ஐஸ் பவுல்

தேதி: July 8, 2010

5
Average: 4.5 (15 votes)

 

சில்வர் அல்லது ப்ளாஸ்டிக் பவுல் - 2
கேரட், முள்ளங்கி, கறிவேப்பிலை
பீலர்
கத்தி
ஐஸ் க்யூப்
ஐஸ் வாட்டர்

 

கேரட், முள்ளங்கியின் மேல் தோலை நீக்கி வைக்கவும். சில்வர் பாத்திரத்தினுள் உள்ளே வைக்க போகும் பாத்திரத்தின் இடைவெளி 2 இன்ச் அளவு இருக்க வேண்டும்.
முள்ளங்கி, கேரட் இரண்டையும் சிறிதளவு தடிமனான அளவாக வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
நறுக்கின காய்கறிகளை படத்திலுள்ளது போல் கத்தியால் வரைந்து பூ போல் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதுப்போல் தேவையான அளவு முள்ளங்கியும், கேரட்டையும் டிசைன் செய்து வைக்கவும். அல்லது வட்ட வட்டமாக நறுக்கி வைக்கவும்.
ஒரு சில்வர் பாத்திரத்தில் ஐஸ் க்யூப்களை போட்டு ஃப்ரீசரில் வைத்து நன்கு உறையவிடவும்.
அதன் பின்னர் பாத்திரத்தில் உறைந்த ஐஸ்கட்டியின் மேல் ஒரு பாத்திரத்தை வைத்து, அந்த இடைவெளியில் குளிர்ந்த ஐஸ் தண்ணீரை ஊற்றவும்.
இப்போது பாத்திரம் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றியது போன்று இருக்கும். அதில் கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி, கேரட்டை சுற்றிலும் போடவும். நடுவில் வைத்துள்ள பாத்திரத்தில் கனமான பொருட்கள் ஏதாவது ஒன்றை வைத்து மூடிக் கொள்ளவும்.
இதனை மீண்டும் ப்ரீசரில் வைத்து ஒரு நாள் முழுவதும் ஐஸ்ஸாக உறைய விடவும். ஐஸ்ஸாக உறைந்ததும் நடுவில் வைத்த கனமான பொருளை எடுத்து விட்டு, அந்த பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றினால் சுலபமாக கழன்று வரும். பிறகு வெளியே உள்ள பாத்திரத்தையும் கழற்றி எடுத்துக் கொள்ளவும். இப்போது அழகான சுலபமான ஐஸ் பவுல் ரெடி.
ஐஸ்கட்டிகள் போட்டு ப்ரீசரில் வைப்பதற்கு முன்பு நறுக்கின காய்கறிகளில் சிலவற்றை அடியில் போட்டு விட்டு ப்ரீசரில் வைத்து உறைய விடவும். இப்படி செய்வதினால் ஐஸ் பவுலின் அடிப்பாகம், அதனை சுற்றியும் காய்கறியால் அலங்கரித்தது போன்று இருக்கும்.
இதில் வெஜிடபிள் சாலட் மற்றும் பார்ட்டி போன்ற நேரங்களில் பவுலில் பழங்களை வைத்து அலங்கரித்து பார்வைக்காக வைக்கலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த ஐஸ் பவுல் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் அருமை. செய்வதும் இசி. இது போல இன்னும் பல பொருட்கள் செய்து காட்ட என் வாழ்த்துக்கள்

kavi

சூப்பர்ப் செண்பகா. ஈஸியாவும் இருக்கே பார்க்க. கலக்குறீங்க செண்பகா. பாப்பா எப்படி இருக்கா? தொடர்ந்து குறிப்பு கொடுக்க என் வாழ்த்துக்கள்..

இந்த ஐஸ் bowl ரொம்ப சுப்பர்.

பார்க்கும் போதே ஜில்ல்ன்னு இருக்கு.....
சுலபமாகவும் அழகாவும் செய்ய தூண்டுவதாகவும் உள்ளது. நன்றி.

Ms.Moorthy

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப வித்தியாசமா, ரொம்ப அழகா இருக்கு செண்பகா. பார்த்த பின் பின்னூட்டம் தராம போக முடியல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செண்பகா மேடம்,
ரொம்ப அழகா இருக்கு
நல்ல குறிப்பு
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பாப்பி! எப்படி இப்படீ!!!
விட்டா என்னைபோல கிராப்ட்-ஹேண்டிகேப் ஆக்களை கூட செய்ய வச்சிடுவீங்க போல... கலக்குங்க....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஈசியா செய்கிற மாதிரி இருக்கு. ரொம்ப அழகாகவும் இருக்கு. வாழ்த்துக்கள் செண்பகா. சீக்கிரம் ஒரு தடவை செய்து பார்த்திடுறேன்.

