அன்னையர் தினம் - வாணி - அறுசுவை கதை பகுதி - 15593

Stories

அன்னையர் தினம் - வாணி

காலை 6:30 மணிக்கு கண் விழித்தார் பரிமளா. கண்கள் தானாகவே பக்கத்து கட்டில் பக்கம் தாவியது. அங்கு ஜெனிபஃரைக் காணவில்லை. வழக்கமாக 7:30 தாண்டியும் எழும்பாமல் கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும் ஜெனிஃபர் எங்கே என்று கண்கள் தேடின.

ஜெனிபஃர் மட்டுமல்ல மேரி, இஸபெல்லா, ரோஸ், ஆன் என்று யாருமே கண்களில் தட்டுப்படவேயில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை.. எங்கே போயிருப்பார்கள் என்று வினா எழுந்தது.

அப்போது அங்கே வந்த ஸ்டெல்லா, "மேரி குளிக்கிறார்" என்று தகவல் சொன்னார். மேரி வாரத்தில் ஒரு நாள் குளிப்பதே அதிசயம். வெள்ளிக்கிழமை தானே மேரி குளித்தார். இன்று மீண்டும் ஏன் குளிக்கிறார் என்று கேள்வி எழுந்தது.

"இன்று அன்னையர் தினம். அதனால்தான் இன்று மேரி குளிக்கிறார்", என்று மேலதிக தகவலும், பரிமளத்தின் பல கேள்விகளுக்கான விடையும் ஒரே நேரத்தில் கிடைத்தன.

"ஓ! அப்படியா! தகவலுக்கு மிக்க நன்றி" என்று சொல்லி விட்டு நகர்ந்தார் பரிமளா.

"பரி, ஏன் உன்னைப் பார்க்க யாரும் வரமாட்டார்களா?" என்று வினவினார் ஸ்டெல்லா.

"தெரியாது" என்றுவிட்டு அறையில் நுழைந்து கொண்டார் பரிமளா.

வருடத்தில் ஒரு நாள் வரும் அன்னையர் தினத்திற்காக ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் செய்கிறார்கள் என்று தோன்றியது பரிமளத்திற்கு. மகன், மருமகள், குறிப்பாக பேரப்பிள்ளைகள் இன்று தன்னைப் பார்க்க வருவார்களா என்று மனதின் ஓரத்தில் ஆசை எட்டிப்பார்த்தது.

பரிமளா இந்த முதியோர் காப்பகத்திற்கு வந்து 1 1/2 வருடங்களாகிவிட்டது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. எல்லோரும் வெள்ளைத் தோலினர் பரிமளாவைத் தவிர. சாப்பாடு, கலாச்சாரம் என்று நிறையவே வித்தியாசங்கள் இருந்தாலும் பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள் என்று பொதுவான அறிமுகம் இருந்தது. இந்த அறிமுகம் எல்லோரையும் நெருங்கி, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கச் செய்தது. நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்றது.

ஊரில் இருக்கும் வரை பரிமளா பெரிய கூட்டுக் குடும்பத்தின் மூத்த மருமகள். கணவரின் பெற்றோர்களை நன்கு கவனித்து கொண்டார். கணவரின் தம்பி, தங்கைகள் எல்லோருக்கும் தாய் போல இருந்து படிக்க வைத்தார். எல்லோருக்கும் திருமணம், சீர் என்று சிறப்பாகவே செய்து முடித்தார். கணவரின் பெற்றோரும் பரிமளாவை வாயார வாழ்த்தியபடியே இருந்தார்கள்.

ஒரே மகன் ப்ரவீன். திருமணம் ஆனதும் ப்ரவீன் வெளிநாடு வந்துவிட்டான். நல்ல வேலை, சம்பளம் என்று சொன்னாலும் பரிமளாவிற்கு மகனை பிரிந்திருக்க கஷ்டமாக இருந்தது. கணவரின் உடன்பிறப்புகள் எல்லோரும் திருமணமானது பிரிந்து சென்று விட்டார்கள். பரிமளாவிற்கு ஆதரவாக இருந்த கணவரும் 12 வருடங்களின் முன்பு காலமாகி விட்டார். பரிமளா ஆதரவில்லாமல் மகனுடன் வந்து விட்டார்.

