்சி கரையாமல் வைத்துக் கொள்ளும் அதே சமயம் உள்ளே உறிஞ்சப்படும் சுவை வெளியேறாமலும் வைத்துக் கொள்ளும்.
ஸுகினி சேர்க்கும் சமயம் விரும்பினால் கையளவு பச்சைப் பட்டாணியும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயம், பூண்டு பொரியும் சமயம் இறைச்சியைத் தயார் செய்ய ஆரம்பிக்கலாம். ஒன்று அடுப்பில் பொரிந்து கொண்டிருக்க அடுத்ததை ஆயத்தம் செய்தால் தயார் செய்ய எடுக்கும் நேரத்தைக் குறைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இமா வித்தியாசமாக இருக்கு, உங்களுக்கும், உங்கள் மகனாருக்கும் வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

போட்டோஸும், வழங்கியிருக்குற விதமும் (presentation) ரொம்ப நல்லா இருக்கு. அலன் அவங்களுக்கு என் பாராட்டுக்கள் தெரிவிச்சுடுங்க மேடம். என்னது 6 வருடமா சமைக்கிறாங்களா? அப்போ நான் அவங்களுக்கு ஜூனியர்தான்.

அலன் க்றிஸ் வாழ்த்துக்கள். அறுசுவை நேயர்களுக்காக ஒரு புதிமையான ரெசிப்பி கொடுத்து இருக்கீங்க. ஒவ்வொரு படமும் தெளிவாக உள்ளது. இந்த ரெசிப்பில பீஃப்க்கு பதிலாக வேறெந்த இறைச்சி வைத்து செய்தால் நன்றாக இருக்கும். அவன் இல்லாதவங்க இந்த ரெசிப்பிய எப்படி செய்யலாம்.

இந்தக் குறிப்பை வெளியிட்ட அறுசுவையினர்க்கு எங்கள் நன்றி.

பாராட்டுக்கு நன்றி ஜலீலா, கௌரி & வினோஜா. உங்கள் கருத்துக்களை அலனிடம் சொல்லிவிடுகிறேன்.

வினோஜாவுக்கு - ஒவ்வொரு வகை இறைச்சிக்கும் தன்மையிலும் சுவையிலும் வேறுபாடு இருக்கும் இல்லையா! எனவே சமைக்கும் முறைகளும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
இது அவனைப் பயன்படுத்திச் சமைப்பதற்கான குறிப்பு. மிதமான வெப்பத்தில் அதிக நேரம் சமைக்க விடவேண்டும். விரும்பினால் 'ஸ்லோ குக்கரில்' முயற்சித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா! உங்க‌ செய்முறை நல்லா இருக்கு, பாராட்டுக்கள்! பீஃப் காஸரோல் டிவியில் பார்த்திருக்கேன், ஆனா செய்ததில்லை. காரணம் வொய்ன், பிராந்தி அய்ட்டங்கள் நாங்கள் யூஸ் பண்ணுவதில்லை. அந்த வொய்ன் சேர்க்காமல் அதற்கு பதிலாக கொஞ்சமா வினிகர் சேர்த்துக்கலாமா?

இமா... உங்க மகன் சமைப்பாரா?? சுப்பரா இருக்கு ப்ரெசன்டேஷன். கொஞ்சம் மனசு வெச்சு எனக்கு சிக்கன், மட்டன், முட்டை, சைவ குறிப்புகள் தர சொல்லுங்கோ... :) என் வாழ்த்துக்களை கட்டாயம் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்மா, இது என் செய்முறை இல்லை. நான் கேட்டுப் பதில் மட்டும் சொல்கிறேன். :) இங்கும் உங்கள் வீடு போல்தான். இவற்றைச் சமையலுக்கு என்றே வாங்கி வைத்திருக்கிறார். //வினிகர்// இதே சுவையைக் கொடுக்காது என்கிறார்.

வனிதா, அறுசுவையில் இல்லாத குறிப்புகளா அலன் தரப் போகிறார்? ;) மகன் சமையல் வெஸ்டர்ன் ஸ்டைலில் காரம் குறைவாக இருக்கும். பரவாயில்லையா? ;) முடிகிற போது நிச்சயம் குறிப்பு அனுப்புகிறேன். பாராட்டுக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

மிக மிக நன்றாக உள்ளது , படங்களும் சூப்பர் , உங்கள் மகன் , எங்க அண்ணன் நன்றாய் சமைப்பார் போல் தெரிகிறது , நல்லா சாப்பிடுங்க :-)

நட்புடன்
குணா