ஒரு சின்ன சந்தேகம். முதலில் ice-cube போடச் சொல்வதற்கு ஏதேனும் special காரணம் இருக்கா? ஏன் சும்மா தண்ணி பயன்படுத்தக் கூடாதா?

//விட்டா என்னைபோல கிராப்ட்-ஹேண்டிகேப் ஆக்களை கூட செய்ய வச்சிடுவீங்க போல// இலா கிராப்ட் சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருக்கீங்களா? :-) சொல்லவே இல்லையே!!!

அன்புடன்,
இஷானி

//ஒரு சின்ன சந்தேகம். முதலில் ice-cube போடச் சொல்வதற்கு ஏதேனும் special காரணம் இருக்கா? ஏன் சும்மா தண்ணி பயன்படுத்தக் கூடாதா?//

வேற ஒண்ணுமில்லை.. வெறும் தண்ணி மேலே இன்னொரு பாத்திரம் வச்சு, அதுல வெயிட் வைக்கிறப்ப, அது கீழே உள்ள பாத்திரத்து அடியோட ஓட்டிடும். அதனால பவுலோட கீழ் பக்கம் ஐஸ் ஆகாம போயிட வாய்ப்பு இருக்கு. இல்லேன்னா, பாத்திரம் ஒரு அரை இஞ்ச் தண்ணி மேலே மிதக்குற அளவுக்கு வெயிட் வைக்கணும். இப்படி கீழ் பாகத்துக்கு கொஞ்சம் ஐஸ் போட்டுட்டோம்னா, அந்த பிரச்சனை வராது. உள்ளே வைக்கிற பாத்திரம் ஒரு அரை இஞ்ச் மேலே இருக்கும். நமக்கும் பவுல் சரியா கிடைக்கும்.

நல்லாத்தான் கேள்வி கேட்குறீங்க!!!

உங்ககிட்ட பதில் வாங்கணும்னா ஒண்ணு ரொம்ப நல்லா ஏதாவது எழுதி இருக்கணும், இல்லைன்னா அறுசுவைல ஏதாவது தப்பு தண்டா பண்ணனும். ஒரு சாதாரண விசயத்துக்கு வீட்டு அம்மாவுக்கு கை கொடுக்க வந்திருக்கீங்க. நாங்க தடுப்போமா :-)

சந்தேகம் இதுதான். ice-cube போட்டு freezer - ல் வைத்து உறைய வைச்ச பிறகுதானே மேல பாத்திரம் வைக்க சொல்லி இருக்காங்க. அதை ice-cube இல்லாம வெறும் தண்ணி ஊற்றி உறைய வைத்த பின் வேறு பாத்திரம் வைப்பதால் பிரச்சனை வருமா? எதுக்கும் நான் இன்னைக்கு செய்தே பார்த்திடுறேன்.

அன்புடன்,
இஷானி

இப்ப உங்க பதிலைப் பார்த்த பிறகுதான் மேலே கொடுத்திருக்கிறதை படிச்சு பார்க்குறேன். உறைய வச்சுட்டு அதுக்கப்புறம் பாத்திரத்தை வைக்கிறதுக்கு ஐஸ்க்யூப் போட வேண்டிய அவசியம் இல்லை. வெறும் தண்ணியையே உறைய வச்சுட்டு செய்யலாம். இதை செய்யறப்ப, வெறும் தண்ணியை ஊத்தி, காய்களை போட்டு, பாத்திரத்தை மேலே வச்சுத்தான் செஞ்சாங்க. மேலே வச்ச பாத்திரம் சரியா செட் ஆகாததால ஐஸ் க்யூப் போட்டு, பிறகு தண்ணி ஊத்தி மொத்த பவுலையும் உறைய வச்சாங்க. அதைத்தான் போட்டாவும் எடுத்தாங்க.