மருமகளுக்கு பிரசவங்கள் கவனித்து, பேரப்பிள்ளைகளை வளர்த்து, சமையல் வேலைகள் என்று பம்பரமாக சுழன்று வேலைகள் செய்தார். தொடக்கத்தில் அன்பாகவே இருந்தார் மருமகள். முதுமையின் வாசலை அடைந்த போது மருமகள் தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுவார். பரிமளாவை அணைத்துக் கொள்ள மகனுக்கோ அல்லது மருமகளுக்கோ நேரம் இருக்கவில்லை. முதியோர் காப்பகம் தான் சரியான தீர்வு என்றார்கள். பரிமளா எவ்வளவோ கெஞ்சியும் அவர்களின் மனம் இரங்கவேயில்லை. பேரப்பிள்ளைகளும் ஓரளவிற்கு வளர்ந்து விட்டபடியால் இவரின் தயவு அவர்களுக்கு தேவைப்படவில்லை.

மணி 9 யை நெருங்கியதும் காப்பகமே களைகட்டியது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று எல்லோருமே பெரிய புன்னகையுடன் வந்தார்கள். கட்டியணைத்து, முத்தங்கள் பரிமாறிக் கொண்டார்கள். எல்லாமே செயற்கையாகவே தோன்றியது பரிமளத்திற்கு.

வரவேற்பறை எங்கும் பூக்கள் இரைந்து கிடந்தன. ஊரில் இருக்கும் வரை பெரிய தோட்டத்தில் பல விதமான பூச்செடிகள் வைத்து, நீர் ஊற்றி, அவை செழித்து வளரும் போது மகிழ்ச்சி அடைவார். பூக்கள் பறிப்பதற்கல்ல என்று செடிகளிலே விட்டு அழகு பார்த்தவர். காப்பகத்தின் தரையெங்கும் இரைந்து கிடந்த பூக்களைப் பார்த்து ஆதங்கப்பட்டார்.

குளித்து விட்டு வரவேற்பறையில் போய் அமர்ந்து கொண்டார். காப்பகத்தில் பெரும்பாலனவர்கள் ஊர் சுற்ற கிளம்பிவிட்டார்கள். அவர்கள் வந்து சேர இரவாகி விடும். பரிமளா மணியைப் பார்ப்பதும், வாசலைப் பார்ப்பதுமாக இருந்தார். மகன் இன்றாவது வருவானா என்று கேள்வி மட்டும் மனமெங்கும் வியாப்பித்து இருந்தது.

நேரம் மாலை 6 மணியை நெருங்கியது. ஆனால், பரிமளாவை பார்க்க யாருமே வரவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. இரவு எட்டு மணியானது. பார்வையாளர்கள் நேரம் முடிவடையும் நேரம். பரிமளா வெறுப்புடன் எழுந்து கொண்டார்.

அறையை நோக்கி நடக்க எத்தனித்தவரின் கால்களில் ஏதோ மிதிபட்டது. குனிந்து பார்த்தார். கீழே அழகிய ஒற்றை ரோஜா. பூச்செண்டிலிருந்து உதிர்ந்து கீழே விழுந்து கிடந்தது. வரவேற்பறை எங்கும் இரைந்து கிடந்த பூக்களை சேகரித்தார். அங்கிருந்த பெரிய கண்ணாடிச் சாடியில் தண்ணீரை நிரப்பி, பூக்களை அழகாக அலங்கரித்தார். பூக்கள் இவரைப் பார்த்து புன்னகைத்து நன்றி சொன்னதைப் போல இருந்தது. பதிலுக்கு பரிமளாவும் புன்னகைத்தார். மனது நிறைவாக இருந்தது.

மதியம் சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வந்தது. டைனிங் ஹாலை நோக்கி விரைந்தார்.
வாணி.