அதுக்கப்புறம்தான் மொதல்ல அடிப்பாகத்தை உறைய வச்சிட்டு, அதுக்கப்புறம் மேல் பாகத்துக்கு தண்ணி ஊத்தினா என்னங்கிற ஐடியா வந்துச்சு. செய்முறையில அதை சொல்றப்ப, கொஞ்சம் சொதப்பிட்டாங்க. எடுத்த படத்தில ஐஸ் கியூப் இருந்ததால, அதை உறைய வைக்கணும்னு சொல்லிட்டாங்க. வெறும் தண்ணியையே ஊத்தி உறைய வச்சிட்டு, அதுக்கப்புறம் மேல் பாகத்துக்கு தண்ணி ஊற்றலாம். இப்படி தனித் தனியே செய்யாம, மொத்தமா ஐஸ் பவுலை ஒரே நேரத்துல உறைய வைக்கணும்னா, ஐஸ்க்யூப் போடுங்க.

//ஒரு சாதாரண விசயத்துக்கு வீட்டு அம்மாவுக்கு கை கொடுக்க வந்திருக்கீங்க//
வீட்டு அம்மா உங்க கேள்வியை பார்க்கிறதுக்கு நேரம் ஆயிடும். அதுமட்டுமில்லாம இந்த ஐஸ் பவுல்ல என்னோட பார்ட்டும் கொஞ்சம் இருந்ததால, நானே பதில் சொல்லிடலாம்னு நினைச்சேன். மத்தப்படி நமக்கு தெரியாத விசயங்கள்ல கை, தலை எதையும் நுழைக்கிறது இல்ல.. :-)

செண்பகா ,காலையிலே அறுசுவையில உங்க ஐஸ்பவுல்தான் பார்க்கிறேன்....

உண்மையில் ஐஸ்ஸுக்கு நல்ல விருந்து உங்க ஐஸ்பவுல்...என் பெண்ணிற்கும்
காட்டியவுடன் மிகவும் பிடித்தது....!!!அவளோடு சேர்ந்து செய்து பார்த்து நன்றாக வந்தால் போட்டோ அனுப்புகிறேன்..

முள்ளங்கி போல் பீட்ரூட்டும் (வேறு காய்களும் )பயன்படுத்தலாம்தானே...

உங்கள் க்ராப்ட் வொர்க் எல்லாம் பார்க்கும்போது ...எனக்கும் செய்து பார்க்க ஆசைதான்..
ஆனால் வருமா என்றுதான் தெரியவில்லை:(

எனக்கே ஆர்வம் வருகிறது என்றால் அதுதான் உங்களின் கிராப்டின் மகிமை..

நவீனாவுக்கு அன்பு முத்தங்கள்....

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பீட்ரூட் பௌல்-ன் கலரை மாற்றிவிடும். அதுவும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்

அன்புடன்,
இஷானி

நன்றி இஷானி..."BOW" க்கு எழுத்து வராமல் தேடி "ப" போட்டுவிட்டேன்....

நன்றி....நல்ல பதிலுக்கு...மல்டிகலர் காம்பினேஷனில் என்ன போடலாமென யோசித்து பார்க்கிறேன்.

என் பெண்ணிற்கு இன்றிலிருந்து விடுமுறை தொடங்கிவிட்டது..
இதை காட்டியவுடன் உடனே செய்யவேண்டுமென்கிறாள்..பல வண்ணங்கள் வருமாறு என்னென்ன போடலாமேன உங்களுக்கும் தோன்றினால் சொல்லுங்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சுப்பர் க்ராஃப்ட். அசத்திட்டீங்க.
(கவனிக்க - ஒரு சேஃப்டிக்காக பேர் போடாம பன்மைல பாராட்டி இருக்கிறேன்.) ;)

‍- இமா க்றிஸ்

கவிசினி, ஹரிகாயத்ரி, நிலா, திருமதி. மூர்த்தி, வனிதா, கவிதா, இலா, இமா, இஷானி, இளவரசி அனைவருக்கும் எனது நன்றிகள். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தனித்தனியாக எல்லாருக்கும் பதிவு போட முடியவில்லை சாரி.

senbagababu

இளவரசி மேடம் நீங்கள் செய்து அனுப்பிய ஐஸ் பவுல் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு. சில காரணங்களால் அறுசுவைல வெளியிட முடியவில்லை. அதற்கான வேலை முடிந்ததும் கூடிய விரைவில் உங்கள் ஐஸ் பவுல் படத்தை அட்மின் வெளியிடுவாங்கன்னு நினைக்கிறேன் :-)

senbagababu

ரொம்ப அழகா இருக்கு . நானும் இது போல் செய்து அறுசுவைக்கு அனுப்பி உள்ளேன் . தவறு இருந்தால் சுட்டி கட்டவும் . கார்விங் முதல் முறை செய்துள்ளேன் . சரியாக வர வில்லை.
ரம்யா