ஒரு வயதான தாயின் மன உளைச்சல்களை அழ்காகஎழுத்தில்
வடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். மேலும் நிறைய எழுதவும்.

வாணி

வாணி... மனசை தொட்ட கதை !!! ஏன் தாமதமா பின்னூட்டம் தெரியுமா??? 3 முறை திரும்ப திரும்ப படிச்சேன்... அந்த அம்மா'வின் வலியை உணர முடிந்தது. அத்தனை நல்ல எழுத்து!!! வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமை வாணி மேடம்

அருமை வாணி மேடம்.என்னை உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.முதன் முதலில் அறுசுவை உறுப்பினர் ஆன பிறகு உங்களது கதைதான் முதலில் என் கண்ணில் பட்டது.நாமும் எழுதலாமே என்ற எண்ணம் அதன் பிறகே வந்தது.வாழ்த்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வாணி மேடம்,

வாணி மேடம்,
ரொம்ப அருமையான கதை
பாராட்டுக்கள்
உங்கள கதை வாயிலாக ஒரு சின்ன வேண்டுகோள்.......
நான் இவர்களை போன்ற மனிதர்களை சென்னை,பாலவாக்கத்தில் உள்ள விஸ்ராந்தி அமைப்பில் பார்த்து இருக்கிறேன் சென்னையில் இருந்த வரை நேரம் கிட்டும் போதெல்லாம் சென்று வருவேன் இப்போது நிதி உதவி மட்டுமே செய்கிறேன்
அங்கு நிறைய ஆதரவற்றோர் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்வார்கள் அங்கு சென்று வந்தால் மனம் ரொம்ப வேதனைபடும் அறுசுவை தோழிகளுக்கு நேரம் இருந்தாலோ,பணம் இருந்தாலோ இது போன்று இருப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

வாணி

வாணி
கதை மிகவும் அருமை. இந்த காலத்துல முதியோர் இல்லங்கள் தான் அதிகமா உருவாகிட்டிருக்கு. அங்குள்ளவர்களை நினைக்கும் போது மனம் ரண்மாகும். உங்கள் கதையில் இந்த உணர்வை கொண்டுவந்துள்ளீர்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாணி

"உணர்வுகளை உருக்கி ஊற்றி

நீங்கள் எழுதியிருப்பதில்

நனைந்தது

இதயம் மட்டுமல்ல..

இமைகளும்தான்.."

நல்ல உயிர் துடிப்புள்ள கதை..அடுத்த கதைக்காய் காத்திருக்கிறேன்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வாணி

வாணி உங்க கதை சூப்பர். நிஜத்தில் நடக்கிற கதை உங்க எழுத்துநடை மூலமா அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

வாணி

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு வாணி பாராட்ட வார்த்தை இல்லை, முழுமையாஅன ஒரு தாயின் பரிதவிப்பை அப்படியே சொல்லி இருக்கீங்க வாணி.

நான் சில விசயங்கள் பகிர்ந்துக்கலாமா? நம்ம பாட்டி தலைமுறையினர் தான் இப்படி பிள்ளைகளால் முதியோர் இல்லைத்தில் எல்லாம் விடபட்டாங்க வாணி. இப்ப இருக்கிற அம்மாக்கள் எல்லாருமே தன் கணவர் சம்பாதிக்கிற பணத்தில் ஒரு பகுதியை தங்களுக்குன்னு(கணவன், மனைவி) சேமிக்க ஆரம்பிச்சுட்டாங்க. பையனுக்கோ பொண்ணுக்கோ நல்ல முறையில் வாழ்க்கை அமைச்சு கொடுத்துட்டாங்களா, நாளு கிழமையா வாங்க எல்லாரும் சேர்ந்து இருப்போம் கொண்டாடுவோம், நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன் அப்படினு தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

வாணி

வாணி...

கதை அருமை..
கண்களில் நீர் வரவழைத்துவிட்டது..
பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாணி

வாணி....
உணர்வை தூண்டுகிற கதை, நன்றி

அன்புடன்
பவித்ரா